Wednesday, 25 December 2013

சுகமான தோல்விகள்.

சுகமான தோல்விகள்!
=====================
=====================

நிலவிடம் தோற்கிறேன்.
------------------------------------------
நீருள் சிரிக்கும்
நிலவினைத்தானே
நீந்திப் பிடிக்க
முயன்றிடும் போரில்
நித்தமும் நானும்
அழகின் இரசிப்பில்
அறிவின் அழைப்பில்
நிலவிடம் சுகமாய்
தோற்றுத்தான் போகிறேன்.
=====================================
தாயிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
பசியில்லை அம்மா எனக்கு
பால் மட்டும் போதுமென்றாலும்
புசிக்கும் வரையும் ஓயாத
பெற்றத் தாயிடம் நானும்
சுகமாய் நாளும் பாசத்தால்
தோற்றுத்தான் போகிறேன்.
=====================================
காதலியிடம் தோற்கிறேன்.
-----------------------------------------------
கனிந்த மொழியாள்
காதலி என்னாளிடம்
நினைந்தொரு கோபம்
காட்டிட முயன்றும்
அணைந்திடும் அன்பில்
அன்றாடம் நானும்
காதலியிடம் சுகமாய்
தோற்றுத்தான் போகிறேன்.
======================================
மழலையிடம் தோற்கிறேன்.
--------------------------------------------------
சிரிக்கும் மழலை
சிந்தும் மொழியால்
பறித்திடும் ஆசை
பால்கோவா அதிலே
முறிந்தும் வீழ்ந்தே
முழுமையாய் நானும்
மழலையிடம் சுகமாய்
தோற்றுத்தான் போகிறேன்
=====================================
நண்பனிடம் தோற்கிறேன்.
----------------------------------------------
துன்ப வேளையில்
தோள் தந்தானை
இன்பம் கண்டு
மகிழ்ந்திடும் நண்பனை
மறந்தும் தனிமை
கொண்டாடி முயன்றும்
நெஞ்சால் விஞ்சும்
நேசம் தஞ்சம்
கொண்டான் உயிர்
நண்பனிடம் சுகமாய்
நானும் தினமும்
தோற்றுத்தான் போகிறேன்.
====================================
மகனிடம் தோற்கிறேன்.
------------------------------------------
அன்றாடச் செலவுக்கு
அணுகிடும் மகனை
அதட்டித் திருத்தத்
துணிந்திடும் போதிலும்
அப்பா என்றதும்
தப்பாது நானும்
பாசம் முந்தும்
வாசச் சுகமாய்
மகனிடம் நித்தமும்
தோற்றுத்தான் போகிறேன்.
======================================
மகளிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
கொஞ்சும் மகளை
அஞ்சாமல் அழைத்து
காதல் கண்டும்
கடிந்தும் மொழிகையில்
கண்ணீர் விழிகள்
சிந்திடும்  மொழியில்
பிந்திடும் மடமை.

அந்த ஆருயிர் உடமை
ஆசை மகளிடம்
அன்றாடம்  நானும்
கொண்டும் சுகமாய்
தோற்றுத்தான் போகிறேன்.
====================================
மனைவியிடம் தோற்கிறேன்
---------------------------------------------------
ஆருயிர் மனைவி
அவளிடம் நயந்து
ஆகும் செலவுகள்
அதிகம் என்றாலும்
பிள்ளைகள் காட்டி
பேசிடக் கேட்டால்
அன்பின் துணையாம்
ஆற்றும் மனைவியிடம்
அவ்வப்போதும் நானும்
அமைந்தும் சுகமாய்
தோற்றுத்தான் போகிறேன்.
===================================
தமிழிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
எழுதி என்னதான்
கிழிக்கப் போகிறேன்!
என்றே பேனாவை
ஒளித்தும் வைத்தும்
ஓய்ந்திடும் போதும்
விழிக்கும் சிந்தனை
துடிக்கும் கற்பனை
கருத்துக்கள் வந்தும்
உறுத்திட நானும்
தமிழிடம் என்றும்
தழைத்தும் சுகமாய்
தோற்றுத்தான் போகிறேன்.
==================================
கர்வத்திடம் தோற்கிறேன்.
----------------------------------------------
பிறரைப் படித்திட
பேணாக் கர்வம்
கருத்துப் பஞ்சம்
கவிதை படைத்திட
வருத்தும் போதும்
தேடிடும் அவசரம்
கர்வம் கடிந்தும்
பொழுதும் அதனிடம்
விழுந்தும் சுகமாய்
தோற்றுத்தான் போகிறேன்.
==================================
மனிதமிடம் தோற்கிறேன்.
------------------------------------------
அன்பும் திறமையும்
அகிலம் நிறையவும்
அடையும் வெற்றியும்
அவரே கிட்டவும்
விட்டும் கொடுக்கலாம்
வெற்றி உரியவர்க்கும்
தோற்றும் வெல்லலாம்
தோல்வியும் சுகமே!
என்றே மனிதமிடம்
எப்போதும் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
=======================================
இறைவனிடம் தோற்கிறேன்
-----------------------------------------------
இல்லை என்பேன்
இருந்தால் நல்லது
என்றே சொல்வேன்.

அறிவாளி போன்றே
புரிந்தே நடிப்பேன்
சொல்லும் பொழுதும்
கொள்ளும் பயமும்
உள்ளும் பக்திதான்
எள்ளுவான் இறைவனும்.

தொல்லை வரும்போது
தானே அழைப்பேன் .
எல்லை எதுவரை
நல்லான் பொறுப்பான்
சொல்லை அதுவரை
சும்மாதான் சுமப்பான்.

கண்ணாடி காட்டும்
முன்னாடி முகம்போல்
கல்லூடி இருப்பான்
வல்லான் கடவுள்.
எந்நாளும் வீணே
சொன்னாலும் பொய்யே!
தன்னாலே தோற்பேன்
தாளடி சுகமே!
==============================================
இதுதான் தோல்வியோ!
--------------------------------------------------------------------
இதுதான் தோல்வி
எனறால் நானும்
அதுதான் வெற்றி
ஆவது கண்டே
ஆள்வேன் வென்றே
ஆயுள் முழுவதும்
தோற்பதும் சுகமே!
===================================
கொ.பெ.பி.அய்யா.
===================================

No comments:

Post a Comment