Thursday, 26 December 2013

சேயாக வேண்டும்.

குழந்தையாவேனோ!

மறுபடி நானுமிங்கே மண்ணில்
பிறந்திட வேண்டும்----தாயின்
மடியில் புரண்டு கிடந்தினிதே
ஒய்ந்திட வேண்டும்

கொஞ்சும் அன்னை கைகளில்நான்
துஞ்சிட வேண்டும்----அவள்
நெஞ்சி லணைந்து உலகினைத்தான்
மறந்திட வேண்டும்.

தமிழை மீண்டுமவள் வாயால்
அமிழ்திட வேண்டும்--பயிலென்
மழலை மொழிகேட்டு இன்பமவள்
பெற்றிட வேண்டும்.

தத்தித் தவழ்ந்தவள் கைநடை
கற்றிட வேண்டும்----முயன்றும்
பொத்தென வீழ்ந்தும்நான் தோற்கவள்
முத்திட வேண்டும்.

நிலவில் சோறு அலவியவள்
ஊட்டிட வேண்டும்----தோளில்
நித்திரை காட்டியென்னை பாடி
தாலாட்ட வேண்டும்.

தொட்டதும் கற்றதும் வெற்றியாம்
கட்டிட வேண்டும்--அவள்
பெற்ற பெருமை தந்தமகன்
வித்திட வேண்டும்..

பொய்யில் பழகும் மனிதரற்றும்
செய்பட வேண்டும்----அன்னை
மெய்யில் பயின்றுமீண்டும் அவள்
கைவிழ வேண்டும்.

எனக்கிந்தப் பூமிதானும் வேறென்ன
ஈதல் வேண்டும்!-இறை
திருவடி சென்றஎன் தாயைமீண்டும்
தந்தருள வேண்டும்.

கொ.பெ.பி.அய்யா.








No comments:

Post a Comment