Monday, 31 August 2020

நம்பிக்கை.

நம்பினால் நம்புங்கள்!

என்னாலிது முடியுமென
எண்ணித் துணிந்தும்--பின்
என்னதான் நேருமென
பின்னித் தயங்காதும்,
முன்னேற முயல்வதும்;
நம்பிக்கை.

அன்னாளில் எவரோ
சொன்னாரென்றே-ஐயோ
தன்னில் நம்பாது
முன் முயலஞ்சியும்,
பின்தங்கி மயங்குவதும்;
பேதமை..

இறைவன் என்பவன்
இருப்பானோ!--அவன்
இருந்தால் என்னைப்
பொறுப்பானோ வென,
இருவேறு ஐயமும்,
தெளியாமை.
.
இதிலெது சரியென்று
வாதிட முனைந்து-அதன்
பதிலுக்குப் பதிலாய்
சாட்சிகள் புனைந்தும்,
தீர்வதும் தானாம்,
அறிவாகும்..

எவரெவர்க்கு சரியது
எதெது மதித்து --அதை
அவரவர்க்கு உரியது
அதுவென சகித்தும்,
இயல்வாய் வாழ்வதும்,
நன்மையாம்.

கொ.பெ.பி.அய்யா

Wednesday, 26 August 2020

கவிததையோ!கற்பனையோ!

கவிதை ஒன்று எழுதினேன்...
காட்டிக் காட்டி மொழிகிறேன்.
கருத் தென்ன சொல்வரோ!
கூட்டில் என்னைக் கொள்வரோ!

வடிக்கும் அற்புதச் சிலையோ!
செதுக்கும் சிற்பக் கலையோ!
கைகளில் வளர்ந்த அழகோ!
பொய்களில் மலர்ந்த கவிதையோ!

கருத்தைத் தேடுவனல்ல அறிஞன்.
கருத்தை விதைப்பவன் கவிஞன்"
உருவாக்கப் படுவனல்ல ஞானி:
பிறப்பால் கவிஞனும் விஞ்ஞானி.

கருத்து  வடிக்கப்படுவது பாட்டு,
பாட்டு செதுக்கப்படுவது கவிதை.
பொருளும் இசையும் அழகு,
எட்டும் இலக்கியம் பழகு!.

சிலையோ கலையோ சிற்பமோ!
இலக்கின் நயமோ கற்பனையோ!
இரசனை அனுபவப் பொருளோடு:
உரையாடுங் கவிதை உயிரோடு.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 August 2020

ஆராய்ச்சி மணி.

ஆராய்ச்சிமணி!

மனுநீதிச் சோழமன்னன்
பசுவுக்கும் நீதி சொன்னான்.
ஆராய்ச்சி மணி ஓசை
நேராட்சி நம்பிக்கை!.

குற்றஞ் செய்தோன் மகனாயினும்
சுற்றம் பாராது நீதி செய்தான்.
பாலவயதுக் காரணமும்
பரிந்துரைக்க வில்லையே!.

பதினெட்டுங் குறைந்தானென
விதியவனுக் குதவுமென்றால்!
வயதுங்கூடக் குற்றஞ்  செய்ய
வாய்ப்பளிக்கக் கூடுமன்றோ!

சாட்சிகள் வலுவானாலே
சட்டங்களும் தண்டிக்கும்.
சாட்சியிருந்துஞ் சலுகையாலே
சட்டந் தர்மம் விலகலாமோ!

தில்லிகண்ட கொடுமையிலே
சொல்லொண்ணா வன்மைகளை
செய்தவனைச் சிறுவனென்றும்
சட்டமவனை  விடலாகுமோ!

சட்டத்தையுந் திருத்தலாம்.
சண்டாளரைத் தண்டிக்கலாம்.
விடமென்றறிந்த பின்னும்.
வீட்டுக்குள் ஒளிக்கலாமோ!

கொ.பெ.பி.அய்யா.

காலைப்பொழுது.

காலைப்  பொழுது.

சின்னஞ் சிறு பொழுது,,
சேவல் கூவி எழுப்புகிறது.
கண்ணங் கருமை கரைகிறது,
கதிரவன் வரவு வளர்கிறது.

ஊதல் காற்று இதமாக,
உலாவும் கீற்று இசையாக,
குயில்கள் பாட்டும் இரசமாக
மயில்கள் ஆட்டம் வசமாக..

நனைந்தும் பனியில் மலர்களோ
நடுங்கும் இரவுடன் கலந்ததோ!
மெல்ல இருளின் போர்வையோ
கள்ளம் விலகிக் கலையுதோ!

திங்களாய் மங்களப் பூவையர்,
மஞ்ள்  பூசி நீராடி
ஞாயிறு வாசல் வரவேற்போ!
பாயிரங் கோல அணிவகுப்போ!

ஆழ்ந்த களைப்பு உறக்கம்தான்.
ஆதவன் விழித்துச் சிவந்தெழுந்தான்.
வாழ்த்தும் புல்லினம் குலவையிட:
வாழ்வின் ஆதாரம் வளர்கின்றான்..

கொ.பெ..பி.அய்யா.

Saturday, 15 August 2020

வரலாறு படைப்போம்.

வரலாறு படைப்போம்!!

பழைமைச் சாத்திரங்களை
பாடைகட்டி யேற்றுவோம்.
புதுமை ஒழுக்கங்களை
மேடையேற்றிப் போற்றுவோம்.
சிறுமைச் செலவுகளை
சிக்கனத்தில் நிறுத்துவோம்.
வறுமைப் பேய்களை
வம்சத்தை அழித்திடுவோம்.

திருமணச் சடங்குகளை
திருத்தி அமைத்திடுவோம்.
வரதட்சனைக் கொடுமைகளை
வளராது வேரறுப்போம்.
அருமை இளைஞர்களை
அறவழி பேணச்செய்வோம்.
திருவளர்ச் சீர்களை
தெளிந்துமே தொடருவோம்.

வாழுமுறைக் கல்வியை
வகையுறக் கற்றிடுவோம்.
நாளும் வரும் புதுமைகளை
நயம்பட அறிந்திடுவோம்.
காலமோடும் விரையங்களை
கணக்கிட்டுத் தெளிந்திடுவோம்.
ஞாலமெழுதும் வரலாறுகள்
நமையெழுத உழைத்திடுவோம்.

கொ.பெ.பி.அய்யா

Tuesday, 4 August 2020

கண்துயில் மல்லிகையே!

உறங்கவோ!நெருங்கவோ!

என்முகம் நான் தொடவே;
என்கரங்கள் அஞ்சுதே!
உன்னை ஏன் தழுவேனோ!
கண்துயில் மல்லிகையே!

கட்டில் ஒன்று இரண்டாகி,
தொட்டில் சென்று பரணேறி;
விளக்கொளி காவலிலே:
விழித்தேங்கல் ஆனதோ!

கல்யாணம் ஆகி யென்ன!
பள்ளியறை போயு மென்ன!
கொரோனா சொல்லுமோ!
உறங்கவோ நெருங்கவோ!

கொ.பெ.பி. அய்யா

Monday, 3 August 2020

வறுமை இனி இல்லை.

வறுமை இங்க இல்லை என்றே
பெருமை பேச செய்தது--அன்று
வளமை செய்த நதிகள் எல்லாம்
சிறுமை யாகி வறன்டது--இன்று
மறுபிறவி எடுத்துக் காவிரி
கழனியெலல்லாம் செழித்தது.