Monday, 29 December 2014

பாரதிப் பெண்.

பாரதி கண்ட புதுமைப் பெண்

பாரதி கண்ட புதுமைப் பெண்
பாரதம் நின்றிடும் உன் பின்.
சாரதி அவன்தான் பாரதி.
ஆரெதிர் நிற்பார் பார்வதி.

தர்மம் தெரிவதும் தூரம்தான்.
தடங்கல் கடப்பதும் நேரம்தான்.
கரடும் முரடும் பயணம்தான்
கண்டு தொடுவதும் கடினம்தான்.

மழைக்கும் முன்னே இடிமிரட்டும்
அதையும் தாண்டி அதுபொழியும்
களைக்குப் பயந்தால் விவசாயம்
களஞ்சியம் சேர்க்க உதவாதாம்.

பிள்ளைப்பேறும் கடுமைதான்.
இல்லை அதுபோல் கொடுமைதான்.
மரணம் அருகினில் இருந்தாலும்
மகவினைக் கண்டதும் மறந்துவிடும்.

பட்டினி என்பதும் பாவமடா.
பசிப்பது என்பதும் சாபமடா.
தட்டில் படையல் யோகமடா
தட்டிப்பறிப்பவன் நீசனடா.

வறுமை இல்லா வாழ்க்கையதை
வாழ உழைக்கும் கர்மமதை.
ஏழை இல்லா உலகமதை
நாளை எழுதும் தர்மம் அதை
.
விடியல் கூடி வளர்கிறது.
விளங்கும் தர்மம் ஒளிர்கிறது.
பாவம் பதுங்கி ஒளிகிறது
சாபம் தீண்டி அழிகிறது.

தொடர்ந்தும் தர்மம் தோற்பதில்லை
கிடந்தும் தன்பணி சோர்வதில்லை.
படர்ந்தும் பாவம் படும் வேளை
முடித்தும் நாட்டும் திருநாளை.

பாவியர் கூட்டம் பதறுதடா.
பாவ வலையில் கதறுதடா.
தேவியின் வேட்டை தொடருதடா.
திசைகள் நான்கும் அதிருதடா.

சக்தியின் வடிவம் வளமாக
பக்தியின் படிவம் பலமாக
வெற்றியின் முழக்கம் தமதாக
சுற்றியும் விளங்கும் தமிழாக.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 24 December 2014

வள்ளலே தமிழே!

கொடைமொழி வாழ்க!

தேமதுரத் தமிழே திருக்குறள் திருவே!
நாமண மொழியே நெறிமுறைப் பொருளே!
சேமத்தின் செழிப்பே நாமத்தின் சிறப்பே!
கோபுரப் புகழே கொடைமொழி வாழ்க!

அன்னை தெரேசா அன்பின் வடிவம்.
உன்னை வரைந்தால் அன்னையின்  படிவம்.
அனாதை என்றே எவரிங்கு இருப்பார்
அரசாணை கொண்டே அவர்வந்து பொறுப்பார்.

பசியென்ற சொல்லை பழக்கத்தில் தொலைப்போம்.
விதியென்ற தொல்லை வறுமையும் அழிப்போம்.
தொடர்ந்தும் செம்மை ஆட்சியும் அமைப்போம்.
படர்ந்தும் திட்டம் போட்டதும் நிறைப்போம்.

மாறி மாறி ஆண்டும் மாறிடும்
மாறும் ஆட்சி  ஆட்டம் ஆறிடும்.
தமக்கென மேயும் தீயகம் முடியட்டும்
தமிழகம் என்றொரு தாயகம் விடியட்டும்.

கட்டும் தமிழகம் கட்டி நிறைப்போம்.
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுவோம்.
செம்மார் கரங்களில் நம்பிக் கொடுப்போம்.
நம்மா நிலம்பார் செம்மா நிலமாம்   


கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 23 December 2014

கைகோர்க்கும் நதிகள்.

நதிகளும் கைகோர்க்கும்.

வெற்றி வெற்றி என்றே வீறு கொள்ளுவோம்.
சுற்றி சுற்றி வென்றே பாரு வெல்லுவோம்..
கொட்டிக் கொட்டி கைகள் கொட்டி குலவை செய்யுவோம்.
தட்டித் தட்டி தாளம் தட்டி தமிழை வாழ்த்துவோம்.
தலை தலையாய் தமிழ் புவி எங்கும் சிறக்கட்டும்..
அலை அலையாய் நதிகளும் பொங்கி இணையட்டும்..

தமிழே  வாழ்வே  என்றே ஆடிப் பாடுவோம்.
தரணி ஏற்றி ஒன்றே நாமே  கூடுவோம்.
விழலாய் வீணே  சுயநலம் ஆடும் கூட்டத்தை
சுழி போட்டுப் பூஜ்ஜியமாய் விரட்டி ஓட்டுவோம்.
தலை தலையாய் தமிழ் புவி எங்கும் சிறக்கட்டும்..
அலை அலையாய் நதிகளும் பொங்கி இணையட்டும்..

வல்லரசு இந்தியாவை வடிவில் காணுவோம்.
நல்லரசு தமிழகத்தில் நாளும் பேணுவோம்.
ஈழரசு இலங்கை மண்ணில் ஏற்றி ஊணுவோம்.
ஈழத்தோடு தமிழ் இணைந்து நட்பில் தோணுவோம்.
தலை தலையாய் தமிழ் புவி எங்கும் சிறக்கட்டும்..
அலை அலையாய் நதிகளும் பொங்கி இணையட்டும்..

வறுமை எனும் கோடழித்து வளமை பெருக்குவோம்.
சிறுமை எனும் கேடழித்து திருமை செதுக்குவோம்.
அரசு எனும் எந்திரத்தை ஆய்ந்து தேற்றுவோம்.
தரிசுபட்ட செயல் செழிக்க தரத்தை ஏற்றுவோம். 
தலை தலையாய் தமிழ் புவி எங்கும் சிறக்கட்டும்..
அலை அலையாய் நதிகளும் பொங்கி இணையட்டும்..

கதிகள் துணியும் காலம் கனியவும் தேடுவோம்,
மதிகள் முனையும் நாளும் விளையும் சேருவோம்.
நதிகளும் கைகோர்த்து நாடெங்கும் ஓடுமே.
விதிகளிலே வேளாண்மை பாரெங்கும் ஆளுமே!
தலை தலையாய் தமிழ் புவி எங்கும் சிறக்கட்டும்..
அலை அலையாய் நதிகளும் பொங்கி இணையட்டும்..

கொ.பெ.பி.அய்யா.



Monday, 22 December 2014

தமிழடிமை.

நானும் தமிழடிமை.!

என்னுறவே என்னுயிரே
எண்ணுவதும் உன்னலமே!
தமிழினமே தாய் மனமே!—இந்த
தமிழடிமை நான் உனதே.

நாதி என்று சொல்லிக்கொள்ள
சாதி இந்தத் தமிழ்தானே!
மீதி என்ன வேறெனக்கு?—தமிழே
போதும் உந்தன் உறவெனக்கு..

பெருமாள் ஆவடைத்தாய்
உருவாக்கம் பிச்சையா நான்
திருவென்று வேறில்லை--எனக்கு
தமிழன்றி சோறில்லை.

தமிழ்தானே தாயெனக்கு
தனையன்தானே நானுனக்கு.
வேறென்ன உறவிருக்கு?-வேறு
யாரென்ன துணையிருக்கு?

தாய் தந்த தமிழ் பாலே
சேய் எந்தன் உயிர் நாளே!
வாழ்வதும் நான் யார்க்காக?—என்னை
வாழவைத்த தமிழுக்காக.
.
எந்தை வழி தமிழ் மொழியே
அந்த மொழி அமிழ் தினிதே !
சிந்தை எல்லாம் நீதானே—எனது
சிறப்பு எல்லாம் நீதானே!

என்னுடைய சொத்தே நீ!
என்னுடைய சுகமே நீ!
தமிழே என் சந்ததியே!-தமிழ்
தாய் மடியே தானெனக்கே!

எனக்குத் தலை பாரதியார்.
எதை எடுத்துப் போனாரோ!
தனது சொந்தம் தமிழென்றார்.-அது
எனது சொந்தம் தானன்றோ!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 20 December 2014

பயம் தமிழுக்கில்லை.

தனியொரு அகராதி.

வெற்றி வெற்றி  என்றே தமிழே வா.
பற்றி பற்றி நின்றே பழமையே வா.
பயம் பயம் என்று மிரள்வோற்கெல்லாம்—பயம்
விலக்கும் பலமே வா வா!

பயம் என்ற சொல்லும் பயப்படும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை-பயம்
பழக்கம் தமிழில் வழக்கமில்லை.

அருமை என்றோர் மொழி யுண்டு.
திருமை கண்டோர்  வழியுண்டு.
பெருமை கொண்டது தமிழென்று--பயம்
அறியத் தமிழுக்கு தெரியாது..

பிறந்தோம் என்பதும் உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் ஆதாரம் ஒன்றால்
முடித்தோம் என்பதும் முயலும் நன்றால்--பயம்
 விடுத்த தமிழும் தோற்காது.

குடும்பச் சிறுமை தன்னலம் துறக்கும்
தடையாய் நிற்கும் அச்சமும் மறக்கும்.
கடமை உணர்ந்த அன்னைத் தமிழுக்கும்--பயம்
உடமை அல்லவே புகழுக்கும்.

தமிழே தானொரு அகராதி நூலே!
தரணி என்பதன் பொருளும் போலே!
புவியதில் வாழ்வின் புதுமைச் சோலை--பயம்
தவிர்த்த பெருமை வாழ்வே!


கொ.பெ.பி.அய்யா.

நாளையப் பாரதம்.

நன்று சொல்லுவோம்.

நன்று சொல்லுவோம் நாமே வெல்லுவோம்
நமக்குள் நாமே நன்றி கொள்ளுவோம்.
நாளையப் பாரதம் நமது கைகளில்
வேளை வந்தது விடியல் காணுவோம்.

இளைஞர் படையதும் இயக்கம் வெல்வதும்
இமயம் பெறுவதும் புரட்சி என்பதும்
தமிழன் கொடியதும் தரணி ஆள்வதும்.
தருமம் ஜெயமெனப் பரணி பாடுவோம்.

தென்திசைக் கோடியும் விண்மிசை ஏறியும்
பண்ணிசைப் பாடியும் பரவசம் கூடியும்
வெற்றியை முழக்கியும் சுற்றியே கூவியும்
பற்றுவோம் நடுவணை முத்தமிழ் சூடியும்.

கட்டியம் கூவிடும் நிச்சயம் ஒலிக்குது
சத்தியம் மேவிடும் பச்சையம் ஒளிருது.
விண்ணதிர் முழக்கம் அன்னையர் குலவைகள்
கண்ணெதிர் விளக்கம் முன்மொழி கேட்குது.

ஜெயம்ஜெயம் ஜெயமென ஜெயம்பாடும் வாழ்த்துக்கள்
நயம்வயம் நட்பிணை நலம்நாடும் ஏற்புகள்.
தயவென்ன தமிழுக்கு தமிழுறவு மேன்மைக்கு?.
புயமென்ன புதுமைக்கு புகழ்வரவு ஆண்மைக்கு?

கொ.பெ.பி.அய்யா.


Saturday, 13 December 2014

வாழ்க தமிழ்..

வாழ்க தமிழ்!

தமிழே!உன்னைத் தாயெனச்சொல்லத்
தரணியும்  கூசாது.
அன்னை!உன்னை யாரினி வெல்ல
பின்னையும் பேசாது.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

எட்டா உச்சம் இலக்கியம் மெச்சும்
எட்டுத் திக்கும் பொதுமறை  எட்டும்.
கட்டிய திருமை மற்றவர் போற்றும்
நட்டிய பெருமை நற்றமிழ் ஏற்றும்.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

தானே முயன்று உலகது ஏற்கும்.
வானின் உயர்ந்து  தமிழது நிற்கும்
அமிழ்தம் மொழியது ஆணவம் தீர்க்கும்.
கமழும் உறவது ஞாலமும் ஈர்க்கும்.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

இறுகிய சுருக்கும் உருவியும் மறுக்கும்
திருகிய உயிரும் மருவியும் பிறக்கும்.
தமிழென்றால் அறமென்று தனிவழி சிறக்கும்.
எமனுக்கும் தமிழென்றால் இயக்கமும் மறக்கும்.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

அன்னையின் கருணை தமிழுன் சிறப்பு.
உண்மையின் விளக்கம் உனதுள் திறப்பு.
மானுடம் வாழத்தான் வானுந்தன் பொறுப்பு.
நானுனைப் பாடத்தான் வேணும்தான் பிறப்பு.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

விடிவெள்ளி காந்தி.

நல்ல வேளை.

நல்ல வேளை காந்தியாரை
கண்டு கொண்டோமோ!.
இல்லை யெனில் நாடு என்ன
ஆகும் கண்டமோ!!

அள்ளிக் கொள்ளை தானேன்னு
அடித்திருப்பாரோ!-ஐயோ
கொள்ளிக் குடம் அந்நாளே
உடைத் திருப்பாரோ!

சரியான நேரம் அவரை
கண்டு கொண்டாமோ!--பூமி
சரித்திரத்தில் இந்தியாவை
வென்றெடுத்தோமோ!

நிரந்தரமாய் இந்தியாவும்
நிலைத்திருக்கவே—தர்மம்
நிறை குடியரசை படேல்
தெரிந்தெடுத்தாரே.

நினைக்கும் பொழுதே நெஞ்சம்
எல்லாம் பதற்றமாகுதே!--கொஞ்சம்
இந்தியரும் அசந்திருந்தால்
என்ன கதியாமோ!

விசக்கிரிமி பரவி மோசம்
ஆகிருப்போமோ!-–ஐயோ
விடியாத இருளுக்குள்ளே
துடித்திருப்போமோ!

விடிஞ்சதையும் அடைஞ்சு போக
ஊதிப் பாத்தாங்க--கதை
முடிஞ்சாருன்னு பழையபடி
நுழைய வந்தாங்க.

நேரு  யாரு காந்தியாரு
தேர்ந்த பேருங்க—நாட்டை
 தெய்வம் போல கூட்டியொண்ணா
சேர்த்து வைத்தாரே.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 10 December 2014

சவாலுக்கு சவால்.

சவாலுக்கு சவால்.

நல்லார்க்கு நல்லாராய்
வில்லாற்கு வல்லாராய்
கள்ளார்க்குப் பொல்லாராய்
கல்லாற்கும் சொல்லோராய்
உள்ளாரும் ஒருவராய்
எல்லாம் நீ மனிதனாய்.

சேவலுக்கு சேவலாய்
கூவிடும் துணிச்சலாய்    
தூவலுக்குச் சீறலாய்
பாவிடும் அணிகளாய்
சவாலுக்கு சவாலாய்
காவல் நீ வீரனாய்.

தீவினை அழிக்கவே!
தீர்வினை தேறவே!
நாவினை அடக்கவே!
நஞ்சுரை மடிக்கவே!
நேர்வினை நீயாக
நேர்ந்திட்டால் புனிதனே.

பொய் மொழி வழக்குகள்
புறமுதுகு காட்டாமல்
மெய்வழி வழக்கிலே
மெய்ப்பித்து நிறுத்தியே
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து நீ நிற்கவே.

கொ.பெ.பி.அய்யா.

மதியருள வேண்டும்.

யார் நாடாள வேண்டும்.

நல்லவர் நலம் வாழ இறையருள வேண்டும்.
வல்லவர் நா டாள தமிழருள வேண்டும்.
இம்மா நிலம் வாழ விதியருள வேண்டும்..
நம்முள் நாம் ஆள மதியருள வேண்டும்.

சுய நலம் ஆண்டு சுரண்டிய மண்ணை
நய வஞ்ச கத்தில் நலிந்திட்ட மண்ணை
சுய பலம் கொண்டு திருத்திடு தன்னை
நய நெஞ்ச கத்தில் இருத்திடும் உன்னை.

இல்லறம் துறந்தவர் அரசியல் ஞானி !
சொல்லறம் சிறந்தவர் அறவியல் பேணி.
வெல்லறம் துணிவார் வல்லுரம் ஊணி.
நல்லறம் புரிவார் பொல்லதும் நாணி.

துறவிக்கும் உறவுகள் உறவுக்குள் உரிமைகள்.
பிறந்தநம் தமிழ்மரபில் சிறந்தநன் சிறப்புகள்.
நாடெல்லாம் தம்மக்கள் வீடெல்லாம் நாடாக`
பாடெல்லாம் நமக்காக வேறென்ன தனக்காக.?

தன்னலம் மனதில் தான்சிறை அடைப்பாரார்
மண்ணலம் தனதாய் வன்முறை துடைப்பாரார்
அன்னவர் நினைவில் நம்குறை அறிவரார்.
அண்ணலின் கனவினை தன்நிறை செய்வரார்.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 6 December 2014

புதியநல்வழி.....குழந்தைப்பாடல்.

புதிய நல்வழி 6 (குழந்தைப்பாடல்)

தமிழை எழுதிப்படி!.
தாய்மொழி தமிழ்.
திருக்குறள் உலக மறை.
தீட்டில்லை பிற மொழி.
துருவுக அயல் கலை
தூண்டுக பல துறை.
தெளிவது நேர் பொருள்.
தேர்வது தாய்மொழி.
தைபோல் வாழ்க!
தொழிலும் தமிழில் பழகு.
தோன்றல் முதலே போற்றி,
தௌவை தமிழே போற்றி.

தௌவை--தாய்

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 2 December 2014

மதுரமல்லி.

மதுரக்காரி.

குதுர வாலு கொண்டக்காரி
மதுரப் பேச்சு நாட்டுக்காரி.
மதுவைப் பாத்தா சண்டக்காரி--அன்பு
நெதமும் தந்தா வீட்டுக்காரி.

உழச்சிக் குடுத்தா உரிமைக்காரி.
களச்சிப் படுத்தா கருணக்காரி.
அலைய நெனச்சா கோவக்காரி--சோம்பி
தொலைய மறஞ்சா காவக்காரி.

புருசனா வந்தா பொண்டாட்டிக்காரி.
மனுசனா கண்டா கொண்டாட்டக்காரி.
அப்பனா நடந்தா அவசிங்காரி—குடிச்சி
மப்புல கிடந்தா துப்புவாகாரி.

தலைவனா வாழ்ந்தா அடிமைக்காரி.
தடுமாறி வீழ்ந்தா வழித்துணைக்காரிஂ.
வறுமை மறக்கப் பாட்டுக்காரி.—மனுச
பொறுமை நிலைக்க கூட்டுக்காரி.

பழகும் நல்ல பாசக்காரி
உலகம் விரும்பும் நேசக்காரி.
கலகம் மூண்டா கம்புக்காரி.---அஞ்சி
விலக மாட்டா வீம்புக்காரி.

புருசன் புள்ள ஆளுமக்காரி
கரிசனம் உள்ள சீருமக்காரி.
மானம் காக்கும் மவுசுக்காரி---பெண்மை
நாணம் போற்றும் பவுசுக்காரி.

கொ.பெ.பி.அய்யா.