Thursday, 26 December 2013

குடிகாரன் பேச்சு.

குடிகாரன் பேச்சு!!

குடிக்கிறான் குடிக்கிறான்
கோட்டி வரக் குடிக்கிறான்
அழிக்கிறான் அழிக்கிறான்
அடிமை வீணே அழிக்கிறான்.(குடி)

தேடிய சொத்து விடுகிறான்.
நாடியும் செத்து படுக்கிறான்..
நடைதான் கெட்டு சுடுகாடு
நடைபாதை தானே விழுகிறான்..(குடி)

பாடும்  பட்டுத் தானொழிய
கூடாம் தன்னை சிதைக்கிறான்.
வீடென ஒன்றும் இருந்தாலும்
விலாசம் இழந்து அலைகிறான்..(குடி)

பெண்டு பிள்ளைகள் திண்டாட
கண்டும் பாவி குடிக்கிறான்.
கொண்டாடிக் கூத்தாடி தெருவில்
கோமணம் விலக மறக்கிறான்..(குடி)

தண்டம் என்றே அவலமாகி
முண்டமாகிக் கிடக்கிறான்
சண்டாளன் போன்றே உயிரோடு
சந்தி சிரிக்க பிணமானான்..(குடி)

பித்தன் ஆகித் திரிகிறான்
பிச்சை கூட எடுக்கிறான்
இருக்கும் வரையும் குடிக்கிறான்
இல்லாட்டி போதைக்கு திருடுறான்.(குடி)

சுற்றி நாளும் மதுக்கடைதான்
சொக்கியும் அங்கே படுக்கிறான்
உருக்கி உருகி உடலைத்தான்
ஒருநாள் தானே தொலைக்கிறான்..(குடி)

நம்பி ஏங்கும் குடும்பமோ
நடுவே தெருவில் தவிக்குது.
தம்பி இவன்போல் யாருமே
தடமே அழிந்தும் சாவீரோ!.(குடி)

குடிகாரன் பேசும் பேச்செல்லாம்
விடிஞ்சாப் போச்சு எனச்சொல்லும்.
உண்மை அவனே சொன்னாலும்.
உளறல் என்றே தள்ளுவார்..(குடி)

கொஞ்ச நேரம் மதி மயக்கும்
எஞ்சும் காலம் விதி முடிக்கும்
அஞ்சும் குடியும் விடு பழக்கம்?
துஞ்சும் விடியல் தொடு விழிக்கும்..(குடி)

கொ பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment