Wednesday, 25 December 2013

நகரங்கள் சாபங்களா.

நகரங்கள் சாபங்கள்!

நாகரிகம் விளைந்த நகரங்கள்--சுவர்க்கம்
நகலாய் விளங்கிய மாநகரங்கள்.
பாவங்கள் நிறைந்த துயரங்களாய்-இன்று
பகிரும் நரகம் சாபங்களோ!

உறவுகள் மறந்த அந்நியமோ!--பழமை
மரபுகள் தொலைந்த தன்னியமோ!
வேரினைக் கொள்ளிடும் விபரீதமோ!-பெற்ற
தாயினைத் தள்ளிடும் நகரீயமோ!

ஆசைகள் குறித்து ஓடுவதும்--பொய்மை
வேசைகள் அணைத்து ஆடுவதும்.
பாசம் புதைத்து தேடுவதும்--ஒருநாள்
வேசம் கலைத்து வீழுவதாம்.

அன்னை இல்லம் வரைந்திருபான்.--அதில்
கண்ணீர் தாய்தான் கரைந்திருப்பாள்
சுமந்தவள் சுமையோ இடமிலையோ!-அவள்
சுமையென சிதைத்தால் கடனிலையோ!

முதுமை எவர்க்கும் வாராதா?--அன்று
நிலைமை அவர்க்கும் நேராதா?
முதியோர் இல்லம் கணக்காக--இடம்
ஒதுக்கியும் சொல்லும் நினைவாக.

மேலே ஓடும் பாலமாம்--வறுமை
கீழே வாழும் பாவமாம்..
பறக்கும் ரயிலும் மேலேதான்--பாவம்
வறுக்கும் துயரம் கீழேதான்.

உள்ளே மேலே பயணமாம்---ஆஹா
ஓடும் மெட்ரோ ரயிலுமாம்.
உள்ளளார் அவர்க்கே தகவாமோ-அது
இல்லார் சுமக்கும் கனவாமோ!

ஆறாய் சாக்கடை கூடுவதும்-கூடி
சேறாய் போக்கடை மூடுவதும்
ஊதும் கொசுப்படை சங்கமோ!--நோய்
தீதும் தரும்கொடை பங்கமோ!.

காலை மாலை சோதனைகள்--சாலை
காக்கும் நெரிசல் வேதனைகள்..
வேலை மெனக்கெடும் அவலங்கள்--தினம்
வீக்கம் மனம்படும் கவலைகள்.

சொகுசுப் பேராம் ஊந்தென்பார்--அதில்
சொகுசைக் காணோம் தேடென்பார்.
விட்டால் மூச்சு போச்சுதான்--மீண்டு
வந்தால் மூக்கின் யோகம்தான்..

பர பரப்பாய் கூடுவார்--தேடும்
பறவை களாய் ஓடுவார்.
எந்திரன் போல் இயங்குவார்-வாழும்
தந்திரம் கண்டால் வாழுவார்..

ஏக்கங் களின் மூட்டையாம்--ஏழை
தூக்கம் கெடும்  பூச்சியாம்
நடை மேடைக் கூடுதான்--ஆதி
தடம் காட்டும் வீடுதான்.

கடற்கரை மணலின் ஓரங்கள்-கண்
படுகிற விரசப் பாவங்கள்.
கெடுகிற மரபின் கோரங்கள்-அலை
எழுவது தமிழின் கோபங்கள்.

குடிசை தினம் முளைக்குமாம்--வேட்டைக்
காவல் அதை கலைக்குமாம்
கோ புரங்கள் உயரத்தான்--ஏழ்மை
சாபம் நகரம் நிலையிதாம்.

கொ.பெ.பி.அய்யா..




No comments:

Post a Comment