Sunday, 30 August 2015

என் சுவாசக் காற்றே!

நீ என் சுவாசக் காற்றே!


நீ என் சுவாசக் காற்றே!
நீ வாழ வேண்டுமே!
நீயே சக்தி!சாமி நானே!
நீயும் நானும் சேராவிட்டால்
ஏது காதல் பக்தி!!

இரண்டில் ஒன்று
எது குறைந்தாலும்
வரண்டு விடாதோ காதல்
வரமாய் கொண்டேன்
வாழ்வில் கண்டேன்
வாழ்வோம் இனிதே சுபமே!

உலகம் நமது கையிலே
ஒப்படைத்தானே இறைவனே!
விலகும் பொருளோ
வீணே எதற்கோ!
திலகம் நீ மட்டும்
தேவை எனக்கே!

உயிர்கள் செய்வோம்!
பயிர்கள் வளர்ப்போம்!
உலகம் நிலைக்க
உன்னைக் காப்பேன்!
உறுதியில் இருப்பேன்!
உணர்விலிதுவே சத்தியமே!

இது ஒவ்வொரு இளஞனும்
இதயம் கொள்க!
புதுப் பிரளயம் தவிர்த்திட
பெண்ணினம் காக்க!
                   


கொ.பெ,பி..அய்யா.






காதல் உலகின் ஆதாரம்.



காதலே ஆதாரம்.

கவிதை என்றும் எழுதவில்லை.
எழுதித் தந்தும் படிக்கவில்லை.
பெண்ணே அவள்தான் கவிதையோ!
கண்கள் செதுக்கிய வரிகளோ!

காதல் கொண்டால் அவளோடு.
காலம் உண்டு உயிரோடு.
சாதல் வந்து பிரித்தாலும்
சாவதும் அந்தச் சாவாகும்.

காதல் என்றும் தோற்காது.
தீயதில் வெந்தும் நீர்க்காது.
தோன்றிய சுடரது அணையாது.
ஊன்றிய நெஞ்சதில் தணியாது.

காதல் அஞ்சும் தோல்வியோ!
சாதலென்ன வேள்வியோ!
வீரம் தூண்டும் காதலே
தீரம் ஆண்டும் வாழுமே!

ஆன்மா நேர்ந்த சங்கமம்,
ஆண்டவன் தேர்ந்த மங்களம்.
நீளும் புவியின் ஆதாரம்,
வாழும் உயிரின் காதலாம்.

கொ.பெ.பி.அய்யா.




Thursday, 27 August 2015

சேவல்.....குழந்தைப்பாடல்

சேவல் (குழந்தைப் பாடல்)

கொக்கரக் கொக்கரச் சேவலே
கொண்டை ஆட்டும் சேவலே
கக்கரப் புக்கரப் பாப்பாவை
கண்டு கூவிக் கூப்பிடு.

வண்ண வண்ண இறகுகள்
வளைந்த வாலுச் சேவலே
சின்னச் சின்னப் பாப்பாவை
சிறகடித்துக் கூப்பிடு.

அசைந்து அசைந்து நடக்கிறாய்
அழகு உள்ள சேவலே.
இசைந்து நீயும் பாப்பாவை
பறந்து வந்து கூப்பிடு.

கூரை மேலே ஏறிடு
கூவிக் கூவிப் பாடிடு
சோறு உண்ணப் பாப்பாவை
சொல்லிச் சொல்லிக் கூவிடு.

கொண்டையக் கொண்டைய ஆட்டியே
சண்டைக்கு நீ வாரியோ
சந்தோசமாய் பழகுவோம்.
சகோதராய் விளையாடுவோம்.

காலை தினம் கூவிடு!
கடமை செய்ய ஏவிடு!
எழுப்பி இந்த மனிதரை
இருளை விட்டு அழைத்திடு!


கொ.பெ.பி.அய்யா.


..

Monday, 24 August 2015

காமராஜ் குழந்தை பாடல்

கர்மவீரர் காமராசர்(குழந்தைப்பாடல்)

"அ"னா "ஆ"வனா-அது 
அரிச்சுவடிப் பாடம்.
"கு"னா "கா"வனா-இது 
படிச்சவங்க யோகம்.

படிக்கவைத்த காமராசர்--அன்று 
ஏற்றிவைத்த தீபம்.
விடிஞ்சதம்மா விளங்குதம்மா--இன்று
ஏழைக்குத்தான் காலம்.

சுத்தமான மனிதருக்கு--புகழ்
உத்தமராம் பேரு.
மத்தியான சோறு தந்தார்--திகழ்
சத்தியமா சாமி.

நாட்டுக்காக வாழ்ந்தவராம்--அந்த
நல்லவரைத் தேடு!
ஆற்றுத்தண்ணீர் தேக்கியவர்--நம்ம
அய்யா புகழ் பாடு.

களர் நிலம் கழனியாச்சு--ஏழை
உழவர்தொழில் வளமாச்சு
பழகுதமிழ் மொழிப்பேச்சு--சோலை
அழகு அவர் குணமாச்சு.,

படிக்காத மேதை என்றே--அவரை
பழகாதார் இழிப்பார்!
கிடைக்காத கீதை ஒன்றே--இவரை
படைத்தவனும் படிப்பான்.

எதிரியென எவருமில்லை.--கண்டும்
பதறும் நிலை அவருக்கில்லை.
சுதந்திர அடையாளம்--கொண்டும்
மதமிலா மனிதராம்.

சிவகாமி புதல்வராம்--என்றும்
புவிவாழும் புனிதராம்.
விருதுநகர் தந்த புகழ்--ஒன்றும்
விருதுதான் காமராசர்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 23 August 2015

கப்பலோட்டி.....குழந்தைப்பாடல்

கப்பலோட்டிய தமிழன் (குழந்தைப்பாடல்)

ஆகாயம் பொழியுதோ!
ஆச்சி வீடு ஒழுகுதோ!
காகிதக் கப்பல் ஒன்றும்
போகுதோ கடல் கண்டும்.

உனக்கு முன்னே ஒரு தமிழன்
தனக்கு லாபம் கருதாமல்
நிசமாக கப்பல் விட்டான்
சுதேசிணும் பேரிட்டான்.

தமிழர்களின் சரக்கேற்ற
தடை என்ற வெள்ளைக்கப்பல்
சுமையின்றி சோம்பியது
சுதேசிதான் ஓடியது.

உலகையே அடக்கினான்
களவானி வெள்ளையன்.
குலப்பிள்ளை தமிழன்
மடங்கவே இல்லை.

கலகக்காரன் என்றே பொய்த்தான்.
கைதியாக்கி சிறையில் வதைத்தான்.
ஓட்டப்பிடாரம் உலக நாதரின்
வீட்டுப்பிள்ளை என்பதை மறந்தான்.

செக்கிழுத்த செம்மல் யாரோ?
சொக்கி எழுந்த சிதம்பரனாரோ!
சுதந்திரக் காற்றின் சுவாசம்தானோ!
சுகம்தர வாழ்ந்த வ.உ.சி பேரோ!

கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 18 August 2015

தொடுவானம் தூரமில்லை.

தொடுவானம் தூரமில்லை.

நினைத்துப் பாரு நீதான் உலகம்.
எடுத்துச் சூடு நெற்றியில் திலகம்.
சிலிர்த்து நில்லடா உன்னால் முடியும்.
உழைத்து வெல்லடா தன்னால் விடியும்.

அக்கம் பக்கம் அவன் இவனெல்லாம்
திக்கெங்கும் திரியும் திருந்தா ஜென்மம்.
அக்கறை வேண்டாம் அவர்வழி மாற்று.
தக்கது கூடி தனிப்புகழ் ஏற்று.

சக்கரைப் பேச்சு சண்டாளர் கூட்டம்.
அக்கரைப் பச்சை என்றாசை காட்டும்.
தோணா ஊரை சென்றதாய் ஏய்க்கும்.
கானல் நீரை கண்டதாய் மாய்க்கும்.

கண்டார் வாய்வழி கொண்டால் தோசம்.
கொண்டாள் ஆய்மொழி நின்றால் வாசம்.
பெற்றார் நன்றி நற்றாள் போற்றும்
நற்றார் ஒன்றி கற்றால் ஏற்றும்.

சொல்லை சுருக்கி செயலை முடுக்கு.
எல்லை பெருக்கி இயன்றது அடுக்கு.
தோற்றது பாடம் ஏற்றது தேடு!
மாற்றது ஓடம் ஆற்றது கூடு.

ஆகாது ஒன்றும் அறிவுக்கு இல்லை.
சாகாது உண்டும் சரித்திரம் இல்லை.
ஆக்கை கொண்டும் கூர்முனை வாளாம்.
வாழ்க்கை வென்றும் போர்க்களம் தூளாம்.

தொடு வானம் தூரம் இல்லை.
விடி நாளும்  வாரம் இல்லை.
முயன்று தொட்டால் முடியா தில்லை.
பயின்று கற்றால் படியா தில்லை.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 13 August 2015

கரியமாலழகு

இதுதான் பொதுவாழ்வு!

இப்படியும் ஒரு பஞ்சாயத்துத் தலைவரா!

அதிசயம் ஆனால் உண்மை.

உண்மையாகவே மக்கள் நலனுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்து பொதுவாழ்வு மேற்கொள்ளும் உத்தமர்கள் சிலர் இப்போதைய காலச்சூழலிலும் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் சத்தியமாக நாம் நமது மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்படவேண்டிய அதிசயமனிதர்தான்.
அவர்.

அப்படியா!அப்படிப்பட்ட அந்த அற்புத மனிதர் யார்?அவருடைய அடையாளம் என்ன?ஒரு இத்துப்போன சைக்கிள்தான் அவருடைய வாகனம்.மா.பொ.சி.போல் எடுப்பான மீசையும் புருவமும்,அண்ணாவைப்போல் அடக்கமான தோற்றமும் எளிமையும்,காமராசரைப்போல் தூயவெண்மை வேட்டியும் சட்டையும் அணிந்துவரும் கம்பீரம்.பெரும்பாலும் அவர் காலணி அணியக் கண்ட ஞாபகம் எனக்கில்லை.இதுதான் அவருடைய அடையாளம்.

மகோன்னதமான மாபெரும் தேசியத் தியாக சீலர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்,கபலோட்டிய தமிழன் வ.உ.சி,மகாகவி பாரதியார் தோன்றிய தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்னும் வரலாற்றுச்சிறப்புமிக்க புண்ணிய பூமி வட்டத்தில் உள்ள பெருமைக்குரிய வேடநத்தம் எனும் சரித்திரப்புகழ் பெற்ற ஒரு அழகான கிராமத்தில் பிறந்து அதே ஊரில் நான்குமுறை(அதில் இரண்டு முறை போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பதும் இவருடைய தூய்மையான பொதுவாழ்வுக்கு கிடைத்த சிறப்பம்சமாகும்) தொடர்ந்தும் பஞ்சாயத்துத் தலைவராக பொதுவாழ்வு வாழ்ந்துகொண்டு மக்கள் பணியாற்றி வருபவர்தான் திரு. கரியமால் அழகு எனும் அரிய மனிதர்.இந்தப் புண்ணியவானைப் பெற்ற பெருமைக்குரியவர்கள் திரு தொ.அழகுக் கவுண்டர்--சரஸ்வதி தம்பதியர் ஆவர்.இவருடைய பொதுவாழ்வுக்கு பக்க துணையாக நின்று ஊக்கம் தரும் துணைவியார் திருமதி கொண்டம்மையாரும் மற்றும் இவருடைய பிள்ளைகளும் இவருக்கு ஒத்த குணமாக அமைந்ததும் அக்கிராம மக்களின் பாக்யமாகும்.

ஒரு சராசரிக்கும் கீழான மிகவும் பிற்பட்ட நிலையில் சாதாரணக் கிராமமாக இருந்த வேடநத்தம் கிராமத்தை இன்று அக்கம் பக்கம் கிராமத்தாரும் விரும்பி வந்து குடியேறும் அளவிற்கு சகல அடிப்படை வசதிகளும் நிறைந்த சொர்க்கபுரியாக எழில் பெறச்செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது.உலகத்திற்கே குடி நீர்ப் பஞ்சம் வந்தாலும் இந்த ஊரை அது எட்டியும் பார்க்காது என்பது திண்ணம்.அந்த அளவிற்கு பல்முனைக்குடிநீர்த் திட்டம்.சந்து, பொந்து,ஊர்ப்புறம் மற்றும் அனைத்துத் தெருக்களும் சிமெண்ட் சாலைகள்.அது போன்றே இரவும் பகல் போல் காட்சிதரும் அருகருகே குறைவான இடைவெளிகளில் தெருவிளக்குகள்.எந்த ஒரு விளக்கும் எந்த ஒரு குடிநீர்க்குழாயும் எந்த ஒரு நாளிலும் ஓய்வெடுப்பதில்லை கரியமால் அழகைப் போலவே.

இப்படிப்பட்ட சேவைகள் எல்லாம் ஒரு பஞ்சாயத்துத் தலைவரின் கடைமைக்கு உட்பட்டதுதான் என்றாலும்கூட அக்கடைமைகள் செவ்வனே நிறைவேற்றப்படுகின்றனவா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்புகள்.அவ்விதமான பொதுவான எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி சில அதிசயங்கள் புரிவார் இவர்.அந்தக் கிராமத்தில் எந்த ஒரு தனிப்பட்ட வீட்டிலும் நிகழும் மங்கள மற்றும் அமங்கள நிகழ்வுகள் எதுவானாலும் இறுதிவரை நின்று தோள் கொடுப்பார்.பந்தல் கால் நட்டுவதிலிருந்து பாத்திரங்கள் கழுவி வண்டி ஏற்றும்வரையும் துணை நிற்பார் என்பதால்தால்தான் இவர் அக்கிராம மக்களின் நெஞ்சம் நிறைந்த தலைவராகவும் தொண்டராகவும் பாரதி கண்ட சேவகக் கண்ணனாகவும் என்றும் மாறா பொதுவாழ்வு வாழ்ந்து வரும் உடன்பிறவா உறவாக நிலை பெற்றுள்ளார். ஊர்த் திருவிழா எதுவானாலும் இவரே முன்னின்று நடத்துவார்.எந்த சமூகம் ஆனாலும் அதுவும் தன் சொந்த சமூகமே என்றே தோளோடு தோள் கொடுக்கும் தோழனாக துணை நிற்பார்.

இன்றைய அரசியல் வாழ்வில் அதாவது பொதுவாழ்வு என்ற பேரளவில் ஒரு வார்டு உறுப்பினர் கூட கோடி சேர்த்துள்ளதாக வெளிப்படையான உண்மைதான்.ஆனால் இவரோ தன் பூர்விக சொத்தையும் இழந்துள்ளார் என்பதே அந்த ஊர் மக்களின் ஆதங்கம்.அவருடைய குடும்பப் பங்கில் கிடைத்த வீடொன்றைத் தவிர வேறொன்றும் இருப்பதாகவும் நான் என் அனுபவப்பூர்வமாகக் கேள்விப்படவில்லை.என்றும் இக்கிராமத்தின் பெருமை கரியமால் அழகு எனும் பேரும் காசி விசாலாட்சி கோவிலும்தான்.

பிறர் பாராட்டும் விரும்பமாட்டார்.ஒருவேளை இக்கட்டுரை அவர் கண்ணில் பட்டுவிடக்கூடுமோ என்பதே எனது கவலை.ஏனெனில் இப்படிப்பட்ட செயல்கள் அவருக்கு ஏற்புடையது அல்ல என்றே நான் தயங்கினாலும் அவர் என் வயதுக்கும் மூத்தோன் என்னும் சிறப்புக்கும் என்றென்றும் மரியாதை தரகூடியவர் என்பதில் எனக்கும் ஐயமில்லை.அவரைப்பற்றி நான் யோசிக்காமல் ஒரு உதாரண புருஷரை உலக்குக் காட்டவேண்டிய கடமை ஒரு எழுத்தாளனுக்கு உண்டு என்று துணிந்தேதான் எழுதுகிறேன்.

இதுதான் பொதுவாழ்வு என்று முன்னுதாரணமாக வாழும் இந்த உண்மையான மக்கள் தொண்டரை நமது அரசாங்கம் கண்டுகொள்ளுமா?அப்படிக் கண்டுகொண்டால் அரசு என்ன விருது தந்து ஊக்குவிக்கும்.அல்லது கௌரவிக்கும்?

முன்னுதாரணமாக வாழும் அரிய மனிதர்களை தேடிக்கண்டறிந்து உலகுக்குக் காட்டி இளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டி வழி நடத்துவீராக!

விரும்பும் ஊர் வேடநத்தம்.

வேட நத்தம் என்றாலே--எவரும்
விரும்பும் ஊர் என்னும் பொருளே.
தேடும் நித்தம் கண்டாலே--காசி
விசுவநாதர் அருளாலே!

தூத்துக்குடி மாவட்டம்--வளம்
ஏற்றுக்குடி வேடநத்தம்.
வேற்றுமைகள் பாராட்டா--உளம் 
போற்றுக்குடி வேடநத்தம்.

ஊரென ஒன்றும் தூரம்--காட்டும்
உயர்ந்து நின்றும் தோப்பு.
நேரெனக் கொண்டும் நித்தியம்--போற்றும்
நிமிர்ந்த கோபுரம் வேட நத்தம்.

வீர வேடர் நீராவி--கண்டு
வேட்கை தணிய மொண்டு
ஆறிய தாகம் அருமை--கொண்டு
தேரிய நத்தம் வேட நத்தம்.

வேடுவர் பெண்ணை நாடியே--வேலன்
தேடிக் களைத்து ஓடியே-
கூடிய மோகம்  தீரவே---ஊற்று
ஆடிய தீர்த்தம் வேடநத்தம்

ஊரெனக் குடும்பம் ஒன்றாம்--பந்தம்
தேரெனப் பிடிக்கச் சொந்தம் 
சீரென நகர்த்தும் நன்றாம்--ஒன்றாம்
பேரெனப் புகழுறும் வேடநத்தம். 
.
விரிந்தும் பெருகியும் வளர்ந்தும்--தினம்
அறிந்தும் சமத்துவம் அமைந்தும்-
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்--கணம்!
உறையும் வணக்கம் வேட நத்தம்.

சுவர்க்கம் எங்கே தேடலாம்--அந்த 
சுகமும் கண்டே ஆறலாம்.
கரிய மாலின் கருணையே--கண்ட
புதிய சுவர்க்கம் வேடநத்தம்.

காசி விஸ்வ நாதனும்--துணை
வாசி விசாலா ஆளும்-
ஆசி மேவும் வாசம்--இணை
நேசம் வாழும் வேடநத்தம்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 11 August 2015

இலவசம் எதற்கு?

இலவசம்!

கொடுப்பதெல்லாம் இலவசமென்றால்
உழைக்குமவசியம் இருக்காது.
இருப்பதெல்லாம் பொதுவென்றால்
கொடுக்கும் வேலை இருக்காது!

இருப்பது தீர்ந்து கொடுப்பது  ஒழிந்தால்
எடுத்திடப்பிச்சையும் கிடைக்காது.
கவிதைகள் மட்டும் இலவசப்பொருளாய்
காற்றிலலையும் தேடாது!

உழைத்திடுந்தேவை உணர்ந்தாலே
ஊரும் வாழும் அழியாது.
வளர்த்திடுங்கடமை அறிந்தாலே
வளரும் நாளை நல்லது!

புள்ளிகளாவது தந்திரமென்றால்
பூஜ்யங்களோ இலவசமே!
உயர்த்தும் ஒன்றோ உழைப்புத்தான்.
வியர்த்தாலாகும் வெற்றியே!



கொ.பெ.பி.அய்யா.



மதுவை ஒழிபாபோம்.

ஒருங்கே ஒழிப்போம்!

குடிப்பது பாவம் குற்றம் என்றும்
தடுக்கும் சட்டமும் திருத்தாது--அது
உடலுக்கு கேடு என்பதை உணர்ந்தாலே
குடிக்கும் கூட்டமும் முளைக்காது.

மூடு மூடென போராடும் அவசரம்
தேடொரு தீர்வின் அவசியம்--ஒரு
நாடும் வீடென நடப்பினை அறிந்தும்
ஈடும் வேறொன்றும் வரையட்டும்.

கடையை மூடும் தடையின் பூட்டும்
குடியை மறக்க தடுக்காது---காலம்
பழகிய மயக்கம் விலகிட விளக்கம்
வழங்கிட சிகிச்சை வழிவேணும்.

தனியொரு பாடம் தளிரதன் இளமை
துவக்கம் முதலே பயிலணும்--பாவ
மதுவின் கேட்டை மனதில் நிறுத்த
புதுமைத் திட்டம் அறியணும்.

வள்ளுவன் பாடிய மதுவுண்ணா நெறியை
சுள்ளெனக் கூறியும் மீட்டுவோம்--மனிதன்
கண்படும் இடமெலாம் தென்பட விளம்பரம்
நன்பட நெஞ்சில் ஊட்டுவோம்.

அறிவினில் இயல்பாய் புரிதலே அல்லாது
வலுவினால் மதுவும் ஒழியாது-மதுவால்
அழியும் தீதை ஒழிக்கும் முயற்சி
பயிற்சயால் திருத்த பழக்கணும்

வருகிற ஆண்டின் வரலாறு தொடக்கம்
அரசின் மதுவும் அடக்கம்--வடிக்கும்
கள்ளம் முளைக்கும் கருவை ஒழிக்கும்
வல்லமை நிலைக்க உதவுவோம்.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 8 August 2015

அரசியல் வீச்சம்.

அரசியல் வீச்சம்.

பொய்யும் புரட்டும் போக்கிரித்தனமும்
செய்யும் தொழிலே அரசியலோ!
வைய்யும் வசவும் வாக்கிழிக்குணமும்--சீச்சீ
 மைய்ய வீச்சம் பேய் மொழி அசிங்கம்.

நேற்றொரு பேச்சு இன்றது போச்சு
மற்றொரு கூட்டு மாற்றும் பேச்சு
பச்சோந்திக் கூட்டம் பகல்வேச ஆட்டம்--சீச்சீ
எச்சை அரசியல் இதவொரு பிழைப்பா?

மானம் ஈனம் மழுங்கிய ஊனம்
மாறும் கோணம் முகம்பல வேசம்.
கூச்சம் துறந்த வேசியைப் போலும்---சீச்சீ
பேச்சும் மறக்கும் அரசியல் தோசம்.

திருடித் தின்ன பூனைகள் விடுமா?
விரட்டிய  பின்னும் வெக்கப் படுமா?
உருட்டித் தேடும் புரட்டிப் போடும்--சீச்சீ
சுருட்டி ஓடும் அரசியல் பாவம்.

பூச்சால் மயக்கும் பொய்மை அறிவீர்!
பேச்சால் நயக்கும் சீர்மை தெளிவீர்!
ஏச்சால் பிழைக்கும் விரசியல் அழிப்பீர்!--சீச்சீ
கூச்சல் விளைக்கும் அரசியல் ஒழிப்பீர்!

நாட்டுக்கு உழைத்த நல்லோர் மறைந்தார்.
வீட்டுக்கு வளைக்கும் வில்லோர் நிறைந்தார்.
விலை கொடுத்து உரிமை பறிப்பார்--சீச்சீ
கொலை முடித்து அரசும் பெறுவார்.


கொ.பெ.பி.அய்யா.