Wednesday, 25 December 2013

முளைவிடும் அறிவு.

முளைவிடும் அறிவு!

சின்னச் சின்னக் குழந்தையாம்.
சொல்லச் சொல்லப் பழகுமாம்.
வண்ணம் கண்டே துலங்குமாம்.
எண்ணம் கொண்டே சிரிக்குமாம்.

அனுச்சம் தூண்டல் அதுதானே
துணியும் தீண்டல் அனுபமே.
தன்னைத் தோன்றல் வினைதானே
முன்னை ஆண்டல் விளையாட்டே!

விளை யாட்டுத் தன்னாடல்
நிலை ஊன்றும்  முன்தேடல்.
கலைபடா அதன் போக்கே
முளைவிடும் அறி வாக்கே!

பயம் பழகச் செய்யாதே
வயம் விலகப் பொய்யாதே!
சுயம் பயில மடக்காதே!
நயம் முயல அடக்காதே!

கண்கள் கசிய அரட்டாதே!
புண்கள் பதிய மிரட்டாதே!
அச்சம் நெஞ்சில் ஊட்டாதே!
துச்சம் நஞ்சில் ஆற்றாதே!

திடுக்கும் பேச்சும் விடுக்காதே!
திரளும் ஆற்றல் மறுக்காதே!
தொடுக்கும் கேள்வி தடுக்காதே!
படிக்கும் தோல்வி மறிக்காதே!

கட்டங் கட்டி இருத்தாதே!
மட்டம் தட்டி நிறுத்தாதே!!
இட்டம் மறுத்து வருத்தாதே!
திட்டம் வகுத்து பொருத்தாதே!

வெற்றுக் காகிதம் வெள்ளையே
பற்றும் போலதும் கிள்ளையே!
உற்றும் பழகும் உன்னையே!
கற்றும் தெளியும் தன்னையே!

அன்பின் அணைவு அருமருந்தாம..
அன்னை மடியே பெறுவிருந்தாம்.
பண்பின் குருவே தந்தையாம்.
பின்னை நிழலே நன்றியாம்.

மெல்ல மெல்லப் பேச்சுதான்.
அள்ளி அள்ளிக் கொஞ்சத்தான்.
துள்ளித் துள்ளி ஆடித்தான்.
பள்ளி செல்லும் கூடித்தான்.

இல்லம் அதுதான் முன்பள்ளி.
சொல்லிப் பயின்றோம் அன்பள்ளி.
நல்லன அமையும் சூழலே
வெல்லென விளங்கும் ஆளலே!

பழகும் விதமும் நலமானால்
பாடங்கள்  பதிவும் தரமாகும்.
வளரும் பலமும் வளமானால்
வாழும் உலகம் சுபமாகும்.


கொ.பெ.பி.அய்யா.













No comments:

Post a Comment