Saturday, 31 October 2015

ஞானம்.

ஞானம். தன்பட்டுத் தன்பட்டு--மனம்
பண்படவேண்டும் தென்பட்டுத் தென்பட்டு-ஞானம் தன்பட வேண்டும். முயன்று முயன்று-அனுபவம் பயின்றிட வேண்டும். அறிந்து அறிந்து-அறிவு விரிந்ந்திட வேண்டும். புரிந்து புரிந்து-புலமை தெளிந்திட வேண்டும். பழகிப் பழகி-மடமை விலகிட வேண்டும். விளங்கி விளங்கி-உறவு துலங்கிட வேண்டும். நெருங்கி நெருங்கி -சமூகம் மலர்ந்திட வேண்டும். இணங்கி இணங்கி-உலகம் சிறுத்திட வேண்டும். வணங்கி வணங்கி-அந்நியம் மறைந்திட வேண்டும். உணர்ந்து உணர்ந்து-மனிதம் உயர்ந்திட வேண்டும். அழிந்து அழிந்து -பகைமை
தொலைந்திட வேண்டும். உருகி உருகி -அன்பு பெருகிட வேண்டும். அருகி அருகி -பேதம் அழிந்திட வேண்டும். தேடி தேடி--நட்பைக் கூடிட வேண்டும். கூடிக் கூடி -தீர்வை தீர்த்திட வேண்டும். வேண்டும் வேண்டும் -இயற்கை இறையென வேண்டும். வேண்டாம் வேண்டாம்-செயற்கை
மதமது வேண்டாம். கவிஞர். கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 28 October 2015

முடியாத தும் உண்டோ!

உன்னைநீ கற்றுக்கொள்!

துள்ளடா விழித்துநீ பாரடா!
நில்லடா எழுந்துநீ கேளடா!
சொல்லடா உணர்ந்துநீ யாரடா!
செல்லடா நிமிர்ந்துநீ நேரடா!

வந்த வேலை என்னடா?
சென்ற நாளை எண்ணடா!
இந்த வேளை உன்னடா!
முந்து காலை முன்னடா!

மலை என்ன எதிர்க்குமோ!
அலை உன்னை மறிக்குமோ!
தொடர்ந் தறைந்து மோதினால்
நிலை கரைந்து விலகாதோ!

விடியாத இரவுண்டோ!
படியாத விலங்குண்டோ!
பயிலாத விடையுண்டோ!
முயலாத அடைவுண்டோ!

உன்னைநீ கற்றுக்கொள்!
தன்னைநீ பெற்றுக்கொள்!
என்னயில்லை உன்னுள்ளே!
உன்னைமிஞ்சி ஒன்னுமில்லே!

கொ.பெ.பி.அய்யா.

Monday, 26 October 2015

மனமே நீ என்னை.........!

மனமே நீ என்னை...........!


மனமேநீ என்னை மயக்காதே!-உன்
குணம்நான் அறிவேன் குழப்பாதே!
ஆளும் தலைவன் நானேதான்-மனமே
அடிமைக்கு இல்லை அதிகாரம்.

மனம்போல் பிழைப்பவன் வீழ்கிறான்-கேடு 
மறுக்கத் துணிபவன் வாழ்கிறான்.
ஐம்படைப்  போரே தகர்த்தாலூம் !--மனமே
ஆன்மா நேரே ஜெகத்தாளும்!

நரகமும் சொர்க்கமும் எங்குண்டு?--எண்ணம்
பழகும் விதத்தில் அங்குண்டு.
அருத்தம் பொருத்தம் சமமுண்டு.--மனமே!
தெரிவாய் புரிவாய் சுகமுண்டு.

கொடுக்கலும் வாங்கலும் நேரென்றால்--விட்டுக்
கொடுத்துப் பெறுதல் சமங்கண்டால்  
கூடும் உறவில் தடையோ!-மனமே!
தேடும் சுவர்க்கம்  நிசமே!

சந்தேக நஞ்சும்  பொல்லாதே-நெஞ்சம்
கொண்டாடும் வஞ்சம் கொல்லாதோ!
துன்பம் துயரம் தானன்றோ-மனமே!
சண்டாளம் நீயே நரகமோ!

தவப்படும் நெஞ்சம் நெறிப்படும்-எண்ணம்
அலைபடும் என்றால் தெறிப்படும்.
வசப்படும் சிந்தை அகப்ப்படும்-மனமே!
இசைப்படும் ஒன்றால் தகப்படும்.

துலங்கும் அனுபவம் புத்தியும்-ஆன்மா
விளங்க அறிவது சித்தியும்.
விலங்கு குணமும் விலகிட--மனமே!
விலங்கிடு சினமே நலந்தொட!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 25 October 2015

பெண்பாவம்.

பெண் பாவம்!

உன்னைக் காணக் காய்கிறேன்
உருகி நானும் தேய்கிறேன்.
என்னை நொந்தும் கண்கலங்கி 
பெருகிச் சிந்தும் கண்ணீரோ!
கடலைக் கடக்கா பெண்ணேங்கி
கரையும் அபலை இக்கரையில்.

வானும் கூடத் தானிரங்கி
நானும் வாடப் பொறுக்காமல்
தானும் சிந்திக் கண்கழுவி
ஏன்தான் ஆற்றித் தேற்றுவதோ!
காண்பதும் நம்புங் கண்களுடன்
வீண்தான் நெஞ்சும் மயங்குவதேன்?

நிலவே நீயேன் விரைகிறாய்?
அலைந்தும் தேடி கரைகிறாய்.
உன்னைக் கண்டும் விண்மீன்கள்
கண்கள் சிமிட்டி ஒளிவதேனோ!
பகையோ உனக்கவை! பயமேனோ!
வகையென்ன அறிவாய்! அஞ்சுகிறேன்.

விடிந்தால்  வருவான் ஆதவனோ!
படர்ந்தால் பசலை புரிவானோ!
அறிந்தால் தொடர்வான் பாதகனோ!
அடைவாய் நிலவவே அவசரமே!
ஆண்துணை இல்லா பெண்பாவம்!
வீண்வினை சொல்லும் மண்சாபம்!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 23 October 2015

பாவம் விடாது.





பாவம் விடாது!

பாவிகளே! பாவிகளே! சண்டாளப் பாவிகளே!
பாவம் சும்மா விடுமோடா சிங்களப் பேய்களே!
சாபம் என்றும் பொய்க்காது சாவும் வீணாகாது.
தீபமதும் தீயும்முன் தீவிழுங்காத் தீராது..

உயிருடன் விளையாட்டா வயிரிங்கு எரியுதடா!
உயிரென்ன மயிராடா!உருப்படாப் பாவிகளா!
தின்னஉயிர் எத்தனை தீர்ந்ததோ வெறியுனக்கு?
கொன்றஉயிர் அத்தனையும் என்னபாவம் செய்தது?

தமிழென்ன அனாதையா தர்மந்துணை இருக்குது.
நிமித்தங்கள்  கணக்குண்டு நேரம்வரை காத்திரு!
பதிலென்ன கூறுவாய் பலிகொண்ட உயிர்களுக்கு.
விதியென்ன ஆறுமா வினையறுக்கப் பொறுத்திரு!

கோடிகோடி உயிர்களை கொண்டமகா சக்தியை
கூடிக்கூடி ஒன்றென குவிந்தமாக் காளியை.
தேடித்தேடி அழித்தாலும் கூடிக்கூடி தழைக்குமே!
ஓடிஓடி ஒளியவும் உனக்குஇடம் ஏதடா?

சூலம்தேடி வருகுதோ காலம்கூலி தருதற்கே!
நாளும்கூடி தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி தீர்க்குமே சாபம்பலி ஏற்குமே!
தீபஒளி அதுவரை தவமேற்று முடிக்குமே!

கொ.பெ.பி.அய்யா.


Friday, 16 October 2015

கைபேசி ஜாக்கிரதை.

கைபேசி ஜாக்கிரதை !

பெண்கேட்டு வந்தானென்று--கைபேசி
எண்ணேற்றித் தந்துவிட்டாள்.
பின்விசாரணை செய்வதற்குள்--பாவம்
பெண்ணவன் வசமானாள்..

கைபேசி பொல்லாதது--பொய்
காதலைத்தான் வளர்த்தது..
கொஞ்சும் மொழி பேசிப்பேசி--முதல்
மஞ்சம் கொண்டு சிதைத்தது.

வகை பலவாய் காமசுகம்--ஆசை
நகை பணமாய் உல்லாசம்.
மாப்பிள்ளை வேசம்போடும்--மோசடி
மன்னன் இன்று சிறைவாசம்.

எத்தனையோ திருமணங்கள்--பாவி
அத்தனையும் மறுமணங்கள்.
அத்தெறியும் தாலிக்கெல்லாம்--நீதி
உத்தறியும் நியாயமென்ன!

கொ.பெ.பி.அய்யா.

உண்டா இல்லையா

உண்டா!இல்லையா!

உண்டா!இல்லையா!கடவுள்?--கண்டவர்!
உண்டா?இல்லையா உலகில்?
கண்டேன் என்று சொன்னாலும்--கண்டு
உண்டென நம்பும் நன்றுண்டோ!

காற்றுக்கு என்ன வடிவமோ!--நேரே
காட்டு என்றால் முடியுமோ!
தொட்டால் மேனி உணர்வதோ!--இறையும்
உள்ளம் ஒன்ற ஒளிர்வது!

தன்னைக் கண்டு அறியவும்--அங்கே
முன்னை உண்டு கண்ணாடி.
இறையைத் தனக்குள் புரியவும்--நெஞ்சே
துணையாம் தியானம் உள்ளாடி..

இதயம் என்றொரு கருவிதான்--வெறும்
இரத்தம் செய்யும் செயலுதான்.
உள்ளம் என்றொரு உறுப்புண்டோ!--உள்ளின்
உள்ளான் உள்ளவன் இறையன்றோ!

பொருளாய் ஒன்றின் உருவமோ!--அதுவும்
வரையாமல் தானே வளருமோ!
வடிக்காமல் ஏதோ வடிவங்கள்--எதுவும்
படைக்காமல் உண்டோ சகலமும்!

இயங்கும் செயலும் உண்மையோ!--அனைத்தும்
இயக்கும் சக்தியும் ஒன்றுண்டோ!
இயற்கை அதுதான் மூலமோ--அறிவியல்!
இயக்கம் ஆதி பகவனோ!

கல்லிலும் செதுக்கும் விந்தையும்--கலை
சொல்லிலும் ஒருக்கும் சிந்தையும்.
எண்ணில் நிறுத்தும் ஒன்றையும்---சிலை
தன்னில் பொருத்தும் தெய்வமும்.

மண்ணும் கல்லும் கட்டிடமே!--கந்தன்
எண்ணும் போதே ஆலயமே!
கல்லாய் கண்டால் கல்லுதான்--நெஞ்சின்
உள்ளாய் கொண்டால் கண்ணனே!

கொ.பெ.பி.அய்யா.



Wednesday, 14 October 2015

விடை பெறூம் வேளை.

விடை பெறும் வேளை!

உதிர்ந்த மலர்கள்
உற்ற தாய் செடியிடம்
என்ன கூறி விடை பெறும்?

"கொடிதந்தாய் பூத்திருந்தேன்.
மடிதந்தாய் காத்திருந்தேன்.
பருவத்தின் வாசனையை
தெரிவித்தேன் தேடிவந்தான்.

ரீங்காரம் பாடிவந்தான்.
ஓங்காரம் கூடிவிட்டோம்.
காதலெனும் மந்திரம்
கண்டறிந்தோம் வண்டும் நானும்..

உண்டதன் நன்றிக்கு
தந்து போனான் சூலுக்கு
அரும்பியதுக் காய்க்கட்டும்!
திரும்பவதும் பூக்கட்டும்!

விடைபெறும் வேளைவரை
கடமைகள் தொடரட்டும்
பூமியதும் நிலையதே
சாமியதும் சுழலுட்டும்"

என்றே மலர் விடை பெற்று
கண்ணீரைக் காணிக்கையாய்
தந்துதிர்த்து செடி நீங்கி
தன்பயணம் முடித்திருக்கும்.

இப்படித்தான் உடலும் உயிரும்
அப்படித் துணிந்திருக்கும்.

"இதற்கு மேலும் வேண்டாம்
இந்த உலகம்.
இங்கே சொர்க்கம் இல்லை.
நரகம் மட்டுமே!

அதிவிரைவு செயற்கைமுறை
புதுவரவு வேளாண்மை
விதி முடிக்கும் நோயரக்கர்
வலிவதைத்து சிதைக்கிறார்.

செலவெட்டும் வரவில்லை.
உழவெட்டும் விலையில்லை.
மழையெட்டும் மரமில்லை
வளமெட்டும் நிலையில்லை.
நீருக்குப் போராடும்
நிலை வரும்முன்
இருவருமே ஒருவரையொருவர்
விட்டு விடுதலையாவோம்."

எனத்தான் துணிந்தும்
உடலும் உயிரும்
ஒன்றுக்கொன்று நன்றிக் கூறி
விடை பெற்றிருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

சந்தித்த வேளை

சந்தித்த வேளை!

இரவும் பகலும் சந்தித்த வேளை
விடியலிடம் என்ன சொல்லி
இரவு பிரிந்திருக்கும்!

"இரவே நீ போ!போ!
கரிய இருளில் உனக்குள்
எதையெல்லாம் ஒளித்தாயோ
அதையெல்லாம் விட்டுவிடு!
அடைபட்ட எல்லாம்
விடுபட்டு ஒளிரட்டும்!
தடைபட்ட முடக்கம்
உடைபட்டு ஓடட்டும்!
அடங்கிய செயல்கள்
தொடரட்டும் தொடக்கம்!
வினைகளை முடுக்கிவிடு!
விடியட்டும் புத்துலகம்!"

எனத்தான் விடியல்
விரட்டியும் இருளை
விடுதலை பெற்றிருக்கும்.

"விடியலே நீ வாழ்க!இனி
வெளிச்சத்தில் உண்மையை
வெளிக்காட்டு!
உறக்கம் கலைத்து
உணர்வினை உசுப்பிவிடு!
மயக்கம் தொலைத்து
மனிதனை எழுப்பிவிடு!
விடுதலை விளக்கி
தொடுதலைக் காட்டிக்கொடு!
வேதம் ஆய்ந்தால்
பேதம் தீயும்.
ஆதி அறிந்தால்
சாதி மறையும்.
பொதுமறை நாட்டி
புதுவழி காட்டு!
ஒளிமுறை ஆண்டால்
இருள்திரை தீண்டாது"

எனச்சொல்லி இடித்துத்தான்
விடியலை விட்டும் 


இரவும் பிரிந்திருக்கும்!.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 13 October 2015

அடிமைதான் அடையாளமா.



எத்தனை முறை எச்சரித்தேன்
என்னை மதித்தாயா நீ?
வீணாசை விபரீத விளைவாச்சோ!-என
ஊழல் கைதியிடம் மனம்
சொல்லிக்காட்டி நொந்திருக்கும்.

இவன் உன் கட்சிக்காரன்
என்ற தகுதியைவிட இவனிடம்
வேறென்ன தகுதியுண்டோ!
சிந்திக்க விட்டனரா உன்னை?
இன்னும் அடிமைதானா நீ?
பழகிப்போன உன்னிடம்
உன்னுரிமையை நீ
சரியாகப் பயன்படுத்தெனச்
சொன்னால் கேட்கவா போகிறாய்-என
வாக்காளனிடம் வாக்குச்சீட்டு
சொல்லித்தானிருக்கும்.

பாவம் நீ!
நல்லாத்தான் எழுதியுள்ளாய்.
நானும் பெருமை அடைகிறேன்--ஆனாலும்
நீ இருக்கும் வரை என்னைத்
தேடமாட்டார்களே!-என
விரல்களிடம் எழுத்து ஆதங்கப்பட்டிருக்கும்.  . 

கொ.பெ.பி.அய்யா.

ஆசை ஆசை.

ஆசை! ஆசை!
இலக்கியம் செய்யத்தான் ஆசை! ஆசை!
இறப்பை வெல்லத்தான் ஆசை! ஆசை!
எழுத்தில் சொல்லத்தான் ஆசை! ஆசை!
கருத்தில் பரப்பத்த்தான் ஆசை! ஆசை!

ஆசை! ஆசை!
உலகம் சுருங்கத்தான் ஆசை! ஆசை!
கழகம் பெருக்கத்தான் ஆசை! ஆசை!
ஆட்சி விரியத்தான் ஆசை! ஆசை!
அகிலம் பரவத்தான் ஆசை! ஆசை!

Monday, 12 October 2015

இனிவருமோ இளமை!

இளமை நினைவுகள் 
எண்ண எண்ண இனிக்கும்.
இனி வாராதா என ஏங்கும்.
போனது போனதுதானே!
அசை போட்டு ஆன்மாவிற்கு 
ஆறுதல் தேடிக்கொள்ளலாம் 
வேறென்ன செய்யலாம்?


கவிஞனே!
நெஞ்சம் துடிக்க இடிக்கும் சொல் வீச்சு.
வஞ்சம் தீர்க்க உணர்த்தும் வரிகள்.
மஞ்சம் எறிந்துவிட்டு கொஞ்சுதற்கு வாவென
கெஞ்சும் உருக்கம் உதிர்க்கும் கண்ணீர் மொழிகள்!

மிஞ்சும் உயிர்களை கொஞ்சமேனும் காப்போம் வாவென
அஞ்சா நெஞ்சமாய் அறைகூவல் விடுக்கும் அன்பின் அலறல்.

எஞ்சிய கண்ணீரும் எண்ணில் சிந்தாதோ என்னில்!

Saturday, 10 October 2015

ஆச்சிக்கு அஞ்சலி.

ஆச்சிக்கு அஞ்சலி.

வருவதும் போவதும்
வாடிக்கைதான் என்றாலும்
வரலாறு ஆவதுதான்
பிறந்ததன் அடையாளம்.

வாழ்ந்ததன் பதிவுகள்
தேர்ந்ததன் புகழொன்றில்
ஆச்சியெனும் உச்சத்தில்
பேச்சானார் வரலாறாய்.

தாங்காத வேடமில்லை
தாங்க வேடம் மிச்சமில்லை.
தாங்க ஒன்னா திரையுலகம்
தாங்கல் சொர்கம் படைத்ததோ!

கின்னஸ் சாதனைதான்
தான்னார்வ நூதனம்தான்.
பத்மஸ்ரீ பட்டம் தானும்
நித்தியத்தின் பேர் வாழும்.

மனோரமா என்றாலே
மனோரம்யம் கொண்டாடும்.
உடல் மறைந்து நீர்ந்தாலும்
தடம் கரைந்து தீராதே!

உழைத்தவர் களைத்திருப்பார்.
அழைத்தவன் படைத்தவனே!
விதைத்தவர் விளைந்திருப்பார்.
முளைத்தவர் பிறந்திருப்பார்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 6 October 2015

சாமியெல்லாம் சாமிதானே!

உள்ளூர் சாமி!

எத்தனையோ மலையிருந்தும்
அத்தனையும் அழகிருந்தும்
மொத்தமாய் திருப்பதியில்
சத்தியமாய் பெறுவதென்ன!

திரு வரங்கப் பெருமாளும்
இருப்பதும் தான் தெரியாதோ!
சொந்தப் பூமி சாமியெல்லாம்
நெஞ்சம் விட்டுப் போனதேனோ!

பெற்ற தாய் அருமையென்றும்.
வற்று மென்றும் எண்ணலாமோ!
உற்ற மண் பொருளையெல்லாம்
மற்ற மண்ணில் கொட்டலாமோ!

கொடுத்த சாமி மறந்துவிட்டு
அடுத்த சாமி தேடலாமோ!
உரிமை இங்கு வறுமைப்பட்டு
பெருமை எங்கோ சேரலாமா!

தன்னைத் தானே ஏழையாக்கி
அந்நியர் கை ஏங்கலாமோ!
தம்மைத் தாமே கீழாக்கி
தம் திருமை நீங்கலாமோ!

பக்கம் கொண்ட சாமியானால்
சொர்கம் காட்ட மாட்டாராமோ!
சாமி யெல்லாம் சாமிகள்தானே!
சாமியில் கூட பேதங்கள் ஏனோ!

இறைவ னொருவன் என்பதும் பொய்யோ!
உறையும் இடம்பல என்பதும் மெய்யோ!
இருக்கிறான் எவருளும் இதயம் அவனே!.
உருகினால் ஒளிர்வான் உனக்குளும் தானே!

கொ.பெ.பி.அய்யா.


Friday, 2 October 2015

வெற்றி நிச்சயம்.

வெற்றி நிச்சயம்.

இருக்கிறாரோ இல்லையோ!
வருவாரோ மாட்டாரோ!
கலக்கும் பயம் எதிரிக்கு!--வெறி
வலுக்கும் பலம் தமிழுக்கு!

தருமம் தோற்று சாகாது.
கருமம் நீற்றுப் போகாது.
வர்மம் தீர்த்துப் பாராது--பிரபா
சர்மம் தூர்த்து மீறாது.

இடைவேளை நீளாது.
விடை நாளை மாறாது.
பகை ஊளை கேளாது-கரன்
இடை வாளைப் பூராது.

அலை நின்றும் ஓயுமோ!-
மலை என்றும் சாயுமோ!
கடல் வற்றிக் காயுமோ!--தமிழ்
படை முற்றித் தீயுமோ!

பகல் மறைக்கக் குடையோ!
இருள் விலக்கத் தடையோ!
புயல் அடக்க அடையோ!--அதிர்
இடி மறிக்கப் படையோ!

புலி தவறிப் பாயாது.
குறி இடறி மாயாது.
விடியாமல்த் தீராது.!--ஈழம்
அடையாமல் ஆறாது!

நிச்சயம் ஒன்று மட்டும்.
வெற்றியும் கொண்டு எட்டும்.
திறத்தமிழ் மாட்சி பெற்றும்-- வேலுப்
பிரபாகரன் ஆட்சி பற்றும்.


கொ..பெ.பி.அய்யா.