Tuesday, 31 December 2024

புத்தாண்டு

இனிதே புத்தாண்டே வா

 புத்தாணடேவா!

புத்தாண்டே வா!வா!
உத்தாண்டே உத்தமம்
புத்தாண்டே வா!வா!
தொட்டதும் நட்டதும்
உள்ளது வாழ்த்தும்
செல்லும் ஆண்டே போ போ!

தொல்லை தொலைந்தால்
நல்லது என்போம்.
அல்லவை தொடர்ந்தால்
பொல்லது என்போம்.
சொல்லது புத்தாண்டு
வல்லதாய் வா வா!

வேண்டாம் என்றால்
விடவா போகிறாய்
வேண்டுங் காலமும்
விடியட்டும் உன்னால்
புத்தாண்டு நீயும்
புகழே!வா!வா!

காலம் உன்னை
கடவுள் என்போம்.
கோலம் முன்னை
குறிப்பில் சொன்னோம்.
ஆளும் புத்தாண்டே
அழகே வா!வா!

கொ.பெ.பி.அய்யா.






சிக்கனம் பழகு.

சிக்கனம் பழகு

சம்பாதிக்கும்  வயது மழைக் காலம்.
தேக்கும் நீரின் சிக்கனக் காலம்.
அணையைக் காக்கும் அவசரம்
நாளும்,
உழைக்கும் காசும் நாளைக்கு ஆளும்.

கண்ணுக்குத் தெரியாமல்  கசிவதுபோல்,
கொஞ்சங் கொஞ்சம் குறையும்
அணை போல்
தேவை அற்ற வீண் செலவும்
பாழ்.
அவசியமில்லா  ஆடம்பரச் செலவதுபோல்.

பருவகாலம் மாறி மாறும் போல்
புரிந்தால் வயதில் சிக்கனம் 
தூள்.
வரவுக் குள்ளேயே சிக்கனம்
மேல்.
வரவு செலவுக் கணக்கில் வாழ்.

ஆடம்பர வாழ்க்கை ஆபத்து
ஆனது.
தேடிய செல்வம் தெய்வம் போலது.
கணக்குப் போட்டு வாழும் வாழ்வு.
தனக்குள் வங்கி தானே தேர்வு.

பெருமை கொண்டு வாழ்ந்தார்
இல்லை.
பொறுமை காத்து வீழ்ந்தாரும் இல்லை.
அருமை காத்திடும் சிக்கன வாழ்க்கை,
சிறுமை தவிர்த்த சிறப்புக்குள்
மேற்கை.

கொ.பெ.பிச்சையா.





நிலையில்லா வாழ்க்கை.

தாமரை இலைமேல்
தண்ணீரைப் போலே
பூமியில் வாழ்க்கை  நிலை இல்லை.
தாம்நிரை வாழ்ந்தோம்
என்பதும்-எல்லை
கண்டார் எவரும்  இல்லை.

வந்தது முடித்தா ரென்று
வாழ்ந்தாரும் இல்லை.
எதற்காக வந்தோமென்று
அதற்கென்ன செய்தோ மில்லை.
கொண்டது சொந்த மென்று
கொண்டாரும் இல்லை.
எப்படி வந்தோமோ 
அப்படித்தான் செல்வோம்.

தாயும் சேயும்.

வாயும் வயிறு மாக தாயும் சேயுமாக
தாயே வயிற்றுள் சேயாகினாள்
சேயின் வாயே தானாகினாள்.
சேய்க்கு மருந்து தாயுண்டாள் 
தாயே சேயாய் தானாகினாள்.
சேயுந் தாயும் ஆரோக்யம் தாயவள் கொண்ட சீராக்யம்.
தூக்கம் என்பது தாய்க்கும்
ஆக்கம் அதுபோல் சேய்க்கும்
நோக்கம்  ஒன்றே சேயிலே.
தூக்கத்தில் தானே கண்விழிப்பாள். 
தனக்குள் சேயே சிந்தனை.
அக்கம் பக்கம் அரணாக 
தாயே தானே அவளாக.

கொ.பெ.பிச்சையா.



Monday, 30 December 2024

சொத்திருந்தால் சுற்றம் வரும்.

பொருளில்லார்கு இவ்வுலகில்லை.

பழம் பழுத்தால் கிளிகள் வரும்
அழைக்கத் தேவை இல்லை.
குளம் நிறைந்தால் கொக்குகள் கூடும்
கூப்பிடத் தேவைஇல்லை.

பணம் இருந்தால் பந்தம் நாடும்
பழகத் தேவை இல்லை.
சொத்து இருந்தால் சொந்தம்  சேரும் 
சுற்றம் தேவை இல்லை.

வசதி வந்தால் வாழ்வு உயரும்
வணக்கம் தேவை இல்லை.
வீடு என்றால் முகவரி ஆகும்
தேடத் தேவை இல்லை

பதவி வரும் பவுசு வரும்
பகட்டும் வந்திடும்.
காவல் வரும் ஏவல் வரும்
கர்வம் வந்திடும்.
எல்லாம் வந்தும் என்ன செய்ய
இல்லாமல் போனால்!
உள்ளதெல்லாம் காடு ஏக
 உடன் வருமா?

கொ. பெ. பிச்சையா.









சாமிக்கெல்லாம் சாமி.

சாமிக் கெல்லாம் சாமி நீ!

சாமிக் கெல்லாம் சாமி நீ!
சண்முகா முருகன் நீ!
பூமி க்கெல்லாம் சாமி நீ!
பூலோகக் காவேலன் நீ!

தமிழுக்குத் தந்தை நீ!
தரணிக்குக் கந்தன் நீ!
தந்தைக்கு மந்திரம் நீ!
இந்திரன் மருமகன் நீ!

பிரம்மனுக்கு அதிகாரி நீ!
சிறை வைத்த சிறுவன் நீ!
படைக்கும் தொழில் துணிந்த நீ!
படை ஆறு தலைவன் நீ!

குறவள்ளி மணந்த நீ!
குலசமம் புனைந்த நீ!
வேடனாய் விருத்தன் நீ!
வரம் தந்த வள்ளல் நீ!

காக்கக் காக்கக் காவலன் நீ!
கந்த சஷ்டி சேவலன் நீ!
போர்க் குண வேலவன் நீ!
மூர்க்கன் சிரம் காலவன் நீ!

மயி லேறும் வாகனன் நீ!
துயில் தீரும் துறவறன் நீ!
ஒளவைக்கு ஆசான் நீ!
ஔடதமாய் பூசான் நீ!

கொ.பெ.பிச்சையா.



தைகூடும் திருவிழா

ஜல்லிக்கட்டு

கூடிய கூட்டம் என்ன ஆடிப்போன கோலமே!
வாடி வாசல் திறக்க இன்னும் நேரம் கொஞ்சம் ஆகுமே!
பாய்ந்து வரும் காளைகளை பார்க்கும் அந்தக் காலமே,
ஆய்ந்திடலாம் அலப்பறைகள்
அதற்கேற்ப களப்பறைகள்.

சீறி வரும் காளைகளின் கூரியநல் கொம்புகள்,
வாரிவிட வந்துவிழும் வாலிபங்கள் அம்புகள்.
அத்தனையும் தட்டிவிட்டு
கெத்தாக விடை கூறும்
வெற்றிக்  காளைக் கம்பீரம்
சுற்றி வரும் சிங்காரம்.

வாடி வாசல் திறக்கட்டும்
தேதி என்ன தெரியட்டும்.
வீர கோசம் ஜல்லிக் கட்டும்
தீர வாசம் திமிரு கொட்டும்.
தமிழன் எனும் அடையாளம்
சிமிழ் பிடிக்கும் விதமாகும்.
கமழும் மணம் காளைகள்
தமிழ் சூடும் வாகைகள்.

தமிழ் பாடும் பெருவிழா
தைகூடும் திருவிழா.
செய் வாகை வேளாண்மை
வைபோக ஆளாண்மை.
முதன்மைத் தொழில் விவசாயம்,
இதன்மை எழில் அவசியம்.
விளை நிலப் பெருந்தனம்.
உழவுக்கு வந்தனம்.

கொ.பெ.பிச்சையா.




விதைச்சாத்தான் சோறு.

விதைச்சாத் தான் சோறு
படிச்சாத் தான் வாழ்வு.
பசிச்சாத் தான் வயிறு
புசிச்சாத் தான் உயிரு.

சேர்க்காத சொத்து ஏற்காத முத்து.
பார்க்காத நஞ்சை பழகாத புஞ்சை.
வேர்க்காத வேலை கோர்க்காத மாலை.
ஏர் செய்யா நாளை ஊர் மொய்யா பாலை.

விளையும் நிலத்தை தலையெனக் காப்போம்.
அலையும் மனத்தை நிலையென வைப்போம்.
விவசாயம் அல்லாத அவசியம்
வேறென்ன உலகினில் இரகசியம்.

விவசாயம் அல்லாது வேறென்னவொ!
தவசம் செய்யுமோ தரணியில் அவசியம்!
வீடென்ன செய்யும் சோத்துக்கு!
நாடென்னும் செய்யும் வாழ்வுக்கு?
காடெல்லாம் வீடானால்
வாழ்வென்னாகும் நாளைக்கு?

கொ.பெ.பிச்சையா.







Wednesday, 18 December 2024

வெள்ளம் தேர்ந்த வெள்ளை அறிக்கை.

வாழ்ந்தவன் தாழ்ந்தவன் பேதமில்லை.
ஆண்டான் அடிமை சாதியில்லை.
ஏழை பணக்காரன் வாதமில்லை-சூழ்ந்த 
வெள்ளம் தேர்ந்தது வெள்ளை
அறிக்கை.

கோபுரம் குடிசை ஏற்றந் தாழ்வு
ஆபத்தில் எல்லாம் பொய்யான வாழ்வு.
நாதி யென்ன! சாதி யென்ன-வெள்ளம்
வீதியில் சொன்னது சமரச தீர்ப்பு.

பணம் பொருள் பெட்டியில் தூங்குது.
வானம் பார்த்து கையேந்தி ஏங்குது.
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை-வெள்ளம்
தானந் தர்மம் போதித்த உண்மை.

வனவாசம் போன்ற அனுபவ சோதனை.
வாழ்க்கையில் வாய்த்த நீதி போதனை.
ஒருவருக் கொருவர் உதவும் நன்மை-வெள்ளம்
நடத்திய பாடம் அறிந்திடும் உண்மை.

கொ.பெ.பிச்சையா.





Sunday, 15 December 2024

எங்கே கடவுள்,,?

எங்கே கடவுள்!எங்கே கடவுள்!
என்றே ஓடு!
அங்கே கடவுள்!இங்கே கடவுள்!
எங்கே தேடு!
கஷ்டம் வந்தால் கடவுள் தேடும் கஷ்டம் வேண்டாமே.
இஷ்டம் கொண்டே ஏழைக்கவன்
இரங்கி யருள்வானே!

இல்லை இறை என்றே சிலர் மறுத்துச் சொல்லுவார்.
இல்லம் உள்ளே பூஜை அறை
மறந்தே பேசுவார்.
படைக்காமல் எதுவுந்தானே ஆவதே இல்லை.
படைக்கும் மூல இயற்கையே
பகவா னென்போம்.

பகுத்தறிவு  என்பதையும் பகுத்துப் பாருங்கள்.
தொகுத்த அந்த இயற்கையை
தொழுது கூறுங்கள்.
சக்தி யன்றி எதுவுமே சாத்தியம் இல்லை.
சக்திதான் சாமி யென்றால்
பக்தி என்றில்லை.

உடலுக்குள் எத்தனையோ உறுப்புக்கள் உண்டு.
உடன்பட்டு கடன்பட்ட பொறுப்புக்கள் கொண்டு
எந்திரம் போல் இயங்கச் செய்த
விஞ்ஞானி யார்?
தடை படாமல் சுழலும் பூமிக்கு
உடையவன் யார்?

கடல் நீரை ஆவிபோகக் காய்ச்சியது யார்?
கதிரவனுக்கு கட்டளையிட்ட அதிகாரி யார்?
இயக்க வல்ல மூலம் ஒன்றை
இயற்கை என்கிறோம்.
இயற்கை யென்ற சக்தியையே இறையென்று தொழுகிறோம்.

கொ.பெ.பிச்சையா.






மனிதன்.

மனிதன்.

மனமெனும் அறிவை 
மனதன் பெற்றதால்
மனிதன் ஆகினான்.  
குணமெனும் நிறைவை
கூடுதல் பெற்றதால்
கனவான் ஆகினான்.

அழுகையும் சிரிப்பும் மனிதனின் சிறப்பு.
துன்பம் இன்பம் வெளிப்படும் குறிப்பு,
அன்பும் வெறுப்பும் அவற்றுள்
பிறப்பு,
என்பன எல்லாம் உணர்வெனும் பொறுப்பு.

உணர்வின் மொழியது உள்ளுள் உணர்வது,
நினைவின் வழியது நெஞ்சம் மொழிவது.
கோபதாபம் இரக்க மெல்லாம்
தூபம் போலது தூண்டலாகும்.

துடிப்பும் நடிப்பும் துலங்கும்
வெடிப்பு,
துறப்பும் பொறுப்பும் விளங்கும் பிணைப்பு.
அறிவும் உணர்வும் ஆண்டவன் கொடுத்தது.
மனிதன் என்பவன் மனிதனாய் வாழ்வது.

தீபம் போலொளி தியானம்
முயன்றால்,
மனிதம் மலர்ந்து புனிதமாகும்,
யோகம் அதுதான் இறை ஞானம்.
இறை நிலை அடைவது மெஞ்ஞானம்

கொ.பெ.பிச்சையா.

உன்னை நம்பு.

விண்ணை நம்பு காலம் விடியும்.
உன்னை நம்பு யாவும் முடியும்.
மண்ணை நம்பு மடிகள் நிறையும்.
கண்ணை நம்பு கனவுகள் விரியும்.

உன்னை அறிய உள்ளம் ஒன்று.
தன்னை உணர இல்லம் உண்டு.
எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்டு
உன்னை உயர்த்த வழியதைத்
தேடு.

கொட்டிக் கிடக்கிறது வாய்ப்புக்கள் கோடி.
எட்டி நிற்பதால் கிட்டே வராது.
தொட்டுப் பறிக்காமல் தேவை தீராது.
விட்டு வெளிவா விண்ணும்
எட்டும்.

கையும் காலும் மெய்யும் கருவிகள்.
செய்யும் தொழிலுக்கு வேறென்ன உதவிகள்!
பொய்யும் புறட்டும் இல்லாத நேர்மை,
வைய்யம் வெல்லவும் சீவிய கூர்மை.

கொ.பெ.பிச்சையா.






Friday, 13 December 2024

புன்னகை!காவிரி!

பொன்னிறம் விஞ்சுமோ உன்மேனி  அதிசயம்!
பொன்னகை அஞ்ச என்னதான் இரகசியம்!
மின்னும் புன்னகை 
கண்ணும் கூசும்.
மின்னலும் கூட 
சமரசம் பேசும்.

எத்தனை பொன்னகை எடை;
எனைச் செய்யும் வீண் தடை!
கரிகாலன் கட்டிய கல்லணை;
தாங்குமோ கவிஞன் கற்பனை!
பொங்கும் புனலாய் புன்னகை,
எங்கும் ஒளிரும் மின்னலை;
தங்கும் பூவிரி சொந்தமோ!
இங்கும் காவிரி வந்தாளோ!

மீறி வந்தாள் காவேரி .
ஆறி நின்றாள் பூவாரி.
அமிழ்தம் மொழிகிற பாமாரி. 
தமிழாய் வளர்ந்தாள் தேனூறி.
தாயவள் சக்தி சீர்வரிசை
தந்தாள் தன்வழி சோலையாம் பரிசை.
புன்னகை செய்யும் பூம் பொழில் வா!வா!
கண்முன்னே காணும் காட்சி எழில் தா! தா!

கொ.பெ.பிச்சையா.

Thursday, 12 December 2024

அவசியம் விவசாயம்.

விவசாயம் அல்லாமல் வேறென்ன சோறு போடும்.
அவசியம் பேணாமல் அலட்சியப் படுமென்றால்,
விலைவாசி உச்சந் தொடும்,
கலவரங்கள் காட்சிப் படும்.
உணவுப் பொருட்கள் ஒழிக்கப்படும்.
பஞ்சம் பசி பட்டிணிச் சாவும்
அஞ்சி அஞ்சியே மிஞ்சாது அழியும்.
அவசரம் அவசரம் அரசுகள் கவனம்,
ஆராய்ந்து துணிந்து ஆவன செய்வீர்.

கொ.பெ.பிச்சையா.

பொய்யென்ன! மெய்யென்ன!

பொய்யென்ன? மெய்யென்ன!
பொதுவாழ்வில் பேதமில்லை.
புற வாழ்வே பொது வாழ்வு,
மறதியவர் மறு வாழ்வு.
மேடைப் பேச்சு பேசியாச்சு
மேடையோடு போயே போச்சு
வெளியில் வந்தால் திட்டுவார்
உள்ளே போனால் ஒட்டுவார்.
சத்தியம் என்ப தெல்லாம்
சமரசக் கொள்கை யாச்சு.
நித்தியம் நிறம் மாறும்,
நிச்சயம் இடம் கூறும்.

கொ.பெ.பிச்சையா.

இறைவனைக் கண்டு கொண்டேன்.

சாமி கும்பிடக் கோவிலுக்கு
ஆசாமி நான் போனேன்.
கோவிலுக்கு முன்னாலே;
குந்தியிருந்த கூட்டம் ஒன்று;
கையேந்திக் கடவு ளென்று;
கெஞ்சுந் தர்மக்குரல் கடக்க:
தர்ம சங்கடம் ஆகி நின்றேன்.
காணிக்கை செலுத்தினேன்.
ஏழைகளின் சிரிப்பிலே:
இறைவனைக் கண்டுகொண்டேன்.

கொ.பெ.பிச்சையா.

Monday, 9 December 2024

இதுதான் வாழ்க்கை.

தந்தைக்குள் உருவான தாய்க்குள்ளே கருவான
தந்தை விந்துப் பூச்சியே
தாய்வயிற்றுப் பிள்ளையே.

கண்ணை மூடிப் பிறந்ததும்
மண்ணைக் கண்டு அழுததும்
அன்னை அமிர்தம் பீச்சியதும்
பிள்ளைப்பசி தணிந்ததும்- தாய் மடியும் அயர்ந்தது.
தானே தன்னைப் பிணி நோக
ஆனாள் அன்னை வரமாக.
அன்னக் கையில் பிள்ளை ஆயை.
அள்ளியதும் பாக்யமோ-சுமந்த
முன்னூறு நாள் இன்பமோ!

தந்தை அவன் நெஞ்சிலே;
சிந்தி சிரித்த சிறுநீரே!
வாயில் மெல்ல ருசிக்கவே
பேய்தானோ பிள்ளையே-அந்த
தாய் தந்த சொந்தமோ! தக்க
அப்படி எல்லாம் வளர்த்த பிள்ளை-இப்போ 
அப்பன் ஆத்தா ஏனோ தொல்லை!
நன்றி கூட எண்ண வேண்டாமே.
நாய்க்கு மட்டும் உண்டானது-
ஒரு 
நாய் வளர்த்தால் மேலானது

கொ.பெ.பிச்சையா.




 



Sunday, 8 December 2024

பூமி என்ன பூர்விகச் சொத்தா?

உழுதவன் அன்று  உடையவன் ஆனான்.
வலியவன் அதனை வளைத்துக் கொண்டான்.
ஆள்பலம் உள்ளவன்
ஆக்கிர மித்தான்
நாள்பட அவனே
நிலக் கிழார் ஆனான்.
பூமி எவனுக்கும் பூர்வீகம்
 இல்லை 
உரிமை கொண்டவன்
உடமை கொண்டான்.

பழங்காய் உண்டே
பிழைக்கத் தெரிந்தவன்
உழைத்திடக் கற்றே
வளைத்தான் சொத்தே
தன்னிலம் என்றே
எல்லைகள் வகுத்தான்.
தமக்குள் உரிமை
ஊராய் தொகுத்தான்
காசை அறியாக் காலம் அதிலே
ஓசி என்றறியா உடமைகள் சேர்த்தான்
ஆசைக்கு அல்ல தேவைக்கு
உழைத்தான்.

கொ.பெ.பிச்சையா.

Saturday, 7 December 2024

வந்தது எதற்கு?

வந்ததும் நினைவில்லை. போவதும் நினைவில்லை.
வந்ததில் அழுதோம்
போவதில் அழவைப்போம்.
எந்தநாள் அந்த நாள்
இரகசியம் எவரறிவார்?
சொந்தம் பந்தம் சேர்த்ததும் எல்லாம்.
வெந்த பின் என்னவோ
விளங்கியும் எதற்கோ!
இல்லார்க்குக் கொடுத்தே
இயல்வது வாழ்க்கை.

விருந்தாளி போலவே
நிரந்தரம் இல்லையே.
எதற்கிங்கு வந்தோம்.
அதற்கென்ன செய்தோம்.
பூமிக்குச் சுமையாய்
பிறந்ததோம் வீணோ! 
வாழ்ந்தா ரென்றால்
வரலாறு உண்டா?
எல்லாம் கனவாய்
சொல்லாய் அழிந்ததோ!
பிறந்தார் என்பதும்
இறந்தார் அன்றோ!

பிறந்தோம் என்பது
பெற்றவள் வலியும்
பிழைத்தோம் என்பது
அழுகையின் ஒலியும்.
வளர்ந்தோம் என்பது
வார்த்தவர் வளர்ப்பும்
அறிந்தோம் என்பது
அப்பனின் துடிப்பும்
வாழ்க்கை‌ என்பது
வாழ்ந்தவர் படிப்பும்.
எல்லாம் எதற்கோ?
இறந்திட  அதற்கோ!
நலம் செய விரும்பு
நாளும் வாழ்வே.

பிறப்புக்கு எல்லாம் பொறுப்புக்கள் உண்டு.
இறப்புக்கு உள்ளும் 
பிறப்புக்கள் உண்டு.
பொறுப்பை முடித்தார்
இறந்தும் வாழ்வார்.
வாழ்ந்தா ரெல்லாம்
வரலா றாவார்.
வரலா‌ றென்றால்
பொது நல வாழ்வாம்.
மரணம் என்பதே
வரலாறுக்கு இல்லை.
வாழ்ந்தும் வாழவை
வரலாறு படைப்போம்.
அவரவர் உரிமை 
அவனியில் காப்போம்.

கொ.பெ.பிச்சையா.






தாயென்ன! தந்தையென்ன!

பிள்ளைகளை பெற்று என்ன பிரயோஜனமே.
இல்லை என்று ஆனபின்னே வனவாசமே.
பெரியவரை மதிக்கச் சொல்லி வளர்க்கவில்லையோ-இன்று
பெற்றவர்கள் தெருவில் வந்து கிடக்கும் நிலையோ!

படிக்க வைத்து பதவி பெறச்
செய்த தந்தையை
பணம்பொருள் கைநிறைய வந்த திமிரால்
முட்டாள் என்றும் பட்டம் தந்து
வெளியில் தள்ளியே-நன்றி
பட்ட கடன் தீர்ப்பதிதோ பிள்ளை எதற்கோ!

தகப்பனவன் கண்டிப்பு இல்லை என்றாலே.
தாய்ப்பாசம் தவறுகளை கண்டு கொள்ளாது.
பயம் கெட்டு நயம் கெட்டு
குணங் கெட்டுமே-இரத்தப்
பாசமான பெற்றோரை
துறத்தி ஓட்டுமே.

கோவில் மாடாய் பிள்ளைகளை
விட்டு விடாதீர்.
பாவ புண்ணியம் என்ன என்றும்
பழக்கி வருத்துவீர்.
ஆசார ஒழுக்கங்களை
அறியச் சொய்யுவீர்-வாழ்க்கை
அதுவென்றே பண்பட்டு வாழச்செய்யுவீர்.

கொ.பெ.பிச்சையா.


 



Friday, 6 December 2024

காலம் போற போக்கு.

காலப் புள்ளிக் கணக்கு எண்ணும்.
கோலம் புரியல.
காலம் மாறும் வேகம் முன்னம்
நாளும் போலல்ல.
புதுக்கணக்கு ஆண்டவனும் 
போடப் போறானோ!
அதுக்கு என்ன விஞ்ஞானம்
பதிலைச் சொல்லுமோ!

நாகரிகம் முத்திப் போச்சு
நடக்க வழியில்லே.
வாகனங்கள் அழிக்கும் காத்து
வானமே இல்லே.
ஆகாயமே சூடேறி அவிஞ்சு 
கிடக்குது.
சுழலும் பூமி வேகம் சோர்ந்து
பருவம் மாறுது.

வெய்யில் கொளுத்தும் காலத்திலே மழையக் கொட்டுது.
மழை வெளுக்கும் நாளையிலே வெயில் வாட்டுது.
காலம் மாறி பருவம் மாறி கோலம் மாறுது.
மூலம் என்ன முடிவுக்குத்தான்
நாளும் ஊருது.

காஞ்சி கெடுக்குது இல்லேனா பேஞ்சி கெடுக்குது.
ஓஞ்சி போன விவசாயம் ஊர முடுக்குது.
பஞ்சம் வந்து பட்டினியில் பட்ட உலகிலே
மிஞ்சும் மண்ணில் எஞ்சுவது
மழையும் வெயிலுமோ!

நல்லதுக்கு காலமில்ல சொல்ல முடியல.
உள்ளதுக்கும் நாயமில்ல
வல்லான் வாழுறான்.
ஜனநாயகம் தோத்துக் கிடக்குது
பணநாயகம் கூத்து நடக்குது
அனந்தன் பிறந்து வரவேணும்
அவதார புருஷனாக.

கொ.பெ.பிச்சையா.




Thursday, 5 December 2024

உழவன் நாடு!

உழுது பழுது பாத்தாச்சு. உள்ளதையும் விதைச்சாச்சு.
அழுது தொழுது கெஞ்சியாச்சு-அவர்
செவிகள் ஏனோ செவிடாச்சு.

பெற்ற சொந்தப் பிள்ளைக்கே
பேரு வைக்கிறான் வேறெவனோ!
விளைய வச்ச பொருளுக்கு-விவசாயி
விலையும் வைக்க முடியல.

உலகத்திற்கே சோறு போடும்
உழவன் வீடு கூரை ஓடு
உழவன் நாடுணு பெருமையாம் -ஏழை
உழவன் பாடு சிறுமையாம்.

எவனெவனுக்கோ ஓய்வூதியம் எதெதுக்கோ விருதாதிக்கம்.
விவசாயத்திலும் சாதித்தோர் அவசியமே இல்லையா?

உழைச்சுக் களைச்ச விவசாயி-சுருண்டு
ஓலைப் பாயில் கிடக்கிறான்.
அழைச்சி அவனை ஊக்கஞ் செஞ்சி
ஆதரிப்பார் யாருண்டோ!

பாடு பட்டும் பலனில்லை.
பட்ட கடன்  தீரவில்லை.
உழவனுக்கு என்ன மிச்சம் -கிழிஞ்ச 
கோமணந்தான் கொஞ்சம் மிச்சம்.

கொ.பெ.பிச்சையா.








Monday, 2 December 2024

காலங் கெட்டுப் போச்சு.

காலங் கெட்டுப்  போச்சுண்ணுதான் கதை அளபாங்க-ஆனால்
மனுசங் கெட்டுப் போனதுதான்
நிசத்தில் நிசமுங்க.
குடும்பத்தையே மறந்துப்புட்டு
குடிச்சிப் பழகிட்டான்- தினமுங்
குடிக்க் கிடைச்சாப் போதுமுண்ணு
கோட்டியாகிட்டான்.

வேலை வெட்டி இல்லாத காலிகள் ஆக
வீதிகளில் திரிகின்ற ஜாலிகள் ஆக
தலைமுடிய பாதிவிட்டு பாதி வெட்டி-புதுசு
கிழிச்ச டவுசர் நாகரிகம் கேவலம் ஆச்சு.

பதினாறு முழச் சேலை  கட்டி அழகு ரதமாய்,
பார்ப்பவர் கண்களுக்கு
பார்வதி அம்சமாய்,
தேவதைகள் நேரில் வரும் பாவையர் காட்சிகள்-இன்று
ஆம்பளயா பொம்பளயா அறிய
முடியல.

நைட்டி உடை கண்டு பிடிச்ச நாச காலனை.
கண்டு பிடிச்சி கொண்டு வந்தால் காப்பு மாட்டலாம்.
நைட்டு நேர வசதிக்கது நல்ல ஆடைதான்-அய்யய்யோ
பகலில் மாட்டி வந்தாத்தான் பயமா இருக்கு.

அப்பன் ஆத்தா சொல்லுக் கில்லை மரியாதையே.
தப்புத் தப்பா மாறினாத்தான்
நாகரிகமா?
காலேஜுக்குப் போறதென்ன படிக்கத்தானா-இல்ல
கண்ட்ராவி கலாச்சாரம் கொண்டு வரவா?

வீட்டைவிட்டு வெளியே போக வெறுப்பாகுது.
காட்டு வாழ்க்கை திரும்பு தோண்ணு கவலையாகுது.
முந்தி வந்த மூத்த தமிழ்
அந்த நாகரிகம் -உயர்
செம்மொழிச் சிறப்பும் மெல்ல
சீர் அழியுதா?

கொ. பெ. பிச்சையா.
 

Sunday, 1 December 2024

வாழ்வுபத்திரம்.

வசதி ரொம்ப உசந்து போச்சு
வாழ்வு பத்திரம் -தம்பி
உசுரு ரொம்ப முக்கியன்டா.
குடும்பம் இருக்குடா.
பிசகிக் கொஞ்சம் தவறினாலே
பேப்பர் செய்திடா

அவசரமா போற வேகம் அவசியந்தானா-உயிர்
அவசியத்தை உணர்ந்து வண்டி ஓட்ட வேண்டாமா?
உன்னை நம்பி உள்ள உயிர்கள் எத்தனை பேரோ!
எண்ணினால் இந்த வேகம்
எண்ணத் தோணுமோ!

அவசரத்தை வேகத்திலே காட்டக் கூடாது-அது
புறப்படுமுன் சீக்கிரத்தின்
அவசியம் வேண்டும்.
பொறுமை எனும் பாது காப்பு
பயணத்தில் வேண்டும்.
அருமை நமது குடும்பம் அது
கவனத்தில் வேண்டும்.

தலைக்கவசம் அணிவதென்ன
தலைக்குப் பாரமா-உயிர்க்கு
தலைதானே பிரதானம்
காக்க வேண்டாமா?
முந்துவதில் கவனம் வேணும்
முன்னே பார்க்கணும்.
கண்ணாடியில் பின்பார்வை
கண்டு முந்தணும்.

புதுசா வரும் வண்டி எல்லாம்
புயல் வேகங்கள்-கவனம்
பிரேக் அடிச்சு உடன் நின்றும்
ஆபத்தாகலாம்.
பயம் இல்லா பயணங்களும்
அபாயங்களாகும்.
விதிமுறைகள் பின்பற்றினால்
விதிபலமாய் வாழலாம்.

கொ. பெ. பிச்சையா.