எல்லைதாண்டாக் காதல்!
முந்தும் நெஞ்சம் தந்தும் தஞ்சம்
சொந்தம் கொஞ்சும் பந்தம் கொண்டும்
தானாய் நினைக்கும்.தேனாய் இனிக்கும்.
தானாய் நினைக்கும்.தேனாய் இனிக்கும்.
தோணும் அதிசயம் காதல் இரகசியம்!
கீற்றிடை மீளும் மின்னல் தானோ!
மீறிப் பாயும் உள்ளொளி தானோ!
ஊற்றிடை ஊறும் உண்ணீர் தானோ!
ஊறியும் மீறும் காதல் தானோ!.
கனவில் முகமும் காட்டும் நிசமோ!
நினைவில் தினமும் மீட்டும் இரசமோ!
உறவில் மோகம் ஊட்டும் போதையோ!
பிரிவில் தாகம் கூட்டும் காதலோ !
சேற்றில் குழைகிற சாரல் குளிரோ!
நாற்றில் அலைகிற தென்றல் சுகமோ!
காற்றில் நிறைகிற கற்பக மணமோ!
கூட்டில் விளையும் காதல் கனியோ!
அள்ளும் அமைதி அடங்கும் விழிகள்
சொல்லும் அனுமதி சுதந்திர மொழிகள்.
வெல்லும் நிறையோ விலங்கிடும் காமம்.
கொள்ளும் முறையோ குலவழிக் காதல்.
இதயம் எழுதிய இரகசியம்ம் இதுதான்.
இலக்கியம் வகுத்த இலக்கணம் இதுதான்.
எல்லை தாண்டா இன்பம் இதுதான்.
காலம் வாழும் காதல் இதுதான்!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment