Tuesday, 20 June 2023

மனந் திறக்கிறேன்.

 போதி மரத்தடி ஒளியில் மிளிர்ந்த ஞானமல்ல.பாதிக்கப்பட்டதில் பதிந்த பட்டறிவு ஞானம்.

ஒரே இரத்தம்.



ஒரே இரத்தம்.


பிறந்த பொழுதிலே பிறந்த பாசங்கள் 

வளர்ந்த பாதையில் கலைந்த வேஷங்கள்.

இரத்தம் ஒன்றிலே உதித்த உறவுகள் 

பிரிந்து சிதைவதோ அண்ணன் தம்பிகள்!


துணைக்குத் துணையாய் வாழத் தானடா!

நினைத்துப் பெற்றாள் அன்னை அவளடா!

அண்ணன் தம்பியாய் இணைந்த உறவுகள் 

மண்ணு வாசல்களாய் பிரிந்ததும் ஏனடா!


உரிமைகள் மாறும் மண்பொருளுக் காக

பிறவிகள் பாசம் தான்பலி யாச்சோ!

பங்காளி என்றால் பகையாளி தானோ!

சங்கதி இதுவானால் சகோதரர் எதற்கோ!


தாயின் மார்பிலே குடித்த பாலுக்கு 

தன்னுரிமைச் சண்டைகள் செய்தோமா!

தாயின் வயிற்றிலே வாழ்ந்த  கருவறை,

 தனித்தனி பங்கும் பிரித்தளந் தோமா!


ஒற்றுமை சொல்லியே தாய் ஊட்டி வளர்த்தாள்.

வேற்றுமை இன்றியே விளையாடி மகிழ்ந்தோம்.

நாய்களின் குணமோ தெருச்சண்டை ஏனோ!

தாய்ப்பால் இரத்தம் சிந்திட லாமோ!


குடும்பங்கள் ஆனது குலம் பெருகத் தானே!

கோடுகள் பிரிக்கும் பாகங்கள் எதற்கோ!

தாயவள் போலவே தாரமும் அணைத்தால்

 சேய்களாய் மீண்டும் சோதரர் ஆவோம்.


கொ.பெ.பி.அய்யா.



 





 


கொரனாவில் வேண்டாம்.

கருவின் உருவில் மரண சாசனம்.
இறப்பின் நொடியோ இறைவன் இரகசியம்.
இயற்கை எய்திட  கணமும் வாழ்வு.
செயற்கை கொய்திட தாழ்வேன் சாவு?

நிரந்தரம் வாழும் வரமும் இல்லை
மரணம் போலும் பிரிவும் இல்லை.
வறுமையில் சாவதும் சாபம் இல்லை.
கொரனாவில் போலொரு பாவம் இல்லை.

முதுமை முடிவோ எய்தும் அமரம்.
இளமை பிரிவோ கொடுமை துயரம்.
வாழ்ந்ததன் எச்சம் ஆவது சரித்திரம்.
வீழ்ந்ததன் மச்சம் போவதும் விசித்திரம்.

நீர்க்கோல வாழ்வின் நிலையில்லா இளமை.
போர்க்கோல வாழ்வின் சாக்காலம் முதுமை.
கோரமாய் அழிவு கொரனாவில் வேண்டாம்.
பூரண முடிவும் புரியாமல் வாழ்வோம்.

வீட்டிலும் விலகியே தனித்திரு.
நாட்டிலும் அப்படியே பழகியிரு.
தொடரறுந்தால் கொரனா தொடராது.
இடரிதும் கடந்திடும் படராது.

கொ.பெ.பி.அய்யா.