Monday, 31 March 2025

ஆனைமுகன்

ஆனை முகனே அருள் செய் ஐங்கரனே

ஆனைமுகனே அருள் செய் ஐங்கரனே!
தானைத் தலைவனே தர்மத்தின் காவலனே!
வினை தீர்க்கும் கண நாதா! 
எனை மீட்பாய் குணநாதா!

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பானை வயிறோன் பண்பின் பழமே.
ஏழையின் இனனே எலியின் வாகனனே.
ஊழை விரட்டும் வினைமுன் காவலனே.

உலகே சொந்தம் உனக்குள்ள பந்தம்.
பழகிட என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி கைய்யாகும் ஆனைமுகன் நீதெரிந்தால்.
சந்திப்பு இடமெங்கும் சந்திப்பாய் நீ உறைந்தால்.

முந்தி முன்னிற்கும் நல்வினைநீ ஆனணையிட்டால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே தீனமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் கருணையே
நானும் அருகாவேன் பூணுமணி பொற்சரமே!.

கொ.பெ.பி.அய்யா.

பத்ரகாளி

பெண்ணினங் காப்போம்!

பத்திர காளியாய் எழுகிறாள்.
உக்கிர மாரியாய் விரைகிறாள்.
எத்திசை எங்கே அக்கிரமம் அங்கே.
திகெட்டுஞ் சூலை சுழற்றியே ஆங்கே!

எழுகிறாள்! எழுகிறாள்!
புதுமைப்பெண எழுகிறாள்!
வருகிறாள்!வருகிறாள்!
வலிமையாகி வருகிறாள்!

உறுதி பெற்று வீரகாளி
உருவ முடன் எழுகிறாள்!
இறுதி மூச்சு உள்ளவரை
எதிர்த்திடவே வருகிறாள்!

விழிகளிலே நெருப்புடனே
வேகமாகி எழுகிறாள்!
ஆர்பபரிக்கும் இடிகளாகி
போர்ப் படையாய் வருகிறாள்!

எரிமலையாய் சீற்றமுடன்
எரித்திடவே எழுகிறாள்!
கொந்தளித்துச் சுனாமியாய்
கோபமாகி வருகிறாள்!

பூவுக் குள்ளே இப்படியும்
பூகம்பம் வெடிக்குமோ!
மென்மையும் வன்மையாகி
இன்மைகளை முடிக்குமோ!

பொறுக்காது பெண்மையினி!
புறப்பட்டாள் சூலியாய்!
கொடுமைக்குக் கொடுமையாய்
கொடுவாளாய் பாய்கிறாள்!.

பசுவுந்தான் குத்திக் கொல்லும்....
பாது காக்கத் தன்னையே!
பசுவதிகள் பெண்களடா!
பத்தரகாளி அம்சமடா!

ஆண்மையே வன்மங்களோ!
காமக்களிப் பேய்களோ!
பெண்களென்னப் பதுமைகளோ!
பிய்த்து விளையாடுதற்கோ!

வந்த வழிச் சிதைப்பாயோ!
வதைப் படு பாவி நீசா!
எந்த வழி இனித் திறக்கும்?
இதைக் கணிக்கத் தெளிவில்லையோ!

மனித உடல் விலங்குகளை
மன்ற மேற விடலாமோ!
புனிதமான காமங் கொன்ற
புலையர் களைத் தீண்டலாமோ!

பட்டவள் சொன்னப் பின்னும்
அட்டவற்கு வாழ் வெதற்கு?
பட்டமரந் தொங்க இன்னும்
துட்டற்குக் காலம் எதற்கு!

பயங் கலைந்தும் போனதோ!
நயந் தொலைந்தக் கானிதோ!!
காவல் மங்கித் தோற்றதோ
ஏவற்  கங்கும் நீற்றதோ!

மன் னுயிர்ப் பெண்ணினம்,
இன் னுயிற் கண்ணினம்;
வன் மங்களின் ஆடுபொருளோ!
பின் தங்கும் தேடுபொருளோ!

பெண்மை என்ன ஆசைக் கருவியோ!
இன்பம் அனுபவித்து வீசும் பொருளோ!
மன்னுலகின் உயிரென்ற றிவிலையோ!
என்ன விலை கொடுத்தேனும் பெண்ணினங் காப்போம்!

கொ.பெ.பிச்சையா.

Thursday, 27 March 2025

காலந்திரும்பும்.

காலந்திரும்பும்.

படிக்க வச்சு அழகு பாத்த தாயுந் தகப்பன்டா.
துடிக்க வைக்கிற பாவத்துக்கு
காலஞ் சொல்லுன்டா.
உழைச்சு உழைச்சு உனக்குப் 
போட்ட கிழவங்கிழவி-நாளை
நீயும் படுத்தா நிலமை என்ன 
நினைச்சுப் பாருடா.

பெத்த கடன் செஞ்சுனக்கு வாழ்வளிச்சாங்க.
பட்ட கடன் உனக்கிருக்கே நினைக்க வில்லையா?
கடன் பட்ட நெஞ்ச முனக்கு 
கலங்க வில்லையா-உன்
கணக்குத் தீர்க்கப் பிள்ளை  இருக்கு
காலந் திரும்புன்டா.

அரசாங்க விடுதிகளும் இருந்த காலன்டா
ஆனால் பணங் கட்டிப் 
படிக்க வச்சாங்க பாமரங்கடா.
கூழுங் கஞ்சி குடிச்சி உன்னை
ஆளாக்கினாங்க--அந்த
வாழ வச்ச தெய்வங்களத்தான்
விடுதி சேத்துட்ட.

தெருவீதித் தெய்வங்களாத்
திரியறாங்கடா.
ஒருவேள சோத்துக்கு அலையுறாங்கடா.
பிள்ளை நீ வாழ்ந்து என்ன கொள்ளி வைக்கவா!--நீ
இல்லையின்னாலும் அரசாங்கம்
அள்ளிப் போடுன்டா.

கொ.பெ.பிச்சையா





Tuesday, 25 March 2025

ஒன்னும் மிஞ்சல.

கோமணந்தான் மிச்சமாச்சு.

உழைச்சு உழைச்சுப் பாக்குறேன் 
ஒன்னுமே மிஞ்சல.
களைச்சி இளைச்சி ஓஞ்சிட்டேன் 
காலாற நேரமில்ல.
ஏழையாகப் பிறந்தேனோ!
என்ன பாவம் செஞ்சேனோ!

விலைவாசி வேகத்தோட 
வேலக்கூலி எட்டல.
கடைக்காரன் கடங்காரன்
கண்ணில் படக் கூசுது.
கஞ்சியாக் குடிச்சாக்கூட
காஞ்ச வயிறு பத்தல.
பிஞ்சுக் குழந்தைகள் பாவமோ!
செஞ்ச தென்ன கொடுமையோ!

என்னத்துக்கு இலவசம்
ஒன்னுத்துக்கும் ஆகல.
இலவசம் சொன்னாலே
விலைவாசி ஏறுது.
விவசாயத்துக்கு மானியம்,
விலை நிர்ணயம் செய்யாம;
அத்யாவசியப் பொரு ளெல்லாம்:
ஆகாததே ஏழைக்கு.

நல்ல படிப்பு வேணும்னா,
நல்ல மருத்துவம் வேணும்னா,
ஏழைக்கது எட்டாதது.
எல்லாத்துக்கும் துட்டானது.
விதியிருந்தா பொழச்சுக்கலாம்,
மதியிருந்தா படிச்சுக் கலாம்.
விலை கொடுத்து உரிமை வாங்கும்
காலாச்சாரம் ஆகிப் போச்சு.

துட்டுக்கு ஓட்டுணு கெட்டுப் போச்சு அரசியல்.
பிட்டுக்கு மண்சுமந்து பிள்ளைப் பசித் தீர்த்தப் பஞ்சம்,
முட்டுக்கும் எட்டாமல் முந்தானைக்கும் ஒட்டாமல்,
கட்டிக் கட்டி நஞ்சி போச்சி கோமணத்துக்கு மிஞ்சலாச்சி.

கொ.பெ.பிச்சையா.

Saturday, 22 March 2025

நித்தம் மாறும் மாற்றம்

நித்தம் நித்தம் இளமை மாறும்

நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்நிலைப்பதுதான் எத்தனையோ

கணக்குப் போட்டு வாழும் மனிதர் எத்தனையோ!
கொண்ட கடமையிலே வாழ்பவர்கள் எத்தனயோ!
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்
நிலைப்பதுதான் எத்தனையோ!

நரை விழுந்த செவியின் ஓரம் வயது சொன்னது
வயதில் பாதி முடியம் போது
வலுவிழந்தது.
தனது உயிர் தானிருக்கப் பிள்ளை வந்தது.
கண்டு அங்கும் இங்கும் இன்றி 
ஒன்று மயங்குகின்றது.
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்நிலைப்பதுதான 
எத்தனையோ!

மனது துள்ளி எழுந்து நின்று தானே முயன்றது.
வயது கிள்ளி மெல்லே தள்ளி 
சும்மா என்றது.
முதுமை என்னும் முடியாமை முனுமுனுத்தது
ஆடுபுலி ஆட்டம் எல்லாம் அடக்கம் என்றது.
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம் நிலைப்பதுதான் எத்தனையோ!

தனிமரமாய் தளர்ந்த ஒன்று தரையில் விழுந்தது.
அதன் துணைக்கு வந்த துணை உலுத்து சாய்ந்தது.
தனிமரமாய் தளர்ந்த ஒன்று தரையில் விழுந்தது.
அதன் துணைக்கு வந்த துணை உலுத்து சாய்ந்தது.

இளமைத் திமிர் என்ப தெல்லாம் நிரந்தர மில்லை.
தனக்கும் வரும் முதுமையென உணர்வது மில்லை.
தனக்கும் வரும் முதுமையென உணர்வது மில்லை.
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்நிலைப்பதுதான் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்
நிலைப்பதுதான் எத்தனையோ

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

மெட்டு:நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ

வெளிநாடுச் சென்றுள்ள கணவனை எண்ணி.

வெளிநாடுச் சென்றுள்ள கணவனை எண்ணி மனைவியும் பிரிந்து ஏங்கும் கணவனும் பாடும் பிரிவுத்துயர் பரிவுப்பாடல்.

பாட்டுக்குப் பாட்டெடுத்து

பெண்

பாட்டுக்குப்-பாட்டெடுத்து-நான்
பாடுவதுங்-கேட்கிறதா!
ஓடிவருங் கடலலையே தேடி அவரைச் சொல்வாயோ!
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான்
பாடுவதுங் கேட்கிறதா!
ஓடிவருங் கடலலையே தேடி 
அவரைச் சொல்வாயோ!

ஆண்

இச்சைக்-கிளி- இங்கிருக்க-- ஹோய்
பச்சைக்கிளி--அஙகிருக்க.
திரும்பிச் செல்லும் கடலலையே 
அவளை கண்டும் நீயும் சொல்வாயோ!
இச்சைக்-கிளி- இங்கிருக்க-- ஹோய்
பச்சைக்கிளி--அஙகிருக்க,
திரும்பிச் செல்லும் கடலலையே 
அவளைக் கண்டும் நீயும் சொல்வாயோ!

பெண்

இளம்- மானின் -அழகாக,
இளந்-தளிர்க் -கொடியாக,
எங்கேயோக் கிடந்த என்னை,
தேடி வந்து கைபிடிச்சி,
ஆசையில்லா- எம்மனச-
அலையவிட்டாரே.
அலையவிட்ட மச்சானே,
ஊரைவிட்டுப் போனாரே,
ஊரைவிட்டுப் போனாரே, ஹோய்
ஊரைவிட்டுப்- போனாரே.

மன்னுயிரும் மயங்கையிலே, நான்
மடிவிரித்துச் சாய்கையிலே, ஹோய்
ஓலமிடும் அலைகடலே நீதான், உருண்டோடிச் சொல்லிவிடு.

ஆண்

குங்குமப் பொட்டு இட்டு, கூந்தலைக் குலையவிட்டு,
மின்னலாஞ் சிரிப்பழகில்,
என்னை நீ கட்டிப்போட்டு,
வழியனுப்ப வந்தவளே,
விழியொழுகிப் போனாளே!
பார்வைக்குப் பார்வை வச்சே 
அவா
அப்புறந்தான் பேச வச்சா ஹோய்
ஓலமிடும் அலைகடலே நீ தான் உருண்டோடிச் சொல்லிவிடு

பெண்

மல்லிகப்பூச் சூடிஎன்னை, மனசு எல்லாம் மணணக்க வச்சி,
வள்ளி எந்தன் வாழ்க்கையிலே
வடிவேலா வந்தாரய்யா.
வந்த எங்கள் காதலிலே என்ன குறை நானும் வச்சேன்.
வனங்காத்த வள்ளி போல
தினமும் என்னை ஏங்க வச்சார்.
தினமும் என்னை ஏங்க வச்சார்.
ஹோய்
தினமும் என்னை ஏங்க வச்சார்.

ஆண்

அல்லிமலர் நீ யிருக்க இங்கே சந்திரன் நானிருக்க ஹோய்
சாட்சிச் சொல்லும் சூரியனே
நீ மறைந்து குளிர விடு.

இருவரும்

பாட்டுக்குப்-பாட்டெடுத்து-நான்
பாடுவதுங்-கேட்கிறதோ!
சாட்சிச் சொல்லும் சூரியனே
நீ மறைந்து குளிர விடு.

ஆண்

பாட்டுக்குப்-பாட்டெடுத்து-நான்
பாடுவதுங்-கேட்கிறதோ!

கொ. பெ. பிச்சையா.

Friday, 21 March 2025

பாரதிக் கனவு பாரதப் பெண்கள்.

பாரதப் பெண்கள்

பாரதிக் கனவுப் பாரதப் பெண்கள்,
நேரது பார்வை நிமிர்ந்த நெஞ்சம்
ஆளுமை உரிமை முழுமைச் சீர்மை;
வாழ்வுரிமை வென்றச் சிங்கப் பெண்மை.

வாகனம் ஓட்டவும் ஆகாயம் பறக்கவும்
ஏகமாய் துறைகள் எந்திரங்கள் இயக்கவும் ,
சமநிலை தீர்க்க எல்லைகள் காக்கவும்
சவாலாகிப் பெண்கள் 
ஆண் சமம் ஆகினர்.

புரட்சிப் புதுமைச் சட்டம் பட்டம்.
நிறைவாய்  உச்சம் திறமே
பெற்றும்,
கண்ணீர் சிந்திய காலம் மறந்தார்.
தன்னுரிமை வலிமை தானே துணிந்தார்.

வீராங்கணையர் வேலுநாச்சி
ஜான்சி ராணி நேரது ஆட்சி,
தேர்ந்த ஆண்ட வீர வரலாறும்,
புதைத்து மறைத்த பொல்லாக் காலம்,
விதைத்தது என்பதை விளங்காத கோலம்.

அடிமை மடமை அல்லாத பெண்மை,
உரிமை விடுதலை பாரதி
விதைத்தான்.
வீரத்தின் சாட்சி வென்ற பெருமை,
பாரதிப் புலவன் ஒருவன் உரிமை.

கொ. பெ. பிச்சையா.







Wednesday, 19 March 2025

என்னாச்சு ஏதாச்சு?

அரசியல் அழிஞ்சி போச்சு!

என்னாச்சு ஏதாச்சு 
என்னமோ ஆகிப்போச்சு.
கல்லெடுத்து எறியுறான், சொல்லெடுத்து வீசுறான்,
 காரணம் என்னான்னா 
யாரோ‌ பேரச் சொல்லுறான்.
காந்தியைச் சுட்ட பாவம் கண்ணீரில் கரைகிறோம்.

விடுதலை பெற்றுத் தந்த 
வீரர்களை மறந்து விட்டோம்
அடிமைத்தனம் ஆகி மீண்டும்
‌விரசியலில் அகப்பட்டோம்.
அரசியல் அழிஞ்சி போச்சு.

சுயமாகச் சிந்திக்காமல் 
பயத்திலே வசப்பட்டோம்.
காமராசரைத் தோற்கடித்து
கர்மதோஷ பாவம் செய்தோம்.
தர்மம் அன்றே செத்துப் போச்சு
.
இலவசம் ஏங்கும் ஏழ்மை
ஏற்றத் தாழ்வு எனவறுமை.
பணத் தாதிக்க அதிகாரம்:
ஜனநாயகம் கொலை யாச்சு
சுதந்திரம் விலை யாச்சு

பெண் பிறந்த சாபமோ!
வன்புணர்ப் பாவமோ! 
சின்னஞ் சிறுப் பிஞ்சுகள்
சிதைக்கப் படும் வன்மங்கள்
தன்னெஞ்சம் நஞ்சாச்சு

சட்டங்கள் கடுமை ஆக்க,
குற்றங்கள் கொடுமை தீரக்க;
தண்டனை அச்சம் ஊட்ட
கண்டனம் உச்சம் தொடும்.

கொ.பெ.பிச்சையா.










புதுப் பணக்காரன்.நிசமில்லா நிசவாழ்வு.

புதுப் பணக்காரன்.

புதுமை வாழ்வு புதுப் பணக்காரன்.
புதிதாய் நாளும் பொய் மனக்காரன்.
பதவி அதிகாரம் மதப்பில்
பறப்பான்.
உதவிய மனிதரை மதிக்க மறப்பான்.

மக்கிய பழமை கக்கத்தில் சிரிக்கும்.
வெக்கத்தில் புதுமை வெளியே ஒளிக்கும்.
பொய் யென்னும்  மாயை புதைக்குழி மறக்கும்.
மெய்யென்னும் வாழ்க்கை மீள்வது துறக்கும்.

சமூகம் பாவம் சரித்திரம் அறியும்.
சுய முகம் கூறும் சந்தர்ப்பம் விரியும்.
சொந்தம் மட்டும் சும்மா நிற்கும்.
வந்தது விட்டும் அம்மணம் ஆக்கும்.

பணத்தின் செருக்கு, குணத்தின் முறுக்கு;
தனத்தின் பெருக்கு:
மனத்தின் கொழுப்பு.
ஏழ்மை வாழ்ந்தது,
ஏக்கத்தில் தாழ்ந்தது.;
தூக்கத்தில் தோன்றித்:
தொலைந்திட்ட கனவோ!

கனவாய்க் கலைந்து,
நினைவில் மறைந்த,
மாயை‌ போன்றதோ!
மறைந்தே போனதோ!
புதுமை வாழ்வும்,
பதுமை போலவே!
நிசமில்லா நிசமே,
வசைபட்ட வாழ்வே!

வாழ்ந்தாய் என்றால்
வாழவைத்த துண்டா?
வாழ்க்கை என்றால்
வாழ வைப்பது.
பாதிக்கப் பட்டோரே
பலபேர் உண்டென்றால்
வாழ்ந்த அடையாளம்
வரலாறு கிடையாது.

கொ.பெ.பிச்சையா.

Tuesday, 18 March 2025

பாப்பாப் பாட்டு

பிரக்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பாப்பாப் பாப்பாக் குட்டிப் பாப்பா. 
பிறந்தநாள் வாழ்த்துக் குட்டிப் பாப்பா.
அம்மா அப்பா முத்தம் கொடுப்பா.
அவங்களுக்கு நீ என்னக் கொடுப்பா.

நீ
சிரிக்கும் அழகே சிங்காரம்.
பிறந்த நாள் பரிசு இது போதும்.
பதிலுக்குப் பதிலா முத்த மழை
பிரக்யாவுக்குப் பரிசு மழை.

உன்
தாத்தாப் பாட்டி அத்தை மாமா
அண்ணன் தம்பி உறவு முறை
அக்கா தங்கை நிறை கின்றார்
தக்கோலம் தந்து 
வாழ்த்துகிறார்.

நீ
இன்றும் என்றும் நன்றாக
பொன்றுந் துணையும் புகழாக
நின்றும் நிலைத்தும் நீடூழி
வென்றும் வாழ்கென் செல்லமே!

தாத்தாப்பாட்டி.
கொ. பெ. பிச்சையா பார்வதி.

மனிதன்.

யார் மனிதன்?

மனம் என்பது அறிவு--அது
மனிதனுக் கானப் பரிசு.
மனதை ஆள்பவன் மனிதனாகிறான்.
மனம்போல் வாழ்பவன் மிருகமாகிறான்.
மனந்தான் இறைவன் மனிதனில் உறைவன்.

கால்களின் போக்கில் கால்நடை வாழ்க்கை.
மனம்போன போக்கில்
மடையரின் மூர்க்கை.
மனந்தான் மனிதனின் அடையாளம்.
குணந்தான் அவனது நடைதாளம்.

சிந்தனைத் தற்புனை செயலுறும் கற்பனை
உந்தும் எண்ணம் உள்ளுறும் விதமே,
தந்தும் மூளை தான்செயும் பதமே.
முந்தும் நல்வினை முற்படும் இதமே.

சிந்திக்காச் செயலெதும் நிந்திக்கத் தான்படும்.
சொந்தம் பந்தங்களும் தந்துணைத் தவறிடும்.
தலைமைப் பண்புக்கும் நிலைமை மாறிடும்.
வெந்தணற் சூழ வினையெலாம் பாழ்படும்.

மனிதனாகப் பிறந்தாய் மனிதனாக வாழ்வாய்!
இனமாறி விலங்கின்
வனவாழ்வு ஏனோ!
சீச்சீ 
இரைக்கும் பொலிக்கும் 
அலைவதா வாழ்க்கை.
இறைவழி போற்றி
நிறைக வாழ்க!ஏற்றி!

கொ. பெ. பிச்சையா.


Sunday, 16 March 2025

கடவுட்துதி.

கடவுட்துதி.

அனைத்தும் கடந்து அதனுள் இருப்பவனே!
எனைத்தும் மறந்து
உனைத்தே என்னை
இணைத்தேன் கடவுளே!

இறைஞ்சி உன்னை இறைவா என்றேன்.
கரைந்து உன்னில் கலந்தே கொண்டேன்
மறைந்தேன் நானென உறைந்தேன் நீயென
பிறந்தேன் பிணியென பிறப்பினி வேண்டேன்.

நானா விரும்பி தாயிடம் அரும்பினேன்!
தானா மலர்ந்தும் தரணியில் விழுந்தேன்.
ஏனோ என்னை எதற்கோப் படைத்தாய்,
வீணோ நானோ விளையா வித்தோ!

போதும் போதும் புவியினி வாழ்க்கை,
ஏதுமிருந்தால் இதில்முடி கணக்கை.
யாதும் நடப்பது நின் திருவிளையாடல்.
வாதம் செய்வதால் எனக்கென்ன தேடல்?

கொ. பெ. பிச்சையா.
 




Wednesday, 5 March 2025

துள்ளும் மீன்கள்

துள்ளும் மீன்கள்

துள்ளித் துள்ளி
தூவானம் தூவி/
தூவித் தூவி
அலையினை அள்ளி/
அள்ளி அள்ளி
வீசித் திவலைகள்/
திவலை ஆடும் 
வெள்ளி மீன்கள்./

மீன்கள் அடியலை
நீந்திக் களிக்க/
களிப்பில் பறவைகள்
வெளிவட்டம் சுழற்ற/
சுழன்றும் வானில்
சூதில் நோட்டம/
நோட்டம் வீசித்தன்
தேட்டம் பாய்கின்றன/

பாய்ச்சல் இரசிக்கும்
வானம் மேலே/
மேலும் வாழ்விடம்
ஆழ்கடல் கீழே/
கீழே வேட்டை 
வேடன் வாழ்வு/
வாழ்வின் வாய்ப்பு
மேலவன் தீர்ப்பு. 

கொ. பெ. பிச்சையா.