Thursday, 30 January 2014

தேனான வாழ்வு வீணானதோ!

தேனான வாழ்வு வீணானதே!.

தேனான வாழ்வு வீணாத்தான் போமோ!
தெருவே கதிதானோ!
ஆணான நானும் கூனானேன் தானே!
அறிவை இழந்தேனே!

சேராத சேர்க்கை சேர்ந்திருந்தேனே!
சிறுமை அடைந்தேனே!
தேறாத போக்கை தேர்ந்திருந்தேனே!
தெருநாய் ஆனேனே!

சண்டாளர் கூடும் சாராயக் கடையே
சொந்தம் கொண்டேனே!!
கொண்டாளை மறந்தும் கண்டாளை அலைந்தும்
கதையில் தொலைந்தேனே!

பொழுதை தொலைக்கும் புறம்போக்கு நீசர்
புறக்கடை கிடந்தேனோ!
அழுத புள்ளையின் பாலைப் பறித்து
ஆட்டத்தில் கொடுத்தேனே!

உறவுகள் பதுங்கி தனிமையில் பிதுங்கி
உணர்வுகள் சுமந்தேனே!
வெறுமையின் வலியை தாங்கவும் மயங்கி
மதுவில் விழுந்தேனே!

உழைப்பதை விட்டு தொலைப்பதைத் தொட்டு
உதிரம் காய்ந்தேனே!
அலைகளில் பட்டு கரையினில் ஒதுங்கி
அடங்கியும் ஓய்ந்தேனே!

காக்கை கழுகுகள் காலம் பார்த்துக்
காத்துக் கிடக்கின்றன!
போக்கைத் தேடி பாவி உயிரும்
பறக்கத் துடிக்கின்றதே!

 கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 29 January 2014

மதுக்கூடம் மட்டுமல்ல.

மதுக்கூடம் மட்டும் அல்ல!

மது மது எனச்சொல்லும் சொல்லில்
மயக்கம் விழிக்கிறதோ!
அது அது எனத் துள்ளும் துள்ளில்
ஆசை இழுக்கிறதோ!

ஞானிகள் குழுமும் ஞான சபையோ
தோணும் மதுக்கூடம்.!
தேனாய் உதிர்த்திடும் தத்துவ மொழியோ!
தானை மதுதானே!

சொல்லும் செயலும் சொந்தம் பகைக்கும்
பள்ளம் மதுக்கூடம்.!
மல்லும் மௌனம் எல்லாம் நானென
வில்லனும் மதுதானே!

கவிகள் கதைகள் அறிவியல் புதிர்கள்
அவியல் மதுக்கூடம்.!
பரிவு பாசம் உருகும் நட்பும்
முறிவும் மதுதானே!

இளமை இந்தியா மறைவில் வறுமை
சிறுமை மதுக்கூடம்!
முதுமை கூட இளமை தேடி
மதுவில் பறந்திடுமே!

வேற்றுமை துறந்த ஒற்றுமை மனிதம்
விளையும் கூடமிதோ!
ஆற்றும் காற்றில் தோற்றே ஓடும்
தூற்றும் பாடமிதோ!

மதுவில் தட்டும் அதிர்வில் கொட்டும்
மனதும் திறந்திடுமோ!
அடக்கிய வலிகள் அனைத்தும் கரைந்தும்
அதுவாய் பழகிடுமோ!

மெதுவாய் சுகமாய் பதமாய் கொல்லும்
மதுவே விசந்தானோ!
அதுவாய் இதுவாய் எதுவாய் வெல்லும்
அழிப்பதும் மதுதானோ!

மனிதம் தொலைத்து மனிதம்  பேசும்
மதுக்கூடம் மட்டுமல்ல.
முழுதாய் தொலைந்து முடிவைத் தேடும்
மரணக்கூடம் நில்லு!



கொ.பெ.பி.அய்யா.

இயற்கை போற்றி.

இயற்கையே போற்றி!

ஒளியாய் ஒலியாய் நீராய் நெருப்பாய்!
வளியாய் வெளியாய் வானாய் மீனாய்!\
இரவாய் பகலாய் முடிவாய் முதலாய்!
வரவாய் செலவாய் வகையாய் தகையாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!

மழையாய் வெயிலாய் தொடராய் தோற்றமாய்!
மலையாய் மண்ணாய் விதையாய் விளைவாய்!
முலையாய் பாலாய்  மூலமாய் தூலமாய்!
நிலையாய் நிழலாய் நிறைவாய் காலமாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!

மலராய் மணமாய் மகத்துவப் பொருளாய்!
வளராய் வளமாய் நலமாய் அருளாய் !
குலமாய் குணமாய் களமாய் கருவாய்!
பலமாய் பகிர்வாய் பரிவாய் வரமாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!

மொழியாய் இசையாய் எழுத்தாய் இலக்காய்!
களியாய் கலையாய் வழியாய் வாழ்வாய்!
ஊனாய் உயிராய் உணர்வாய்  நினைவாய்!
காணாய் கனவாய் கருத்தாய் நிகழ்வாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!

தூணாய் துணையாய் பூணாய் காப்பாய்!
மாணாய் கோனாய் தானாய் தீர்ப்பாய்!
தாயாய் அணைவாய் சேயாய் உலகாய்!
நீயாய் படைத்தாய் நீயே கொடைத்தாய்
இயற்கை நீயே இறையே போற்றி!

கொ.பெ.பி.அய்யா.







Saturday, 25 January 2014

பாவம் அந்தத் தொழிலாளி....சிறுகதை

பாவம் அந்தத் தொழிலாளி.....
(சிறுகதை)

சிகை அலங்கார நிலையம் ஒன்றிற்கு சிகை அலங்காரம்செய்து கொள்ளச் 
சென்றிருந்தேன்.எனக்கு முன்பாக ஒருவர் அலங்காரம் முடிந்து இறங்கினார்.
அலங்கார வேலை செய்தவர்க்கு அறுபது ரூபாய் கூலி கொடுக்கவேண்டுமே.]
பணம் எடுப்பதற்காக வேக வேகமாக அவசரக் கோலத்தில் தன் சட்டைப் பைக்குள்
ஆழம் உள்ளவரை விரல்களை விட்டுத் தேடினார.விரல்களென்ன வித்தையா 
பயின்றுள்ளத இல்லாத ஒன்றை இருப்பதாக்க் காட்டுவதற்கு!

எதுவுமே கிடைக்க வில்லை.விரல்கள் மட்டும் மூச்சுத்திணறிவெளியே பிழைத்து 
வந்தன.அப்பறம் அழகாகச் சொன்னார்.
"ஐய்யய்யோ சட்டையை மாற்றிப்போட்டு வந்து விட்டேனே........
இப்படித்தாங்க அடிக்கடி அவசரத்தில் எதையாவதுஎடுத்துக் கோர்த்துக்கிட்டு
வநதிடுறேன்.வர வர ஞாபக மறதியும் சாஸ்தியாயிருச்சி.எவ்வளவு அசிங்கமாப்
போச்சுபாருங்க.தயவு செய்து தப்பா நினைக்காதீஙக.இதோஐந்து நிமிடத்தில்
வந்து விடுகிறேன்" என்று அன்று பறந்தவர்தான்
இன்று  வரைக்கும்ம் வரவே இல்லையாம்..ஹூம்.............ஏமாற்றும் வித்தைகளைச்
செய்வதற்குஎப்படியெல்லாம் பிட்டப் போடுறாங்க பாருங்க..

பாவம் அந்தத் தொழிலாளி!"பரவாயில்லங்க வீட்டுக்குப்போய்ட்டு வாங்க"என்று 
கூறி நம்பி வழி அனுப்பி வைத்தவர் இன்னும் எத்தனை நாட்கள்தான்
எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்!


கொ.பெ.பி.அய்யா.




அடுத்த ரவுண்டு.....சிறுகதை

அடுத்த ரவுண்டு உனக்குத்தான்.

செல்லையா எனும் பெரியவர் ஒருவர்.எல்லா வசதிகளும் வீட்டில் உண்டு..ஆனால்--எதுவுமே கிடையாது அவருக்கு.அது என்ன?என்று கேட்பதற்கு விடு கதை அல்ல இது.  உண்மையைத்தான் சொல்கிறேன்
ஒரே ஒரு பிள்ளைதான் அவருக்குன் உயர்வாகப்படிக்கவைத்தார்உத்யோகமும் கிடைக்க உதவினார்..மற்றெல்லாம் பெண்மக்கள்.ஆண் வாரிசே ஆளட்டும் என்றேஅத்தனை சொத்துக்களையும் அவனுக்கே எழுதி வைத்தார்.
எழுதி வாங்கும் வரை ஏந்தி ஏந்தித் தாங்கினாள் மருமகள்..கைகுள் வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள்.சாப்பாடு இல்லை- பாவம்சந்திக்கு  வந்துவிட்டார்.ஓய்வூதியம் பெறுவதால் ஓட்டல் சாப்பாடு வருகிறது..அதுவும் இல்லாதவர் கதியென்ன?
மகனும் கண்டு கொள்வத்தில்லை பாவம் அவன் என்ன செய்வான் மனைவிக்கு அடங்கிய மணவாளன்.இவர்களுக்கும் ஒரு மகனிருக்கிறான்இந்தக் காட்சிகளையெல்லாம்-அவன் கூர்ந்து கவனமாகபார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.
இப்போதுதான் பாட்டி சொன்ன  கதை ஒன்று நினைவுக்குவருகிறது.வயதான மாமியாரை மதிக்காத மருமகள் ஒருத்தி இருந்ததாளாம்..மாமியாரை தொழுவத்திலே போட்டு மண் சட்டியொன்றில் பிச்சைக்காரிக்குப்  போடுவதுபோல் மீந்து போன பழைய கஞ்சியைத்தான்  ஊத்துவாளாம்.பாவம் அந்தக் கிழவியொருநாள் குளிரால்வாடி இறந்தும் போனாளாம்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டேஇருந்த அவளுடைய பிள்ளை ஓடோடிச் சென்று அந்த ஓட்டைமண்  சட்டியை பத்திரமா ஒளித்து வைத்தானாம் அப்போது அந்த தாய் கேட்டாளாம்.
"இந்த அசிங்கம்  பிடிச்ச சட்டியைத் தூரே  எறியாமல் எதுக்காகப் பத்திரப்படுத்துகிறாய்"என்று.அதற்கு அநதச்  சிறுவன் ---."அடுத்த ரவண்டு உனக்கு வேணுமே அதற்காகத்தான் பத்திரப்படுத்துகிறேன்"என்றானாம்.
இன்று நீ  எதை விதைக்கிறாயோ அதுவே நாளை உனக்கே விளையும்.என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.நாளை முதுமை உனக்கும்  வரும். 

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 23 January 2014

முரண்படா முரண்கள்.

முரண்படா முரண்கள் !!

சொல்லி விடு சொல்லி விடு 
சொல்லிவிட்டால் கள்ளம் இல்லே!
சொன்னால் கெடும் நல்லதானால்
சொல்ல வேண்டாம் தவறு இல்லே!

பொய்யும் கூட நன்மையானால்
மெய் ஒளித்தால் தப்பு இல்லே!
மெய் உரைத்தால் கெடும் என்றால்
பொய் மறைக்கத் தேவை இல்லே!

வறுமை விட்டு ஒழியுமானால் 
கறுப்பு மீட்டல் களவுமில்லே!
சிறுமை கெட்டு அழியுமானால் 
சிறைப்பட்டாலும் பழியுமில்லே!

சத்தியமும்  செய்திடலாம்.
சமரசம்வாழப் பாவமில்லே!
பத்தியமும் முறித்திடலாம்.
சத்தியங்காக்க மோசம் இல்லே! 

நூறுயிர்கள் வாழுமானால்
ஓருயிர் இழப்புமில்லே!
உரிமை அதில் உய்யுமானால்
பெருமை செத்தால் குற்றமில்லே!

கொலைக்கு கொலை தீர்வானால்
கொண்டாட மனிதமில்லே!
விலையில்லா உயிர் பறிக்கும்
வேட்டைக்கிங்கு உரிமையில்லே!

யுத்தங்கண்டு மாண்டாலும் 
போற்றலாம் தோல்வியில்லே!
இறுதி வரையும்  போராடி 
இழந்த கற்பும் களங்கமில்லே!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 21 January 2014

சின்னப்பயலே கேளடா.

சின்னப் பயலே நின்னு கேளடா!


சின்னப் பயலே சின்னப் பயலே!
நின்னு கேளடா!நான்
சொன்னப் பிறகு எண்ணி அதனை
மனதில் வையடா!நீ
மனதில் வையடா!
அன்னை தந்தை அவரே தெய்வம்
அகமே கொவிலடா!-அவர்
உன்னை வாழ்த்த என்ன செய்தாய்
உணர்ந்தால் மனிதனடா!

உன்னை நீயும் உயரம் பார்த்தும்
அளந்து பார்க்கணும்.அதற்கு
உன்னை வளர்க்க ஒப்பிடும் பிறரை
உலகில் தேடணும்.உன்
தோளும் தோளும் உரசும் தோழமை
உறவில் தானடாநீ .
நாளும் மேலும் வாழும் பழமை
வளமே நீயடா!
 
உயரம் பார்த்தும் உன்னை நீயும்
உயர்த்திக் கொள்ளடா.- உன்னில்
உயர்ந்த மனிதரை மதித்து நீயும்
உறவு செய்யடா.உன்னை
ஒப்பும் உயரம் செப்பும் தரமும்
உயர்த்தும் தானடாஇதை
உணர்ந்து நீயும் உன்னை வளர்த்து
உயரத்தனும் நீயடா!

வாழ்ந்தும் நீயும் பாரடா புரியும்
வாய்ப்பும் வசதியும்உன்னை
அளந்தால் தானது உனக்கும் தெரியும்
வாழ்வும் தாழ்வும்—முன்னை
உயர்ந்தவன் உன்னை வென்றான் என்பான்.
பணிந்தால் தானடா--உன்னை
அவனே தன்னை வென்றாய் என்பான்.
நிமிர்ந்தால் நீயடா!


கொ.பெ.பி.அய்யா.`

கவனம் பழகு.

கவனம் பழகு!

உணர்வுகள் புரியும் நேரத்தில்
உறவுகள் பிரிவது சாபமே!
கனவுகள் விளங்கும் உச்சத்தில்
நினைவுகள் விழிப்பது பாவமே!

விழிகள் இணையும் விளக்கத்தில்
வினைகள் விளைவது கலக்கமே!
நெருக்கம் அணையும் பழக்கத்தில்
இணக்கம் தொலைவது விலக்கமே!

கூடும் யோகத் தருணத்தில்
கொட்டிப் போவது நட்டமே!
தேடும் மனங்கள் உருக்கத்தில்
திரிந்தால் கெடுமே திட்டமே!

வயலை எட்டும் நேரத்தில்
வாய்க்கால் உடைவது துயரமே!
வசந்தம் தொடங்கும் காலத்தில்
வறுமை அடைவது சோகமே!

தூதுகள் விளங்கும் சமயத்தில்
தோதுகள் முறிவது மோசமே!
காதல் துலங்கும் இதயத்தில்
கருத்து விரிவதும் நாசமே!

மௌனம் செய்யும் தாமதமே!
மாறும் நிலைமை ஆபத்தே!
கவனம் பழகும் அவசியமே!
கணக்கும் தீரும் நேரத்தே!

கொ.பெ.பி.அய்யா.

Monday, 20 January 2014

தாய் சொன்ன மொழி

தாய் சொன்ன மொழி!

எந்த நிலம் பிறந்தாலும்
அந்த மொழி கலந்தாலும்.
அன்னை தந்த மொழிதானே
எண்ணம் உண்ட தமிழ்தானே!

பாலோடு ஊற ஊட்டி
சோறோடு கூறிக் காட்டி
நீரோடு நினைவில் ஏற்றி
வேரான தமிழே போற்றி.

சொந்தம் நின்று உயிரிலே
முந்தும் சிந்தை பயில்விலே
உந்தும் ஒன்று வழக்கிலே
பந்தம் நின்று தமிழிலே!

இடையில் வந்த உறவெலாம்
கடையில் பெற்ற பொருளாமாம்
கருவின் மூல உணர்விலே
கரைந்த மூச்சு தமிழிழே!

முதல் மொழிந்த சொல்லொன்று.
முழு உலகின் அம்மான்று!
தரணிக் கெல்லாம் தாயென்று
தமிழ் சொல்லாம் வேருண்டு.

வாய் பேசும் மொழியெலாம்
தாய் வாசம் மொழியாமோ!
மண்ணில் விழும் உயிரெல்லாம்
தன்னில் எழும் தமிழன்றோ!

அம்மா எனும் சொல்லறியா
ஆருண்டு மொழி தெரியா?
ஆன்மாவில் உதிக்கும் விளி
தான்நாவில் பதிக்கும் தமிழ்.

பிழைப்புக்காக இடம் தேறி
பேசுவதும் தாய் மொழியோ!
பிழையாகத் தடம் மாறி
பூசுவதும் தமிழ் மொழியோ!

காற்றுள்ள இடம் எங்கும்
கன்னித் தமிழ் வாழ்ந்திருக்கும்.
வேற்றுவர் முட்டும் போதும்
வீரம் காட்டி வென்றிருக்கும்


கொ.பெ.பி.அய்யா.

Thursday, 16 January 2014

இயற்கை மீட்போம்.

இயல்பை மீட்போம்.

கரிசல்க் காடிது விரிசல் விட்டதோ!
காய்ந்து சுட்டதால் ஓய்ந்து பட்டதோ!
நெரிசல் இல்லா நீண்ட பூமியோ!
நித்திய அமைதியில் நிறைந்து கிடக்குதோ!

வானம் பொய்த்தும் கானம் தொலைந்ததோ!
வருடும் தென்றலும் வறண்டு அலையுதோ!
ஊனம் ஆனதோ உழவுத் தொழிலுமே!
உதவும் பாங்கதும் ஊரும் மறந்ததோ!

பசுமை அலைகளும் விசும்பல் ஆனதோ!
பறவை இனங்களும் பறந்து போனதோ!
நஞ்சை புஞ்சைகள் நகரம் ஆகுதோ!
கஞ்சிக்கு அலையும் காலம் தோணுதோ!

பெய்தால் வெள்ளமாய்க் கொட்டிப் பொழிவதும்
பொய்த்தால் நெருப்பாய் பட்டுச் சுடுவதும்
இயற்கை மாறிய விதிதான் என்ன?
இயல்பு மீறிய சதிதான் என்ன?

சமநிலை கெடுத்த சண்டாளர் ஆனோம்.
சமைந்த இயற்கை அமைதி காணோம்.
இயற்கை போற்றி இயல்பை மீட்போம்.
இகமதைக் காத்து இனிதே வாழ்வோம்.

கொ.பெ.பி.அய்யா.