Wednesday, 25 December 2013

சண்டைக்காரி.

பருவம் தொட்ட நாள் முதலாய்........

பருவம் தொட்ட நாள் முதலாய்-முழுப்
பாவடை தாவணி பெண்ணழகாய்;
பெருமை கொண்டே நாணுகிறாய்--புதிதாய்
பேசமறுத்தும் ஓடுகிறாய்.

அரவம் இல்லா இடம் பழக-ஏனோ
அச்சம் கொண்டு ஒதுங்குகிறாய்.
மருகும் விழிகள்  பதறுதோ--மானோ
உருவி விலகி பதுங்குகிறாய்.

பார்த்தும் பாராது நகருவதும்-முகம்
போர்த்தி மறைத்துக் கூசுவதும்.
நேற்று வரையும் அறியாதது--அடியே
இன்று புரிந்தது என்னடியோ!

சண்டைக் காரியைப் போலல்லவோ-என்னைக்
கண்டால் சீறிப் பாயுகிறாய்.
கொண்டது அகமோ கோவமோடி--பாவி
சண்டாளி  நானென்ன சாபமடி!.

பாட்டியுங் கூட மாறிவிட்டாள்-வாசற்
படியில் தடுத்தே நிறுத்துகிறாள்.
எட்டிப் பார்க்கவும் மறுக்கிறாள்-மாறி
வெட்டிப் பேசி விரட்டுகிறாள்

குரலைக் கேட்டே ஓடி வரும்-அந்தக்
குழந்தைக் கெளரியை தேடுகிறேன்.
விடிகாலை தினமும் வெளிமுற்றம்--நீர்
தெளித்தும் கோலமிட வரவில்லையோ!

மரத்தைச் சுற்றி விளையாடினோம்-அந்த
மனந்தான் தேடி அலையுதடி.
அறுந்து திரியும் பட்டமடி!--நானோ
பிறந்த பிறவி நட்டமடி.!

நேத்துவரையும் பார்த்துப் பழகி-ஆற்றுத்
தோப்புத் துறையும் தொட்டுத் துலங்கி ;
சேர்த்தணைத்த சின்னத் தனமெல்லாம்--கூற்றாய்
சின்னத் தாவணி சிதைத்தடி..

நெஞ்சில் அமைதி இல்லையடி--விஞ்சும்
உன்னோட நினைப்புத் தொல்லையடி!.
பஞ்சும் நெருப்போ பருவமடி--நஞ்சை 
பிஞ்சில் விதைப்பது பாவமடி!

பள்ளிக் கூடம் வரலாமோ!--ஓரம் 
தள்ளிக் கூட இடலாமோ!
துள்ளித் திரிந்ததும் கனவோடி!--காலம்
எள்ளிச் சிரிப்பதும் நிசமோடி

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment