Friday, 29 August 2014

அருகாவேன்.


நானும் அருகாவேன்.

வினைகள் தீர்த்து துணைசெய் நாயகா.
எனைநீ பார்த்து முனைவா (வி)நாயகா.
உனைநான் கேட்டேன் எனைநீ மீட்டு
அணைஉன் கூட்டாய் கணநீ நாதா.

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பானை வயிறே பண்பின் பழமே.
ஏழை இனமே எலியின் வாகனனே.
ஊழை விரட்டு வினையின் சேகரனே.

உலகே சொந்தம் உனக்கென்ன பந்தம்.
பழக என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி செய்யாகும் ஆனை நீதெரிந்தால்.
சந்தி இடமெங்கும் சந்திக்க நீஉறைந்தால்.
முந்தி சுபமங்கு முன்னிற்கும் நீபுரிந்தால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே கோணமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் நல்வரமே
நானும் அருகாவேன் பூணுமணி பொன்சரமே!.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 26 August 2014

சும்மா இல்லை அம்மா.

புதிய கீதை 7 (சும்மா இல்லை அம்மா)

அம்மா என்றே உயிர் உள்ளே
ஆன்மா அதிரும் தமிழ் சொல்லே.
சும்மா சொல்லும் சொல்லல்ல
சொந்தம் எல்லாம் அதனுள்ளே.

அம்மா எல்லாம் தந்தாளே
அவளே கடவுள் அன்பாலே.
சும்மா இல்லை உறவாலே.
சுகமே அவளுக்கு நான்தானே.

அம்மா என்னைக் கண்டாளே,
அன்றே இன்பம் கொண்டாளே.
சும்மா எனக்கும் பேரில்லை.
சொப்பனம் வளர்த்தாள் தூங்கவில்லை.

அம்மா மனமே நான்தானே .
அவளுக்குள் இருப்பதும் வேறென்ன?
சும்மா அவளும் தூங்கவில்லை.
சுவர்க்கம் படைத்தாள் கனவுள்ளே.

அம்மா வாழ்ந்ததும் எனக்காக.
அவளுக்குள் உயிரும் நானாக.
சும்மா அவளும் உண்ணவில்லை.
சொறிந்தால் அதையே பாலாக.

அம்மா சிந்திய வேர்வையிலே
அடியேன் குளித்தேன் அறிவியிலே!
சும்மா என்னைப் பார்க்கவில்லை.
சூரிய ஒளியாய் ஆக்கிவிட்டாள்.

அம்மா வளர்ந்து உயர்ந்தாளே.
அவளை மிஞ்ச மகிழ்ந்தாளே.
சும்மா இல்லை அவள்கனவு.
சுற்றம் போற்ற செய்தாளே.

கொ.பெ.பி.அய்யா.

புதியகீதை 6


புதிய கீதை 6 (பயம் பாவம்)

பயமென்ப தன்வய மற்றலையும்  மனமோ?
நயமெது என்றாய நின்றுத வாக்குணமோ?
முயன்றுந் தெளிய முயலாத் துணிவோ?
இயன்றதன் நம்பிக்கை இல்லா தெனுமோ?.

வாஞ்சையில் விஞ்சியும் வாக்கினால் பொய்க்கவும்
தீய்ந்ததீ போன்றும்நீ ஓய்ந்தும்ஏன் நீருவதோ?
ஊஞ்சலாய் உள்மனம் ஒன்றினில் நில்லாதும்
ஆய்ந்த பயத்தினால் அல்லலும் நேருவ்தோ?
.
தர்மத்தின் தப்புவான் தனதுற வாகினும்
கர்மத்தின் பாவியவன் கட்டுண்ட பயமும்
அதர்மம் விலகுவதும் அவர்பின் தொடர்வதுவும்
பதம்படும் நேரென பாவத்தின் .சம்பளம்.

பொய்யும் புரட்டுடன் போக்கிரி ஊழலும்
செய்யும் அரசியல் சீர்கெடு போலிகளாம்.
மெய்கள் மடியவும் மின்பொறி வாக்களித்தும்
கைகள் கறைபட கற்றதும் பயம்தானோ!

தீவினை கண்டும் திடம்படா மனமே!
நேர்வினை அஞ்சும் நிசமில் குணமே!
ஊழ்வினை என்ன உனக்கது சொல்மோ?
ஆள்வினை நெஞ்சம் அறிவில் பயமோ?

அடிமை பழகிநீ அஞ்சியே வாழ்ந்தாய்].
மடிமை முழுகிநீ கெஞ்சியே தாழ்ந்தாய்
தலைமை படிந்துநீ தன்னையே இழந்தாய்
நிலைமை பயந்துநீ நிழலாய் அலைந்தாய்.

பயந்து கிடந்துறு பாவம் அறிந்தும்
தயங்கி எதிர்வினை தான்முய லாதும்
முயன்றுநீ சாவதாய் முடிந்தும் இறந்தபின்
இயன்றுநீ வாழ்வதென் இருக்கும் பிணமே!

பயந்து பணிந்தினி பாழ்பட வேண்டாம்
தயங்கித் துணிவினில் தாழ்வுற வேண்டாம்.
இறப்ப தொருநாள் உறுதியுறுதி என்றாம்
பிறப்ப தினியில்லை பேய்களை ஓட்டுவோம்.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 23 August 2014

ஆவது தமிழால்


ஆவது தமிழால்.

அமைதி என்றால் தமிழகம்.
ஆவது அடுத்து இந்தியா.
இலங்கை இந்தியா ஒன்றாகும்.
ஈழம் இலங்கை தலையாகும்.
உலகின் முதன்மை தமிழாகும்.
ஊக்கம் அமைதி  சிறப்பாகும்.
எழுந்து இந்தியா வல்லரசாகும்.
ஏற்றம் கண்டு நல்லரசாகும்.
ஐந்து நிலங்களும் பைம்பொழிலாகும்.
ஒற்றுமை அன்று உண்மையுமாகும்.
ஓதம் உணர்ந்து வெண்மையுமாகும்.
ஔவியம் அகன்று செவ்வழியாகும்.
அஃதும் தமிழால் தானுருவாகும்.

கொ.பெ.பி.அய்யா.

ஓதம்—ஞானம்,தெளிவு,அறிவு.
ஔவியம்—பொறாமை.

வேட்டியை இறுக்கிக் கட்டு.




வேட்டியை இறுக்கிக் கட்டு.

கறையகலம் பழமைத்தமிழ் வம்ச வேட்டியோ !
உரிமைக்குரல் எம்ஜியாரு அம்ச நேர்த்தியோ!!
இறக்கிவிட்டு நடந்தயின்னா அழகுப் போட்டியோ!
இறுக்கிக்கட்டி மடிச்சுநின்னா விலகும் ஓடியோ!

தமிழனுக்கு அடையாளம் வேட்டி மட்டுந்தான்.
தலைமுறைக்கும் மறக்காத மிச்சம் ஒண்ணுதான்.
வெள்ளைவேட்டி வெளிச்சம்போல உள்ளம் வெள்ளைதான்.
சொல்லுந்தூரம் வரும்போதே கள்ளம் இல்லைதான்.

வேட்டியோடு சேலைசேர்ந்தா தமிழ்க் காதலே.
வீரத்தோடு வீரம்கூடும் விளையும் காதலே.
வேட்டியதைக் கண்டாலே சேலை நாணுமே
கூட்டியணை அன்பாலே கூறத் தோணுமே!

வேட்டிசுத்தம் கண்டாலே கூட்டம் அஞ்சுமே.
ஏற்றிக்கொஞ்சம் நின்றாலே ஓட்டம் கொள்ளுமே.
கூட்டிப்பாய்ச்சித் தட்டிவிட்டால் ஊரும் கெஞ்சுமே.
வேட்டிகொண்ட ஏற்றமென்ன வீணர் எண்ணுமோ!

வேட்டிக்கெவன் தடைசொல்வான் வெக்கம் கெட்டவன்.
நாட்டுக்கவன் அடையாளம் எச்சம் பட்டவன்.
போற்றுங் கலாச்சாரம் புகழறியா அநாகரிகன்
தூற்றும் மொழிக்கும் தூரம் அவன்.

கொ.பெ.பி.அய்யா.
 

Friday, 22 August 2014

பு.கீ 5


புதிய கீதை -5 (மனிதனும் தெய்வமாகலாம்)

எல்லாப் புகழும் எட்டும் அவர்க்கே!
நல்லார் ஒருவர் சாதனை அதற்கே.!
வல்லார் பிறப்பும் ஒரு அவதாரம்
சொல்லார் சிறப்பும் திருப்புகழே!

சாதிக்க முடியா சாதனை எதையும்
சாதிக்கத் துணிவும் இறை யோகம்.
நீதிக்குள் நின்று நியாயங்கள் செய்தும்
நிந்தனை பொறுப்பதும் தெய்வீக மாகும்.

சுயசுபம் துறப்பதும் புதுயுகம் படைப்பதும்
சுத்த சன்மார்க்க சரணமும் ஆகும்.
பயமது தொலைந்தும் ஜெயம்பெற முயன்றும்
நயம் செயல் முடிப்பதும் அருளாகும்.

தனக்கென நினையா தயவுறு உள்ளம்
வணக்கத்திற் குரிய இறையுறை இல்லம்
மனிதம் சிறந்து புனிதம் நிறைந்தால்
மனிதரும் தெய்வம் என்பதும் பொருந்தும்
.
அவரிங்கு உலகில் தனியொரு பிறவி
அகிலம் வணங்கும் துணை தவத்துறவி.
மரணம் இல்லா நிரந்தர உறவன்
வரமென என்றும் இதயத்தில் இறைவன்

கொ.பெ.பி அய்யா.

Monday, 18 August 2014

பு.கீ.4




புதிய கீதை 4 (யார் நீ?)

யாருக் காக மனிதாநீ வாழவேண்டும்?.
யார் வாழ மனிதாநீ ஆள வேண்டும்?.
யார் சொந்தம் எண்ணிநீ வாழ்கின்றாய்?
யார்க் கென்று சேர்க்கவும்நீ ஆள்கின்றாய்?

இரத்த சொந்தம் நம்பிநீ வாழ்ந்தாளும்.
சுற்ற பந்தம் வாழநீ ஆண்டாலும்
சொத்தென்ன பற்றென்ன கணக் கிட்டுத்தான்
சுற்றம் பற்றும் சுடு காடுவரைதான்.

அன்பென்ற சொத்து ஆள் சேர்க்குமே!.
அன்புக்குள் சொர்க்கம். வாழ் வாகுமே!
வந்தது எல்லாம் சொந்தம் இல்லையே!
பந்தம் என்பதும் பாசம் இல்லையே!

உறவுகள் பொய்யென்று உலகம் கண்டதே!
வரவுகள் கைக்கொண்டு உறவுகள் நின்றதே!
இரத்த வகைகளும் வழிமுறை இல்லை.!
ஒத்தணையும் இரத்தமும் சொந்தமும் இல்லையே!!

நிறமென்ன தரமென்ன வகை எத்தனை?
வகையென்ன தகையென்ன மனம் எத்தனை?
பேரென்ன ஊரென்ன பிணமான பிறகென்ன?
யாரென்ன நினைவென்ன நிலைப்பதென்ன?

அண்ணன் தம்பி அக்கா தங்கை
பின்னும் பிள்ளை பேரர் என்று
எண்ணும் உறவு எல்லாம் எங்கே?
மண்ணாகும் மனிதாஉன் சொந்தம் எங்கே??
 .
உரிமையே கருமமென நீ வாழ்ந்திட்டால்
கடமையே உடமையென நீ ஆண்டிட்டால்.
மனிதமும் புனிதனாய் உன்னைப் போற்றும்.
உலகமும் இறைவனாய் தன்னில் ஏற்றும்.

உயிரெல்லாம் உன்சொந்தம் உன்னில் ஏற்று.
உலகெல்லாம் உன்இல்லம் என்றே போற்று.
பொதுநன்மை ஒன்றிற்கே நீ வாழ்கவே!
அதுஉண்மை என்பதை நீ நாட்டுக!!

அச்சமஞ்சும் மடைமையை போக்கி முன்னேறு.
உச்சங்கொஞ்சும் .வளமையை ஆக்கி நின்னேறு.
மச்சமென உன்சாதனை வாழ்ந்து காட்டுக!
எச்சமென்றும் உன்புகழை பாடி வாழ்த்துமே!

யாருமிங்கே யாருக்குமே தாழ் வென்றில்லையே!.
சோறுஞ் சொத்துமே வாழ் வென்றில்லையே!.
நேரும் நிலைமை சதமுமில்லை உலகமிங்குமே!
தேறும் கடமை செயலாக மாற்ற தடையும் இல்லையே!

வந்ததாக வரவொன்றும் பதிக்க வேண்டுமே.
வாழ்ந்ததாக அடையாளம் செதுக்க வேண்டுமே.
மனிதம்நின்று ஆண்டஉன்னை நினைக்க வேண்டுமே.
புனிதனென்று ஆண்டவனாய் துதிக்க வேண்டுமே.

கொ.பெ.பி.அய்யா.


Friday, 15 August 2014

அல்வா இரகசியம்.

அல்வாவின் ரகசியம்.

அல்வான்னா அல்வாதான்
திருநெல்வேலி அல்வாதான்.
உள்வாயில் உரசாம
உள்ளபோற அல்வாதான்.

திருநெல்வேலி அல்வாதான்
திருடித்தின்னும் அல்வாதான்.
இருட்டுக்கடை அல்வாதான்.
உருட்டிப்போடும் அல்வாதான்.

அத்தக்காரிக்குத் தெரியாம
அசைச்சித்தின்னும் அல்வாதான்.
மெத்தைக்கான சூட்சமம்
மெருன்கலர் அல்வாதான்.

அல்லுன்னா ராத்திரி
வாவுன்னா வந்துரு
அல்வான்னா புரியுதா?
அறிஞ்சுக்கோ ரகசியம்.

தீராத கோபமா
தீர்த்துவைக்க வேணுமா?
ஜோரான நெய்வாசம்
ஜொள்ளுறும் அல்வாதான்.

அல்வாவும் பூவுமா?
அதவிட வேணுமா?
சொல்லாம சொல்லுமா?
கதவுதானா மூடுமா?

கொ.பெ.பி.அய்யா. 



Thursday, 14 August 2014

உரிமை நாள்



உரிமை நாள்!

வெந்தணல் பூத்த விளைவா யெழுந்து—தீவிர
செந்தீ வார்த்த சீற்றஞ் சிவந்து
வெப்பம் தாளாமல் வெள்ளைய ரகன்று—உரிமை
வீரம் வென்ற நாளின்று.

இந்தியக் கண்டம் காந்தியா வென்று—பழமை 
சந்ததி மலர்ந்த  நாளின்று.
என்றும் வயதும் இல்லையே—வளமை
காந்திய நாடே வாழ்கவே!

கருணைக் கடலெனச் சிறந்தன்றுஇயற்கை
பொருட்கொடை நீயே தாய்தானன்று. .
உரிமை மீட்டாய் உயிர்கள் ஈந்துமக்கள்
ஒருமை ஈட்டிய காந்தியம் நின்று.
.

தாயே என்னும் பந்தமுண்டுஅன்பின்
தாராள மடியின் சொந்தங்கொண்டு.
பேதம்பேணா குணமே நன்றுபண்பின்
பெருமை சொன்னது நீயென்று...

புரட்சி என்றொரு சொல்லுண்டுஅதுஉன்
புகழுக் கென்றே நின்றதன்று
புரட்சி என்ற முயற்சிகொண்டு—அஹிம்சை
வலிமையான மந்திரம் கண்டு.

சுதந்திரம் முயன்று பெற்றதுண்டுஅதுவே
சுயநல சுரண்டல் ஆனதின்று.
ஜனநாயகமே பொய்யான தென்றுஉலகின்
சரித்திர அடையாளம் ஆனதின்று..

பொதுவாழ் வென்ற பேச்சுண்டுஅது
பொது ஜனத்தின் தூரமின்று..
அரசியல் நன்று படித்ததுண்டுசாணக்ய
அர்த்த சாஸ்திரம் மாறுகொண்டு.

அரசியலொரு தர்ம மென்றுஆண்ட
அறவழிப் பாடம் கொண்டதன்று..
அரசியல் ஆனது வணிகமென்றுஅய்யோ
அருமை மாறிப் போனதின்று.

நவயுகம் வார்த்தை நலமுண்டுஅதுவும்
நடப்பினில் நிறைந்தால் மிகநன்று..
ஊழல் தானே ஒழியுமன்றுகணினி
ஆளும் நுட்பம் அமைதலன்று. 

காந்தி ராஜ்ஜியம் காண்பதுண்டுஅவரவர்
கடமை உணர்ந்தால் அமைதியுண்டு.
பரதம் ஒருநாள் ஆவதுண்டு.அன்று
பழமை சிறப்பு பெறுதலுண்டு.

வேற்றுமை போற்றும் சக்திகொண்டு—ஒன்றில்
ஒற்றுமை கூட்டினால் உயர்வுண்டு.
ஆற்றும் பல்வழிக் கூட்டொன்று—திரண்டு
ஏற்றும் நல்வழி சுபமுண்டு.

எனக்கும் கூடஓர் ஆசையுண்டுஅதுஉன்
எதிர்காலம் வல்லரசா வதுகண்டு.
அன்று எனது முக்தியுண்டுஅந்நாள்
அனைத்தும் ஒன்றில் சக்தியுண்டு.
. 
கொ.பெ.பி.அய்யா.



  




Tuesday, 12 August 2014

பழமை தெரியுது.

ஆதிநாள் தெரியுது,

ஆலோலம் கேட்குது அந்தநாள் பாடுது.
காலமும் கூடுது கதிர்விளைஞ் சாடுது
மகிழுது சனமெல்லாம் மனசார வாழ்த்துது.
அகிலத்தின் பறவைகள் தமிழ்நாடு தேடுது.

ஆலோலம் பாடும் குமரிப் பெண்டுகளா!
பூலோகம் கூடும் அமரர் கூட்டங்களா?
கானம் கேட்கும் கானகம் எல்லாம்
வானம் பூக்கும் அழகு நட்சத்திரங்களா?

சுவர்க்கம் மண்ணில் இறங்கி வந்ததா?
பக்கம் கண்ணில் வழங்கித் தந்ததா?
எங்கும் பசுமை தென்றல் சுமந்துமே
பொங்கும் வளமை கொண்டு நிறைந்ததா?

காடு கழனி மேடுகள் எல்லாம்
நாடு உழவு பாடுகள் சொல்லும்
வீடு வழிந்து வெள்ளாமை அள்ளும்
ஓடும் நதிகளும் உறவினில் துள்ளும்.

பட்டணம் கரைந்து பட்டியில் நிறையும்
பட்டதும் மறைந்து  கெட்டியில் விரையும்.
திட்டம் நன்றும் தீட்டிய விதமே
கொட்டும் என்றும் ஈட்டிய நிலமே!

வளமது விருப்பந்தான் அழகுப்பச்சை நிறந்தான்.
நிலமது கழனிதான் கனவெல்லாம் பசுமைதான்.
நலமது விவசாயம் நினைவெல்லாம் உழவர்தான்
குலமது  உயர்வுதான் இருப்பெல்லாம் அவரால்தான்.

காவேரி பெரியாறு கரையேறி ஓடுது.
தாவாக்கள் முடிவாகி தமிழர் புகழ் சூடுது.
பூவேறி நதிகளும் புதுவெள்ளம் கூடுது.
ஆவரி மழை பொழி அதுகரை மூடுது.

நதிகளும் இணையுது நாடுகள் பிணையுது
விதிகளும் திருந்துது மதிகளும் பொருந்துது.
ஆதிநாள் தெரியுது அன்பினில்விரியுது.
ஒதிநல் வேதங்கள் ஒன்றினில் புரியுது.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 11 August 2014

புதியகீதை 3

புதிய கீதை -3 (அடிமைத்தனம் ஒழி)


அடக்கம் அமைதி அழகுதான் ஆனால்
அடங்கி அடிமை பழகாதே!—தூய
ஒழுக்கம் பழக்கம் உயர்வுதான் ஆனால்
ஒடுங்கும் உரிமையால்  பாழ்.!

மனைவி வந்தவள் மங்கலம் தந்தாள்
துணைவி யானள்தோ ழமையே—பிணை
அடிமையாய் ஆக்குதல் ஆணாதிக்கப் பாவமே.
ஆகும் அறியுவாய் ஆணே!

கணவன் என்பதால் கடமை என்பதாய்
நினைந்து மரியாதை செய்யலாம்—தனை
அடிமை ஆக்கித்தான் ஆகும் அதுவும்
உரிமை மதியா விலை.

தலைமை ஒன்றைத் தலையில் சுமந்துதன்
நிலைமை கொன்று நினையே---வலை
பட்டது மீனாய்தோற் றடிமை பட்டேநீ
எச்சை இலையென  வீழாய்!

தொண்டன் உனதூய தொண்டை அடிமையாய்
கொண்டு தலைவன் உனையே—என்றும்தான்
நின்றுமே உன்னைப் படியாய்க் கிடத்தியே
வென்றும் உயர்வான் விதி.

பாச அடிமையும் மோசம் இலையேதான்
வேச அடிமையே தோசம்தான்---நீசனவன்
ஆசை மயக்கி அடிமையாக்கி அதனை
காசாக்கித் தானேதான் வாழ்வான்.

உன்னை மறந்தும் உறவைப் பிரிந்தும்தான்
பெண்ணைத் துறக்கவும் பண்ணுவான்—தன்தலை
எண்ணி அடிமையாக்கி எல்லாம் அவன்மாயை
ஒன்றில் சலவையும் செய்வான்.

வல்லார் அடிமையே வன்மை பழக்குமே
நல்லார் படிமைதான் நன்மையே—வெல்லாமை
அச்சம்தான் வீணடிமை செய்யும் அதனாலது
துச்சமே தூக்கி எறி!

மானமும் ஈனமும் மாய்த்துநீ மாண்டபின்
ஏனமே கெட்டுப்பின் கீழ்உன்னால்---வானமும்
நாணியே பொய்க்கும் அடிமையே பாவம்நீ
வீணேதான் வாழும் பிணம்.

உன்னை மதித்துமே தன்னை உயர்த்தவே
என்றும்நீ சேவை இயற்றியே!—கொன்று
அடிமையும் வென்றும் மடமைகள் நின்றே
உரிமை சமூகம் வாழ்க!


கொ.பெ.பி.அய்யா.


தொடரும்.........

Saturday, 9 August 2014

வாஞ்சி மணியாச்சி.




மணியாச்சி முறுக்கு.

முறுக்கு முறுக்கு முறுக்குல—வாஞ்சி
மணியாச்சி முறுக்குல..
நொறுக்கு நொறுக்கு நொறுக்குல--பத்து
விரலில் அள்ளி நொறுக்குல.
கறுக்கு கறுக்கு கடியில--புதுச்
சரக்கிது நல்ல சரக்குல.
இருக்கு இருக்கு இருக்குல-- இன்னும்.
இருக்குது தின்ன உனக்குல.

வாசம் தூக்குது மூக்குல--அது
வடிக்குது ஜொள்ளு வாயில.
வாயில போட்டுப் பாருல--நாக்கு
வளைப்பதக் கேட்டுக் கூறுல.

ஆசை முறுக்குது உடம்புல--உன்னை
ஆட்டிப் படைக்குது அடங்கல.
மீசை துடிப்பது எதுக்குல?—பின்னே
மேலே தொடுவது அதுக்குல.

தொட்டுப் பாத்தா சும்மால--நானும்
விட்டுப் போவேனோ வீணாலே.
துட்டப் போடுல கையில--எடுத்துப்
புட்டுச்ச் சுவைச்சு ரசியில.

புரிஞ்சு போச்சுல பயபுள்ள--என்னைப்
புடிச்சி நெனைக்கிற மனசுல.
அறிஞ்சு நானுந்தான் லவ்வுல--கட்டி
அணைச்சா என்னல தடையில்ல.

முறுக்கு முறுக்குல மீசைய---எனக்கு
மூணு முடிச்சுப் போடுல..
முந்தாண உனக்கு விரிக்கல—அன்னைக்கு
எந்தாயும் என்னப் பெத்தால.

இன்னும் என்னல யோசன?—நமக்கு
இருக்கு அம்பாள் ஆசில.
தாலி தந்ததும் தேவில—அந்தத்
தாய வணங்கி கட்டுல...


கொ.பெ.பி.அய்யா.  

Thursday, 7 August 2014

கோழையாக வாழாதே புகீ2


புதிய கீதை (2) கோழையாய் வாழாதே

ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக மாளாதே!
ஏழையாகி மாண்டாலும் கோழையாகி வாழாதே!
கோழையாக வாழ்ந்தும்நீ குற்றம்துணை யாகாதே!
கோழையாகி வீழ்ந்தும் நீ சுற்றம் புணையாக்காதே!

ஏழையென வாழ்வதுதான் இயல்பான இன்பமே!
கோழையாகி மாள்வதுதான் கொலையாகும் துன்பமே!
ஏழைமனம் என்றும்  இனிமை நிலைபற்றும்.
கோழைத்தனம் கொல்லும் உரிமைக் கொலைக்குற்றம்.   

கொலையும் கொள்ளையும் கோணக்கோழைக்கு!
எதிர்க்கும் வலிமை எட்டாப் பாவிக்கு!
நிலையது கிட்டா பேடித்தனம் மோகம்!
பதுக்கும் விலையேற்றம் பாவியர் கோழைமனம்!

கள்ளமாய் ஓட்டும்.கையூட்டும் காசுடன்
பொல்லாத பொய்யும் புகன்றிடும் வாக்குடன்
வல்லவராக வாய்ப்பேச்சு வாணிபத் தனமும் 
வெல்லா வலிமையாம் கோழை அரசியலாம்.

காதல் மொழிந்து கனிய விழைந்துடன்
ஈதல் இணைந்து இனியக் கலந்துடன்
பேதம் மறந்தும் பிணையாக் கற்புடன்
மோதாக் களவும் முடியாது கோழையுடன்..

வன்மை யதுவும் வீரமும் அல்லவாம்
நன்மை யதனால் நேர்வதும் அல்லவாம்.
இன்மைச் செயலால் எதுபெற் றாலுமே
உண்மை அதுவொரு கோழமை யாகுமே!.

கோழை அவன்வழி ஆவதும் அதர்மமே.
வாழும் தகுதியும் ஆவதும் இலையே!
நாளை உலகம் நலம்பெற வேண்டியே
ஊளை அவனே ஒழிவதும் காண்பயே!

கொ.பெ.பி.அய்யா.
   
தொடரும்.............
   


Wednesday, 6 August 2014

உன்னை உனக்குள்ளே தேடு புகீ1



புதிய கீதை.(1) அறிமுகம்

உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே
கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே
மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!
ஆதி முதலது அன்பினை அமைக்குமோ?
வேதம் அதுதான் என்பதை சமைக்குமோ?

தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்
கர்மம் விலக்கிக் கருக்கும் பொழுதெலாம்
மர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்
துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.

அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.
ஈகை இரக்கம் எனவும் நபிகள்ஆம்
ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்
கொள்ளை கொலையும் கொள்வதும் தொழிலோ?
கள்ளமும் கலையும் பேணுதும் எழிலோ!!
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!
இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!
பின்னொரு வேதம் புரட்சியும் செய்யாமோ!


கொ.பெ.பி.அய்யா.

தொடரும்.