Sunday, 30 March 2014

இன்னொரு சுதந்திரம்.



இன்னொரு சுதந்திரம்.

நாட்டுப் பற்று வாக்காளனுக்கு
வீட்டுப்பற்று வேட்பாளனுக்கு
ஒட்டுப்பற்று ஊழலுக்கு.

வெக்கமில்லை அரசியலுக்கு.
விபரமில்லை மக்களுக்கு.
விளக்கமில்லை தேர்தலுக்கு.

கோழி கூவப் போவதில்லை.
கோழை ஏவப் போவதில்லை.
காலம் விடியப் போவதில்லை.

சொன்ன சொல் நினைப்பதார்?
முன்னை வினை எண்ணுவதார்?
பண்ணும் செயல் தெளிவதார்?

நாட்டுக்கான கட்சி உண்டோ?
நட்ட கொள்கை நிலையுண்டோ?
கோட்டையன்றி வேறுண்டோ?

ஓட்டுக்குத்தான் நீ வேணும்.
ஓடி வந்து தான் காணும்.
உன்னைப் பின்னே யார் பேணும்?

சொல்வதெல்லாம் பொய்யன்றி
கொள்வதெல்லாம் வேடமன்றி
நல்லதில்லை சுரண்டலின்றி.

சொந்தங்களும் சொத்துக்களும்
சுகமாக வாழ்வதற்கும்
தொண்டனே காவலாம்.

பொறுத்தார் பூமியாள்வார்
பொங்கினார் காடாள்வார்
பாவிகளே நாடாள்வார்.

வேறென்ன செய்யலாம் மந்திரம்?.
விதியென்ன மாற்றலாம் எந்திரம்?
வென்றெடு இன்னொரு சுதந்திரம்..

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFJS_p0P8UFm0DEQBHdqmlOLCia-G1e37wBfJ8I0Zz_0JRShWlzgno9r_rePZRsILt_aylj1E2YDqAPnYNnMFkISqER0t9hvQ4S0a_LyJffhx44LkmY2ivdVm9RsGM5s4yD_vogeTtAow/s1600/578528_10151822410288991_973673910_n.jpg



கன்னிப் பாட்டு.




கன்னிப்பாட்டு.

வருகுதய்யா வருகுதய்யா
வசந்தகாலம் வருகுதய்யா.
பெருகுதய்யா பெருகுதய்யா
பசுமை எங்கும் பெருகுதய்யா.

குளிர்ந்த காற்றும் வீசுதய்யா.
குருத்துக்களும் நீட்டுதய்யா.
வளர்ந்த பயிர் குனிந்தய்யா
வளரும் பயிரை வாழ்த்துதய்யா.

சலசலன்னு காற்றோடு
கலகலன்னு பேச்சோடு
களையெடுக்கும் பெண்ணோடு
வளையொலிக்கும் பண்ணோடு.

ஊருக்குள் ஆளில்லை
காட்டுக்குள் இடமில்லை
சோறுக்கு பஞ்சமில்லை
சொர்க்கம் இனி தேவையில்லை.

பச்சை நிறக் கடலலையாய்
பயிர் நெளிந்து அலையலையாய்
உயிராகி உழவனுக்கு
உறவாக தொடருதய்யா.

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:நான் ஆறாவது வகுப்புப் பயிலும்போது அதாவது எனது பதினோராவது வயதில் பாட்டுத்தேர்வுக்காக நான் சுயம் பாடிய முதல் பாட்டு.அதை இப்போது என் நினைவுக்குக் கொண்டுவந்து எழுதினேன்.






Saturday, 29 March 2014

வெறுங் கூச்சல்.

வெறுங் கூச்சல்.

கருப்பு அயல் வங்கிகளில்
இருளில் ஏழை குடிசைகள்.
பாவம் ஜனநாயகம்.

புளிச்சேப்பம் பணக்காரனுக்கு.
பசியேப்பம் ஏழைக்கு.
சுதந்திரம் யாருக்கு?

பெட்டிப்பணம் தேர்தலில்
கொட்டுவது சீமான்கள்.
கூலிதான் ஏழைக்கு.

ஏழைக்கு ஏணி என்பான்
ஏறுவான் கொழுத்தவன்.
இதுதான் இந்தியா.

வரிச்சலுகை முதலாளிக்கு.
வாக்குவங்கி ஏழைக்கு.
வாக்கரிசி இலவசங்கள்..

வெறுங்கூச்சல் தேர்தலால்
வந்து நீ கிழிப்பதென்ன!
வெட்டிவேலை வேறென்ன!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 26 March 2014

பசலை.


வளையல்கள் என்னதான் சொல்லுது?
கழன்றுதானே கைநழுவி வீழுது.
நிலையிலென்ன அய்யய்யோ மாறுது!
நெடுமூச்சு தான்வாங்கி சோருது..
மெலிந்துடல் உள்வாங்கி கரையுது.
நலிந்துயிர் தான்மங்கி குறையுது..
குழிந்துவிழி பின்வாங்கி கருக்குது.
வழிந்துதுளி கண்நீங்கி உருக்குது.
இடைவிலகி உடைவழுகி மறுகுது
சடைகலைய பறந்துகுழல் அலையுது.
சிலைசிதைய எழிலிலகல தழலாகுது..
முலைபுதைய முகில்பதற அழலேறுது.
கடல்பொங்கி கண்வழியே தானோடுது
உடல்மங்கி குறியொடுங்கி தான்மூடுது.
கிடைகிடந்து நடைதளர்ந்து தள்ளாடுது.
விடைதொடர்ந்து விதிநினைந்து உயிராடுது.
கதவிருந்தும் காத்திருந்து கண்விழிக்கிறாள்.
சதமென்றும் கொண்டவனை கண்வைக்கிறாள்.
இதம்பழகிப் போனவனை இதயமென்கிறாள்.
பதமாகத் தானுருகிப் பசலையாகிறாள்.
கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 25 March 2014

உள்ளம் கொள்ளை போனதோ!


கள்வன் எவனோ!


என்

உள்ளம் கொள்ளை போனதோ!

அது

கள்ளன் வசம் ஆனதோ!

எந்தன்

சொல்லும் கேட்க மனதோ!

இங்கு

இல்லை இன்றும் எனதோ!!


அந்த

மாயம் செய்த கள்வன் எவனோ!

இதய

நேயம் கொய்த மாயன் அவனோ!

காதல்

தேயம் வென்ற வீரன் எவனோ!

அரண்

காயம் பூந்த சூரன் அவனோ!


நெஞ்சம்

உள்ளிருந்தே கள்ளம் செய்யுதோ!

அவன்

ஒற்றனாகி என்னை அறியுதோ!

என்னைக்

கள்ளியெனக் குற்றம் சொல்லுதோ!

காணக்

கள்ளன் பக்கம் தானா சாயுதோ!


அவனை

எண்ணநீ வேண்டாம் என்றால்

வேறு

எண்ணங்களை அழிக்கின்றதே!

நானும்

கண்கள்மூடி மறப்பேன் என்றால்

சிந்தை

கனவில் அவனை வரைகின்றதே! 


இந்த

மனமென்ற மாயம் அதனை

பாவி

இனம் கண்ட தெப்படியோ!

மாய

மனவேட்டை ஆடியன்றோ

உள்ளச்

சிறுகூட்டை சிறையெடுத்தான்


கொ.பெ.பி.அய்யா.

Monday, 24 March 2014

தேடித் தொலைந்ந்தேன்.


இன்னும் விளங்கவில்லை


என்னத்த எழுதிக் கிழித்துவிட்டேன்.
சொன்னதி லென்ன முடித்துவிட்டேன்.
அற்புதம் எதைநான் நிகழ்த்திவிட்டேன்.
அறிய முயன்றும் தொலைந்துவிட்டேன்.


தேடித் தேடி தொலைகிறேன்.

தொலைந்து தேடி அலைகிறேன்.

கிடைக்கும் போதெனைப் படிக்கிறேன்

விடையின்றி மீண்டும் தொலைகிறேன்.


இன்னும் என்னை விளங்கவில்லை.

எண்ணும் ஏதோ துலங்கவில்லை.

என்னுள் கிடக்கும் குப்பையிலே

என்னை மட்டும் காணவில்லை.


பரத்திக் கலைத்துத் தேடுகிறேன்.

மறந்தது  கிடைத்து ஆடுகிறேன்.

தொலைத்தது நினைத்துக் கூடுகிறேன்

நினைத்தது தொலைத்து வாடுகிறேன்.


கண்டதும் சொன்னதும் அதுஇல்லை`

என்றதும் சிந்தை அடங்கவில்லை.

அண்டம் அனைத்தும் தேடுகிறேன்.

கொண்டதும் நிறுத்தவும் ஓடுகிறேன்.


சிந்தை பரந்து பறக்கிறது

முந்தை விரித்தும் திறக்கிறது.

விந்தை ஒளிந்து சிரிக்கிறது

விளங்கிடத் தேடென அழைக்கிறது.


கொ.பெ.பி.அய்யா.







.

 


Friday, 21 March 2014

சனியோ சந்தேகமோ!

சனியும் சந்தேகமும்.

நல்லதொன்று நல்லதொன்று கேளேன்

நம்பிக்கைதான் நல்லதென்று வாழேன்.

உள்ளதொன்று உள்ளதொன்று கேளேன்

உண்மையென்ன கண்டு நீயும் வாழேன்.


வஞ்சமொன்று நஞ்சாக

நெஞ்சமதில் நெனச்ச்சிருந்து

கொஞ்சுமொழி பேச்சதில

அஞ்சாமல் பொய்கலந்து

பஞ்சிலே நெருப்பு வைப்பான்—அதில்

தன்குளிர் காய வைப்பான்.

சந்தேகம் பொல்லாதது—அது

சனிதோஷம் தீயானது.


சனியென்னும் பொறாமைகள்

சண்டாளப் பூச்சிகளாய்

இனிதான உன்வாழ்வை

இதயத்தில் தாங்காமல்

அரித்திடப் புகுந்தழிப்பார்—உன்

அமைதியையும் தான் குலைப்பார்

சந்தேகம் பொல்லாதது—அது

சனிதோஷம் தீயானது.



மத்தவங்க பேச்சையெல்லாம்

சுத்தமென்றும் நம்பாதே!

பற்றவைக்கும் வார்த்தைகளை

பாசமென்றும் எண்ணாதே!

அசைந்தால் ஆபத்துத்தான்—கை

பிசைந்தால் சந்தேகந்தான்.

சந்தேகம் பொல்லாதது—அது

சனிதோஷம் தீயானது.



நல்லதொன்று நல்லதொன்று கேளேன்

நம்பிக்கைதான் நல்லதென்று வாழேன்.

உள்ளதொன்று உள்ளதொன்று கேளேன்

உண்மையென்ன கண்டு நீயும் வாழேன்.



கொ.பெ.பி.அய்யா.

Thursday, 20 March 2014

சந்தகத் தீ.


சந்தேகத் தீ
ஓடிப் போன தென்றலே நீ
தேடி வரும் நேரம் எப்போ?
ஊடிப் போன நிலவே நீ
கூடி வரும் காலம் எப்போ?
  
வாடிப் போன பூவே நீ
சூடிக் கொள்ள சிரிப்ப தெப்போ?
மூடிப் போன குயிலே நீ
பாடிச் சேர திரும்ப லெப்போ?
  
சாடிப் போன வசந்தம் நீ
நாடி வந்து மலர்வ தெப்போ?
ஆடிப் போன பட்டம் நீ
கோடி நின்றேன் கையி லெப்போ?

பூத்த மலர் தோட்டமதை
காத்தாகி உதிர்த்து விட்டேன்.
காதல் சொன்ன நாட்டமதை
கருத்துப் பிழை செய்துவிட்டேன்.
கூடி வந்த வசந்தம் அதை
கோடையாக்கி வறண்டுவிட்டேன்.
உயர்ந்து பறந்த பட்டமதை
கயறறுத்து அலையவிட்டேன்..

வீச வந்த தென்றலிடம்
பேசாமலே ஒட்டிவிட்டேன்.
நேச முள்ள வெண்ணிலவை
நீச முகில் மூடவிட்டேன்.
சந்தேக தீயில் சுட்டேன்.
சுந்தரக் காதல் கெட்டேன்.
வெந்தேக வெய்யில் பட்டேன்.
அந்தியாகி உயிரும் விட்டேன்.
கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 19 March 2014

என்னைவிட்டுப் போன சிட்டுகள்.

என் சிட்டுகள் எங்கே?
(சிட்டுகள் தினம்)

வானம் எங்கும் தேடுகிறேன்—சிட்டின்
கானம் கேட்க வாடுகிறேன்.
கீச்சின் இசையைப் பாடுகிறேன்.
மூச்சின் அசைவக் கூடுகிறேன்.
தேடித் தேடி ஓடுகிறேன்—என்னைக்
கூடிக் குலவ நாடுகிறேன்..
(வானம்)

சின்னம் வரைந்து ஏங்குகிறேன்-உனது
எண்ணம் நிறைந்து தேங்குகிறேன்.
வண்ணம் நெஞ்சம் உம்போலே
இன்னும் பஞ்சம் தாங்குகிறேன்.
காற்றில் ஊதும் கீற்றின் ஒலி-தினம்
கேட்டுத் தானும் ஆற்றுகிறேன்.
(வானம்)

இறைவன் எனக்கும் பகையில்லை-உன்போல்
சிறகுகள் கொடுத்தால் குறைவில்லை.
துறந்தும் பறந்தாய் தொலைவெல்லை
இருந்தும் இறந்தேன் வழியில்லை.
சுயநலம் தானிங்கு வாழ்கிறது-ஐயோ
பொதுநலம் வீணிங்கு சாகிறது.
(வானம்)

ஊருள் மரங்கள் ஒழிந்தது-கூடும்
கூரைகள் காந்தம் செறிந்தது..
நாடுள் வளங்கள் நலிந்தது.
காடுகள் கழிந்தும் கரைந்தது.
இயற்கை உன்னினம் பெருக்கியது-பாவச்
செயற்கை மண்ணினம் விரட்டியது.
(வானம்)

சிந்திய தானியம் யாருக்கோ-வீணே
சிதறித் தானே கிடக்குதிங்கே.
முந்திய காலம் போனதெங்கே!
அந்திய கோலம் ஆனதிங்கே.
சின்னச் சிட்டே பாடுவதேப்போ-கூடி
என்னைச் சேர்ந்து பாடுவதேப்போ

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 March 2014

கடல் தாண்டிய காதல்.

கடல் தாண்டிய காதல்.

என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னைத் தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னைத் தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்

நிழலோடு கோர்த்து நெஞ்சோடு சேர்த்து
தழுவிடத்தான் மனம் தேடுதே!
நினைவதில் வாடுதே!
உன்னோடு பேசி உன் மார்பில் ஆற
என் எண்ணம் பசி ஆகுதே!
நாளும் அதுகூடுதே!  
தேன் கிண்ணம் நீயோ ததும்பலை நானோ
நானாடும்வித்தை தானேங்குதே!
நாளாகிப் போச்சு நானேங்கும் மூச்சு
வானேறும் காலம் தானோக்குதே!

என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்

ஆசைப் பொருள் வேண்டி மயக்கம்
அலைதாண்டிப் பறந்தேன்.
ஆனாலும் அங்கேதான் அலைந்தேனே!.
உயுருன்னை பிரிந்தும் உடலிங்கு துடிக்கும்!
உறவென்ன பாவமோ!
பொருளென்ன நீ போதுமே!

இந்த மண்மீதில் எது சொந்தம்!
காதல் போலாகுமோ!
அந்தப் பணமென்ன சுகமாகுமோ!!
உன் மடிதானே  சுவர்க்கம்.வேறென்ன 
மனமாறுமோ!  
உன்போலே துணையாகுமோ!

என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்

நிழலோடு கோர்த்து நெஞ்சோடு சேர்த்து
தழுவிடத்தான் மனம் தேடுதே!
நினைவதில் வாடுதே!
உன்னோடு பேசி உன்னெஞ்சில் கூட
என்னெஞ்சம் தானேகுதே!
சொன்னாலும் வீணாகுதே!  

தேன் கிண்ணம் நீயோ ததும்பலை நானோ
நானாடும்வித்தை தானேங்குதே!
நாளாகிப் போச்சு நானேங்கும் மூச்சு

வானேறும் காலம் தானோக்குதே!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 16 March 2014

எல்லாம் இரண்டே.

எல்லாம் இரண்டே!!

நேரும் எதிரும் நிலவாதிங்கே  
நிசங்கள் இல்லை இயற்கையிலே.
சேரும் சேரா மதியாதிங்கே
செலவும் இல்லை வரவினிலே.

காற்றும் நீரும் வேண்டாமலே
ஆற்றும் உயிரும் இங்கில்லை.
சூடும் குளிரும் தீண்டாமலே
சுகமும் இல்லை பூமியிலே!

கருப்பு வெள்ளை மூலமில்லா
கண்கள் இரண்டில் காட்சியில்லை.
விருப்பு வெறுப்பு விளக்கமில்லா
அற்புதம் ஏதும் இங்கில்லை.

வானும் மண்ணும் இரண்டுமில்லா
வளமுமில்லை இயற்கையிலே
ஆணும் பெண்ணும் இரண்டுமில்லா
வாழ்வுமில்லை படைப்பினிலே.

இன்பம் துன்பம் கலப்பில்லாமல்
இங்கும் வாழ்க்கை இதமில்லை.
காதல் மோதல் உரசாமல்
கடக்கும் பயணம் சுவையில்லை.

இப்படி அப்படி என்றே எல்லாம்
இரண்டு விதமும் சமாதானம்.
பழகும் இலக்கணம் .ஏற்பதால்
பிழையும் சரியே நன்மையெனில்.

இயற்கை செயற்கை கொள்கையில்
இயலும் செயலும் அறிகையில்
பயிலும் பாடம் எல்கையில்
இயல்பை மீறும் தீமையில்.

எல்லாம் இரண்டாய் இருப்பதினாலே
வல்லான் படைப்பும் வாழுதிங்கே.
அல்லும் பகலும் தொடர்வதினாலே
இல்லை சலிப்பும் இனிதே சுகமே!


கொ.பெ.பி.அய்யா.

Saturday, 15 March 2014

ஒற்றைப் படை.

ஒற்றைப்படை!!!

காதலை அவளும் தேர்ந்தாள்  ேர்ந்தால்ளும்  விழுந்தாள்
கனவில் கண்டும் நேர்ந்தாள்
நினைவில் கூடிக் கலந்தாள்
நித்திரை துறந்தும் எழுந்தாள்.

தெருவில் தேடும் கண்கள்
உருவில் அவனென ஏங்கல்.
உணர்வில் பசியினை மறந்தாள்
நினைவே உணவென மெலிந்தாள்`

உறவுகள் என்ன சொல்லும்
மரபுகள் என்னக் கொல்லும்.
மனத்தில் எல்லாம் கடந்தாள்
வனத்தில் தனியே கிடந்தாள்.

பிரிவைப் பலமாய்க் கொண்டாள்.
இரவைத் தினமும் கொன்றாள்.
தனிமைத் துயரெனக் கண்டாள்
தலைவனைத் தேடி நின்றாள்`

இதுதான் காதல் என்றாள்`
எதற்கும் துணிந்தே சென்றாள்.
பற்றிய காதல் பெண்டாள்
ஒற்றைப் படையாய் வென்றாள்.

கொ.பெ.பி.அய்யா.




Friday, 14 March 2014

என்னை நான் தேடுகிறேன்.

வெள்ளியாய் கவியென்று!

நான் யார் புரியவில்லை
நானே என்னைத் தேடுகிறேன்.
பேரொன்றின் அடையாளம்
நானென்றும் முடியவில்லை.

என்பேர் எனும்போது
இன்னும் நான் யாரென்றும்
பின்னும் எனைத் தேடுகிறேன்.
எண்ணி எண்ணி ஓடுகிறேன்.

மனதுக்குள் தனிமையில்
மௌனத்தில் அமைகிறேன்
கனவுக்குள் விரைகிறேன்
காட்சிக்குள் மறைகிறேன்.

எண்ணங்கள் தொலைகின்றன
வண்ணங்கள் ஒளிகின்றன
இருள் சூழ்ந்த சூனியத்தில்
பொருளெல்லாம் அழிகின்றன.

என்னை நான் இழக்கிறேன்
எங்கோ நான் பறக்கிறேன்.
இயற்கையில் கரைகிறேன்
இல்லாமல் ஒழிகிறேன்

மெல்லிய ஒளியொன்று
புள்ளியில் துடிப்பொன்று
வெள்ளியாய் நானென்று
சொல்லுகிறேன் கவியென்று.

கொ.பெ.பி.அய்யா.



Thursday, 13 March 2014

மனிதன் ஒரு புதிர்

குறியிலா படைப்பு.

நதியே நில்லு ஏன்தான் ஓடுகிறாய்?
குயிலே சொல்லு ஏன்தான் பாடுகிறாய்?
விதியே என்று வீண்தான் வாழுவது.

யாருக்கு யாரும் நேரொன்றும் இல்லை
பேருக்கு  வாழும் சீரொன்றும் இல்லை.
ஆளுக்கு ஆளும் மாறொன்றும் இல்லை.

அடித்தாலும் அணைத்தாலும் அழியாது குணமே.
படித்தாலும் தடித்தாலும் பழகாது மனமே.
பயிலாது முயலாது நயவாது தனமே..

கல்வியும் ஒன்றது கருத்துக்குத் விரிவு.
சொல்லிலும் உண்டது சுயத்திற்கு அறிவு.
கல்லிலும் கண்டது கலையது அழகு.

தன்னிலை கடந்தால் பன்னிலை தெளிவு.
ஒன்னிலை உழன்றால் என்னிலை விடிவு?
முன்னிலை முயன்றால் நன்னிலை அடைவு.

நாயெனப் பிறவி நன்றியை மதிக்கும்..
தாயென உறவு தன்பசி மறக்கும்.
நரியெனப் பிழைப்பு தந்திரம் எண்ணும்.

பாயும் புலிகண்டும் உயிருக்கு ஓடலாம்.
மாயன் கலிவென்றும் நேயம் தேடலாம்.
பொய்யன் மனிதனிடம் என்னென்று தப்பலாம்?

உள்ளம் ஒளிப்பதை உதடுகள் சொல்லுமா?
எண்ணம் இருப்பதை இதயமும் காட்டுமா?
சொல்லில் வருவதை சுயமென நம்பவா?

புரியாத புதிரொன்றும் புவியினில்  இருக்குமா?
அறிந்திட விளங்காத அதிசயம் பிறக்குமா?
குறியிட மனிதனை இறைவனும் இயலுமா?

கொ.பெ.பி.அய்யா.




Friday, 7 March 2014

மகளிர்கு ஒரு தினம்.

மகளிர் தினத்தில் இன்று!
.
மாதராய்ப்  பிறப் பதற்கோ
மாதவம்  செய்தனரோ வென
ஏங்கிய கவிஞரும் விரும்பி
மாதராய்ப் பிறப்பரோ இன்று..
மகளீர் படுந் துயரங்களை
மனந் தாங்கிக் கொள்வரோ!

மகளீர் தின நாளின்று
மகளீர்க்கோ மகிழ்ச் சியில்லை.
மகளீரும் மனித ரென்றே
மதிக்கத் தெரியா நாய்களால்..
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடுவரோ!

ஆசைப் பொருளோ மாதரும்?.
அலையும்  வேசைப் பயல்களே!
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறதே!
வெறி நாய்கள்  ஒழிப்போமே!
வேலு நாச்சி  எழுமுன்னே.


கோ.பெ.பி.அய்யா.

உள்ளம் ஒரு கோவில்.

உள்ளம் என்பது கோவில்

உள்ளம் என்பது வீடாகும்---அதில்
உன்னைத் தேடு.கோவிலாகும்.
சிந்தை திறந்து பாடினால்அன்பு
சிந்தும் ஒளியில் தேடலாம்.

இல்லை என்பதும் இருக்கின்றது.--அங்கே.
இருப்பதும் நீயே தெரிகின்றது.
இருண்ட உண்மை ஒளிர்கின்றது.—நெஞ்சம்
மருண்ட மாயை தெளிகின்றது.

கலையின் அம்சம் கோவிலது.--ஆசை
அலையும் நெஞ்சின் கூடலது.
தொலையும் பொய்மை நேர்வலங்கு---தொலைந்து
தொடரும் மெய்மை தேர்வலங்கு.

கலையாய் தன்னை இரசித்திடத்தான்.--மெய்மை
நிலையாய் உள்ளம் வசித்திடத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--நெஞ்சம்
அமையும் செம்மை   படிக்கவைத்தான்.
சத்தியம் நிச்சயம் இத்தரையும்- காவலும்
சட்டமும் மன்றமும்  உள்ளம்தான்.
சொல்லும் அறமும் விளக்கமும்-ஆலயம்
செல்லும் பழக்கம் துலக்கம்தான்.

கொ.பெ.பி.அய்யா.





காதலுக்கு மரியாதை.

இருமுனை வலிகள்

காதலுக்கு மரியாதை
சாதலோ சமர்ப்பணம்!
காதலுக்கு வாழ்வதை
சாதிப்பதே அர்ப்பணம்

ஒருதலையாய் காதலிப்பதும்
மறுதலையை வாதிப்பதும்
புரிதலில்லா காதலதில்
நெறிபிறழ்வால் நேர்வென்ன?

இருமனமும் கூடினால்தான்
ஒருமனமாய் சங்கமம் .
சங்கமித்தால் காதலாகும்
பங்கமித்தால் மோதலாகும்.
.

தந்தை தாய் காதலாலே
வந்த நானும் விபத்து தானே!
எந்த சொந்தம் அழைத்து வந்தேன்.
வந்த பின்னே வழி மறந்தேன்.

வேண்டாத விருந்தாளியோ
தூண்டாத விளக்கொளியோ!
ஆண்டாளின் காதலாச்சோ!
தீண்டாமல் சாதலாச்சோ!

கதை இனிக்கும் காதலது
சதமானால் கசக்கிறது.
விதை போடும் காதலிது
விளையாமல் மடிகிறது.

காதலென்ற பொருளுமென்ன?
பேதமான விதமுமென்ன?
ஆதிமுதல் இன்றுவரை
நாதியற்றுப் போனதென்ன?

காதலன்றி வாழ்வதென்ன?
காட்சிக்கது பாவமென்ன?
இயல்பாக விளைவதனால்
இழிவாகும் எண்ணந்தானோ!

கொ.பெ.பி.அய்யா.




Thursday, 6 March 2014

கோலம் போடும் பெண்ணே!

கோலம் போடும் பெண்ணே

கோலம் போடும் பெண்ணே—உன்
கோலம் பாடத் துணிவாயா?
தாலாட்டும் பெண்ணே—உன்
தகவென்ன அறிவாயா?

கோலம் போடத்தானா பெண்
குலத்தினில் பிறந்தாயா?
தாலாட்ட மட்டுந்தானா நீ
தாயாக வந்தாயா?

வீட்டுக்கு மனைவியென்றால்—வெறும்
வீட்டுவேலை செய்யத்தானா?
பெண்ணென்று பிறந்துவிட்டால்—அவள்
பிள்ளைப் பெறும் எந்திரமா?

உணர்வென்ற ஒன்றது--பெண்ணே
உனக்குள்ளும் உண்டல்லவா?
கனவென்ற கற்பனையும்—உன்னை
கணக்கிலது கொள்ளலலையா?

ஆறாவது அறிவுனக்கும்-கொடுக்க
ஆண்டவனும் மறக்கவில்லை.
இருப்பதை நீமறந்து—ஒரு
எடுபிடியும் ஆனாயா?

அழகையும் அறிவையும்-செல்லமாய்
ஆணைவிட பெண்ணுக்குத்தான்
அதிகமாய் அள்ளித்தந்தான்.-நீயோ
புதையலாய் ஒளித்தாயா?

படைப்பினில் குறையில்லை-இவர்
பழக்கியதுதான் சரியில்லை.
சதியென மெய்யுணர்ந்து—மெய்
விதியெழுத எழுகவே!!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 5 March 2014

மணமகன் வரவேற்பு

மணமகனே மருமகனே வா வா!

மணமகனே மருமகனே வா வா-உன்
இடது காலை எடுத்து வைத்து வா வா!
திரு விரும்பும் திருமகனே வா வா!—உன்
பிறந்த வீட்டை மறந்து இங்கே வா வா!
(மணமகனே)

தனமிருக்கும் பணமிருக்கும் உங்கள் வீட்டில்—நல்ல
சனமிருக்கும் மனமிருக்கும் எங்கள் வீட்டில்.
நாஉரையும் நாடகமும் உங்கள் வீட்டில்—மெய்
நாநயமும் நேர்முகமும் எங்கள் வீட்டில்
(மணமகனே)

கற்ற பாடம் உற்ற நடை வீடு எங்கள் வீடு
மற்றவரை கணம்மதித்து வாழும் எங்கள் வீடு
நல்லவர்கள் நண்பராக தேடும் எங்கள் வீடு.
பச்சமுடன் பாச மணம் வீசும் எங்கள் வீடு.
(மணமகனே)

ஆபரணம் காவரணும் கொண்டிருக்காது.—இங்கு
வாழவரும் மாப்பிளைக்கும் குறையிருக்காது  
எந்நாளும் நன்னாளே மனம்சலிக்காது.—என்றும்
கண்ணாலும் காண்பதற்கும் ஒளிவிருக்காது
(மணமகனே)

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு.இனி மணமகனுக்குத்தான் பெண் வீடு வாழவந்த வீடு,பெண்ணுக்கு பிறந்தவீடே சொந்தவீடு.பெண்ணுக்கு புகுந்த வீட்டில் புகுந்த வீடு பாதுகாப்பு இல்லை என்பதால் ஆண் வாரிசுரிமை பெண்வாரிசுரிமை எனப்புதியமாற்றம் அமுலாகிறது.இதுதான் பெண்ணுரிமை மீட்பு புதிய சட்டம்.ஆகவே பாட்டை இனி இப்படித்தான் மாற்றிப்பாட வேண்டும்.


கல்யாண மந்திரம்.

கல்யாணம்

மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேது நா
கண்டே பத்னாமி ஸுபகே  த்வம் ஜீவ சரதஸ் சதம்.

எத்தனையோ தடவை கேட்டிருக்கிறோம், அதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு ?

அர்த்தம்:--
மங்கலத்தின் மறு பெயர் கொண்ட மங்கலமான மணப்பெண்ணே, இந்த நொடியிலிரிந்து,  உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு/நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் ஜீவனம் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவினடம் மனதார வேண்டி இந்த புனிதமான திருமாங்கல்யச் சரடை உனக்கு அணிவிக்கிறேன். இந்த உலகே மெச்சும் நல்ல துணையாளாக, அணைத்து இன்ப, துன்பங்களிலும், சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று,  நூறு ஆண்டு காலம் மங்களமாக வாழ்வாயாக.  என்பதே இந்த மந்திரத்தின் பொருள். 

=============================================
இது இனி இருக்கட்டும் தமிழ் மந்திரமாக .
=============================================
மங்கலமே மணப்பெண்ணே 
திங்கள் முகப்பொன் குலமே!
எங்கள் மனை இன்றுமுதல் 
கொண்டாடும் சொந்தமே!
இயற்கையை சாட்சிவைத்து
இறைவனை அதிற் கண்டு
செயற்கை சுக துக்கங்களை 
சீராகப் பங்கேற்று
உலகமே நமை வாழ்த்த 
ஒழுங்கு மனை நாம் ஆண்டு
திலகத்தின் அழகாக 
தெய்வத்தின் துணையாக
நலமான வாழ்வதனை 
நாம் இணைந்து மேற்கொண்டு   
குலம்வாழ வாழ்வோமென 
கொடியிதனை சரடாக
புனிதமான உறவுக்கு
 புதுஉறவின் அழைப்பாக
இனிதான மனத்துடன் 
இசைவான தூய்மையுடன்
அணிவிக்கிறேன் வாழிநீ 
ஆயுளுக்கும் உன்னுடன்நான்
துணையாக்கி துணையிருப்பேன் 
தொடருவோம் சத்தியமே!

கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 4 March 2014

பேதம் வாதம்

புலனாகப் பொருளென்ன?

பாடட்டுமா பாடட்டுமா பாட்டு ஒண்ணு பாடட்டுமா
தேடுகிற மனிதனுக்கு தேடி ஒண்ணு பாடட்டுமா
பாடட்டுமா பாடட்டுமா பாட்டு ஒண்ணு பாடட்டுமா
தேடுகிற மனிதனுக்கு தேடி ஒண்ணு பாடட்டுமா (பாடட்டுமா)

ஆத்தீகம் நாத்தீகம் அதுகூறும் பொருள் என்ன?
காவீயம் கருப்பீயம் கருத்திலது அறிவென்ன?
இருக்கென்றும் இல்லையென்றும் இயம்புவதன் விடையென்ன?
பொறுப்புடனே ஆராய்ந்தால் புலனாகாப் புதிரென்ன?

ஒன்றிலொன்று மற்றொனறு ஆனாலது  மறுமலர்ச்சி.
நன்றில்நன்று ஏற்பதிலே தானதுவும் பெறும்வளர்ச்சி.
பேதம்வாதம் செய்வதிலே ஆகுவதும் தெளிவுணர்ச்சி.
சேதம்நீக்கி செம்மையென சீரானால் அழகுணர்ச்சி .

அடிமைத்தனம் நீக்குவதும் உரிமைநலம் காப்பதுவும். 
அதுகூறும் நாத்திகம் ஆனதொரு புதுமார்க்கம்.
ஆழ்வார்கள் நாயன்மார்கள் அப்படித்தான் பெரியாரும்
ஆய்ந்து பாரதி வள்ளலார் அவ்ர்போலே இவர்மொழியும்.

பொய்யுரைகள் புறஞ்செய்வோம் மெய்யின்வழி மேற்கொள்வோம்.
உய்யும்வழி தமிழ்மரபில் உளம்கொண்டு வாழ்ந்துகொள்வோம்.
செய்யுரைகள் சீரறிந்து சிறக்கமேலும் ஏற்றுக்கொள்வோம்..
ஐயமின்றி அவரவரின் அறிந்தவழி ஆற்றிக்கொள்வோம்.

மூலமென்று ஒன்றுண்டு ஞாலமதில் தோற்றமுண்டு
காலமதன் தொடர்வினையில் கோலங்கள் மாற்றமுண்டு.
பாலமாய் ஒன்றுக்கொன்று பாதைகளும் சேர்வதுண்டு.
ஆழமாய் ஆராய்ந்தால் ஆகிநிற்கும் புள்ளியொன்று.

கொ.பெ.பி.அய்யா`





தாய் மனசு


புறிகிறதா தாய்மனசு?

எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே
கனவே மகனே என் மகனே!

உன்னை ஈன்றிடும் போது—கொண்ட
உவகையில் நான் உயிர்த்து.
உலகில் வாழ்கிறேன் என் உறவே!
நான் வாழ்வதன் அர்த்தமே!
நீ வாழ்வதைக் காண்பதே.
.(எதிர்)
காலம் கைகூட நாலும் நீ தேட
வளரும் கல்வி பெறவே
நாளும் நானும் உயிர்க்கிறேன்  
கேளு அன்பு மகனே!

தாயின் மனம் போலும் நின்று வாழ
சேயின் வளம்காண என் நாளில்
நான் உன் நலம் நோக்கி இருக் கிறேன்
வாழ்வும் இனிநீயே மகனே!
கெடும் குடி காரன் ஆக மாறி\
படு வதுமேன் கூறய்யா
.(எதிர
உயிரின் உயிராக உனையே நினைவாக
உணரந்தேன் நானும் பாவி`
பிறப்பின் பயனாக வாழ்வின் சுகமாக
தொடர்ந்தேன் நானும் உயிரே!
பாவம் நினைக்காத அன்னை மனமே
பார்த்துத் துடிக்கிறேன் தினமே.
ஆடிக் கிடந்தாலும் பிள்ளை தானென
அதுவாய் அழுகுது தேடியே!
அன்பு மகனே ஆசை வரமே
அழிக்கும் குடியும் ஏனடா?


கொ.பெ.பி.அய்யா.

Monday, 3 March 2014

வீரனாச்சி வாராடா.

வாராடா வீரனாச்சி.

வாராடா வாராடா வீரனாச்சி வாராடா.
வணங்காமுடி தமிழச்சி வரிச காட்டி வாராடா.
கயவர்களைக் காதறுக்க ஏகியவள் வாராடா..
நயவஞ்சகம் மீட்டெடுத்து நமைக்காக்க வாராடா..

பட்ட பகல் கொள்ளைகளை பட்டொழிக்க வாராடா.`
வெட்டவெளி வீதிக் கொலைத் தட்டிக்கேக்க வாராடா.
வன்கொடுமைக் கற்பழிப்பு இன்னல் நீக்க வாராடா.`
பெண்ணடிமைச் செய்வோரை பிச்செறிய வாராடா..

ஊழல்செய்யும் பேர்களை ஓட்டுதற்கு வாராடா.
கூலிப்படை நாய்களைக் காலிசெய்ய வாராடா.
பொய்யரசியற் பித்தர்களைப் புறம்போக்க வாராடா.
கையூட்டுக் கள்வர்களைக் களையெடுக்க வாராடா.

சுயநலக் கூட்டத்திற்குச் சூடு வைக்க வாராடா.
சுரண்டும் பேர்வழிகளுக்குக் கரண்டு வைக்க வாராடா.
பதுக்கும் கொள்ளைத் திருடர்களை ஒதுக்கி வைக்க வாராடா.
பணம் பறிக்கும் பாவிகளை இனம் பிரிக்க வாராடா.

காமவேட்டைக் கயவர்களைக் காவு கொள்ள வாராடா.
பாவச்செயல் இழியோரை எரித்தழிக்க வாராடா.
ஊதாரிக் கூட்டங்களை ஒழித்துக்கட்ட வாராடா.
நீதிவழி நியாயங்களை நிலை நாட்ட வாராடா.

ஈழத் தமிழ் மக்களுக்கு தோள்கொடுக்க வாராடா.
வீரம் போற்றும் வீரத்தாய் வாள்கொடுக்க வாராடா.
ஈனங்கொண்ட எதிரிகளை வேரறுக்க வாராடா.
மானங்காக்கும் தமிழினத்தை மகுடமேற்ற வாராடா..

எனக்கும் கூடத் தெரியாது எப்ப அவள் வாராடா?
கனக்கும் நம்ம  சுமை இறக்கக் கட்டாயம் வாராடா.
இனிக்கும் எந்தன் நினைவிலே கனவாக வாராடா.
கணக்கு அது நேராகும் காலம் அதில் வாராடா.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 1 March 2014

தாய் சொல்

பாவக்கணக்கு.

நான் சொல்லியழுதிடாத சொந்தக் கதை கேளு
நான் எண்ணி உறங்கிடாத அந்தக் கதை கேளு-இங்க
சொந்தமென்ன பந்தமென்ன ஒண்ணுமில்லையே
என் தாயே தெய்வமே!—அவள்
சொன்னாள் கேட்கலயே!

அதை எழுத்தாலே சொல்லி அழுதா
அந்த எழுத்துக்கும் உயிர் வருமே!
ஒரு பாட்டாலே எழுதிப் படிச்சா
அந்தப் பாட்டுங்கூடி கதறி அழுமே!!
அந்தப் பாவம் மறக்க நான் பாட்டுப் படிக்க
எந்தப் பாவி மனசும் நொந்து துடிக்கும்.
இதைக் கேட்டுத் திருந்த ஒரு ஆளு இருந்தா
செஞ்ச பாவம் தீரும் எனக்கு.
தாய் சொல்லைத் தூக்கி எறிஞ்சேன்-ஐயோ
குடியாலே கெட்டு அழிஞ்சேன்

நான் ஆகாரம் இல்லாம அங்கே போற நேரம்`
நான் ஊரோடும் சேர உறவு ரொம்பத் தூரம்-என்.
உடம்பைகூடத் தூக்கிச் சுமக்க ஊக்கமில்லையே.
அப்போத் திமிரு கேளாது-இப்போ
அழுதாத் தீராது

தரையில நான் படுத்திருந்தா
தாய் மனசு கேளாது
தலையணயும் மறந்திருந்தா
தன்மடியத் தந்திடுவாள்.
உண்ணாமப் படுத்துவிட்டால்
ஊட்டிவிட்டு தூங்க வைப்பாள்.
இந்தப் பாவியால அந்தத் தாயுந்தான்
என்ன விட்டுந்தான்  போய் மறஞ்சாளே!
நான் தின்னாத பண்டமும் இல்ல
நான் பண்ணாத சேட்டையும் இல்ல
நான் போடாத சட்டையுமில்ல-பாவி
நான் ஆடாத ஆட்டமுமில்ல

சேற்றுத் தண்ணி
கிடக்க மெத்தை இருக்கு
நாற்றத் தண்ணி
குடிக்க நீரு எனக்கு.
பேரு தொலஞ்ச குடிகாரன் எனக்கு.
போகுந் தேரு ஏறவும் ஆச்சு கணக்கு.
நான் பாடுறேன் பாட்டு உனக்கு--சாமி
சாகுங் குடிதான் கேட்டு விலக்கு.

கொ.பெ.பி.அய்யா.

உசுருனு ஒண்ணு போகுதம்மா.

உசுரு ஒண்ணு போகுதம்மா.

உசுருன்னு சொல்லுவாக--அத
ஒருவருமே பாத்ததில்ல.
பிரிஞ்சதுன்னும் சொல்லுவாக--அத
பிரியக்கண்டும் அழுததில்ல.

என்னோட உசுரு போகுதம்மா அது
என்னவிட்டும் பிரியுதம்மா.
செத்துப் போன பிணமா நின்னுநான்
சிந்துரனே கண்ணீரம்மா.

பொத்திப் பொத்தி வளத்த கன்னு
பொட்டப்புள்ள போகுதம்மா.
சுத்தி சுத்தி வந்த பொண்ணு
சொந்தம் விட்டுப் போகுதம்மா.

பாத்துப் பாத்துக் காத்த தங்கம்
பாத கூடிப் போகுதம்மா.
நேத்துவர எங்க சொந்தம்
இன்னைக்கது வேற சொந்தம்?

மடி சுமந்து பெத்த பந்தம்
மனசழுது போகுதம்மா.
பொண்ணாகப் பொறந்திரிச்சோ
மண்ண விட்டுப் பிரிஞ்சிரிச்சோ!

வளந்ததொரு பாவமாச்சோ!
வளத்ததொரு குத்தமாச்சோ!
இழந்தேன்னு அழுவேனா--இல்லக்
கடமயின்னு ஆறுவேனா?

பொண்ணுக்கொரு தொணவேணும்
எண்ணி மனம் ஆறிக்கணும்
என்னைக்கும் நீ வாழ வேணும்
எம்மனசும் தேற வேணும்.

கொ.பெ.பி.அய்யா.