Thursday, 26 December 2013

கூவம் பாவம்

கூவம் அது பாவம்!

எங்கே மணக்குது--சாக்கடை
அங்கே மணக்குது?
சென்னை நகர் கூவத்திலே
தானே மணக்குது! .

கூவத்திலே பிறந்த நதி,
பாவமானது.
ஆறாகத் தேடி வந்து
சேறானது.

எழுபத்தைந்து கிலோ மீட்டர்
தூரம் ஓடுது.
இயற்கையெழில் தந்து அது
சென்னை சேருது,

சிங்காரித்து வங்கத்திலே
சங்கமித்தது.
ஓங்கரிக்க இன்று அது
அசிங்கமானது.

பதினாறு கிலோ மீட்டர்
பாழானது.
மூச்சடைக்கும் வீச்சமாகி
பீச்சும் நாறுது.

போக்குவரத்து வழியாகி
கால்வாயாகுமா?
சாக்கடைக்கே போக்காக
சீக்குமாகுமா?

வள்ளுவரும் நீராடி,
குறள் பாடினார்.
கொல்லும் வாசமாகியே
குறுகிப் போனதே!

கொசுக்கள் வாழும் உலகமாக
கூவம் ஆனதே!
குப்பைக்குக் கொள்ளிடமாய்
கூவம் மாறுதே!

திருவிற்கோலம் தொட்டு,
வரவானதே!
தூய்மை எனப் போற்றலான
கூவம் தொலைந்ததே!

பாழ்பட்ட கூவத்திற்கும்
வாழ்வளித்ததே!
பாவியந்த சுனாமிதான்
பாவந் தீர்த்ததே!

இன்னும் கோடி சுனாமிகள்
எழுந்து வந்தாலும்
அன்று மறு நாளிலேயே
அழிந்து நாறுமே!

படகு மீண்டும் விடலாமோ
பயனாகுமோ!
கிடப்பாகிப் போகுமோ!
கேள்வி இல்லையோ!


கொ.பெ.பி.அய்யா.














No comments:

Post a Comment