Friday, 31 October 2014

என்ன பிரச்சனை?

பிரச்சனை என்ன?

எழுந்திடு மகனே! நிமிர்ந்திடு மகளே!
விழுந்தது மறந்து வினைதொடு சுகமே!
தடைகள் தவிர்க்கும் எளிதொரு கணக்கு.
விடைகள் அதற்கும் வழிவிடும் உனக்கு.

அழுகவும் சிரிக்கவும் அடையாளம் இருக்கு.
பழகவும் முறிக்கவும் படிப்பதாம் அதற்கு.
விழுகவும் எழுகவும் அனுபவம் பழக்கு.
விலகவும் விளங்கவும் அறிவதும் வழக்கு.

பள்ளம் மேடு பயணத்தில் பழகு!
உள்ளம் தேடும் உலகம் அழகு.
வெள்ளம் ஓடும் விசையில் விலகு!
கள்ளம் ஆடும் கபடம் உலகு.

சோதனை பயின்று சாதனை முயல்க!
வேதனை முயன்று போதனை பயில்க!
வாதினை எதிர்த்து வடுவினைக் கலைக!
சூதினை வதைத்து கொடுவினை தொலைக!

பிரச்சனை என்ன பண்ணிடும் உன்னை
சவாலாய் எண்ணி முன்னிடு தன்னை.
பணிந்தால் மனதும் கலங்கிடும் பின்னே!
துணிந்தால் கடலும் சுருங்கிடும் முன்னே

சிக்கல் என்பதை சவாலாய் ஏற்று
தொக்கல் கண்டதை தெளிந்தும் நூற்று.
பொறுமை கொண்டே சிறுமை மாற்று
அருமை வென்றே அனுபவம் ஆற்று.

வாழ்க்கை மேடையில் வகைபல வேடங்கள்.
வாழும் போதையில் அவையெலாம் மாயங்கள்.
காலம் கற்பித்த அனுபவப் பாடங்கள்
ஆளும் உண்மைகள் அதுதான் வேதங்கள்.

கொ.பெ.பி.அய்யா.
=========================================================
முக நூலில்
சற்று முன் படித்த ஒரு பதிவு…

“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...
பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”

ஆம்..நிஜம்தானே..!

“காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது...
வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..

“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
“இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...

பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்...
“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!

சந்திக்கத் தயாராவோம்..சவால்களை

Saturday, 25 October 2014

அச்சம் தவிர்.


அச்சம் விடு!

அச்ச் மென்ன மிச்சமடா?
அச்சன் தந்த சொத்தாடா?
துச்சமென தூக்கிப் போட்டா
உச்சம் உந்தன் பக்கமடா!

அச்சம் உன்னை வெல்லுமடா!
அடிமை யாக்கிக் கொல்லுமடா!
அச்சம் விட்டால் சாவுமுன்னை
அண்ட அதுவும் அஞ்சுமடா!

அச்சம் கொடும் பாவமடா!
ஆக்கம் கெடும் சாபமடா!
பச்சம் இல்லா பாலையடா!
பழகும் நெஞ்சம் இல்லையடா!

அஞ்சும் உள்ளம் பள்ளமடா!
அமைதி யில்லா இல்லமடா!
பகலே அறியா இருளதடா!
பாழடைந்த கல்லறைடா!

சுற்றம் வந்து சேராதடா!
சொந்தம் கண்டு தேறாதடா!
அச்சம் யாரும் நம்பாதடா!
செத்துச் செத்துச் சாகுமடா!

அச்சம் ஒரு அவதியடா!
அறி யாமைக் கைதியடா!
தன்னை நம்பும் ஞானமடா!
உன்னை விடும் அச்சமடா!

கொ.பெ.பி.அய்யா.

ஆங்கில மோகம்.





ஆங்கில மோகம்!

இந்த முகத்தைப் பாருங்கள்.!
நந்த வனத்தைக் காணுங்கள்!.
சொந்த அகத்தைக் கேளுங்கள்!.
எந்த விதத்தைத் தேடுங்கள்.!

கள்ளம் அறியா உள்ளம் உள்ளே.
துள்ளும் சிரிப்பே சொல்லும் சொல்லே..
வெள்ளை மனமே பிள்ளைக் குணமே.
நல்ல தமிழே முல்லை வனமே!

மாசிலா மணியே மங்கள அணியே.
ஆசிலா மொழியே அன்பினில் கனியே.
பேசுந் தென்றலே பிழையதில் புயலே.
கூசும் ஒன்றிலே கறைபடும் செயலே!

அணங்கு மகளோ வணங்கா முடியோ!
துலங்கும் பகலோ விளங்கும் தெளிவோ!
இணங்கா மலையோ துணிவின் நிலையோ!
கலங்காக் கலையோ தமிழே தலையோ!!

சோதனை பழகி வேதனை முறிக்கும்
சாதனை படைத்து பாதையை குறிக்கும்
வாதினை எதிர்த்து வழக்கினை முடிக்கும்
சாதென உதிர்த்தார் மனம்வெம்பி மடிக்கும்.

கள்ளம் சொன்னார் உள்ளம் பதறும்.
பள்ளம் செய்தார் கள்ளம் கதறும்.
வெள்ளம் எனுமக்கள் விசைபட்டு சிதறும்.
சொல்லம்பும்பு எதிர்பட்டு முடிவாகி உதறும்.

நிழல்தரும் ஆலமரம் விழுதுகளால் தான்பெருக்கும்.
நிலைபெறும் ஆளும்தமிழ் கலைகளால் தான்சிறக்கும்.
விழல்பாய்ச்சும் நீர்வீணே விலையாங்கில மோகமேனோ?
தழல்காய்ச்சும் தேர்வேனோ தலைத்தீங்கு தாகமேனோ?

கொ.பெ.பி.அய்யா,


Thursday, 23 October 2014

புண்ணியம் பெண்ணே!

கண்ணுள் விரதம்.

புண்ணியம் என்றே எண்ணுக நன்றே
பெண்ணினம் ஒன்றே மண்ணதில் கொண்டே.
தன்னுயிர் தந்தே உன்னுயிர் ஈந்தே
தன்னலம் கண்டாள் உன்னலம் வென்றே!

அன்னையர் இனமோ! பெண்ணுயர் கணமோ!
நன்னய தனமோ! பொன்னயர்  குணமோ!
கண்ணது நலமோ! பெண்ணவள் வளமோ!
இன்னது உலகோ!முன்னவள் களமோ!

மாதென்ன ஏனமோ சூதினில் போனதாம்.
ஏதினி மானம் இழந்தது பாரதம்.
உருவிய துயிலுக்குள் ஒளிந்துள்ள மானம்
உயிரா மயிரா தொலைத்திட வேறெதும்!

உணர்வைத் தந்தவள் பெண்ணென மறந்தே
கனவைச் சிதைத்துக் காந்தாரி பறித்தே
கட்டாயப் படுத்தி கபோதிக்கு முடித்தே
கெட்டான் பிதாமன் சகுனியை இழுத்தே!  

தன்னுள் உணர்வு பெண்ணவள் கனவு
பெண்ணுள் உரிமை எண்ணவும் நினைவு.
கண்களைக் கட்டிய காந்தாரி சபதம்
பெண்ணை ஏற்றவே கண்ணுள் விரதம்.

கண்ணே பெண்ணே தன்னே கலங்கிட
என்னே பின்னே நன்னே விளங்குமோ!
பெண்ணே என்னே தன்னே துலங்கிட
திண்ணே இன்னே முன்னே முழங்குதோ!

பாஞ்சாலிப் பெண்ணின்றும் சபதம் எடுத்தாள்.
காந்தாரிக் கண்ணவிழ்த்தும் விரதம் விடுத்தாள்.
பெண்ணைப் போற்றா எண்ணவர் எல்லாம்.
தன்னைக் காக்க முன்னிலை துறப்பார்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 21 October 2014

தீபாவழி


தீபாவளி—தீபாவமழி!

தீபங்கள் ஒளியங்கு தெரியட்டுமே!
தீபாவம் அழியென்று எரியட்டுமே!
தீபாவளி சுடரெங்கும் விரியட்டுமே!
தீபாவம் வலிமங்கி முறியட்டுமே!?

தர்மங்கள் பிழைத்திங்கு வாழட்டுமே
கர்மங்கள் தழைத்திங்கு ஆளட்டுமே!
வர்மங்கள் கலைந்திங்கு ஓயட்டுமே!
துர்மங்கள் தொலைந்திங்கு மாயட்டுமே!

இனம்சேரா நாய்க்குணம் தீரட்டுமே!
குணம்மாறா மனிதமனம் சேரட்டுமே!
பணம்காக்கும் பேய்க்குணம் மடியட்டுமே!
மனம்பூக்கும் புனிதகணம் விடியட்டுமே!

மனிதராய் வாழும்நலம் பழகட்டுமே!
மனம்பயின்று தேறிபயம் விலகட்டுமே!
வனவிலங்காய் தேடும்பகை ஒழியட்டுமே!
இனவொழுங்காய் கூடும்தகை நிலவட்டுமே!

நீதியென்ன மன்றமென்ன புரியட்டுமே!
மீதியென்ன மேன்மையென்ன அறியட்டுமே!
சாதியென்ன ஆதியென்ன தெளியட்டுமே!
வாதியென்ன வஞ்சமென்ன ஒழியட்டுமே!

கத்தியென்ன புத்தியென்ன தீட்டட்டுமே!
உத்தியென்ன உண்மையென்ன மீட்டட்டுமே!
வெற்றியென்ன தோல்வியென்ன ஈட்டட்டுமே!
முற்றியென்ன மீட்சியென்ன காட்டட்டுமே!

அறிவென்ன ஆக்கமென்ன விளங்கட்டுமே!
நெறியென்ன நேரென்ன துலங்கட்டுமே!
அன்பென்ன அமைதியென்ன உணரட்டுமே!
பண்பென்ன பாசமென்ன மலரேட்டுமே!

கோபமென்ன தேவையென்ன வெடிக்கட்டுமே! 
பாவமென்ன சேவையென்ன படிக்கட்டுமே!
யோகமென்ன மோகமென்ன தேறட்டுமே!
தேகமென்ன தாகமென்ன மீறட்டுமே!

ஆசையென்ன மோசமென்ன தேயட்டுமே!
நீசமென்ன நாசமென்ன தீயட்டுமே!
வாசமென்ன வாழ்வதென்ன நினையட்டுமே!
நேசமென்ன நிலைப்பதென்ன முனையட்டுமே!

நாளென்ன விழாவென்ன ஆயட்டுமே!
நமக்கென்ன நலமென்ன தேடட்டுமே!
பாடமென்ன கூறுமென்ன படிக்கட்டுமே!
படிப்பென்ன புரிவென்ன நடக்கட்டுமே!

பாசமென்ன நேசமென்ன மலரட்டுமே!
பண்பென்ன அன்பென்ன வளரட்டுமே!
ஈகைஎன்ன இரக்கமென்ன புலரட்டுமே!
இயல்பென்ன தயவென்ன ஒளிரட்டுமே

கொ.பெ.பி.அய்யா.

Monday, 20 October 2014

எழுக பெண்ணே எழுக!


பெண்ணே எழுகவே!

நான் நான் என்றே பெண்ணென வாழும்
நாள் நாள் தானே நிகழ்ந்தது நிசமே!
ஏன் ஏன் என்றே எவரும் பேசும்
காண் காண் நன்றே ஜெயமே வாழ்கவே!
பெண்ணே வாழ்கவே!

கண்டதும் கைதொழும் கருணை வடிவே!
நின்றதும் பொய்விழும் திருமை உருவே!
கொண்டதும் துணிவே பெண்மை நிறமே!
சென்றதும் மனமெழும் தன்மை வரமே!
பெண்ணே வரமே!

இன்பம் துன்பம் எதுவானாலும் சமமே
நன்மை தீமை நடுவே வாழும் பலமே!
பாடு எல்லாம் பகவதி போலும்.குணமே
மேடு பள்ளம் கடந்தே மீளும் இனமே!.
பெண்ணினமே!

சோதனை வென்றும் சாதனை படைப்பாய்!.
வேதனை கொன்றும் தீதினை உடைப்பாய்.!
எதிர்வினை கண்டும் சதுர்வினை முடிப்பாய்!
முதிர்வினை மிஞ்சும் புதுவினை துடிப்பாய்!
பெண்ணே துடிப்பாய்.

பெண்ணினச் சுதந்திரப் பிறவி எழுகவே!
தன்னினம் உயர்த்திட தானே எழுகவே!
எண்ணிடப் பெருமை இறைவி எழுகவே!
மண்ணிடம் அருமை நீயே எழுகவே!
பெண்ணே எழுகவே!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 18 October 2014

தாயே தமிழே!






தாயே தமிழே வாழ்க!

வருக வாழ்க  வாழும் தமிழே தாயே!
பெருக நீள்க பேரும் புகழும் நீயே!
தருக தருக நாளும் ஆட்சி தாயே!
பெறுக பெறுக மேரும் மாட்சி நீயே!

அம்மா என்னும் சொல் உதிர்த்தால்

அன்பு என்னும்  நெல் சிதறும்.
அம்மா எனவும் உனை நினைத்தால்
அநியாயமும் தான் பதறும்?

தாயே என்னும் தமிழ் பகிர்ந்தால்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே எனவும் உனை நினைந்தால்
தைரியமும் தான் பெருகும்.

அன்னை எனவும் வாய் மலர்ந்தால்
மென்மை தானே உள் வளரும்.
அன்னை எனவும் உனை அழைத்தால்
மண்ணுமதிர்ந்து வினை தளரும்.

மாதா எனவும் மடி கிடந்தால்
மனமே மகிழ்ந்து குணம் குளிரும்.
மாதா எனவும் உனைத் தொழுதால்
சோதனை யாவும் விலகிடுமே.

பெற்றவள் அவளின் முகம் பார்த்தால்
பிள்ளையின் உற்ற பிணி தீரும்.
நற்றமிழ் சொன்ன உனைக் கற்றால்
நல்லதெல்லாம் எமைச் சேரும்.

கொ.பெ.பி.அய்யா.


மென்மை தானே உள் வளரும்.

அன்னை என உனை அழைத்தால்

மண்ணதிர்ந்து வினை தளரும்.



மாதா என மடி கிடந்தால்

மனம் மகிழ்ந்து குணம் குளிரும்.

மாதா என உனைத் தொழுதால்

சோதனைகள் விலகி ஓடும்.



பெற்ற அவள் முகம் பார்த்தால்

பிள்ளை உற்ற பிணி தீரும்.

நற்றமிழே உனைக் கற்றால்

நல்லதெல்லாம் எனைச் சேரும்.



கொ.பெ.பி.அய்யா.

சட்டம் என்ன சொல்லும்?


கீதை என்ன சொல்லும்?

கொதித்துத் துடிக்குது உண்மைகள்.
குளிர்ந்து கிடைப்பது எப்போது?
மிதித்துக் கிடக்குது நன்மைகள்.
மதித்து நடப்பது எப்போது?

கண்ணைக் கட்டிக் கொண்டாள்
காந்தாரி போல் நீதிமகள்.
என்னதான் நடக்கு திங்கே?
பண்ணுதெல்லாம் பலந்தா னிங்கே!
.
எண்ணும் மெய்மை தீர்ப்பு எங்கே?
சொல்லும் பொய்மை சாட்சி யங்கே! .
உண்மை மொழியக் கற்ப தெங்கே?.
வல்லநீதியும் வெல்வ தங்கே!

மக்கள்சக்தி என்ன சொல்லும்
மனம் எழுதும் தீர்ப்பு வெல்லும்.
எக்காலம் சாமி பேசும்?
அக்காலம் நீதி பேசும். 

சட்டம் என்ன சொல்லும்?
சாட்சியின் வழி செல்லும்.
கீதை என்ன செய்யும்?
பாதையின் மொழி சொல்லும்.

“யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "

எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அதை அழிக்க நான் பிறந்து வருவேன் என்ற கிருஸ்ண பரமாத்மாவின் கீதை வரிகளுக்கிணங்க அவரே அதர்மத்தை அழிக்க என்று மீண்டும் வருவார்?

கொ.பெ.பி.அய்யா.

தர்மத்தாய்.

மீண்டது தர்மம்!
கொதித்துத் துடித்த தமிழகம்
இன்று குளிர்ந்தது காண்!
மிதித்துக் கிடந்த தருமம்
இன்று எழுந்துமீண்டது காண்!
கண்ணைக் கட்டிக் கொண்டதால்
காந்தாரிப் பேதையோ அவள் ?
விண்ணை முட்டியும் வெளிப்படுவாள்
விளங்கும் நீதியரசி அவள்.
எண்ணும் நீதி என்றும்
எழுதப்படும் இதயங்களில்.
பின்னும் வலைகள் எல்லாம்.
என்ன செய்யும் மூச்சுக்காற்றில்?
மக்கள் சக்தி ஒன்றுகூடி
மனம் விளங்கி தீர்ப்பெழுதி
எக்காலும் எம் தலைவி
எனப்பதித்தோம் வாழ்வுறுதி,
இன்றுதான் தீபாவளி.
வென்று வந்தாள் அம்மா காளி.
கொண்டாடும் தமிழ் நாடே!
நன்றி பாடும் நீதிக்கே!
யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "
எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அதை அழிக்க நான் பிறந்து வருவேன் என்ற கிருஸ்ண பரமாத்மாவின் கீதை வரிகளுக்கிணங்க அன்னை அதர்மத்தை அழிக்க இன்று மீண்டு(ம்) வருகிறார்....
கொ.பெ.பி.அய்யா.

Thursday, 9 October 2014

இன்னொரு சுதந்திரம்.


அன்றும் இன்றும்.

இன்னொரு சுதந்திரம் என்பது கோசமே!—அது
முன்னெடு முன்னேறு வாழ்க தேசமே!—இது
முன்னொரு மந்திரம் தாயை வணங்குவோம்.—அது
சொன்னது தந்திரம் இன்றது முழங்குவோம்.

பச்சிகள் வெள்ளையும் வந்தன ஆண்டன---இன்று
கட்சிகள் கொள்ளை கொண்டன தின்றன.—அன்று
உச்சம் உயிரென எத்தனை தியாக.ம்!—இன்று.
மிச்சம் மயிரென இத்தனை சோகம்!.

தியாகம் ஒன்றே பொது வாழ்வாக---பழைமை
தேர்ந்த அரசியல் தூய்மை அன்று---புதுமை
தலைமை குடும்ப நலமே கொள்கையாக---பழைமை
தொலைத்து தானே வாழ்வது இன்று.

அரசியல் கட்சிகள் ஆயிரம் முளைத்தன—அவை
ஆளுக்கு ஒன்றாய் இலாபம் கருதின---எவை
பங்கு பகிர்வதில் சங்கம் அமையுமோ—அவை
முந்தும் கூட்டணி என்று மயக்கின.

நாய்களென்றும் தமக்குள் நட்பும் கொள்ளாது---அதுபோல்
நாடக அரசியலும் கூடியொன்றில் நில்லாது.---இதுபோல்
ஒன்றை ஒன்று ஒழிக்கும் பொல்லாது---அதுபோல்
நன்றி என்றுமொரு வாசலும் செல்லாது.

பொய்யது ஒன்றே மெய்யது என்றே---அந்த
வாயது கொண்டே மேய்வது வென்றே—இந்த
அய்யோ மக்கள் ஆய்வது மறந்தே---அந்த
வெய்யது அரசியல் வாழுதே தொடர்ந்தே!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 8 October 2014

சேயென்ன விதியோ!

செல்லம் நீ!

நாய்கள் சூழ்ந்த உலகமோ.!.
தாய்தான் வீழ்ந்த சலனமோ!..
சேயென்ன பாவம் முடித்ததோ!—அய்யோ
சீயென தானே துடிக்குதோ.!

பேய்கள் போட்ட ஆட்டமோ!.
தாய்தான் ஏற்ற பாவமோ!..
பேயோ தாயோ ஏற்குமோ!.—பாவம்
சேயது சோகம் தீர்க்குமோ!..

மனமும் உளுத்த மனிதர்கள்
இனமும் பழித்த சனிதர்கள்.
தாய்மை மதியாத் தறுதலைகள்—இந்த
சேயின் விதியோ கடலலைகள்.

தாயும் தன்னை விற்றாளோ!
சேயும் உன்னைப் பெற்றாளோ!
வாய்தான் அழுதும் பிழைத்தாயோ—காமப்
பேய்தான் உழுதும் முளைத்தாயோ!

தொட்டிக் குழந்தை இழிவில்லை
தொட்டில்க் குழந்தை பழியில்லை.
அரசு தானே அம்மாவாம்.—உன்னைப்
பரிசெனத் தாலாட்டிப் பெற்றாளோ!

எந்த சொந்தம் நீயம்மா?
அந்த பந்தம் தாயம்மா!.
குப்பை இல்லை சிரியம்மா.—அந்த
தப்பை செய்தவள் விதியம்மா. .

அன்னை உன்னை விடுவோமா?
மண்ணை வீணே படுவோமா?
தன்னைத் தானே கெடுவோமா?---அம்மா
முன்னைத் தமிழே மடியில்வா!

அம்மா தமிழே வருவாளோ!
அள்ளிக் கண்ணால் பெறுவாளோ!
இம்மா நிலத்தின் செல்லம் நீ!—இங்கு
இல்லை எவரும் அனாதை யே!


கொ.பெ.பி.அய்யா.