Thursday, 30 October 2025

சுதந்திரம் என்னாச்சு?

சுதந்திரம் என்னாச்சு

சுதந்திரம் என்னாச்சோ ஏதாச்சோ!
அதுக்கான பலனுமே யாருக் காச்சோ!
அரசியல் வாதிக்குத்தான் சுதந்திரமோ!
அப்பாவி சனங்கதான்  பாவங்களோ!

பாடுபட்ட உயிரெல்லாம் பாவிங்களோ!
பட்டபலன் அனுபவிக்க யோகமில்லயோ
போராடி மாண்டோர்குப் பேரில்லையோ!
சீரோ சிலையோ சிறப்போ  இல்லயோ!

அப்பன் வீட்டுச் சொத்துப் போலவே
அவங்க அவங்க பேரு வைக்குறாங்க.
ஆட்சி மாறி வேற வந்தா அழிக்கிறாங்க
அதை மாத்தி மாத்திச் செய்யுறானுங்க.

விடுதலையே வேண்டாம் இப்போனு
வெள்ளக் கொக்கப் பறக்க விட்டாங்க.
சுதந்திரமே கூடாதுனு தடுத்தவங்கதான்
பதறாம கனிமக் கொள்ளை பன்றாங்க.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






Wednesday, 29 October 2025

அத்தை மவனே!

அத்தை மவனே!

அத்தை மவனே!

அத்தை மவனே அத்தானே--என்
ஆசை முகமே மச்சானே!
பித்து ஆனேன் உன்மேலே--என்
பிரியக் கண்ணா உன்னாலே!

மொத்த மனசும் சுமந்தேனே--என்ன
ஆளப் பிறந்த ராசாவே!
சொத்து சுகமும் நீதானே --கண்ணில்
சொக்க வச்ச சுந்தரனே!

நான் பிறக்கும் முன்னாலே--அழகா
நீ பிறந்தே இருந்தாலும்.
எனக் காகவே பிறந்தாயோ--நானும்
உனக் காகவே பிறந்தேனோ.

கண்ணே மணியே கரும்பேனு--என்னக்
கட்டி அணைச்சது போதுமே.
காலம் பூராம் வாழ்ந்தசுகம்--நான்
கண்ட கனவும் கண்டுட்டேனே.

நாம பெத்த பிள்ளைகளே--நாட்ல
நம்ம பேரே சொல்லோனும்.
சாமம் ஏமம் பாராம--யாருக்கும்
சேமஞ் செஞ்சே வாழோனும்

காலம் பூராம் வாழ்ந்தாலும்--கண்ட
கனவு அம்புட்டும் நிறஞ்சாலும்
வாழ்ந்து செத்து மடிஞ்சாலும்--மறுபடி
மீண்டும் மீண்டும் பிறக்கோனும்.
சேந்து நாம வாழோனும்

இன்னுஞ் 
செத்தாக்கூட மோச்சந்தான்--உன்னோட
இருந்த இந்த நிமிஷந்தான்.
பிறந்தக் காரணம் அடைஞ்சிட்டேன்--நான் 
பிறந்த காரணம் அடைஞ்சிட்டேன்--
உன்னோட
இருந்தும் சேந்தும் வாழ்ந்திட்டேன.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

இறைவனை அடைவது எப்படி

இறைவனை அடைவது எப்படி 

கடையக் கடையப் பாலில் நெய்யே!
அடைய அடைய உள்ளில் மெய்யே!
அறிய அறிய உள்ளுள் ஒளியே!
தெரியத் தெரிய ஒளிர்வான் இறையே.!

உள்ளம் ஒளிர இல்லம் துலங்கும்
உள்ளே மிளிர இறையும் விளங்கும்.
தெய்வம் தானெனத் தெளிந்து உணர்க.
தேடி அலைவது வீணெனப் புரிக!

மருண்ட இதயம் இருண்டு கிடக்கும் 
திரண்ட மாயைத் தேடலை அடைக்கும் 
ஆசைக் களவுக் கோபப் பேய்கள்
பூசைப் புண்ணியம் பலனை அழிக்கும்.

எண்ணம் வண்ணம் தூய்மை யானால்
எண்ணும் செயலும் நல்லற மானால்
இதயக் கோவில் ஒளி மயமாகும்
இறைவன் உள்ளே சுடராய் ஒளிர்வான்.

கோவில் தனக்குள் கட்டிய புலவன் 
கும்பா பிஷேகமும் செய்து முடித்தான்.
பக்தியில் இறையைக் கொண்டா டினால்
முக்தியும் தனக்குள் கண்டாகலாம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 27 October 2025

சொந்தமுன்னா என்ன?

சொந்தமுன்னா என்னடா?

சொந்த முன்னா என்னடா?
சொன்ன தெல்லாம் சும்மாடா.
வந்தது தான் எதுக்கடா?
வாழ்ந்த வரை அதுக்கடா.

கோடி கோடி சேத்து வச்சு
வீடு வாசல் கட்டி வச்சு 
கோடி மூடித் தூக்கும் போது
கூட வர என்னடா?

மனைவி ஒருத்தி இருந்தான்னா 
மந்தை வரை அழுதிடு வாள்.
காடு வரை பிள்ளை வரும்.
வீடு திரும்பி தலை முழுகும்.

தலை முழுகி துவட்டி யாச்சு
அழுத சோகம் முடிஞ்சு போச்சு.
வந்த சொந்தம் திரும்பி யாச்சு
இந்தப் பந்தம் கடந்து போச்சு.

பெத்துப் போட்டுத்  தொலைஞ் சாங்கடா,
சொத்தும் விட்டு மறைஞ் சாங்கடா,
நானும் விட்டுப்  போறேனடா
யாருக் கிங்கு சொந்த மடா?

ஊரு மட்டும் இருக்குமடா!
ஒன்னு ஓன்னாப் பறக்குமடா.
யார் யாரோ வருவாங்கடா.
பேரழிஞ்சும் போவாங்கடா.

சொந்தம் ஏது சொல்லடா?
சொன்ன தெல்லாம் சும்மா டா.
வந்த வழி அழிஞ்ச பின்னே
எங்கே ஏது சொந்த மடா?

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

உள்ளம் துலங்குதய்யா.

உள்ளம் மகிழுதய்யா!

உள்ளம் துலங்குதய்யா--முருகா 
உன் புகழ் விளங்குதய்யா.
கள்ளம் விலகுதய்யா-கந்தா
இல்லம் பழகுதய்யா.

தேடித் திருமகனை--பாலா
ஓடி வருவேனய்யா.
பாடி உன்னருளை--வேலா 
நாடி வந்தேனய்யா.

இதயம் இருண்டதய்யா--கடம்பா
உதயம் பொருந்திடய்யா.
ஆசை அகற்றிடய்யா--குருபரா
பூசை ஒலித்திடய்யா..

தண்டம் கொண்டவன் நீ--ஞானப்
பழம் நீ தந்தவன் நீ.
தந்தைக்கு உபதேசம்--சுப்பையா
தந்திட்ட குருபரன் நீ

ஔவைத் தமிழ்க் கிழவி-- தமிழ்
செவ்வேள் சிறுவனிடம்
வாதிட்டு தோற்றிட்டாளோ!---செய்த
சோதனை வென்றிட்டாயோ!

குன்றங்கள் தோரும்--குமரா
குடி கொண்டாயோ!
மன்றங்கள் கண்டும்---அழகா
மழழலை செய்தாயோ!

உள்ளம் மகிழுதய்யா--சரவணா
உள்ளி உருகையிலே.
வள்ளி மணாளனே--மருகா
வெள்ளியன் மைந்தனே.

கூப்பிட்ட குரலுக்கு--சாமி
ஓடி வருவாயே!
கூவி அழைக்கின்றேன்--குகனே
தாவி வந்தருள்வாயே!

கவஞர். கொ. பெ. பிச்சையா.






மயிலாட்டம்

மயில் ஆட்டம் 

தோகை விரித்துத் துணையைத் தேடும்
பாகை அகற்றிப்  பரப்பி ஆடும்
மேகம் கண்டு மெய்யது சிலிர்த்து 
தாகம் காட்டித் தன்னாளை ஈர்க்கும்.

கார்மேகம் கழன்று சுழன்று நேர்வசம் 
ஊர்மீது இரங்கி உழன்று சூழ்வாசம்
கண்டு மகிழ்ந்து குளுமை நயந்து
செண்டாடும் நீர்த்துளி தண்மை வியந்து

அழகில் அழைத்து ஆரோக்யம் காட்டும்
பழகும் விதத்தில் பகட்டைத் தோற்றும் 
உலகில் என்போல் அழகினில் யாரோ!
தலைக்கனம் ஏற்றி தள்ளாடு வாரோ!

பெண்ணழ கென்றே பெருமை பேசும்
பெண்ணவள் வியந்து அருமை கூசும்
என்னே எழிலெனத் தன்பால் கவர்ந்து
முன்னே பின்னே நடமிடும் பயின்று.

அழகு நடனம் ஆண்மை மயங்கி
அதனது உதிர்வு பெண்மை கவர்ந்து
தன்சினை ஏந்தி தன்னினம் பெருகப்
பெண்ணின் பெருமை கொண்டாள் அருமை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Sunday, 26 October 2025

விரதம்

விரதம்..........!!

வரதட்சனைப் பெற்றுத்தான்
வரனாவேன் என்போனே--உனது
கரம் பற்றுவதைவிட
உரமாகி மண்ணுக்கு
உயிர் கொடுப்பதே மேல்!

பணம் வாங்கி ஒருத்தி
படுக்கை விரித்திட்டால்-அவளை
இனம் கெட்ட வேசியென
இழிக்கும் சமுதாயமே
இவனும் வேசைப் பயலே!

கல்யாணச் சந்தையில்
காசுக்கு விலையாகும்---ஒரு
நெருப்பு விதையை
புருசனாக்கி எரிவதோ!
விரதமிருப்பேன் வீட்டிலே!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

பெண்ணடிமை ஏன்?

அடிமைகளோ
பெண்ணினம்!

பாரதியும் மறைந்தானோ!
பெண்ணுரிமையும் மறந்ததோ!
அன்றே சொன்னேன் நானுமே!
ஒன்றாய்ப் பெண்கள் கூடினால்,
உலகை வென்றும் ஆளலாம்
இன்னும் ஏன் அடிமையாம்?
பெண்ணுரிமை மடிந்ததா?
என்ன இதுக் கொடுமையோ!

தன்னறிவும் இல்லையோ!
துணிவும்  எழ வில்லையோ!
தொன்மையின் மடமையோ!
பணிவதே பெண் விதியோ!
கண்களை விலை கொடுத்தா?
வண்ணோவியம் வாங்குவது!
பெண்ணவளை அலங்கரித்து
பேயிடத்துக் கொடுப்பதோ!

என்னதான் சுகங்கண்டாள்.
எல்லாமே இல்லமென்றாள்.
தன்னையே அர்ப்பணித்தாள்
தனக் கென்று என்னக் கொண்டாள்?
தியாகத்தின் வடிவமாக
வியாதியின் விளக்க மாக
தவறிடுஞ் செயலுக்கும்
தானேதான் பொறுப்பானாள்.

தொட்டதுக்கும் குற்ற மென்பார்.
பட்டதுக்கும் பழி சுமப்பாள்.
கெட்டுக் குப்பை அடியாளென்பார்.
பட்டமரம் அளென்பார்.
அஞ்சனம் கொஞ்சும் விழி
அஞ்சி வழியக் கருத்ததோ!
மஞ்சனம் மணக்கும் மேனி
வெஞ்சூட்டால் வெளுத்ததோ!

பூச் சூடும் கார்க் கூந்தல்,
நாய்களாடும் குப்பை மேடோ!
ஏச்சுக்கும் பேச்சுக்கும்,
இவளென்ன விலைமகளோ!
சமைக்க வந்த வேலைக் காரியோ!
சாப்பாட்டுக்கு பிச்சைக் காரியோ!
விலை கொடுத்து வந்தவளோ
விலை மகனுக்கு அடிமையோ!

பெண்ணுக்குப் பெண்ணெதிரி.
கண்ணுக்கு கண்ணெதிரி
மருமகளா வந்தவளே மாமியார் 
மறுபறவிக் கொடுமைக்காரியோ!
அவள் கொண்ட கொடுமைகளே,
இவள்தலையில் விடிந்ததோ!
நாளை இவள் அப்படித்தான்
நிலைமை மாறிச் செய்வாளோ!

எத்துணைப் பெண்ணுக்கு!
இப்புவியிற் கொடுமைகள்!
செத்தொழியும் வேளைக்கூட
சீவனுக்கு அமைதியில்லை!
பெத் தணைத்தப் பிள்ளையும்
பெரு மைக்கான கணவனும்
ஊர் உறவுக்குப் பொய்யாக
தேரனுப்பப் பாலூற்றுவார்.

அனைத்தையும் அவள் மறந்து
அப்போதும் கண்ணொழுகி
பிணை துறந்து ஏகுவாளோ!
பெண்ணெனும் பாவ மகள்!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

சுவாசக் காற்றே நீ

நீ என் சுவாசக் காற்றே!!

மண்ணிற்பல் அருமை 
உயிரினங்களை
கண்ணிற் படாமல் தொலைத் திட்டோம்!
மண்ணின் உயிரான பெண்ணினமும் அதுபோல் ஆமோ!
எண்ணிட அச்சம் விஞ்சுதே இதயம் வலிக்குதே
விண்ணிடம் வேண்டிக் 
கெஞ்சிட லாமோ! papa qApppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

காலத்தின் சுழற்சியை  நிறுத்தும் முயற்சியில்
நாளும் பாலியல் வன்மங்கள் 
நடந்தேறுகின்றன!
வாழும் உலகின் சுவாசத்தை 
அடைத்து விட்டு
வாழப்போவதும் இங்கு யாரோ எதுவோ!
கோலமில்லாப் புள்ளிகளாய்  
குன்றுகளே மிஞ்சுமோ!

வாசலை அடைத்த வீட்டில் 
வரவுக்கு யாரப்பா!
வாரிசும் பெண்ணின்றி வருவதுண்டோ கூறப்பா!
வாயு மட்டும் அலையுமிங்கு 
வரலாறு சுமந்தப்பா!
பேயுங்கூடத்திரியாது பெண்ணில்லா 
பூமியப்பா!
ஓயுமுன் உணர்ந்து நீ பெண்ணினம் போற்றப்பா!

கடலிருக்கும் காற்றிருக்கும் 
மலையும் இருக்கும்!
நிலமிருக்கும் நீரிருக்கும் 
வளமும் இருக்கும்!
இயற்கை தந்த எல்லாச் செல்வங்களும் இருக்கும்!
ஆணின ஆதிக்கமும் 
ஆங்காங்கே ஒளிந்திருக்கும்!
ஆனால் மனிதத்தடம் மட்டும் 
மறைந்திருக்கும்!
  
அருகித்தான் சுருங்குது அருமைப் 
பெண்ணினம்!
ஆராய்ச்சி மணியொலியின் 
எச்சரிக்கை தினந்தினம்!
கருவிலே கொன்றழிக்கும் 
கருமந் தொலையவில்லை!
திருமண வன்மைகளும் 
தேசத்தில் குறையவில்லை!
ஒருமனப்பட்டு உயிராம் பெண்குலம் 
காப்போம்!

நீ என் சுவாசக் காற்றே!
நீ வாழ வேண்டுமே!
நீயே சக்தி!சாமி நானே!
நீயும் நானும் சேராவிட்டால்
ஏது காதல் பக்தி!!

இரண்டில் ஒன்று
எது குறைந்தாலும்
வரண்டு விடாதோ காதல்
வரமாய் கொண்டேன்
வாழ்வில் கண்டேன்
வாழ்வோம் இனிதே சுபமே!

உலகம் நமது கையிலே
ஒப்படைத்தான் இறைவனே!
விலக்கும் பொருளோ நீ!
வேர்நீ உலகுக்கு.
உலகம் உனையன்றி
நிலைக்குமோ உயிரன்றி!

உயிர்கள் செய்வோம்!
பயிர்கள் வளர்ப்போம்!
உலகம் நிலைக்க
உமையாள் துதிப்போம்.
உறுதியில் இருப்போம்
உணர்விலிது சத்தியம்!

இது ஒவ்வொரு இளஞனும்
இதயம் கொள்க!
புதுப் பிரளயம் தவிர்த்திட
பெண்ணினம் காக்க!
                   
கவிஞர்.கொ.பெ,பிச்சையா.

வளமென்ன இனி

வளமென்ன இனிவேண்டும்?

பொன்னே பூச்சரமே புன்னைமர இளங்காற்றே
கண்ணே கண்மணியே காலையிளங் கதிரொளியே
பெண்ணே பெண்ணரசே பேசுமொழி சித்திரமே
எண்ணே என்மகளே எழுந்துவா என்னிடமே

தந்தைநான் தவமிருந்து தனித்துவரம் பெற்றேனே
எந்தைவழி பேரெடுக்க உந்தாயில் கண்டேனே
முந்தைநாள் நான்தந்த முத்தங்களை சேர்த்துவைத்து
இந்தைநாள் மொத்தமாய் இன்பமுனைத் தந்தாளே!

ஆழ்கடல் தேடலிலே ஆனிமுத்து பெற்றதுபோல்
வாழ்ந்தயெம் வாழ்க்கை யுன்னால் வரலாறாய் மலர்ந்ததம்மா.
தேர்ந்தயெம் பந்தமிது தேனாகிக் கனிந்ததம்மா.
நேர்ந்தயெம் நன்மை யெலாம் நீயாகி வந்தாயம்மா.

குலம்செய்த புண்ணியமோ குலமகளேநீ கிடைத்தாய்.
நலமெல்லாம் நீயென்றே குலம்வாழ அறம்படைத்தாய்.
வளமென்ன இனிவேண்டும் வள்ளல் நீ வந்துவிட்டாய்
பலமென்ன பெறவேண்டும் படை நீயே 
செல்லம்மா.

கவஞர்.கொ. பெ. பிச்சையா.

Thursday, 23 October 2025

நாடே கடனில்......

நாடே கடனில்.............!

நாடே கடனில் நாடாள்பவன் அம்பானி.
பாடே வாழ்வான பாமரனோ பட்டினி.
ஓட்டை விற்றவன் ஓட்டைக் குடிசையில்
ஓட்டை வாங்கியவன் கோபுர மாளிகையில்.

நமக் கெதற்கு வம்பென நாலாம் தூண்
அமுக்கி வாசிப்பதும் அடங்கியதும் ஏன்?
பணநாயகம் வென்றும் சனநாயகம் தோற்றும்.
அநியாயம் ஆனதோ ஆகாத சுதந்திரம்.

பாவங்கள் மேயாட்டம் பகற்கொள்ளை பேயாட்டம். 
சாபங்கள் கோபங்கள் தியாகமெங்கே போராட்டம்.
உரிமைக்கு விலைபேசும் வறுமைக்குச் சாவிலையோ!
பெருமைக்குப் பேர்சொல்லும் மகான்கள் பிறப்பிலையோ!

அடிபட்டு மிதிபட்டு ஆயிரங்கள் பலியிட்டு,
விடியலைப் பெற்றுத் தந்தார் தியாகிகள்
விடியாமல் விடியுமுன்னே வேட்டையர்
நுழைந்திட்டார்.
அடைந்தது ஆகாசம் முடிந்தது இதிகாசம்.

சுற்றிச்சுற்றித் திரிகிறாள் சுதந்திரத் தாய் அழுகிறாள்.
நோகாமல் நுங்குதின்போர் சாகாமல் வாழுகிறார்.
மீண்டும் ஒருபாரதம் வேண்டும் வேண்டுமே
விஷ்ணு மறுஅவதாரம் கிருஷ்ணரே வருகவே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதம் 

எம்மதமும் சம்மதம் ஏற்போமே
அம்மதமும் நம்மதம் தீர்ப்போமே
மனம் கோணாமல் மதம் பேணுவோம்
இனம் பாராமல் இணைந்து வாழுவோம்.

ஆன்மாக்கள் போலவே ஆறுகள்
அதனதன் வழியே தீர்வுகள்.
சேரும் இடங்கள் சங்கமம்.
நேரும் விதமோ சம்மதம்.

கடல்களில் வேற்றுமை காட்டுமோ!
கண்டங்கள் தோற்றமும் மாற்றமோ
பெயர்கள் தானே பலப்பல
பிரிவினை ஏது உலகிலே.

ஆறுகள் என்னும் வழிகளை
பேருகள் சொல்லி அழைக்கிறோம்.
சேரும் ஓரிடம் கடலது போல்
மார்க்கங்கள் சங்கமம் இறையொருவன்.

அதனதன் வழியில் ஆறுகளே
மதங்கள் நம்பிக்கை இருக்கையிலே
மோதல் ஆகுமோ உலகினிலே
யாதும் நம்மதம் சம்மதமே

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

தியாகத் திருநாள்.

தியாகத் திரு நாள்

இஸ்மாயில் அம்சம் காணுங்கள்--அவன்
இஸ்ஸலாமிய வம்சம் தானுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கமலா முங்கள்
அனைவர்க்கும் வணக்கம் சொல்லுங்கள்

துல்ஹஜ்த் திங்கள்
பத்தாவது நாளில்
பக்ரூ ஈத் கொண்டாட்டம்.
அல்லாவின் கருணை
அனைவர்க்கும் அருளும்
பாய்களுக்கு வாழ்த்துக்கள்.

நபித்தூதன் இப்ரஹிம்
தவப்புதல்வன் இஸ்மாயிலை
அல்லாவின் கட்டளையில்
அர்ப்பணிக்கத் துணிந்த நாள்.

இறைவனுக்குத் தியாகமாய்
தலைகொடுத்துத் தனை ஈய
நிறைந்தவன் பக்தி மெச்சி
விரைந்தவன் அல்லா வாழி!

தூயபக்தி வாழ்த்த வந்தான்.
நேயமதைப் போற்றிச் சொன்னான்.
பக்ருவே போதுமென்றான்.
பலியேற்று மனிதங் கண்டான்.

குர்பானிச் சமபந்தி
கூடியே உண்டிடுவோம்.
சர்வமும் சமமாவோம்
தர்மமேக் காத்திடுவோம்.

உலகமதன் நலம் வாழ
உயிர் கொடுக்க விழைந்தானை
உளம் மகிழ விருந்தளித்து
உறவுகொண்டு வணங்கும் நாள்.

அனைவரும் சகோதரரே!
அன்பு மொழித் தான் பாயே!
அப்பனென்றும் மாமனென்றும்
அத்தனையும் உறவானோம்.

சொந்தமான இரத்தங்களே!
பந்தமான உறவுகளே!
எந்தபேதம் இல்லாமலே
இந்த மண்ணில் வாழுவோமே!

தியாகத்தின் திருநாளே!
தேவனல்லாப் பெருநாளே!
இறைத்தூதன் இப்ரஹிமே!
இதயங்கொள் நந்நாளே!

மெக்காவுக்கும் மதினாவுக்கும்
முகமத் நபி யாத்திரையே,
இக்காலும் ஹஜ்பயணம்
இறைக்கடன் திருப்பயணம்.

இஹ்ஹாமை அணிந்திருப்பர்.
எல்லோரும் சமமென்பர்,
ஒற்றுமை விளக்கமாக
ஹஜ்ஜுக்குப் போய்வருவர்

கஃபாவைச் சுற்றிவந்தால்,
சம்சம் நீர் குடித்துவிட்டால்,
பிறவிப்பயன் பெற்றிடலாம்;
பிறவிக்கடல் நீந்திடலாம்.

ஹஜியாக ஆகிவிட்டால்,
கடமைகள் நிறைவுற்றால்,
அல்லாவின் அமைதியில்;
அவன் சரண் ஆகிடலாம்.

கவிஞர். கொ.பெ.பிச்சையா.

பின்குறிப்பு
பி.கு::பக்ரு--செம்மறியாடு.
இஹ்ஹாம--ஹஜ்பயணச் சீருடை.
கஃபா--மெக்கா புனிதத்தலம்.
சம்சம்--இஸ்மாயில் தோற்றுவித்தப் புனித நீரூற்று.
ஹஜி---ஹஜ் பயணம் சென்று வந்தவர்.

Tuesday, 21 October 2025

இறைவனே உரிமையாளன்.

வண்டிக்காரன்.

இறைவா நீ வண்டிக் காரா"
எங்கே வண்டி ஓட்டிப் போகிறாய்?
உறையும் உள்ளே ஆன்மா.நீ!--வண்டி ஆளும் அறிவே நீதான்.

பூட்டிய வண்டி உடலாக
மாட்டிய காளைகள் உயிராக,
வண்டிக் காரன் ஓட்டுகிறாய்--வண்டி
பயணம் எங்கே செலுத்துகிறாய்.

வண்டிக்காரா வண்டிக்காரா"
வண்டியை ஓட்டும் வண்டிக்காரா!
சண்டிக் காளைக ளானாலும்--வண்டி
சுண்டி ஓட்டுநீ வகையாக.

வண்டி மாடுகள் எப்படியோ!
வண்டிக் காரன் நீ தானே.!
சேரும் ஊரை சேர்ப்பதுநீ--வண்டி
செல்லும் முறைமை பொறுப்பு.நீ

திமிரும் எருதுகள் விலகினால்
அமரும் உன்னிலை பிசகினால்
ஓட்டும் பாதை தவறினால் --வண்டி
ஓட்டி நீதான் தவறிவிட்டாய்.

நல்லதும் கெட்டதும் நீ பொறுப்பு.
அல்லல் நேராதே ஓட்டு நீ!
விடைதான் என்ன இரகசியமோ--வண்டி
அடைவதும் ஆவதும் உன்வசமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Monday, 20 October 2025

கொடுப்பது கொடுத்து எடுப்பது எடுத்து படுப்பதுதானே வாழ்க்கையடா.

இதுதான் வாழ்க்கை.

கொடுப்பது கொடுத்து எடுப்பது எடுத்து படுப்பதுதானே வாழ்க்கையடா.

அடிக்கிற கொள்ளை முடிப்பது இல்லை
படிப்பது மட்டும் நீதியடா.

கொடுத்ததும் எடுத்ததும் சரியாப் போச்சு
படுத்ததும் கணக்கு முடிஞ்சு போச்சு
வந்ததும் வாழ்ந்ததும் கொண்டதும் என்ன?
எந்ததும் எவர்க்கும் சொந்தம் என்ன?
முந்தியும் பிந்தியும் போவது தவிர இருந்தது நிலையென எவரடா?

அறுசுவை ருசியும் அனுபவக் காமமும்
புரிந்ததும் என்ன சொல்லடா.
அருத்தம் திருத்தம் பழகிய தெல்லாம்
ஆசைத் தூண்டல்  சொல்லுமடா.
அப்பன் ஆத்தா செய்த பாவங்கள் ஆக்க மகி வந்தமடா.
தப்புனு தெரிஞ்சும் மப்புலத் தப்புச் செஞ்சது தொடரும் உலகமடா.

வாழ்க்கை என்பது பூஜ்யம் ஆண்டதும் என்னடா இராஜ்யம்?
பணமா குணமா எதுதான் நிசமோ கண்டதும் என்ன சொல்லடா.
தானா விரும்பி பூமியில் பிறந்து வேண்டிய சுகங்கள் கண்டவரார்?
சமதள மில்லா மேடு பள்ளங்கள் எவர்தான் வாழ்ந்தார் விருப்பங்கள்.

பிறந்த நாள்முதல் வளரந் தோமே.
இறக்கும் நாளதை அறிந்தோமா.
ஆளா வளர்ந்ததும் சோறால
நாளாம் இறப்பதும் யாரால?
பிறந்ததும் இறப்பதும் நாமல்ல
இறைவன் இரகசியம் நமதல்ல.
இருப்பது எதுவரை தெரியல.
இரப்பதும் வாழ்நாள் வரமல்ல.
வாழும் வரைதான் வாழ்க்கையடா.
போகும் வரையும் சேவையடா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Sunday, 19 October 2025

நரகாசுரன் வதம்.

நரகாசுரன் வதம்

தந்தை தாயின் சிந்தை நோக/
தந்தான் பாவங்கள் பிள்ளை நரகாசுரன்//
பிந்திய பாசம் முந்திய நீதிவழி//
நொந்த தாயின் நெறிப்படிக் கணைபட//
மாண்டு மடிந்தான் ஆண்டு முடிந்தான்//
கிருட்டினர் சத்யா தந்தை தாயார்//
திருந்தா மகனை பொருந்தாக் குலனை//
வதம் செய்து முடித்து வரமொன்றும்
வழங்கிப் பாவியிவன் பலியான நாளை//
தீபாவளித் திருநாளெனத் தேசம் கொண்டாட//
தேவர்கள் கூடித் தீபங்கள் ஏற்றினர்.//

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 16 October 2025

இளஞனே விழித்தெழு!

Wednesday, 15 October 2025

இளைஞனே விழித்தெழு"!!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலமுன்னை அழைக்கிறது.
நாளைய சமூகம் உனதானது
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பாரது தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்னைச் சுற்றி சதிவலைகள்
கண்ணை மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
எல்லாமே கெடுவினை அதற்காக.
எஃகு வலிமை உள்னுடலை
சிதைக்கும் செயலே சூழ்ச்சிவலை.

அடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை பெரும்பாவம்
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயல்வன்மம்.

உடம்பை இரும்பாக் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரிருக்கு.
காத்துக் கிடக்கு கனவதுக்கு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்குங் காலம் விதையாதது,
விளையுங் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்ப்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறுங் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

உன்னை நம்பி முயன்றிடனும்
உன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 15 October 2025

கண்ணும் கண்ணும்.

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும் கண்டும் பேசும்
கண்டவர் காண கண்களும் கூசும்.
இதயம் பேசும் இரகசிய மொழிகள்
உதயமாகும் விழிகளின் வழிகள்.

அக்கம் பக்கம் ஆரிருந் தாலும்
தர்க்கம் செய்யும் தாமிரு காதலும்.
குறிப்பால் அறியும் குறிப்புணர் பயிற்சி 
இறைவனுங் கூட இயற்றிடா முயற்சி..

உண்ணும் கண்கள் உணரும் மொழிகள்
கண்ணும் கண்ணும் கலந்திடும் வழிகள்
ஓசை  அறியா உணர்வின் பாசைகள்.
ஆசை அறிந்த கனவின் .பூசைகள்.

நேருக்கு நேரே சந்திக்கும் ஏக்கம்
நேரத் தருணம் கலந்திடக் கூச்சம்.
நோக்க நோக்கக் கவிழ்ந்தும் திகைக்கும்
ஆக்கும் மொழிகள் மறந்து நகைக்கும்.

ஆசைகள் தூண்டி அளாவத் துடிக்கும்
பாசைகள் வேண்டிப் பழகிட நடிக்கும்.
ஓசைகள் தாண்டி ஒளிந்திட மடிக்கும்.
மசியச் சுணங்கி ஒருகண் படிக்கும்.

மௌனம் பேசி சகுனம் கூறும்
கவனம் கூறி கணணில் தேறும்.
கண்கள் கசிந்து தன்னிலை ஆறும்.
எண்ணம் மசிய ஏது ஊறும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 14 October 2025

சாமி சரணம்.

சபரிமலை சரணம்

சபரிமலை வாழும் நீ
சாமி ஐயப்பா-உன்
சரணக்கலை நாடிவாரேன
சாமி ஐயப்பா!
பள்ளிக்கட்டுக் கட்டிக்கிட்டு
சாமி ஐயப்பா--பேட்டைத்
துள்ளி ஆடி வாரேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

பதினெட்டு மலைதாண்டி
சாமி ஐயப்பா!
பதினெட்டுப் படியேறி
சாமி ஐயப்பா!
கதியென்று உனைவேண்டி
சாமி ஐயப்பா
அருளென்று தேடினேன்
சாமி ஐயப்பா!
விரதம் ஏற்று நடந்து வாரேன்
சாமி ஐயப்பா---உன்னால்
சாதி மதம் மறந்துவிட்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா"
சரணம் ஐயப்பா!

சரணம் சரணம் கூறிக்கொண்டு
சாமி ஐயப்பா!
உச்சிமலை ஏறிவந்தேன்
சாமி ஐயப்பா!
எண்ண மெல்லாம் வாழும் நீ
சாமி ஐயப்பா!
எனக்குள்ளே கண்டு கொண்டேன்
சாமி ஐயப்பா!--உன்னால்
சமத்துவம் பழகிக்கொண்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

சாமிசாமியே! சரணம்சரணமே!
சாமியெல்லாமே!சகலமெல்லாமே!
ஐய்யன்ஐய்யனே!மெய்யன்மெய்யனே!
அகிலமெல்லாமே!அன்பிலெல்லாமே!

துளசிமாலை சத்தியமா போடுவேன்.
பழகிப் போச்சு நிதமுன்னைப் பாடுவேன்
சாமி சாமி சாமினு சொல்லிச் சொல்லி
சாமி ஆயிட்டேன்
சரணம் சரணம் சரணஞ் சொல்லி
சரணடைஞ் சிட்டேன்.
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா!சாமி ஐயப்பா!

கவிஞர் கொ.பெ.பிச்சையா.

Monday, 13 October 2025

காலத்தின் கோலம்.

காலத்தின் கோலம்.

காலம் போறப் போக்கப் பார்த்தா
கணக்குப் புரியல.
கோலம் அதைப் படிச்சிப் பார்த்தா எனகுப் புரியல.
ஜன நாயக நாடகத்த ரசிக்க முடியல--இங்கே
பண நாயகர் தானே நம்ம ஆளு றானுங்க

எலக்ச னுன்னா ஓட்டுக் கேட்டு தேடி வாராங்க?
எலக்சனுல ஜெயிச்சப் பின்னே கலக்சன்
பன்றாங்க.
ஓட்டுக் கேட்டு வரும்போது கும்புடு றானுங்க----அப்புறம்
ஓட்ட வாங்கி ஜெயிச்சா  எங்கே அம்புடு றானுங்க.

தேர்தலுனு வரும்போது நடந்து வாராங்க
ஊர் ஊரா ஓட்ட வாங்கக்.கூடி வாராங்க
தேர்தலுக்கு அப்புறங்கார் சன்னல் மூடு றாங்க--பழசு
இறங்கி நடந்த கோலம் மறந்து பறந்து போறாங்க.

அஞ்சு வருஷம் முடிஞ்சதுன்னா  கெஞ்ச வருவாங்க 
செஞ்ச தென்ன சொன்ன தென்ன மறந்து போவாங்க.
மானங் கெட்டு மேடை யேறக் கூச மாட்டாங்க--எப்படி!
ஆனாலும் ஜெயிக் கிறாங்க ஏன்னும் புரியல.

உண்மையிலே ஓட்டுப் போட்டுச் ஜெயிப்ப தாருங்க?
நன்மை செய்ய மக்களுக்கு உழைப்ப தாருங்க?
விலை கொடுத்து ஓட்ட வாங்கி ஜெயிக் கிறானுங்க--அவங்க
தலையக் கண்டா கும்பிடனுமாம் உசந்து போனாங்க.

வீடுமேல வீடு காடுமேல காடு காருமேல காருன்னு
வேட்டை யாடிக் கூட்டி அள்ளிச்  சேர்க்கி றானுங்க.
ஓட்ட வித்தக் கூடடம் நாமம்  போட்டுக் குறாங்க--இது
கேடு கெட்ட ஜனநாயகக் கேலிக் கூத்துங்க.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.







மணிகண்டசாமி.

மணிகண்ட சாமி ஐயப்பன்.

கழுத்தில் மணிமாலை,
மணிகண்ட சாமிக்கு.
அழகிய திருமுகம்,
ஐயப்பன் சாமிக்கு.
ஆணுக்கும் ஆணுக்கும்,
அவதாரம் ஐயப்பன்.
அரிகர புதல்வனாக,
தவக்கோலம் ஐயப்பன்.

குழந்தை வேண்டி வருந்தியப் பந்தளன்,
அழுதிடும் குழந்தை  அரவம் கேட்டான்..
அருகிய அரசன் அள்ளி முகர்ந்தான். ஆனந்தம் பெருகி ஆசை முத்திட்டான்..
துள்ளிக் கொண்டாடி வீடு விரைந்தான்.
வெள்ளித் தங்கம் அள்ளிக் குவித்தான்.
அரண்மனை முழுக்க விழா எடுத்தான.
இருகரமள்ளி ஏழையர்குக் கொடுத்தான்


இரண் டாவது மனைவி பந்தள ராணி
வேண்டா வெறுப்பா கண்டாள் கோணி 
தன்குல வாரிசுத் தடங்கல் நினைந்தாள்
வன்ம வஞ்சனை மந்திரிக் கலந்தாள்.

வாராத் தலைவலி வந்ததோ!
வந்ததாக நடித்தாள்.வஞ்சகி.
பெறாத மகனான பிள்ளையை,
பலியிட முடித்தாள்.வஞ்சனை..
புலிப்பால் கேட்டொரு கதையை, தொடுத்தாள்.பாதகி சண்டாளி.
தாய்போல் பாசாங்கு செய்தாளே!
நோய்போல் கண்ணீர் பெய்தாளே!..

எல்லாம் அறிவான் ஐயனோ!
இறைமகன் அவனோ.மெய்யனே!
ஏதும் வினவாமல் புறப்பட்டான்.
சாதுவாக மணிகண்டன் ஏகினான்.
கானகம் புகுந்தான் அரிகர புத்திரன்.
கண்டான் அரக்கியை எதிரே வர 
தேவர்கள் துயரை அறிந்தவ னாக
தூர்த்திடத் துணிந்தான்.அரிகரனே!

மணிகண்டன் மேலே அரக்கியோ
மகிசவள் பாய்ந்தாள்.செருக்கியே
வந்ததன் காரியம் முடித்திடவே
வதம் செய்து முடித்தான்.ஐயனே.
தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடி
தேவ ராட்டம் கூடிக் களித்தனர்.
தேவர்கள் தாமே புலிகளாகினர்.
புலிப்பால் கரந்தும் தாமே தந்தனர்

தேவர்கள் தலைவன் தேவேந்திரன் வந்து பணிந்து உள்ளம் நிறைந்தான்.
புலிப்பால் கொண்டு தந்தது கனிந்தான்.
புலியாகத் தானே ஐயனைச் சுமந்தார்.
அரண்மனை வரையும் சவ்வாரியாக
அவருடன் சூழப் புலிகள் சேனை
புலியிடை சவ்வாரி ஐயன் தானை.
புன்னகை செய்து பூரித்தான் மணியன்.

தாயா நடித்து நோயெனத் துடித்தவள்.
வாயில் கண்டு வாயடைத்து நின்றாள்.
புலிப்பால் கண்டு சலிப்பால் வெந்தாள்.
தன்தவ றுணர்ந்து தாளடி பணிந்தாள்.
அவதாரக் காரியம் ஆக்கி முடித்திட்டான்.
வானுலகு ஏகவும் வார்த்தை வந்தது.
சபரிமலைக் காடு தவக்கோல மேடு
கோவில் கட்ட ஆணை யிட்டுமே!
ஏவினான் அம்பால் குறியிட்டான் இடமே!

குறித்த இடத்திலே  பொறித்த விதமே
வடித்த கோவிலே சபரிமலைக் காடே!
அழகான இயற்கை அற்புதக் காட்சி
ஐயப்பன் அமர்வில் அவனது மாட்சி.
நலந்தேடு வர்க்கு வலக்கரம் காட்டுவான்
வளந்தரு சாமி குலக்காவல் காப்பான்.
மலைப் பாதை நடக்க நோய்நொடி தீரும்
களைப்பதும் குறைய கஷ்டம் நீறும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 12 October 2025

திவினேஸ்.

திவினேஸ்

ஒளி மயமான உன்னெதிர் காலம்
வழி நிசமான சரிகமப பாலம்.
பெயரின் பொருளும் அப்படிக் கூறும்.
முயன்றிட மேலும் உயரம் ஏறும்.

திவினேஸ் என்றால் கதிரொளியாகும்
கவினுன் பாட்டோ வானொலியாகும்.
சூரியன் போலே பிரகாச மாயம்
அரங்கம் ததும்பி அகிலம் பாயும்.

ஜீதமிழ் கண்ட திவினேஸ் நாதம்
ஜேதமிழ் வென்ற அமுத கானம்
அந்த மேடை அரங்கேற்ற மேடை
சொந்த மேடை சுழல்பூமி நாளை.

எத்தனை உயரம்  உயர்வாய் புகழை
அத்தனை கவனம் ஆள்வாய் வாழ்வை.
உலகம் உன்னைச் சுற்றிச் சுழலும்.
உறவும் உன்னைப் பற்றி வளரும்.

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வை
ஏற்றார்ப் போலவே சுவைத்து வாழ்க.
ஏழைக் கிழவனுன் தாதாவை சொல்லி
வாழ்வை உயர்த்து அவர்தோள் எண்ணி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பருவத்தூண்டல்

பருவத் தூண்டல்.

பருவ வயது உருகுது மனது
உருவம் விலகுது உள்ளம் பழகுது
அரும்பும் மோகம் தகைமை தவறுது.
விருப்பம் போதும் என்றே தேடுது.

வயது தானது வலிய முந்துது.
அறிவு தானது மெலியப் பிந்துது.
சந்திக்கத் துடிக்கும் பாலுணர் வாவது.
சிந்திக்கப் பக்கம் அறிய மறந்தது.

தன்பா லுணர்வைச் சுவைக்கத் தானது,
மறுபா லுணர்வைத் தூண்டி உசுப்புவது,
பெண்பால் ஆண்பால் அறிய இரசிப்பது,
இருபா லுணர்வை எண்ணி உருசிப்பது.

கன்னி இரசனை காதல் முயல்வது,
பின்னி உறவை ஆவல் உணர்வது.
இயல்பின் மர்மம் தெளிய முனைவது,
அயலுணர் ஆர்வம் விளங்க விழைவது.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது
கதப்பில் தானோ இருமுகம் கூசுது. 

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Saturday, 11 October 2025

அனுபவப் பாடம்.

அனுபவப்  பாடங்கள்.

அனுபவம் தான் பாடங்கள் --அதை
அனுப வித்துத் தேடுங்கள்.
தேடி யதைப் படியுங்கள்--அதில்
படித் ததைப் பற்றுங்கள்.
அரசைக் குறைச் சொல்லாமல்--நாமும்
புருச இலட்சனம் காப்போமே!

மது வில்லா நாடில்லை.--அங்கு
மதுக் குடியாப் பேரில்லை
அரசு அதைத் தொட வில்லை--அதில்
வரு மானமும் தேட வில்லை
குடும் பத்தில் பொறுப் பில்லை.--கெட்ட
குடி யதை மறக்க வில்லை. 

அப்பா வைப் போ லோரு
ஆளி ல்லை என்ற பிள்ளை.
அவர்ப போல மனிதரில்லை.--என
அப் படியும் புகழ்ந்த மகன்.
ஐஐந்து வயதுக் கடந்து--அவன்
மனுசனே இல்லை என்றான்.

கண் டிக்கும்  அப்ப னுக்கு
தண் டிக்கத் தகுதி யில்லை.
குடும் பத்துத் தலை வனுக்கு--ஊர்
குடி காரப் பட்டம் தந்தார்.
பிண மாகத் தினந்தினம்--மனம்
குண மாகா நோயானான்.

மனைவி மக்கள் மதிக்க வில்லை.
மனம் போல் வாழ்க்கை யில்லை.
பைத் தியக் காரன் என்றான--அப்பனை
கயிற்றாலே கட்டிப் போட்டான்.
வைத் தியம் தேடி மகன்--சவத்தை
நூற்று எட்டில் ஏற்றிப் போனான்.

தூற் றுவார் தூற்றட்டும்
போற் றுவார் போற்றட்டும்--பழி
பாவம் செய்தார் ஏற்கட்டும்.
இலாபம் என்ன அடையட்டும்
சாபங்கள் பலிக்கட்டும்--அனுபவப்
பாட மென்னப் படிக்கட்டும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.





வீரனே நீ எழுந்து வா!

வீரனேநீ எழுந்து வா!

வீரனேநீ எழுந்து வா!
வீட்டை விட்டு வெளியே வா!
போராளி நீயும் புலிபோல
புறப்படு வெளிப்படு புயல்போல.

வெட்டிப் பேச்சு வெறுங் கூச்சல்,
சுற்றுற கம்பும் அரட்டுற வீச்சில்,
வேட்டிய மடிச்சு வீரம் காட்டு
கத்திய கூட்டம் தூரம் ஓட்டு.

வழியை மறிக்கும் வெறிநாய் கூட்டம்
பழியை திணிக்கும் பாதை மாற்றும்.
பயணம் தொடரத் தடைகள் செய்யும்
பயந்து நின்றால் பரிகாசம் பண்ணும்.

நாய்கள் என்றால் அதுதான் குணம்
ஓடினால் துரத்தும் எதிர்த்தால் ஓடும்
நல்லதைத் தொடரப் பொல்லவை கெடுக்கும்
உள்ளது அதுதான்  ஓய்ந்தால் தடுக்கும்..

மிருகங்கள் இனத்தை ஒலிகள் சொல்லும்.
அறிந்தும் விலக மனிதற்கு உதவும்.
மனிதற்கு மனிதர் குரல்கள் வேறு குணத்தைப் புரிந்து அறிந்தது யாரு

குனிந்து வளைந்தால் பணிவென ஏறும்.
துணிந்து நிமிர்ந்தால் தொட்டிடப் பதறும்.
ஓடி ஒளிந்தால் தேடி அலையும்.
ஊன்றி நின்றால் வேண்டி வணங்கும்.

தொட்டதை விட்டால் தொடர்வது கடினம்.
விட்டதைத் தொட்டாலும் வேறாகும் பயணம்.
முன்வைத்த காலை பின்வைக் காதே
உன்வசம் கூட்டம் பின்வரும் நிற்காதே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 10 October 2025

எட்டி ஓடிவா!

வெற்றி உனதே ஓடிவா!

எட்டி ஓடிவா வெற்றி உனதே--கை
தட்டிப் பாடிவா வெல்வது நீயே!
கவலைகள் உன்னை வாட்டும்.
ஆசைகள் கனவைப் பூட்டும்--நீ
அயர்ந்து விடாதே ஓடி வா!

உலகம் உன்னைத் தூற்றும்--வீண்
கலகம் பன்னத் தூண்டும்
கனவுகள் தானுன் இலட்சியம்
கதவை உடைத்து ஓடி வா--எதிர்
காலம் உனது தேடி வா!

தோல்விகள் கண்டு துவளாதே--வெற்றி
வேல்விகள் என்பதை மறவாதே!
தேடல் அங்கே காத்திருக்கும்,
தேவைக் கானது வைத்திருக்கும்--உன்
தேர்வு எதுவனௌ அறிந்திருக்கும்.

இலட்சியம் தானது கனவாகும்--அந்த
எண்ணம் தானது நினைவாகும்.
அலட்சியம் செய்து சோராதே!
அடைந்திடும் வெறியில் ஆறாதே--அது
ஆவதும் நெறியில் மாறாதே.

அச்சப் பட்டால் முடக்கிவிடும்--அது
துச்சம் என்றால் அடங்கி விடும்.
எண்ணிய முடிப்பது சாதனை.
எண்ணா திருப்பது வேதனை--எதுவும்
உன்னிடம் தானது ஆவன.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Thursday, 9 October 2025

பருவ வயது.

பேச்சு வரவில்லை.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது.
கதப்பில் தானோ அவள்முகம் கூசுது. 

கண்ணீ ரோடு சொற்கள் கரைகிறது.
வெந்நீ ராக வேர்வை விரைகிறது.
தழுவும் சுகத்தில் தணிந்து குளிர்கிறது
முழுதும் நனைந்து தண்நீர் துளிர்கிறது.

விலகிப் போனால் வெப்பம் சுடுகிறது.
பழகித் தானே பக்கம் தொடுகிறது.
பிரிந்த ஏக்கம் பேச்சை அடைக்கிறது.
பரிந்துரை செய்ய பாசை இடர்கிறது.

பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ!
அறிந்தவர் தேடி யவள்மொழி தேடுமோ!
சேதிகள் பரிமாற சேடியர் நாடுமோ!
வாதம் மறந்து வாடிக்கை கூடுமோ!

கண்ணீர் துளிகள் காதல் மொழிகிறது.
எண்ணும் மொழிகள் மோதி வழிகிறது
கன்னம் கனிந்து காதல் சிவக்கிறது.
எண்ணம் நிறைந்து இன்பம் பயக்கிறது.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Tuesday, 7 October 2025

கரு வளர்ச்சி.

கருவளர்ச்சி.

தந்தை வயிற்றில் விந்ததுவாக 
தாயின் வயிற்றில் கருவதுவாக
தாய் சுமந்தாளது பத்து மாதம்
தந்தை சுமையது இருபது வருடம்.

தந்தை வழியே தாயிடம் விந்து 
தந்தைத் தைலம் சினை முட்டை கலந்து 
பிண்டம் கருவொரு  வாரம் மலர்ந்து 
நன்றது முதல் மாதம் துளிர்த்தது.

தாய்நோய் பட்டுத் தன்னலம் தளர்ந்தாள்
தொந்தி சரிய தன்னடை மறந்தாள்.
வாய்ருசி கசந்து மசக்கை யானாள்.
தாயாம் பெருமை நோவு கடந்தாள்.

கருவாய் செழித்து இரண்டாம் மாதம்.
உருவாகித் தலைபின் மூன்றாம் மாதம்
வயிறும் தொடர்ந்து நான்காம் மாதம் 
செயல்பலம் முதுகுத் தண்டுடல் மீதம்

ஐந்தாம் மாதம் முகம்வாய் மூக்கும்
கண்கள் செவிகள் ஐம்புலன் அறிவும்
ஆறாம் மாதம் முழுமை பெற்றும்,
ஏழாம் மாதம் இயக்கம் உற்றும்.

எட்டாம் மாதம் கட்டாய் உடலும்
ஒன்பதாம் மாதம் உந்துதல் தொடக்கம்.
பத்தாம் மாதம் பலம்பெற்றுத் துடிக்கும்
உத்தமமாகி நேர்வழித் தலைவரப் பிறக்கும்.

தந்தை வயிற்றில் இரண்டு மாதம்
தாயின் வயிற்றில் பத்து மாதம்.
வந்த உலகினிற் தந்த தாய்தந்தையர்
முந்தி வந்தனம் தகுதெய்வ சிந்தையர்..

குழந்தை பிறந்ததும் எழுந்த மகிழ்ச்சி
வளர்வில் மிகும் வாழ்வின் புகழ்ச்சி.
தாய்தந்தை செய் தவப்பயன் நெகிழ்ச்சி
சேய்க்கால இன்பம் சேய்செய் நிகழ்ச்சி.

கோவில் தெய்வம் வேறெங்கும் இல்லை
வாழ்வில் மேவும் யாரென்றும் சொல்ல,
தாய்தந்தை கடந்து மேலெங்கும் இல்லை.
தாள் அவர் மிஞ்சி வேறென்ன சொல்ல.

சுமந்த வயிறு சுமையென நினைந்தால்,
அமைந்த வாழ்வவர் துணை மறந்தால்,
அல்லலுற்று ஆற்றா அழுங் கண்ணீர்
 செல்ல லுற்றுன் செல்வம் அழிக்கும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.