Thursday, 26 February 2015

தம்பி!உன்னை நம்பு.

அறவழி ஆற்றுவம்!

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் துறந்து.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்து
அமைதி நிறைந்து வாழ்க மகிழ்ந்து.!

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்து
நம்பிக்கை தன்னில் நாளும் வாழ்ந்து
நன்னிலை நின்று வாழ்க சிறந்து.!

அச்சம் அற்ற நம்பிக்கை கொண்டு
உச்சம் காண உன்னில் துணிந்து.
துச்சம் என்றே தூரம் மறந்து.
எச்சம் வாழ வாழ்க முயன்று.

தன்னைத் தாழ்த்தும் தாழ்மை அகற்று!.
உன்னை ஏற்றும் உள்ளறி வேற்று.!
பின்னை பயத்தின் பேதமை விடுத்து
முன்னை முயன்று வாழ்க முடித்து!.

உன்னை நம்பு அதுவே தெம்பு
தன்னை நெம்பு கோலாய் எம்பு.!.
உன்கை உலகை உருட்டும் கம்பி
தன்கை பலமே வாழ்க தம்பி!.

எடுப்பார் பிள்ளை சிறப்பார் இல்லை.
தொடுப்பார் உன்னை பொறுப்பார் இல்லை.
அடுத்தவர் உதவி கிடைப்பதை நம்பி
கெடுவதை உதறி வாழ்க தம்பி.

வண்ணத்துப் பூச்சி திண்ணத்தைப் பாரு!.
தன்னைத் தூக்க தான்செய்யும் போரு.
எண்ணத்தின் வலிமை கிழிபடும் கூடு.
விண்ணில் பறந்து வாழ்க நீடு!.

பொன்னிகர் மாட்சியா எண்ணுயர் ஆட்சியா?
பேய்களுக் கென்ன புரியும் போடா!.
மண்ணுயர் மாந்தர் விண்ணவர் சாட்சியா
மங்கலம் பொங்க வாழ்க வாடா!. .

திண்ணியர் ஆண்ட பூமி இதனை.
புண்ணியர் வாழ்ந்த மண்ணும் இதனை.
கண்ணிய நாடாய் காக்கும் போரினை
நண்ணிய  அறவழி ஆற்றுவம் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.


Sunday, 15 February 2015

சிறுபாண்மை பெரும்பாண்மை.

பிரிவினை ஏன்?

சிறுமை பெருமை குலத்தில் என்ன?
ஒருமை இனம்தான் மனிதர் என்றே! 
ஒற்றுமை குலைக்கும் பிரிவினை வாதம்
வேற்றுமை விளைக்கும் தலைவனை ஆக்கும்.

நான்தான் தலைவன் என்கின்றான்.
நாடகம் எழுதியும் நடிக்கின்றான்.
மான்தான் நிசத்தில் ஓடுதென்றும்
மயங்கியும் நரியிடம் மாட்டுகின்றோம்.

தேன்தான் வாயில் ஒழுகுதென்பான்.
தேடியும் தொண்டன் ஏந்தி நிற்பான்.
தான்தான் மந்திரத் தலைவன் என்றும்
தந்திரம் உதிர்த்தும் தளையிடுவான்.

பேன்தான் தலையில் மேய்ந்தாலும்
ஏன்தான் நசுக்க யோசிக் கின்றான்.
சாண்தான் வயிறதன் சமரசத்தால்
ஊன்தான் உயிரென யாசிக்கின்றான்.

ஆண்தான் பெண்தான் வேற்றுமையேன்?
வீண்தான் தாழ்மை கீழ்மை யார்?
வான்தான் நமக்கு மேலுண்டு.
ஏன்தான் அடிமை யாரிங்கு?

தான்தான் தர்மம் ஆள்வோற்கு.
நான்தான் கர்மம் வீழ்வோற்கு.
வான்தான் சாட்சி வாழ்வோற்கு.
மீன்தான் காட்சி மீள்வோற்கு.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 1 February 2015

இதுதான் உலகம்.

இதுதான் உலகம்.

அப்படி இப்படி எப்படி யானாலும்
தப்படி ஆகிடக் கூடாது--உமது
பக்கம் எதனை பழித்திழி பாடினும்
சத்தியம் விலகிடக் கோணா!

மனதுக்கு நேர்மை மனிதனாய் பார்வை
குணமது மேன்மையும் சோராது--ஞாலம்
நலமே மறுத்தது நாடகம் என்றாலும்
பொல்லன வென்றுமே தீர்!

பண்பில் பழமையும் பார்த்து நடப்பதில்
துன்பம் உலகினில் வாழாது--மெய்யது
அன்பினை ஏய்க்கும் அடிமை அரசியல்
தொண்டுக்கு வீணாகிக்  காயா!.

பொறுமை வறுமை பூமியில் நேர்ந்து
சிறுமை கொடுமை நீளாது.--உலகம்
உண்மை மறைத்து உடன்பட மாறினும்
திண்மை துறந்துயிர் வாழா!

ஒளிக்கப் பழகும் வெளிப்படை வாழ்க்கை
வழக்கினில் இனியும் நேராது--உழு
சேறுடன் தோய்ந்த செழிமழை சேர்க்கை
வேருடன் போன்றடி ஆறா!

நல்லவன் போலும் வெள்ளை உடுப்பவன்
பொல்லவன் பொய்யும் புரியணும்--மொழியில்
வல்லவர் எவரும் நல்லவர் இல்லவர்
சொல்லினி மாயம் பேணா!.

சீறிடும் நாகமும் தீண்ட மறந்திடின்
யாரெவர் கண்டதை அஞ்சுவர்--நேரது
கோபமென் பதைநீ காட்டா திருந்திடின்
கோமாளி அன்றில் வேறோ!

கொ.பெ.பி.அய்யா.