Wednesday, 19 October 2016

கோழையின் நாளை.

கோழையின் நாளை.

நாளை என்பது சமாதானமல்ல.-அது
கோழை சொல்வது பொருளானதல்ல.
பாலைக் காட்டில் தண்ணீர் தேடினால்-அது
ஆளை ஏய்க்கும் முன்னீர் கானலாய்.

வாய்ச்சொல் வீரன் வக்கனை பேசுவான்-பொய்
நாய் வாலாட்டி நன்றியும் மறப்பான்.
காய்களை மாற்றி தந்திரம் செய்வான்-பொய்
மாயங்கள் முழக்கி வேதங்கள் பழிப்பான். 

பேய்க்கதை பேசி பேதமை வெல்வான்-வெறும்
புறம்பழி குரைத்து பாவங்கள் செய்வான்
நேர்வழி மறைத்து ஊர்பழி ஏற்பான்-இறுதி
தீர்வழி மறந்து திண்ணையில் களிப்பான்.

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.



Sunday, 4 September 2016

வினை தீர் விநாயகா!

வினை தீர்க்கும் விநாயகனே

வினை தீர்க்கும் விநாயகனே
விடை சொல்லு கணபதியே-தீய
வினைநீங்கி மீள்வதற்கு விடிவென்ன வேழமுகா!

நெஞ்சாரப் பொய் பேசும்
வஞ்சகரின் வாய் வீசும்-தீய
பஞ்சமாப் பாவங்களும் மிஞ்சலாமோ பஞ்சமுகா!

இல்லை நீ என்போரை
தொல்லை செய் துன்பாரை-தீய
பல்பிடுங்கி விடமகற்றி சொல்வழங்கு நந்தனா!

ஓங்கார கண பதியே
தீங்காற திரு நிதியே-தீய
ஆங்கார அவலங்களை நீங்காற்று ஐங்கரா!

செம்மை யாய் ஓராட்சி
நன்மை யின் நேராட்சி-தீய
வெம்மையேதும் ஊறாமல் ஒன்றுசெய் மந்திரா!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 27 August 2016

காதல் வேதனை.

காதல் வேதனை.

எப்போ வருவே நீ எப்போ வருவே!
இதய வாசல் திறந்து வச்சேன்-நீ
எப்போ வருவே!

சொப்பனத்திலே- நீ
சொல்லாமத்தானே
அப்போ வருவே -நீ
அப்போ வருவே.

கனவு காணத்தான் -நான்
கண்ணை மூடுறேன்.
நினைவில் வந்து நீ-என்
நெஞ்சில் ஆடுறே.

நினைச்சுப் பாக்குறேன் -நீ
நிழலில் தெரியுற.
அணைக்கத் தழுவுறேன் -நீ
அலையாய் கலையுற.

மனசத் தேடுறேன் -அது
மயங்கிக் கிடக்குது.
எழுப்பி விடுகிறேன் -நீ.
எடுத்துப் போகிற.

ஆணாப் பெண்ணாத்தான்-நான்
ஆகிப் பாக்குறேன்.
ஆனா என்னதான் -நீ
அடங்க மாட்டங்குற

யாருன்னு சொல்லு-உனக்கு
பேரென்ன சொல்லு.
காதல் என்பதும்-என்
காதில் விழுகுது.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 24 August 2016

காதலின்றி உலகமா?

காதலால் வாழும் பூமி.

காதலின்றி உலகம் தனித்து வாழாது.
கடவுளவனும் காதலை மறந்தால் உலகேது?

அலைகள் தேடும் கரைதொடும் காதல் ஓயாது.
கரைதொடும் போது அலையிடும் முத்தம் காயாது.

கடலலைத் தாண்டும் அலைகள் நிலத்தில் வாழ்வதில்லை.
அலைகள் மறந்தும் கடலும் அமைதி கொள்வதில்லை..

காதல் மறுத்த கோள்கள் எல்லாம்
கல்லாய் மண்ணாய் திரிகிறது.
காதல் வாழும் பூமி மட்டும்
காணும் சொர்க்கம் ஆகிறது.

விண்ணை எட்ட  தன்னை உயர்த்தும்
மலையின் காதல் தடையேது?
மலையைக் கொஞ்ச மேகமிரங்கும்
விண்ணின் காதல் இணையேது?

எட்டும் வரைக்கும் எட்டிப் பிடிக்கும்
கெட்டிக் காதல் தோற்காது.
சுட்டுக் கரைக்க எட்டாக் காதல்
நட்டிக் கொடியை வெல்கிறது..

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 23 July 2016

முன்னைத் தமிழ்.

சித்திரை போற்றுதும்!

முந்திப் பிறந்த முன்னைத் தமிழே!
பிந்திய மொழிகு அன்னை மொழியே!!
உந்தன் ஒலியிலா எந்த மொழியுமே!
இந்த உலகினில் கண்ட திலையே!

நாள்கள் வாரம் வருடம் தான்.
கோள்கள் நேரம் பொருத்தம் தான்.
காலம் கணித்த தமிழே தான்.
ஞாலம் வழுத்தும் அறிவே தான்.

கருவிகள் அறியாக் காலம்  அதில்
அறிவியல் அறிந்த சீலம்  அதில்
வானம் ஆய்ந்த வல்லமை அதில்
ஞானம் சித்திரை உள்ளமை பதில்.

சித்திரை என்பதும் அறிவென் போம்
அத்தினம் மன்னுயிர் நிரையென் போம்.
புத்தியில் கணிதம் பூத்த தினம்
நித்தியத் தமிழின்னாள் போற்றுந் தினம்.

கூடி வாழச் சொல்லி சொல்லி
பாடி வந்த சித்திரையே!
கோடு இல்லா உறவு கொண்டும்
ஓடி வாயேன் இளந்தமிழே!

சித்திரை போற்றுதும் சித்திரை போற்றுதும்.
முத்திரை போன்றதும் சித்திரை போற்றுதும்.
தமிழெனத் தயவென தகையெனப் போற்றுதும்.
அமிழ்தென அறிவெனச் சித்திரை போற்றுதும்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 21 June 2016

தன்னம்பிக்கை.

தன்கை தன்னபிக்கை.

மெத்தனம் கூடாது.
மிதப்பும் ஆகாது.
சுற்றிநீ உழைத்தால்தான்
சுதந்திரம் நிலைத்திருக்கும்.

எதிரியை ஏளனமாய்
எண்ணவும் வீணாவாய்.
பதறிநீ விழித்தால்தான்
பதவியும் நிலைத்திருக்கும்.

புகழ்ச்சியில் சிக்காதே!
புதையலை நம்பாதே!
முயன்றுநீ எழுந்தால்தான்
முகவரி நிலைத்திருக்கும்.

பகைவனை நம்பாதே!
புகையினில் வெம்பாதே!
வகைநீ செழித்தால்தான்
தகையது நிலைத்திருக்கும்.

மெய்மறைக்க முனையாதே!
பொய்யுரைக்க விழையாதே!
கையைநீ நபித்தான்
உய்யும்வழி நிலைத்திருக்கும்.

சத்தியம் மறக்காதே!
புத்தியும் இழக்காதே!
உத்தமன்நீ உறுதிதான்
நித்தியம் நிலைத்திருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 28 May 2016

குயிலோ மயிலோ!

காட்டுக்குயில் பாட்டுத்தானா?

காட்டுக் குயில் பாட்டுத்தானா?
கூட்டு மயில் ஆட்டந்தானா ?
பாலை மழை போலத்தானா-வீணே
வாழும் நிலை வாழ்க்கைதானா?

என்ன சொல்லிப் பாடுகிறேன்!
என்ன வெல்ல ஆடுகிறேன்
என்ன இங்கே தேடுகிறேன்-நானே
என்ன எங்கே ஓடுகிறேன்.

சொல்ல வந்தது என்னவோ!
சொன்ன துந்தான் செல்லுமோ!
கொள்ள வந்ததும் என்னவோ-கூடவே
கொண்டு போவதும் செல்லுமோ!

பிறக்கும் போது சிரித்தேனா!
பிழை நினைத்தும் அழுதேனோ!
பறக்கும் போதும் அறிந்தேனா- எங்கே
நிலை நிறுத்தும் இடந்தானோ!

நிலம் என்றால் நிசந்தானா!
புலம் வென்றால் வசந்தானோ!
பூமி என்பதும் பூஜியம்தானா-அந்த
சாமி ஒன்றதும் ராஜியம்தானோ!

பேரென்ன சொல்லவோ!
ஊரென்ன கொள்ளவோ!
யாரென்ன சாதியோ-தூசே
நீரென்ன மீதியோ!

விதைச்சவன் தானதை சொன்னானா!
விளைவதைத் தானெல்லாம் கொண்டானோ!
புதைச்சவன் தானதைப் புரிந்தானா-இங்கே
முளைப்பதைத் தானுந்தான் மறந்தானோ!

எத்தனைக் காட்டுக்குயில் பாடின;
அத்தனைக் காற்றுவெளி போயின!
பித்தனைப் போலத்தான் ஞானியர்-இன்னும்
செத்தனை நாளத்தான் காணியர்.

கொ.பெ.பி.அய்யா.

சமர்ப்பர்ப்பணம்

உமக்கே சமர்ப்பணம்.

பழைய நணபர்கள் பறந்தனர்.
புதிய தோழர்கள் கிடைத்தனர்.
கிடைத்தவர்கள் தொடர்வதற்கும்
கடவுளைத்தான் இறைஞ்சுகிறேன்.

எழுத்துச் சோலை நண்பர்களே!
ஏற்ற நிழலுந் தந்தீரே!
ஆயிளுந்தான் கூடியதே!
சேயாகிப் பாடினேனே!

பழுதேதுங் கண்டதிலே
திருத்தங்கள் செய்தீரே!
பாதை கூட்டி ஆதரித்து
பயனுறச் செய்தீரே!

பாராட்டுப் பத்திரம்
சீராட்டித் தந்தததும்
நேராக உம் அன்பில்
சீராக சமர்ப்பணம்.

ஆயிரம்  செய்வதற்கும்
ஆயுளும் வாழ்வதற்கும்
தாயுளம் அன்பரே!
நேயறம் பெய்வீரே!.

கொ.பெ.பி.அய்யா

Tuesday, 10 May 2016

காதலை வாழ விடு.

காதல் வாழ்ந்திருந்தால்
மோதல் ஏதடா பூமியில்.
காதல் மறந்திரந்தால்
சாதல்தானடா வாழ்வினில

சாதி என்ன சாதியோ!
சண்டைதான் மீதியோ!
ஆதி சொன்ன சேதியோ!-ஆதி
மூலன் என்ன சாதியோ!

தொழில் முறைச் சமுதாயம்
தொடர்ந்திட்ட தொல்லையோ!
இழிவென்றும் ஏற்றமென்றும்-தொழிலை
எண்ணியதன் பாவமோ!

கூலி பெற்ற கூட்டங்கள்
கூடிவாழ்ந்த மடைமையோ!
கூட்டமே பேதமையோ!—பின்னே
குழுக்கள் ஆன சாதியோ!

தலைவர்கள் தோன்றலின்
தன்னலச் சதிதானோ!
நிலை குலைந்த பாமரரின்-வறுமை
நேர்ந்ததன் விதிதானோ!

உரிமைகளை! இழந்த ஏக்கம்
உணர்வுகளாய் எழுந்ததோ
எழுந்தநல் உணர்வுகள்--பெரு
எழுச்சியாய் மலர்ந்ததோ!

எழுச்சிகளைக் கனிகளாய்
எடுத்துக் கொண்ட தலைவர்கள்
வளர்ச்சிக்கு உதவுதாய்—பேத
உணர்வுகளைத் தூண்டினர்.

ஊரது ரெண்டு பட்டால்
கூத்தாடி கொண்டாட்டம்.
பாரெங்கும் சங்கங்களை—சாதி
பேர்களில் புத்துப்பித்தார்
சமநிலைப் பொருளாதாரம்
சலுகைகள் தானாதரம்.
நம்பிய நல்லோரும்—இன்று
நடப்பதுவும் பொறுப்பரோ!

எங்கிருந்து வந்ததோ!
இந்தச் சாதியோ!
என்றதுவும் சாகுமோ!-மனிதம்
வென்றதுவும் வாழுமோ!

காதல் வாழ்ந்திருந்தால்
சாதிகள் ஒழிந்திருக்கும்
பண்பதில் அன்பிருந்தால்—சாதி
பட்டுத்தான் அழிந்திருக்கும்.,

கொ.பெ.பி.அய்யா.



































Saturday, 30 April 2016

விழித்தெழு சிலிர்த்தெழு.

விழித்தெழு!சிலிர்த்தெழு!

விழித்தெழு மகனே!விழித்தெழு-உன்
வேளை வந்தது விழித்தெழு!
சிலிர்த்தெழு மகனே!சிலிர்த்தெழு-நீ
சிங்கம் என்று சிலிர்த்தெழு!

சுற்றிச் சுற்றிச் சூளுரைத்து-பகை
பற்றிப் பற்றிப் பாடறுத்து-
வெற்றி வெற்றி வினைமுடித்து-பறை
கொட்டிக் கொட்டு வென்றெடுத்து.

தமிழன் என்றொரு திமிரிருக்கு-உனக்கு
தருமம் என்றொரு தரமிருக்கு.
மானம் என்றொரு மதமிருக்கு-மரபு
வீரம் கொண்டெழு விடையிருக்கு.

செத்தது தமிழென்றோ கொக்கரித்தான்-அந்தச்
சிங்களன் சிறுபடை எக்கடையோ!
உத்தது உயிரென்றோ ஒப்பாரி--தமிழ்
பெற்றதும் பயமுண்டோ செப்பாரே!

பதவிக்கும் பொருளுக்கும் பற்றென்ன--இனம்
உதிரம் உனக்குள்ளே அற்றன்ன!
சிதையும் இனமங்கே செத்துவிழ--மனம்
பதைக்கும் குணமெங்கே பட்டுஎழ!
பற்றிச் சுற்றித் தீக்காடு--பரவி
முற்றி முற்றப் போக்காடு.
எட்டித் தீர்க்கத் துணிவில்லையோ-கை
கட்டிப் பார்க்கப் பதைக்கலையோ!.

நடந்தது எல்லாமே விதியென்றோ-அன்று
கிடந்ததும் செல்லாமை மதியன்றோ!
அதிகாரம் எதற்கு ஆளத்தானோ-அதற்கு
துதிராகம் உமக்கு வாழத்தானா!

கொடுமைகள் சொல்லி அழவேணும்-இங்கு
அடிமைக் கிலையோ உறவேணும்
படமோ பாவக் கூத்தோ-ஈழம்
விடைதான் விடிவே மகனே!.

அரசு என்ற பராசக்தி-ஆளும்
ஆட்சி மன்ற தீர்மானங்கள் -
நிரப்பிய என்ற தாளன்று--ஈழம்
மீட்சி வென்ற மேலொன்று..

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 28 April 2016

பார்த்து விலகு.

பார்த்து விலகு!

பார்த்து விலகு மனிதா- அரசியல்
பைத்தியம் திரியும் பொதுவா.
மனிதன் போலவே பேசும்-உன்னை
மயக்கத் தான்வலை வீசும்.

ஆவிகள் அலையும் மனிதா-அரசியல்
பாவிகள் அவரே அறிவாய்.
ஆசைகள் காட்டி மயக்கும்-உன்னை
அறிவினை நீற்றி வசக்கும்.

நல்லவர் போன்றே மனிதா-அரசியல்
நாடகம் செய்வார் புரிவாய்.
சொல்வோம் செய்வோம் என்பார்-உன்னை
கொள்ளை அடித்தே தின்பார்.

பொதுநலம் செத்தது மனிதா-அரசியல்
சுயநலம் தானது தெளிவாய்.
தொழிலாய் ஆனது அரசியல்-உன்னை
துறவியாய் விட்டது தெருவில்.

தேர்தல்க் காலம்  மனிதா-அரசியல்
தீர்தல்க் கோலம் வரைவாய்.
மயக்கும் மொழிகளைத் தள்ளு-உன்னை
பயக்கும் வழிகளை வெல்லு.!

பாசத் தமிழா மனிதா- அரசியல்
தோசம் கலைவோம் விரைவாய்.
சத்தியம் நெஞ்சில் ஏற்று-உன்னை !
சரித்திரம் ஆக்க மாற்று.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 25 April 2016

முன்னேர்.

முன்னேர் !

அழகு அழகு ஆட்சி அழகு. 
நிலவும் அவரின் அறவழி உலகு.
பழகு பழகு பன்திறம் அழகு.
என்றே செலவின் பின்வரும் உலகு.

திருவோர் எல்லாம் வாழ்த்தும் அழகு
மறுவோர் சொல்லும் மாற்றம் உலகு.
உலகம் போற்றும் வள்ளுவன் அழகு
உழவின் ஏற்றம் மாட்சயின் உலகு.

அமைதிப் பூங்கா அமைவது அழகு.
சமைக்கும் பாங்கா தொழிலதன் உலகு.
சூழாண்மை காக்கும் மேலாண்மை அழகு.
நூலாண்மை ஆற்றும் ஆளாண்மை உலகு.

ஏழையர் நன்மை தேர்வது அழகு.
ஆள்வகை செம்மை  நேரது உலகு.
முன்னேர் ஓட்டும் தன்நேர் அழகு.
முன்னோர் காட்டும் பின்னார் உலகு.

காலம் சொல்லும் கட்டிய அழகு.
ஆளும் வல்லம் எட்டிய உலகு.
ஊளைக் கோழையர் ஓட்டம் அழகு.
நாளை மூளையர் கூட்டம் உலகு.

கொ.பெ.பி.அய்யா.


Sunday, 24 April 2016

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் போன்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் தோன்றட்டும்.
வறுமை தகர்ந்து அருமை ஊன்றட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை மாண்டாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் நின்றாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சித் திறனதும் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை உரம்கண்டு அற்றது பயமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 30 March 2016

அம்மா நான்.

அம்மாதான் ஆன்மாவில் நான்.

அம்மாதானே கண்ணே நான்
ஆருக்காக நான்--உன்
அன்புதானே உள்ளே நான்
ஆன்மாவில்தான்.

உயிர்தானே உள்ளேன் நான்
உனக்காக நான்-என்
உதிரம்தானே உன்னில் நான்
உணர்வில்தான்!.

சொந்தம்தானே எல்லாம் நான்
சொத்தாக நான்-உன்
பந்தம்தானே உயிரே நான்
உந்தனால்தான்.

வஞ்சகர்தானே சொல்லும் நான்
அஞ்சாமல் நான்-என்
தஞ்சந்தானே உறவே நான்
நெஞ்சால்தான்!

வாசந்தானே உன்னால் நான்
பாசத்தாய் நான்-உன்
நேசந்தானே தமிழே நான்
பாசையால்தான்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 13 January 2016

தமிழே நீ சொல்லு.

தமிழே நீ சொல்லு!

தாயே!தகையே!தமிழே நீ சொல்லு!
தந்திரம் மந்திரம் எல்லாம் தள்ளு!
சாயா நீதியின் சாத்திரம் கற்ற நீ!
உந்திறம் கண்டுமே  உற்றது தேர்நீ!

தர்மம் நாடாளும் தமிழின் புண்ணியம்.
மர்மம் தான்நாளும் மரத்தது கண்ணியம்.
நாமே நாமாரும் நமக்கென எண்ணியும்,
யாரே!யாமாரும் நமக்கிணை திண்ணியம்.

தந்தை புரட்சியார் தாயோ!நாச்சியார்.
சிந்தை நிறைத்தவர் செத்தனர் மாட்சியார்!
சந்தை அரசியலில் சத்தியர் உண்டோசொல்!
முந்தை வரமதனில் முயன்றது  சண்டாளமோ!

காந்தியும் காமராசும் கண்டபொன் சிகரங்கள்.
இந்தியா பெற்றதும் எந்தமுன்  தவங்களோ!
மந்தியா பிந்தின மந்தைதன் அவலங்கள்.
நிந்தியா நிற்றதும் எந்தைபின் எதுவுங்கள்?

தேனார் சோதிக்க தீராய்வும் தேவையோ!
தூணார் சாதிக்க தேறுவதும் தேரவோ!
வீணார் ஓதுவார் வென்றபின் ஒதுக்குவார்.!
தானார் காட்டுவார் தன்தொழில் பெருக்குவார்..

கொ.பெ.பி.அய்யா.

Monday, 11 January 2016

ஆன்மிக அறிவொளி.

ஆன்மிக அறிவொளி.

ஆன்மிக அறிவொளி அழகா!
நோன்மிக நெறிவழி உலகா!
மாண்மிக மதிமொழி திலகா!
தான்மிக நிதியொலி விவேகா!
சகோதர சமயம் சமைத்தவா-எழுமின்!
யுகாதர உதயம் வா! வா!

சுடராய் சோபிக்கும் சுந்தரா!
அடராய் ஆலாபிக்கும் மந்தரா!
தொடராய் துலங்கும் தத்துவா!
விடையாய் வியாபிக்கும் வித்தகா!
இறைமறை இயற்றி இணைத்தவா-விழிமின்
நிறைமுறை நிமிர்த்த வா!வா!

பழகும் மனிதம் பழக்கவா!
இளகும் புனிதம் இறுக்கவா!
இழக்கும் உறவும் பிழைக்கவா!
விலக்கும் விளக்கம் துலக்கவா!
ஆற்றும் நெறிகள் ஒடுக்கவா--உழைமின்
போற்றும் பொதுமறை ஆற்றவா!

வெவேகானந்தா விளக்கமே வா!


கொ..பெ.பி.அய்யா.

Saturday, 9 January 2016

இரவே இனிமை.

இரவே இனிமை

இரவே இனிமை -அதில்தான்
தனிமைக்கு உரிமை.
அமைதியின் சுகவாசம்
இரவில்தான் பிரவேசம்.
ஆன்மாவின் உறவு
இரவில்தான் வரவு.
உழைத்தவன் வாசம்
இரவில்தான் நேசம்.
களைத்தவன் ராஜ்ஜியம்
இரவில்தான் பூஜ்யம்.
நினைவுகள் மறக்கும்
இரவுகள் இனிக்கும்.

தொலைந்த நாகரீகம்
கலைந்த பண்பாடு
சிதைந்த பழைமை
புதைந்த வழமை
மறைந்த அருமை
நிறைந்த சிறுமை
இதுதான் நிலைமை
இன்றைய புதுமை.

கொ.பெ.பி.அய்யா.


Thursday, 7 January 2016

மூச்சாறும் தமிழ்.

மூச்சு ஆறும் தமிழ்.

தாயினை தள்ளி வைத்தார்.
நாயினை பள்ளி வைத்தார்
கோவிலை மூடிவைத்து-தமிழ்
தேவியை ஈடு வைத்தார்.

முக வரியை மாற்றுகிறார்.
தக வியல்பை நீற்றுகிறார்.
சுயமதனை இழந்துமே-தமிழ்
தய வதனை தூற்றுகிறார்.

பயின்ற வழி அழிக்கிறார்.
முயன்ற விழி பழிக்கிறார்.
இயன்றதை துறந்துமே-தமிழ்
உயர்ந்த மொழி இழிக்கிறார்.

தன்னி யமும் வெறுக்கிறார்.
மண்ணி யமும் மறுக்கிறார்.
அன்னியம் நன்னியமோ--தமிழ்
புண்ணி யமும் துறக்கிறார்.

மெல்லவும் மூச்சு தேறும்.
வெல்லவும் பேச்சு ஆறும்.
குஞ்சொன்று அக்கினி-தமிழ்
விஞ்சென்று அது மீறும்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 6 January 2016

கடிதம் ஒன்று.

கடிதம் ஒன்று வந்தது.

கடிதம் ஒன்று வந்தது.
காற்று வந்து தந்தது.
படிக்கும் போது பறந்தது.
பாட்டாகக் கலந்தது.

எழுதாத எழுத்தது.
இயற்றாத பொருளது.
வடிக்காத வரியது.
முடிக்காத கவிதையது.

உயிரான உயிரது
உயிருள்ள உணர்வது.
ஆன்மாவின் வடிப்பது
ஆன்மாவுள் துடிப்பது.

வேதமெனும் பதிவது
வீரியத்தின் விதியது.
காதலெனும் திருவது,
காலத்தின் கருவது.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 4 January 2016

தாயம்மா

அறிவே தாயம்மா!

அறிவே தாயம்மா!
அன்பே நீயம்மா!
சிறகே தாயம்மா!
சிந்தனை நீயம்மா!

அம்மா உன் மடியம்மா!
அது என் உலகம்மா!
அம்மா உன் தோளம்மா!
அது என் நூலம்மா!

நீதானே நானம்மா!
நிழலாக தானம்மா!
உயிராக நானம்மா!
ஊனுனது தானம்மா!

நானென்று ஏதம்மா!
நினைவெல்லாம் உனதம்மா!
நாளென்று ஏதம்மா!
நடப்பதுன் வேதம்மா!

தமிழ்தானே மொழியம்மா!
தாய்தானே வழியம்மா!
மதமென்ன மறையம்மா!
மாதாமுன் நிறையம்மா!

ஆலயம் ஏனம்மா!
அம்மாநீ தானம்மா!
பூசையும் ஏனம்மா!
போற்றநீ தானம்மா!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 3 January 2016

இயற்ககையோடு........

இயற்கையோடு இசைந்து வாழ்க!

சுதந்திரம் சொல்லும் விலங்கினங்கள்
வதம்பட வில்லை சுனாமியினால்.
பறவைகள் எல்லாம் அறிந்துமுன்னால்
உறவுகளோடு பறந்தன தன்னால்.

இயற்கையோடு இசைந்து வாழும்
இயல்புயென்றும் இனித்து நாளும்
ஆதிமாறா ஐந்தறி வாளும்
மேதகாறா மெய்நெறி கூறும்.

கிடைப்பது உண்டும் கிரமங்காக்கும்
அடைவது கண்டும் அரவம்நீக்கும்.
உடைப்பது ஒன்றும் உணர்விலில்லை.
படைப்பது கொன்றும் பயமறிவில்லை.

வயிற்றுக்குத் தேடும் வாழ்க்கைதான்
இயற்றுக்குக் கூடும் ஏற்கைதான்.
உடமை யென்றும் ஏதுமில்லை
கடமை மிஞ்சும் தீதுமில்லை.

இயல்பில் இணைந்தால் எதிர்வினையில்லை.
இயற்கை இழந்தால் இயக்கமில்லை.
வியந்தது விழைந்தால் சாதகமில்லை.
பயின்றது புரிந்தால் பாதகமில்லை.

கொ.பெ.பி.அய்யா.