Monday, 13 January 2025

பொங்கல் பொங்கட்டும்.

பொங்கல் பொங்கட்டும்.

பொங்கும் பொங்கலாய் பொங்கும் மங்களம்
எங்கும் தங்கிட பொங்கல் பொங்கட்டும்.  
பங்கம் மங்கவும் துங்கம் ஓங்கவும்
சங்கம் முழங்குவோம் பொங்கல் பொங்கட்டும்.

உணவு செய்பவன் கனவு கனியவும்
மனது மகிழவும் பொங்கல் பொங்கட்டும்.
மனித அணைகளும் உணர்ந்து திறந்தும்
மனிதம் வாழ்வும் பொங்கல் பொங்கட்டும்.

காட்டில் வாழ்ந்த கூட்டு வாழ்வும்
நாட்டில் பேணவும் பொங்கல் பொங்கட்டும்
காட்டு விலங்காய் காமம் மீறும்
கோட்டி மாறவும் பொங்கல் பொங்கட்டும்.

கடமை மறந்து கையை நீட்டும்
கசடர் தீரவும் பொங்கல் பொங்கட்டும்.
உடமை சேர்க்க ஊராரைப் பறிக்கும்
கயவர் திருந்தவும் பொங்கல் பொங்கட்டும்.

உழைத்து வாழ்வோம் என்னும் உணர்வும்
உலகம் பழகவும் பொங்கல் பொங்கட்டும்.
களைத்த உழவன் உழைத்த பரிசாம்
பிழைத்து வாழவும் பொங்கல் பொங்கட்டும்.

மார்கழிச் சளிக் கோள்
தூரழித் தீர்த்தாற் போல்
சீரெழில் தைப் பிறந்தாள் வாழி!
ஏர்த் தொழில் போற்றி 
மெய்வழித் தேர்ந்து வாழ்க!

கொ’பெ.பி.அய்யா.










Saturday, 11 January 2025

காக்க காக்க ஈரங் காக்க!

ஈரம் காக்க!

சகாக்க! காக்க!
இயற்கை காக்க!
காக்க! காக்க!
இயற்கையைக் காக்க!

இயற்கையை மதிப்பார்,
இறையெனத் துதிப்பார்.
ஆதிமூலம் சக்தியென்பார்,
அதன்வழி இயக்கம்
பகவன் என்பார்.

பருவ காலங்கள் ஆறும்,
முறையாகத் தானே மாறும்.
நெறி விதியாளும் இயற்கை;
குறிதவறாது உலகைக் காக்க:
இறை யெனப்போற்றித் துதிக்க!.

மாதங்கள்  சாரும் நேரும்,
காலங்கள் ஆறும் ஆளும்,
காற்றும் மழையும் பனியும்;
வேனிலும் தளிர்ப்பும் பசப்பும்;
பேணிடும் இயற்கைக் காக்க!

கார்மேகம் வானம் மூட,
பாரெலாம் செழித்து வாழ,
ஆதவன் அருளது மேவ;
வானம் கடலும் மலைகள்:
ஈவின் கருணை காக்க!

ஊருகள் வாழ சோறும்,

ஏரது பிழைக்க நீரும்.

கழனிக் கடைமடை பாயும்

ஆறுகள் நதிகள் தமணியாம்:

ஓடுங் குருதியாம் காக்க!

மலையும் கடலும் ஆகாயமும்,
உலவும் உயிர்களின் ஆதாரம்.
காப்பதும் தூய்மை பேணலும்
ஏற்பதும் வாழ்வின் சுகாதாரம்.
பூமியின் அவசரம் காக்க!.

காக்க காக்க ஈரம் காக்க!
காக்கும் மழைநீர் நிலத்துள் காக்க!
தேக்கும் மணலை தேயாது காக்க!
ஈர்க்கும் பூமிக்கு இடந் தந்து காக்க!
ஆக்கும் வேளாண்மை ஆருயிர் காக்க!

கொ.பெ.பி.அய்யா

Thursday, 9 January 2025

மரணம் முடிவல்ல.

 மரணம் முடிவல்ல.

________________________

மரணமும் முடிவல்ல.

தருணமும் எனக்கல்ல.

உடல்தான் நீராகும்.

உயிர்தான் வானேகும்.


கவிதையாய் நான் வாழ்வேன்.

காலங்கள் கடந்தும் ஆவேன்.

புவியிது உள்ள மட்டும் 

கவிஞனாய் ஆசானாவேன்.


கூகுலில் குடியிருப்பேன்.

யோகனாய் விழித்திருப்பேன்.

தேடுவோற்கு விழியாவேன் 

பாடுங்கவி வழியாவேன்.


கவிஞர்.கொ.பெ.பிச்சையா














தமிழ்த்தாய் வாழ்த்து.

வாழ்க செம்மொழி!

தமிழே தாயே அவணிக்கெல்லாம்,
தலைவி நீயே தாய் மொழிக் கெல்லாம்.
அமுதே உயிரே அழகே தமிழே!
ஆதி முதலே என்றும் இளமையே!
அணிகலன்களாக இலக்கியங்களாக
எழிலுடை வடிவ இலக்கண மேனி.
செம்மொழி மகுடம் சிகைமுடி சூடி
அகிலத்தின் மூத்த அம்மா உன்னை ஆராதிக்கிறேன். வாழி!செந்தமிழ் வாழிய தாயே!

கொ.பெ.பிச்சையா.


Tuesday, 7 January 2025

அன்பே கடவுள்.

அன்பே கடவுள்.

அன்புக் கென்ன பொருளாம்!
அதற் கென்ன ஆதாரம்!
அழகுக் கென்ன அடையாளம்!
அதற் கென்ன அருத்தம்!
அறிவுக் கென்ன விளக்கம்
அதற் கென்ன பொருத்தம்!
மூன்றுக்கும் மூலம் தான்
வேண்டும் அந்தக் கடவுளாம்.

அன்பினால் ஒளிரும் முகம்
அறிவினால் மிளிரும் அகம்.
அருள் செய்யும் கடவுள் வரம்
அழகெனப் பொருளாகும்.
அன்பெனும் அருட் கொடை
அறிவழகு திருப் படை.
அன்பே தான் இறை ஆகும்
அதற்கன்ன வரையாகும்!

மனிதராய் பிறந்தா ரெல்லாம்
மனிதர் என்று ஆவதில்லை.
மனிதம் எனும் அன்புள்ளம் 
இனிதம் அன்றி நேர்வதில்லை.
இதயம் அது தூய்மை ஆனால்.
புனிதமாகி பொலிவு ஆகும்.
கடவுள் அங்கே குடி அமரும்
இடம் தங்கும் இல்லம் ஆகும்.

அன்பி னதன் செல்வங் களாம்
அழகறிவின் அம்சங் களாம்,
கடவுள் வரவுத் தோரணங்கள்;
காட்சி தரக் காரணங்கள்.
இதயம் உன்னில் கோவில் ஆச்சு,
இறைவன் செய்யும் ஆட்சி ஆச்சு
ஆரவாரம் அடங்கி போச்சு
அன்பே கடவுள்  விளங்கி ஆச்சு.

கொ.பெ.பிச்சையா.











Sunday, 5 January 2025

வயதொன்னு போயே போச்சு.

வருஷம் ஒன்னு போயே போச்சு.

வருஷம் ஒன்னு போயாச்சு.
வயது ஒன்னும் ஆயாச்சு.
போனதால் ஆனதோ!
ஆனதால் போனதோ!
ஆச்சோ ! போயே போச்சோ!
ஆயுளொன்னு தீர்ந்து போச்சு.

வருஷம் ஒன்று வாழ்ந்தாச்சு,
வயது  ஒன்றும் மீண்டாச்சு,
வாழ்ந்த காலம் கடந்தாச்சு,
வயது  ஒன்றும் முடிந்தாச்சு.
ஆயுட் காலம் வாழ்ந்த மீதம் 
ஆரறிவார் தேவ இரகசியம்.

போன வயதும் மீளாது 
ஆனது வருஷம் தேராது.
வாழ்ந்த வரை இலாபமே, வாழும் வரை யோகமே.
வாழ்வதும் மீள்வதும் நாளொன்றும் கடந்து போகும்.

வாழ்வதும் ஆள்வதும் 
நாளென்ன! பொழுதென்ன!
ஊரென்ன பேரென்ன!
குணமென்ன! குலமென்ன!
வாழ்வதும் ஊராவோம்,
வாழ வைத்தும் நாமாவோம்.

நானென்ன! நாமென்ன!
நாமம் என்ன! சேமம் என்ன!
மனம் போல் வாழ் வென்ன!
இனமென்ன!தனமென்ன!
கனமென்ன!புகழென்ன!
பிணமானால் எவரென்ன பேரென்ன!

பெற்றாரைப் பேணாமல்,
உற்றாரைச் சாராமல்,
மற்றாரைக் காணாமல்,
வாழ்ந்தென்ன!வசதியென்ன!
வனம் போன பின்னாலே:
வாழ்வென்ன!தாழ் வென்ன!

எழுபத்தாறு வயது போச்சு,
உழுத்தப் பழசு உடலாச்சு,
ழுத்த முதிர் பழமாச்சு.
அலுத்துப் போன மனசாச்சு.
எழுத்து என்ன எழுதி வச்சான்,
எழுதி வச்சேன் இருந்த சாட்சி

கொ.பெ.பிச்சையா.









Saturday, 4 January 2025

தள்ளாடும் பூமி பாவம் !

தள்ளாடும் பூமி பாவம்!

இயற்கை மீறிய பாவம்,
செயற்கை வாரிய சாபம்,
காலம் தவறிய கோபம்,
ஞாலம் மாறிய கோலம்.
தள்ளாடும் பூமி-
என்னாகும் சாமி?

விவசாயி பாவம் வெள்ளத்தால் நாசம்.
அவசியப் படும் போது ஆகாத பாசம்,
அளவுக்கு மிஞ்சியும் உழவுக்கு விஞ்சியும்,
கொட்டினால் கொட்டிக் கொட்டித் தீர்ப்பதும்,
தட்டினால் தட்டிப் பட்டிடத் தீய்வதும்,
பெய்தும் பஞ்சம் பெய்யாமலும் பஞ்சம்;
தர்மம் செய்து தட்டிப் பறிப்பது வஞ்சம்:
இயற்கை ஆடும் கோர விளை யாட்டு.

அந்தந்தப் பருவம் அந்தந்தக் காலம்,
முந்தியும் பிந்தியும் தப்பிடும்
கோலம்,
தடுமாறும் இயற்கை தன்னிலைச் சீற்றம்,
வெந்திட்ட பூமி 
நொந்திட்ட மாற்றம்.
இயற்கை மெஞ்ஞானம் செயற்கை விஞ்ஞானம்.
போட்டிக்குப் போட்டி ஏட்டிக்குப் போட்டியா?
கண்களை மூடியே கவலையில்
இன்னும்-
விண்ணோ மண்ணோ பாவம் என்னதான் பண்ணும்!

கொ.பெ.பிச்சையா.





அலைபாயும் மனது

அலைபாயும் வாழ்க்கை.

அலை பாயும் வாழ்க்கை  ஓயாது//
நிலை யின்றி எதிலும் 
சாயாது//
கலையாது ஆனாலும் தன்னிலை தேயாது//
விலை மாது போன்றும் 
பாயாது//
முடிவுக்கும் வாராது முயன்றாலும் தீராது//.
குரங்கு அன்ன ஒன்றில் நில்லாது//
சிரங் கொன்றைச் சீண்டினும் 
மருந்திட்டுக் கொள்ளாது.//
அரங் கின்றி கொண்டெதும்
செல்லாது//
மருகி மருகி அலைந்து 
அமைதி//
திரிந்து குலைந்து அலைபாயும்
வாழ்க்கை.//

கொ.பெ.பிச்சையா