Friday, 27 December 2013

என்னுயிரே எப்பவருவ?

என்னுயிரே நீ எப்ப வருவ?

எப்ப வருவ நீ எப்ப வருவ?
என்னுயிரே நீ எப்ப வருவ?

அப்பா அம்மா நீதானா?
அப்பாவே இல்லையா?
எனக்கு மட்டும் அப்பான்னு
எப்பவுமே இல்லையா?

இப்படியும் கேக்கு றாளே 
இளைய மகளே!
என்ன நான் சொல்லுவதோ
எனக்குப் புரியல.

இப்படியும் வாழும் ஒரு
வாழ்க்கையும் தேவையா?
இதுவும் ஒரு குடும்பம் என்றால்
எனக்கு அது பிடிக்கல.

ஆம்பளைன்னு வந்தாலும்
அசிங்கமும் ஆகுது.
அக்கம் பக்கம் இருப்பவனும்
ஆசையில பேசுறான்.

தபால் கொண்டு வருபவனோ
தானும் ஒன்று கொடுக்கிறான்.
என்னன்னு பிரிச்சுப் பாத்தா
எழுதினது காதலாம்.

வேலை இல்லாக் கொடுமையின்னு
வெளிநாடு போனாயோ!
கூலி வேலை பாத்தாவது
குடும்பம் இங்கே நடத்தலாமே!

உனக்கும் கூடச் சந்தேகந்தான்
ஊறித்தான் கிடக்குது.
எனக்கெழுதும் கடிதாசுல
எழுத்திலே புரியுது.

நிம்மதியா இருக்க உனக்கு
நம்பவும் மனசில்ல.
அஞ்சி அஞ்சி வாழ எனக்கு
நெஞ்சில பலமில்ல.

கால் வயிறு நிறைஞ்சாலும்
கவலையை மறக்கலாம்.
கூழ் குடிச்சி வாழ்ந்தாலும்
குடும்பமாக வாழலாம்.

நாளெல்லாம் வாழத்தானே
நமக்காச்சு கல்யாணம்?
நாலு நாலு வருஷம் போனா
நாளென்ன மிஞ்சலாம்?

இதுக்கு எதுக்குக் கல்யாணம்?
எதுக்கது செலவீணம்?
இருவேறு உள்ளம் ஏனாம்
வருந்தித் தினம் சாகனும்?

வெளிநாட்டு ஆசை மச்சான்
வீணாலே பேச வச்சான்.
கணக்குப் போட்டா சரியா வரும்
காலணாவும் மிஞ்சல.

நினைவில்தான் காணணுமா!
கனவிலதான் வாழணுமா!
இருவரும் பேணும் கற்பு
இருவரும் தான் நம்பு.

போதும் நீ வந்துவிடு.
புரியாத உலகமிது.
மீதியுள்ள கால மாவது
மிஞ்சியது வாழலாம்!   

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment