Tuesday, 30 September 2025

அவதாரங்கள் தோன்றும் நேரம்.

அவதாரங்கள் அவசரம்.

கேடு காலம் கிருஷ்ணர் அவதரிப்பார்.
கெட்டழியும் நேரம் கிறிஸ்து பிறப்பார்
அல்லல்படும் போது அல்லா வருவார்.
அப்படிஒரு காலந்தான் இப்பொழுது.
அவசரம் அவசியம் அவதாரம் நேரும்.

ஆன்மீகம் வீண்மோகம் என்றது மறுப்பு
தான் தோன்றித் தனத்தின் பொறுப்பு.
அதனால் ஏற்பட்ட விளைவின் கருப்பு
அலட்சிய உள்மன அறநிலைக் கலைப்பு
இலக்கிலாப் பயணம் காலக் குழப்பம்.

பக்திகெட்டது நெறிப்பயம் விட்டது
முக்தி ஞானம் முட்டாள் தனமானது.
தனக்குள் தன்காப்பு தகர்ந்துபோனது.
மனத்துள் சாட்சி மறைந்து தானது.
இனம்பல பிரிந்து மனிதம் செத்தது.

பொய்யும் புரட்டும் போக்கிரித் தனமும்
கையூட்டு ஊழல் கொடுஞ் செய்மனமும்
நீதிபிறழும் நெறிகெட்ட குணமும்
ஊறி உழன்ற நரக வாழ்வும்
நாறிய நாகரிகம் நாளும் அழிகிறது.

நாய்போல் மனிதன் நரகன் திரிகிறான்.
தன்னினம் தானே தரங்கெட்டு ஆனான்.
விலங்காக விலங்கறுந்து அலைகிறான்.
பலமோகம் பழகி பாலியல் பிறழ்கிறான்
இறைபயம் நீங்கித் தானே கெடுகிறான்.

நன்மை தின்மை பகுப்பாய்வு புரிந்து,
உண்மை திண்மை வகுப்பாய்வு அறிந்து
உள்ளம் தெளிவு உள்ளது உணர்ந்து
நல்லது பொல்லது நான்கும் தெளிந்து
கொள்வது சத்தியம் ஆன்மிகத் தத்துவம்

காவல் காவா ஆளுமை ஆகாது
காவலன் இல்லா அரணும் வாழாது.
காப்பில்லா வெறுமனம் நிலையாது
பக்தியெனுங் காவல் பயமும் இல்லாது
சக்தி யெனும் புத்தி உத்தமம் பெறாது.

உள்ளம் உள்ளே உள்ளது கோவில்.
உள்ளதும் நீயே உணர்வாய் நினைவில்.
உணர்ந்து தெளிக உன்னுள் ஆன்மா.
அதுதான் தெய்வம் அதுவும் நீயே.
அதுவே பகுத்து ஆய்ந்த அறிவே.

அக்கினிப் பெருவெள்ளம் இடராதாக
அக்கிரமப் பஞ்சம் அல்லல் ஆகாதாக.
மனிதனை மனிதன் உண்ணாதாக
ஆன்மீகம் மீண்டும் அவனியில் தொடர
அவதார புருசர்கள் அவசியம் அவசரம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 28 September 2025

பணம் என்னடா பணம்!

பணம் என்னடா பணம்!

பணம் என்னடா பணம்!
குணம் தானடா தனம்.
வெறும் பணத்தில் ஏதடா!
பெறும் நிம்மதி தானடா.

இருக்கும் வரையும் அன்புதான்.
பெருக்கும் நிறைக்கும் இன்பந்தான்.
செல்வம் வேறு என்னடா!. 
செல்லும் போது கொண்டுடா.

உயிரை உயிராய் மதியடா!
பயிரை அதுபோல் பாரடா!
பிறவும் தம்போல் நினையடா!
உறவென எல்லாம் அணையடா!

உலகம் என்பது விசாலம்.
பழகும் மனிதமும் விரியலாம்.
கலகம் எதற்கெனப் புரியலாம்.
அழகும் அதுவென அறியலாம்.

நிலையென எதுவும் ஏதடா!
மலையென அதுவும் யாதடா!
வந்தது போல போவதே!
வாழ்ந்தது சும்மா ஆவதே!

பிறந்தது ஏனெனப் புரிந்ததா"
இறப்பது தானென அறிந்ததா"
இருக்கும் வரையும் மகிழ்ந்திரு.
இருப்பதும் இறைத்து நெகிழ்ந்திரு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Wednesday, 24 September 2025

விதைத்த சொல்.

விதைத்த சொல்.

புதைத்தவிதை பூஞ்சோலை ஆகுதம்மா.
சிதைத்தாலும் ஆலமரம் தழைக்குதம்மா.
விதைத்தசொல் வேரூன்றி விளையுதம்மா.
கதையென்ற கற்பனையும் காலமெல்லாம் 
எதைநம்பி இப்புவியில் வாழுதம்மா.

ஓளிந்தாலும் மொழிந்தது  ஓழியாது.
கலைத்தாலும் கலைந்தது மீளாது.
சிந்தியதை அள்ளலாம் சிதறியது சேராது.
சிந்தித்து மொழிந்தாலும் நிந்தனை ஆறாது.

அடித்தவலி தீரலாம் அப்போதே ஆறலாம்.
முடிந்ததும் தொடரலாம் தொலைந்ததும் துலங்கலாம்.
படித்தது மறந்தாலும் பாடங்கள் இறக்காது
பழித்தது அழிந்தாலும் இழித்தது ஒழியாது.

உலகமிது உள்ளவரை கலகமும் ஆங்காங்கே!
பழகும் மனிதம் விலகுமோ அங்கெங்கே.!!
நல்லதே எண்ணுவோம் உள்ளதே பேசுவோம்.
கொள்ளுவதும் சகோதரம் எல்லோரும் பேணுவோம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Tuesday, 16 September 2025

என்ன கொண்டு வந்தோம்.

வாடகை உலகம்
.
என்ன கொண்டு வந்தோம் 
என்ன கொண்டு போவோம்.
வந்ததும் போவதும் பிரயாணம்--இங்கு
வாழ்ந்தது எல்லாம் கனவாகும.

எல்லாம் வேண்டி அலைந்தோம்.
எதுதான் நிரந்தரம் கொண்டோம்.
வாழ்ந்த வரையே இலாபம்--அவனால்
வந்தது முடிந்தால் பயணம்.

உயிரும் சொந்தம் இல்லை.
உடலும் நமது இல்லை.
கடனாகப் பெற்றது எல்லாம்--கணக்கு முடியுங் காலஞ் சொல்லும்

உலகை விட்டு ஒருநாள்
உயிரும் பறந்து போகும்.
சொத்தும் பணமும் யாருக்கும--சொந்தம்
எத்தனை நாள்தான் எவருக்கும்.

வாழும் வரைதான் சும்மா
வாடகை போலத்தான் எல்லாம்.
ஆளும் அரசன் ஆனாலும்--உடலில்
ஆவி போனபின் பிணமாம்.

உண்ணவும் உடுத்தவும் போதும்
எண்ணும் ஆசை தீதாம்.
கொடுத்து மகிழ்ந்து வாழும்--உயர்ந்த
குணந்தான் மனிதம் ஆகும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பாலா.

தம்பி KPYபாலா!

தம்பி பாலாநீ தர்மத்தாய் பிள்ளை நீ!
அம்பி போலநீ அக்கரை சேர்வள்ளம் நீ!
நம்பி முயன்றோர்கு நல்கும் வள்ளல் நீ!
எம்பி என்போர்கு உள்ளம்வாழ் செல்வம்நீ!

அழைப்பவசர ஊர்தி நீ ஆதரவுக் காவலன்நீ!
தொலைதூர மக்களின் மலைப்புறச் சேவகன்நீ!
நிலைகுலைந்த கலைஞர்களின் நலம்தந்த நாயகன்நீ!
உலையேறா இல்லங்களில் இலைபோட்ட அன்னவன்நீ,!

இருப்போன் அல்லான்நீ இருப்பதைக் கொடுப்போன்நீ!
பிறப்பால் கரணன்நீ சிறப்பால் வர்ணன்நீ"
மனமுள்ள மனிதன்நீ குணமுள்ள பாரிநீ!
இனமான மனிதம்நீ தனமான தானன்நீ!

குலம்போற்றும் உரியன்நீ!விளம்பிடாப் பிரியன்நீ
நலம் விளையும் விருச்சம்நீ! குலங்காக்கும் மருத்துவம்நீ!
அறஞ்செய் தர்மன்நீ கரம்பெய் நண்பன்நீ!
புறம்பேசும் பொய்யர்கும் சிரங்காக்கும் சீராளன்நீ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 15 September 2025

இன்னல் கண்டு சன்னலை மூடாதே.

சிரித்தாலே போதும்.

துன்பம் வரும்போது நிமிர்ந்துநீ சிரிச்சுக்கோ!
இன்பம் தொடரும் அதைநீ நினைச்சிக்கோ!
சன்னல் வழியே வந்து போகும் இன்னலைநீ!
கண்டும் சிரித்தும் கலங்காதே சிரிநீ!

இன்னல் கண்டு சன்னல் மூடாது.
பின்னல் கொண்டு இன்னல் விடாது.
புன்னகை வென்று துன்பந் தொடாது.
என்ன ஒன்றும் பின்னும் படாது.

தனிமை தவிர்த்து உறவு கலந்தால்
அடிமைசெய் ஆசை அறவே தொலைந்தால்
இனிமை இன்பம் என்றும் தொடரும்.
விடியல் வாழ்க்கை அடையாது ஒளிரும்.

மனதில் உறுதி கலங்காத் துணிவால்,
துணையென அதுவே எதிர்கொளும் வலிவால்,
துன்பம் தானே தோற்று ஓடும்.
இன்பம் அதுவாய் பாட்டுப் பாடும்.

துன்பம் கண்டு தொய்யாது நிமிர்வாய்.
இன்பம் வந்து பொய்யாது அமர்வாய்.
செல்வம் செழித்து வளமே கொழிக்கும்.
தெய்வம் களித்து நலமே அளிக்கும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 14 September 2025

அஞ்சல் பெட்டி

காணாமல் போன அஞ்சல் பெட்டி.

அஞ்சல் பெட்டிக்கு அஞ்சலித் தருணம் /
நெஞ்சில் நினைவுகள் அஞ்சிய மரணம்/
எஞ்சிய உறவுகள் விஞ்சிய சரணம்/
துஞ்சிய அஞ்சல் துயரப் படிவம்/
செஞ்சிவப்பு நிறத்தோய்நீ சேர்ப்பித்தென் கடிதம்/
கொஞ்சியென் கொழுநன் நெஞ்சினிற் பதித்தனோ!/

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 13 September 2025

காலம் மாறிப்போச்சு.

பழைய காலப் பெருமை

காலம் மாறிப்போச்சா இல்ல
கோலம் மாறிப்போச்சா?
கருத்து மாறி எல்லாம் கெட்டு
கணக்கும் மாறிப்போச்சு.

அந்தக் காலம் இந்தக் காலம் 
எந்தக் காலம் எது வாழும்?
அந்த மனுசன் இந்த மனுசன்
எந்த மனுசன் அது போலும்?

ஓடி ஓடி உழைச்சாலும்
கூடி வாழ்ந்த காலம் வாழும்
பிழைப்புக்கான உழைப்பிப்போ 
பேச்சுப் பழக்கம் போயேபோச்சு.

கருவிகளே உறவாச்சு
கலந்து பேசல் மறந்தாசசு.
இரவு விளையாட்டு எல்லாம் 
மறந்து தொலைஞ்சும் போச்சு.

தெருக்கூடிப் பொழுது போக்கும் 
சிரிப்புழகு ஒழியல் ஆச்சு.
பெருசுகளின் கேலிகிண்டல்
அருமை மறைஞ்சும் போச்சு?

குமரிகளின் குதுகலம் 
கோலாட்டம் கொண்டாட்டம் 
பந்தாட்டம்  பல்லாங் குழியாட்டம்
எங்கேதான் போனதோ என்னதான் ஆனதோ!

சில்லாங் குச்சி கோலி யாட்டம்
கிளித்தட்டு தவிட்டு விளையாட்டும்
எல்லாம் ஒழிஞ்சு போச்சோ!
சொல்லும் அழிஞ்சு ஆச்சோ!

முக்குக்கொரு இளவட்டக் கல்
முறைக்கு மொரு சாதனைக்கல்
கக்கம் இடுக்கி பக்கம் வீசும்
காளைவீரம் காலமாச்சோ!

இரவுவெகு நேரம்வரை அன்று
அரவம் கொண்ட ஊர் இன்று
அவரவர் வீட்டுக்குள்ளே
அடங்கிப் போச்சோ TVக்குள்ளே!

பழைய காலப் பெருமை பேசும்
வழமை வாழ அருமை யாகும்.
படரட்டும் பழமைக் கனவாம்.
தொடரட்டும் நிசநினைவாம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Friday, 12 September 2025

வானவில்

வானவில்.

வானவில் தானவள் நாணலின் கோணலவள்.
நானவள் அழகிலே காணுவது
நாணலவள்
ஏனவள் இத்தனை வண்ணங்கள் 
மாயங்கள் 
ஆனதை வியக்கிறேன் அதிசயம் அற்புதம்.

ஏழுவித வண்ணங்கள் ஆளுவதன் வண்ணங்கள்
கலவையவள் அழகாக கலையவள்  வடிவமாக
சிலையோ சித்திரமோ மயங்குமென் எண்ணங்கள் 
நிலையிழந்து நிற்கிறேன் நிமிர்வாளோ அமர்வாளோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 8 September 2025

அம்மாவை மிஞ்சிய தெய்வம் வேறில்லை

அம்மா அம்மதான்.
 
அம்மா மிஞ்சித் தெய்வம் வேறில்லை.
அவளைத் தாண்டி ஆலயமும் இல்லை. 
கருவறைத் தந்த கருணைத் தெய்வம்,
காலடி தொழுதாள் போதும் உய்வோம்.

தானே உணவாகி என்னை வளர்த்தாள்.
தன்பசி எண்ணத் தானே மறந்தாள்.
என்னைப் பசியறியச் செய்யாதவள்.
கண்ணில் கண்ட கடவுள் தானவள்.

தந்தை கண்டு முந்தானை விரித்தவள்.
என்னைக் கண்டு உயிரைப் புரிந்தவள்.
என்முகம் கண்டு தன்வலி மறந்தவள்.
என்னக் கண்டும் என்னை மறப்பாள்?.

தந்தையாரோ தன்துணை எண்ணுவார். 
என்னையவர் உயர்த்திடப் பேணுவார்.
தந்தை என்னைக் கைகளில் தேடுவார்.
அன்னை தானென் வயிறுடன் பேசுவாள்

கண்டித்துத் திருத்தும் உண்மை நட்பு.
அஞ்சி மனையாள் ஆர்ப்பரிப்பாள் தப்பு.
தண்டித்து வருத்தும் தந்தை அக்கறை.
கண்ணில் கரைப்பாள் தாயென் தவறை.

எந்த உறவுகளும் பிரிந்து போகலாம். .
சொந்தம் பந்தம துறந்தும் ஏகலாம்.
தநதை இழந்தும் தாயப்பாசம் வாழலாம்
தாயை மறந்து என்னதான் ஆளலாம்.

எத்தனை தேடல்கள் நான் தேடினாலும்
எத்தனை வசதிகள் நான் கூடினாலும்
அத்தனை சுகங்களில் நித்திரை வருமா?
முந்தானைத் தாய்மடி மணமது தருமா?

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Thursday, 4 September 2025

கற்பு எனனடா கடைச்சரக்கா!

கற்பும் பொது உடைமை.

கற்பு என்னடா கடைச் சரக்கா!
சொற்பேதம் கண்டு சோதனை செய்ய.
தற்குறிதானடா தரங்கெட்டுப் பிறழ்வான்.
சொற்குறி வாதம் சுயமதி மறுப்பான்.

பெண்ணின் பிறப்பிற்கு அற்புதம் உய்த்தாள்.
தன்னின் கற்ப்புக்கு சொற்பதம் செய்தாள்.
பெண்ணின் பொறுமை மண்ணின் பெருமை.
விண்ணின் திருமை பெண்ணின் மகிமை.

பூமி பிளந்தவள் சாமி ஆனாள்.
பொறுமை அளவை காமிக்க லானாள்.
அடிமை உறவை முடித்திடத் துணிந்தாள்.
பெருமைப் பிறப்பென சீதை அணிந்தாள்.

ஒருசார் கற்பு உரிமைக் கொடுமை.
இருசார் கற்பே பொதுமை உடைமை.
பாரதி சொன்ன சொற்பதம் உண்மை.
நேரதன் திண்மை கற்பதன் செம்மை..

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 2 September 2025

உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஆகியவற்றுடன் வாழ்க வளமுடன்.

வாழ்ந்து வாழ்க!

உடல்நலம், நீளாயுள், நிறை செல்வமும், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் குறையாதும்  
நிறை வாழ்வாக வாழ்க வளமுடன்.

கடனின்றிக் காலமும் உடனுறை நேயமும்
திடன்பொறைத் திண்ணமும் எண்ணமும்
கொடை செய் பேராய் வாழ்க.!

அன்பின்பண்பும் நன்றின் நன்றும்
உண்மை உறவும் உகந்த வரவும்
பண்மை அறிவும் பகர்ந்து வாழ்க!

பசியறப் போக்கி பரிவது ஊக்கி
வசிக்கும் மனிதம் வாழும் புனிதம்
வாழ்வாய் வாழ்ந்து வையம் வாழ்க!

குணமெனும் குன்றாய் மனமெனும் ஒன்றாய்
தனமெனும் நன்றாய் இனமது பொன்றா
 மனிதம் நின்று வாழ்வாங்கு வாழ்க!

கவஞர். கொ. பெ. பிச்சையா.