Saturday, 30 November 2024

நிலையில்லா வாழ்க்கை!

தாமரை இலைமேல் தண்ணீரைப் போலே
பூமியில் இல்லை நிலையான
வாழ்வே!
ஆண்டவர் என்ன! அடிமைகள் என்ன!
மாண்டதன் பின்னே மறுபேர் என்ன!

பிறக்கும்போதே இறப்பதும் ஏனோ!
வரவில் தவறும் நேர்ந்ததுந் தானோ,!
பிறப்பது எதற்கு இறக்கத் தானோ!
இருந்தென்ன வாழ்ந்தென்ன சாதித்தேனோ!

நாயுந் தானே வாழ்கிறது
நானுங் கூட அதுதானோ!
வாயுக்கும் வயிற்றிற்கும் வாழ்வதோ!
வந்ததன் நோக்கமும் அதுதானோ!
வாழ்ந்தேன் என்பதும் பொய்தானோ!

வந்ததன் பதிவு இல்லை என்றால்
வாழ்ந்ததன் அடையாளம்
என்னவோ!
இருந்தேன் என்பது பாரமோ!
ஏதோ ஒன்றாய் கிடந்தேனோ!
எண்ணும் மக்கள் இதயங்களில்
வாழ்ந்தால் நானும் வரலாறே!.

கொ.பெ.பிச்சையா.


ஊருக்குள் வெள்ளம்.

நான் ஓடுகின்ற ஓடை பாதை தானீவீர் மேடாக்கி வீடாக்கி நிலமாக்கினீர். 
நான் தேங்கித் தங்கும் ஏரி குளம் ஊராக்கினீர். 
உமக்காக்கி ஆக்கிரமித்தீர்.
வேறென்ன வழி எனக்கு இடம் எனக்கு?
தடந்தேடி வழிதேடி அலைந்து தடுமாறித்தான்.
ஊருக்குள் நுழைகிறேன் வேறென்ன செய்வேனோ!
வழி செயவீர் வகை செய்வீர்.

Monday, 25 November 2024

விவசாயம் பிழைக்குமா?

விவசாயம் பிழைக்குமா விவரம் புரியல.
அவசரமா யோசிக்கனும்
அழியும் முன்னால.
விளையும் நிலம் எல்லாமே வீடாகுது.
காடெல்லாம் ரோடாகி கவலையாகுது

வீடாகி ரோடாகி சோறு கிடைக்குமா.
விவசாயி தொழிலாளி 
பிழைக்க முடியுமா.
சோறு போடும் விவசாயி
செத்து மடியிறான்.
வேறு தொழில் பார்த்து அவன் 
வெளியேறுறான்.

விவசாய செலவுக் கேத்த விலையும் கிடைக்கல.
விளைஞ்சதையும் பாதுகாக்க
விஞ்ஞானம் இல்ல.
வியாபாரிதான் சம்பாதிச்சு
இலாம் அடையுறான்.
விசாயிகள் கடனாகி
விடியல் தேடுறான்.

கிராமங்களைப் பார்க்கும் போது கிறுகிறுக்குது.
கிழிஞ்ச துணி மாத்தக்கூட
ஒழிஞ்சு ஏங்குது.
பணம் வாங்கி ஓட்டு போட
வறுமை தூண்டுது.
ஜனநாயகம் செத்து ரெம்ப
நாளாகுது.

அரசியலே வியாபாரம் ஆகிப்போனது.
அதிகார வர்க்கந் தானே
ஆட்சி ஆளுது.
திரை மறைவில் பேரம்பேசி
தலைவன் ஜெயிக்கிறான்.
போட்ட முதல் இலாபத்துக்கு
வேட்டை யாடுறான்.

விலைவாசி ஏறுதுண்ணு
போராடுறான்.
விவசாயி நஷ்டம் கஷ்டம்
பேச மறுக்கிறான்.
இடைத்தரகர் பதுக்கல் பற்றி
எவன் பேசுறான்.
எதிர்ப்பவனைத் தேடி தேடி
ரைடு நடத்துறான்.

இப்படியே நாடு போனால்
என்னாகுமோ.
எப்படித்தான் வேற வழி
ஒன்னும் புரியல.
மூன்றாவது உலகப் போரும்
உதிக்கும் முன்னாலே
முயன்றுந் தன்னிறைவையே
முன்னிறுத்துவோம்.

உலகமெலாம் தன்னிறைவை
பெற்றிட வேணும்.
கலகமில்லா காலம் அதை
கண்டிட வேணும்.
விவசாயம் வாழாமல்
உயிர்கள் வாழாது.
விவசயிகள் வாழ்வுயர
வேண்டிக் கொள்வோமே.

கொ. பெ. பிச்சையா.




ஊருக்கு ஓரு மடம்!

ஊருக்கு ஒரு மடம் 

ஊருக்கொரு மடமிருக்கும்
யாருக்கும் திறந்திருக்கும்.
வழிப் போக்கர் களைப்பாற-அன்புடன்
வரவேற்று உபசரிக்கும்.

இல்லை என்ற ஏழையர்கள்
பிள்ளை பெற்ற அனாதைகள்
மடம் ஒன்று இல்லாவிட்டால்-வேறு 
இடம் எங்கோ விரட்டிவிட்டால்

வீடுவாசல் இல்லா மக்கள்
வேர்வை சிந்தும் பாட்டாளிகள்
காடு வயல் விவசாயிகள்-தங்கி
கஞ்சித் தண்ணீர் குடிக்குமிடம்.

சின்னஞ் சிறு கூடுகளாம்.
அன்னங் காய்ச்சும் வீடுகளாம்.
விருந்தாளியாய் வந்தவர்க்கும்-படுக்கத்
திறந்திருக்கும் சொந்த மடம்.

வீதி ஒன்றாய் விரிந்த மடம்
சாதிக் கொன்றாய் சிறுத்த இடம் 
வேலையற்று அரசியல்-பேசும்
வீண் வாதக் கூடாரம்.

அன்ன தான சத்திரங்கள் 
சாலையோரம் ஆயிரங்கள்
வரலாற்றுச் சின்னங்கள்-இன்று
திருட்டுத் தொழில் கூடாரங்கள்.

வள்ளல்கள் கட்டி வைத்த
பள்ளி கொள்ளும் தர்மமத்த
இல்லாத ஏழையர்க்கு-உதவும்
இலவச சேவை மடம்.

கொ. பெ. பிச்சையா.










Sunday, 24 November 2024

யார் அந்த தெய்வங்கள்?

யார் அந்த  தெய்வங்கள்?
பார் உந்தன் நெஞ்சிலே.
ஊர் பேசும் உண்மைகள்-உன்னை
உணரச் செய்யும் நன்றிகள்.

அம்மா அப்பா தெய்வங்கள்.
அவர்கள் தான் படைத்தவர்கள்.
வாழ வைத்த தெய்வங்களை-நோக
வாட வைத்தும் வறுத்தலாமோ!

பிள்ளையே என்று எண்ணி
நம்பியே வளர்த்த உன்னை.
நல்லாயிரு என்றே திண்ணை-அது
நாளை உன்னை வரவேற்கும்.

பிள்ளை வேண்டி இராமேஸ்வரம்
பெற்ற வரம் உற்ற பலன்
பிள்ளை இல்லை என்பதுபோல்-பாவம்
 உள்ள இந்த வரந்தானோ!

சுமை தாங்கி கல்லாகி
சுமந்த பாரம் பொய்யாகி
சுமையாகிப் போனாரோ!-ஓய்ந்து
சுமந்த கல்லாய் சாய்ந்தாரோ,!

வானவராய் வந்தோமோ!
வளர்ந்த முறை மறந்தோமோ!
குழந்தையாய் நாம் அன்று-தவழும்
குழந்தை போல் அவரின்று.

யார்க்கும் வரும் முதுமை நோய்
பார்க்கும் பழம் கோரம் பாய்.
பெற்றவர் படுங்காட்சி-நாளை
உற்ற பிள்ளை உனக்கு சாட்சி.

கொ. பெ. பிச்சையா.











Saturday, 23 November 2024

மனிதனாக ஏன் பிறந்தேன்?

மனிதனாக ஏன் படைத்தான்-உனக்குள்
மனதையேன்  ஒளித்து வைத்தான்?
தன்னைத்தானே உணரத்தானே-இறைவன்
உன்னையே சாட்சி வைத்தான்.

மனது ஒன்றை வைத்தானே-அதனால்
மனிதன் என்றும் அழைத்தானே.
மனதைக் கொன்றும் புதைத்தாயோ!-உனக்கு
மனிதன் என்ற பெயரெதற்கு ?

விலங்குக் கில்லா ஆசை உண்டடோ-எதையும்
விரும்பாமல் தொட்ட துண்டடோ!
மனதைவிட சாட்சி உண்டோ!-அதில்லா
மனிதன் போல் மிருகம் உண்டோ!

உலகிலுள்ள உயிரை யெல்லாம்-இறைவன்
ஒருவன்தானே படைத்துவிட்டான்.
மனிதனுக்கே அறிவு வைத்தான்-அதை
மனிதன் ஏன் தொலைத்து விட்டான்.

மனிதருள் மனிதர் சிலர்-மறைந்து
மனிதர் போல் வாழுகிறார்.
கருநாகம் விசம் அவரை-அறிந்து
கண்டிட்டால் கல்லெறிவீர்.

இரத்தம் பல வகையாச்சோ-மனித 
சித்தம் கோடி பகையாச்சோ!
இனத்துக்குள் இனமாக-நமக்குள் 
எதற்கு இத்தனை பிரிவாச்சோ!

ஆசையால் அறிவு போச்சோ-பழகும்
பாசையால் பிரிவு ஆச்சோ!
மனித இனம் ஒன்றென்ற!-உறவின்
புனித உண்மை மறந்ததேனோ!

கொ. பெ. பிச்சையா.




















Thursday, 21 November 2024

தமிழ் வாழ்க!

பாயிரம் முயன்ற பழைமைத் தமிழே
ஆயிரங் காலங்கள் புதுமைத் தமிழே!
ஆழ்கடல் சூழ ஆண்டிட்ட தமிழே!
வாழ்வே நிலையென வாழுந் தமிழே!
வேண்டுஞ் செம்மை விளங்குஞ் செந்தமிழே!
உலகம் பழங்கிய முதல் மொழித் தமிழே!
பழகிட இன்பம் அழகிய தமிழே!
மொழிந்திட இனிக்கும் மும்மொழித் தமிழே!
வரைமுறை வகுத்த இலக்கணத் தமிழே!
இறைவனை வென்ற
இலக்கியத் தமிழே!
வாழும் நாளும் வளருந் தமிழே!
காலம் முதிர்ந்த கன்னித் தமிழே!
மேலும் செழித்து வாழ்கத் தமிழே!வாழ்கத் தமிழே!

கொ. பெ. பிச்சையா.