Tuesday, 15 April 2014

எழுதாக் கடன்.

எழுதாக் கடன்.

அம்மையப்பா ஆதா மேவாளோ!
இம்மை ஈட்டிய உண்மை ஊழியமோ!
எழுதாக் கடனை ஏந்திய ஐசுவரியமோ!
ஒழுக்கம் ஓதம் ஔடதம் அவரோ!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தேடி அங்கென்ன உய்வம்.
இம்மையில் புண்ணியம் இவரடி பெய்வம்.
ஈட்டிய செல்வம் எல்லாம் செய்வம்.

உயிராய் எம்மை உலகினில் ஈந்து
ஊட்டிய உதிரம் உண்பதில் உவந்து
எல்லாம் நீயெனத் தன்னில் சுமந்து
ஏற்றிய ஒளியை போற்றுதும் நினைந்து.

ஒப்பிலாக் கருணை செப்பிலாப் பொறுமை
ஓம்பிய அருமை ஏங்கிய பெருமை
ஐதீகம் அதுதான் அவர்மடி உரிமை.
ஔவை மொழியின் அடங்கிய திருமை.

அம்மை யப்பன் அன்பை மறந்தால்
வெம்மைத் தீயிலும் வேகாது கிடப்போம்.
செம்மை வேறென்ன செய்நன்றி கடனாம்.
நம்மைத் தந்தாரை நலந்தந்து பெறுவோம்.

கொ.பெ.பி.அய்யா.








Sunday, 13 April 2014

முந்திப்பிறந்த சித்திரை.

சித்திரை

முந்திப் பிறந்த முன்னைத் தமிழே!
பிந்திய மொழிகட் கும்நீ அன்னையே!
உந்தன் ஒலியிலா எந்த மொழியுமே!
இந்த உலகினில் கண்ட திலையே!

நாள்கள் வாரம் வருடம் தான்.
கோள்கள் நேரம் பொருத்தம் தான்.
காலம் கணித்த தமிழே தான்.
ஞாலம் வழுத்தும் அறிவே தான்.

கருவிகள் அறியாக் கால மதில்
அறிவியல் அறிந்த சீல மதில்
வானம் ஆய்ந்த வல்லமை யதில்
ஞானம் சித்திரை உள்ளமை பதில்.

சித்திரை என்பதும் அறிவென் போம்
அத்தினம் மன்னுயிர் நிரையென் போம்.
புத்தியில் கணிதம் பூத்த தினம்
நித்தியத் தமிழின்னாள் போற்றுந் தினம்.

கூடி வாழச் சொல்லி சொல்லி
பாடி வந்த சித்திரையே!
கோடு இல்லா உறவு கொண்டும்
ஓடி வாயேன் இளந்தமிழே!

சித்திரை போற்றுதும் சித்திரை போற்றுதும்.
முத்திரை போன்றதும் சித்திரை போற்றுதும்.
தமிழெனத் தயவென தகையெனப் போற்றுதும்.
அமிழ்தென அறிவெனச் சித்திரை போற்றுதும்.

கொ.பெ.பி.அய்யா.




Tuesday, 8 April 2014

மழையே வா....குழந்தைப்பாடல்

மழையே வா!{குழந்தைப் பாடல்)

மழையே மழையே வா மழையே!
மண்ணில் ஈரம் தா மழையே!
விளையும் நிலத்தை சேறாக்கு
உழைக்கும் மனிதற்கு சோறாக்கு.

கோடி கோடிக் கால்கள் கொண்டு
கூடி ஆடு மழையே நன்று .!
வாடி வறண்ட நதிகள் நிறைந்து
ஓடுங்கள் நீங்கள் கரைகள் புறண்டு.

வானில் மிதக்கும் மேகங்களே ஏன்
வீணில் சுமக்கும் நீராவி தான்
கானில் குளிர்ந்து கொட்டுங் களேன்
மாநிலம் செழிக்கச் செய்யுங் களேன்

கைகள் கோர்த்து ஆடலாம் வாருங்கள்
மெய்கள் நனைந்து பாடலாம் சேருங்கள்.
காகிதக் கப்பல்கள் போகுது பாருங்கள்.
கடலுக்குள் சேருமுன் அணைகட்டி காருங்கள்

மழைபெய்த நீரெல்லாம்
மண்ணுக்குள் புதையட்டும்.
நுழைந்துமே ஊரெல்லாம்
தண்ணிக்கு செழிக்கட்டும்.

ஆறெல்லாம் அணைகட்டி
காடெல்லாம் கழனியாய்
நாடெல்லாம் வளமாக
நாம்வாழ்வோம் நலமாக.

எந்திரவிசை.


எந்திர விசை.{குழந்தைப் பாடல்}

ஊஞ்சல் ஏறிக் குந்துவேன்.
ஊன்றிக் காலைத் தரையிலே
உதைத்து முன்னே உந்துவேன்.

உந்து விசை தள்ளுது.
ஊஞ்சல் முன்னே செல்லுது.
சென்று முனையில் திரும்புது.

அப்பா இழுத்து விடுகிறார்
அந்த விசையில் ஓடுது.
அழகு ஊஞ்சல் ஆடுது.

ஆடி ஆடித் தானாவே
ஆடும் வேகம் குறையுது
ஆட்டச் சொல்லி நிக்கிது.

தள்ளு விசை  முன்னேயும்
ஈர்ப்பு விசை பின்னேயும்.
அள்ளும் ஆசை ஊஞ்சலாம்.

கொ.பெ.பி.அய்யா.



சின்ன சின்ன நட்சத்திரம்.

மின்னும் நட்சத்திரம்.

சின்னச்சின்ன நட்சத்திரம்
விண்ணில் மின்னும் நட்சத்திரம்.
என்ன நீ அதிசயம்.

எனக்கும் மேலே எத்தனை தூரம்?
என்னோட உலகில் என்னைப்போலே
உன்னோட வானில் வைரம் நீயோ!


கொ.பெ.பி.அய்யா.

Monday, 7 April 2014

முன்னை ளுதல்வனே!

முன்னை முதல்வன்

முன்னை முதலோனே மூஞ்சூர் வாகனனே!
அன்னை முகம்போலே பெண்ணும் தேடுபவனே!
உன்னைத் தீண்டாது ஊழ்தோற்றான் சனியனோ
என்னையும் அண்டோனோ உன்னைவலம் வந்தேனே!

வேழ முகத்தானே வேலன் மூத்தோனே
ஞால முதல்வனே ஞானப் பழத்தோனே
வாழும் உயிர்யாவும் போற்றும் அருளோனே
ஆளும் தொழில்கூட்டும் யோகப் பொருளோனே.

வினைகளுக் கெல்லாம் விநாயகப் பெருமானே!
துணைசெயுந் தெய்வம் !.
கணங்களின் பதியே கணபதி உனையே
குணங்களில் பதிந்தால் குறையொன்று மிலையே!

ஈசனின் மைந்தா நாசங்கள் நைந்தா
வாசல் அமைந்தால் மோசங்கள் தீண்டா.
ஆசான் உனதருள் வாசகம் மெய்ப்பொருள்
தேசம் உணர்ந்தால் நேசம் கைப்பொருள்.

கொ.பெ.பி.அய்யா.  




பணமா பிணமா?

பணம் பணம்

பணம் இருந்தாலே மணம் மணம்!
பணம் இல்லேன்னா பிணம் பிணம்.
பணமும் குணமும் பொருந்தா உறவு—நாறப்
பிணமானாலும் பணமிருந்தாலே கணம் கணம்.

உண்டியல் இல்லா கோவில்கள் இல்லை
உள்ளவன் நுழைவான் சன்னதி எல்லை
தண்டியல் தங்கத்தில் இளித்திடும் பல்லை—சுமந்து
தூக்கவும் கேட்பான் கட்டண வில்லை.

கைகட்டி நிற்பான் பணமில்லா ஏழை.
கடவுளாய்த் தொழுவான் பணமுள்ள ஆளை.
அணுவும் அசையாது அவனன்றி வேளை—ஒரு
பணமின்றி இசையாது பழகியும் வேலை.

கூடுதல் பணமே கோட்டையை பிடிக்கும்.
கொள்கையை விற்றும் குடும்பத்தை வளர்க்கும்.
சத்தியம் எல்லாம் சவக்குழி தள்ளும்—எதையும்
சாதிக்கத் துணிந்தால் சர்வமும் கொல்லும்.

மரணத்தைக்கூட மயக்கம் ஆக்கும்.
வர்ணம் மாறியும் வனப்பில் பூக்கும்.
இன்று நடப்பதை என்றோ மாற்றும்---ஐயோ
ஒன்றுக்கு மாகாததை நன்றெனப் போற்றும்.

கொ.பெ.பி.அய்யா. 



Sunday, 6 April 2014

தமிழ் கடவுள்.

தமிழே அழகே வாராய்.

தமிழே அழகே வாராய்.
அமுதே உயிரே வாராய்
உலகின் முதலே மொழியே –தமிழ்
நிலவும் இறையே வாராய்.

உயிர் பனியிரண் டெழுத்தினை
விழி பனியிரண் டெனக்கொண்டனை
அஃகெனும் மெய்யொற்று  சிறப்பினை

ஆயுதமாய்க் கைக்கொண்டாய் வேலினை

செந்தூர் திருவடி வேலவனே
சிந்தை நிறைஉறை ஆனவனே
வந்தருள் செய்வாய் கந்தனே-மனம்
நின்றென்னில் வாழ்வாய் குன்றனே.

தமிழ் சொந்தம் காக்க முருகா!
திருச் செந்தூர் ஆக்கின அழகா!!
சூரனை வென்ற வேல்  முருகா!--தமிழ்
வீரனாய் நின் ற வடிவேலவா.!
.
மலர்களாய் தாமரை ஆறாய்
மலர்ந்தாய் சிவனின் கூறாய்
அணைத்தவள் கார்த்திகை சீராய்—தமிழாய்
இணைந்தாய் அழகெனப் பேராய்.

இழிவெனச் சாதி இலையே
மலைமகள் வள்ளி கணவா.
கலந்தாய் குறக்குல மருகா—தமிழே
துணிந்தாய் கடந்தாய் தலைவா.


கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsuZv0Ix3CXzLeYQRMVeVNZXMWZ37cRQjzRCb2heslHV0KpxL17VD56gddm26VorPs1aYa0mNzw1GOhJ7iU1RHUI4WNRmmDnmTQdlKiSlJLzw110UATD3OzML8wzp6-5eqO_gjrtsJuqU/s1600/10168927_1488396028048291_433705842_n.jpg

சரணம் சபரிமலை.

சபரிமலை சரணம்

சபரிமலை வாழும் நீ
சாமி ஐயப்பா-உன்
சரணக்கலை நாடும் ஆ
சாமி நானப்பா.
பள்ளிக்கட்டுக் கட்டிக்கிட்டு
துள்ளித் துள்ளி ஆடிக்கிட்டு
சரணம் சொல்லி பாடிவாறேன்
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!

பதினெட்டு மலைதாண்டி
பதினெட்டுப் படியேறி
கதியென்று உனைவேண்டி
அருளென்று புகழ்பாடி’
உன்விரதம் ஏற்றுக்கொண்டு
உன்சபதம் போற்றிக்கொண்டு
சாதி மதம் மறந்துவிட்டேன்
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!

உன் சரணம் கூறிக்கொண்டு
உச்சிமலை ஏறிக்கொண்டு
எண்ணமெல்லாம் உன்னைக்கொண்டு
என்னிலுனைக் கண்டுகொண்டு
தூயவனாய் நேயம் பெற்று
மாயையிலா மனிதம் பெற்று
சமத்துவத்தைப் பழகிக்கொண்டேன்
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!

சாமிசாமியே! சரணம்சரணமே!
சாமியெல்லாமே!சகலமெல்லாமே!
ஐய்யன்ஐய்யனே!மெய்யன்மெய்யனே!
அகிலமெல்லாமே!அன்பிலெல்லாமே!
துளசிமாலை சத்தியமா சொல்லுவேன்.
கழட்டினாலும் நிச்சயமா கொள்ளுவேன்.
சாமியாத்தான் வாழ்ந்தும் காப்பானே!
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா!சாமி ஐயப்பா!

கொ.பெ.பி.அய்யா.



Friday, 4 April 2014

கண்ணாடி

கண்ணாடி

கண்ணாடி என்னதான்  காட்டுது?
முன்னாடி உண்மைதான் பேசுது.
பண்ணாடி உன்னிடம் மாட்டுது.
பின்னாடி எண்ணிடம் கூசுது.

அகத்தினில் உள்ளதை வரையுது
முகத்தினில் சொல்வதை நிறையுது.
நிசத்தின் உன்முகம் மறையுது.
வசத்தின் உன்னகம் கரையுது.

எண்ணம் குளிர்ந்த உணர்ச்சியை.
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை.
வண்ணம் கவர்ந்த நெகிழ்ச்சியை
சொல்லும் வதனம் மலர்ச்சியை.

இன்பம் துன்பம் எதுவாலும்
எண்ணும் வண்ணம் இரண்டாலும் 
இதயம் உள்ளும்  வகையாலும்
எழுதிச் சொல்லும் முகத்தாலும்.

கோபம் தாபம் குணங்களில்
குழம்பிக் கிடக்கும் அவசரத்தில்
பாவம் புண்ணியம் தெளிவதில்
ஆர்வம் முன்னம் முகவரியில்.

தெளியா மனதினில் தேடாதே!
விழியா உணர்வினில் ஊடாதே!
புரியா மொழியினில் பாடாதே!
அறியா முகத்தினில் கூடாதே!

கண்ணாடி முன்னின்று தனைத்தேடு!
தன்னாடி தன்னின்று தனையூடு!.
எண்ணாடி எண்ணின்று தனைப்பாடு!.
ஒண்ணாடி உண்ணின்று தனைக்கூடு.

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglR6OjOme3gtDfmhw5ofd4mClBjU-e7x_47cEjKQ4CbDiVFD_wtwN4wH1nXJwyWUfKG3FDzNsc04bI2UMZSmQPGkd-TzxcF_fv9dszpawNIWLfCvaS8C98IKdi0yYi6L-0W1G8V9sEsEs/s1600/images+(18).jpg