Sunday, 29 November 2015

அலையும் மலையும்.

எழுக!நிமிர்க!

இமயம் கூட எதிரில் பணியும்
சமயம் தேடி சமரில் முனைந்தால்.
எழுந்து நிமிர்ந்தால் எதுதான் துணியும்.
விழித்து வரிந்தால் விதிபோம் பயத்தால்.

எண்ணும் கருமம் எதுதான் கடினம்
முன்னம் தெளிந்து முடிக்கும் துணிவில்.
கண்ணும் கருத்தும் கடமை கவனம்
வண்ணம் நிறுத்தும் வடிக்கும் விளைவில்.

ஆகும் செயலே அவனியில் எல்லாம்.
வேகும் பொருளே வினையில் தொடர்ந்தால்.
மோதும் அலையே முயலும் திண்ணம்
போகும் மலையே பொடிந்தும் கரைவில்.

துடிக்கும் திறனே தொழிலும் படிக்கும்
வெடிக்கும் வெறியும் விரிக்கும் பயில்வில்.
முடிக்கும் மனமே முடுக்கி முடிக்கும்
இடிக்கும் தினவும் இயங்கும் அறிவில்.

கூர்ந்த பதிவில் குவியும் வினையும்
நேர்ந்த தெரிவில் நிறையும் முடிவில்.
தீர்ந்த ஐயமும் தெளிந்த ஞானமும்
ஆர்ந்து விளங்கும் அகிலம் பயனில்.

கொ.பெ.பி.அய்யா.


Monday, 16 November 2015

வேஷம் தெரியாதா.




ஊருக்குத் தெரியாதா?

ஊருக்குத் தெரியாதா-உன்னை
யாருண்ணும் புரியாதா-நீ 
போடுற வேசமும் ஆடுற நாடகமும்
பார்த்துதான் சிரிக்காதா!
பட்டதும் நினைக்காதா!

என்னென்ன பொய்யெல்லாம்-பாவி
இன்னும்தான் சொல்லுவ--உனக்கு
கண்ணென்ன நொள்ளையோ எண்ணமும் இல்லையோ
மனசும்தான் பேசாதா!
மனுசந்தான் நீதானா!

முன்னாடி பின்னாடி--பாரு
உன்னைத்தான் கண்ணாடி--கூறு
என்னதான் சொல்லுது சொன்னதும் உள்ளது.
ஊரேதான் கண்ணாடி
கூறாது பொய்யாடி.

கிழிஞ்சிறிச்சி வேட்டிரெண்டா--மானம்
அழிஞ்சபின்னும் வெக்கமுண்டா-தர்ம
வேலிதாண்டித் திருடியதும் வேட்டியப்போ கிழிஞ்சதும்
பார்க்கலையோ ஊருதான்
நாக்கில்லையோ பேசத்தான்,

வாசம்நீ பூசினாலும்-பொய்
வேசம்நீ போட்டாலும்.--அது
வாடிப்பின் நாறாதோ!வக்கனையும் கூறாதோ!
ஊரென்ன பாப்பாவா!
நீயென்ன மாப்பாவா!

அண்ணனும் போவதெப்போ--குந்தத்
திண்ணைகாலி ஆவதெப்போ--இந்த
எண்ணம்தான் எவருக்கும் எண்ணத்தில் சுத்தமில்லை
நம்பிவாழ நீதமில்லை
தம்பியாரும் அண்ணனில்லை.

கொ.பெ.பி.அய்யா.



Thursday, 12 November 2015

அம்மாதான் ஆரம்பம்.


அன்பின் பரிசு.

பாப்பா பாப்பா நீ சொல்லு
பாடம் முதலில் “அ” சொல்லு
அம்மாதானே ஆரம்பம்
அவளைப் போற்றி நீநில்லு.

இருக்கும் காலம் ஈடில்லை.
உனக்குள் ஊக்கம் ஊறில்லை.
எண்ணம் ஏக்கம் ஏறுமுகம்
ஐந்துள் அடக்கம் அன்னைமுகம்.

ஒழுக்கம் ஓதும் நன்பாடம்
விழுப்பம் ஆகும் பொன்போலும்.
ஔவை மொழியே செவ்வைநெறி
பவ்வியம் பழகி அவ்வழியறி.

பிறக்கும் நாளே பரிசாக
பெற்றால் தாயே உனையாக..
பரிசும் தந்தாள் அம்மாவும்
பதித்து முத்தம் அன்பாக.

மருத்துவம் தானே தாயவளே!
கருத்தும் காப்பும் நீயவளே!
வருத்தும் கல்வி தாயவளே!
பொருத்தும் செல்வம் நீயவளே!

அம்மா என்றால் அன்பேதான்.
அன்பே தெய்வம் அவளேதான்.
அவளே வாழ்வின் ஆதாரம்.
அவளொரு பிறவி அவதாரம்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 11 November 2015

காத்துக் கிடப்போம்

யாமேன் காத்துக்கிடப்போம்!

காத்துக் கிடப்போமோ!
காசுகவி செய்வோமோ !
அகங்கொண்டால் ஏற்றுக்கொள்!
திகட்டினால் விட்டுவிடு!

அழைத்தால் நுழைகிறோம்
அடைத்தால் கலைகிறோம்.
எமக்கில்லை நட்டம்!
உமக்குத்தான் கட்டம்!

வேலையென்றா எண்ணுகிறோம்!
யாரைக்கொண்டு வாழுகிறோம்?
உழுதுவிதை ஊன்றத்தான்
எழுதுகடன் ஆற்றுகிறோம்..

வந்ததும் எழுதத்தான்
தந்ததும் எழுத்தாணிதான்.
எந்தநாள் அவனறிவான்.
அந்தநாள் அடையத்தான்.

கொ.பெ.பி.அய்யா.

காதல் எளிதல்ல.

காதல் வெல்லும்.

காதலது எளிதல்ல
கந்தனவன் சளைக்கவில்ல
காதலை வென்றெடுக்க-முருகன்
சாதித்ததும் கொஞ்சமல்ல.!

வேடனாய் மானைத்தேடி
வேலனாய் மாதைப்பாடி
கண்டதும்  வள்ளிநாடி-பட்ட
கட்டங்கள்  எளிதல்ல!

கொள்ளிமலை கானகத்தில்
வள்ளியிடம் நெருங்கருகில்
தள்ளாடுங் கிழவனாக-செந்தூரன்
தரித்தவேடம் எளிதல்ல!!

ஏலேலங் காட்டுக்குள்ளே
எத்தனையோ அவலங்கள்!.
நம்பிராசன்  நாட்டெல்லை-கார்தியன்
நம்பியதும் எளிதல்ல.

தும்பிக்கையான் புண்ணியத்தில்
தோற்கவில்லை அக்ககாதல்.
நம்பிக்கை இருந்தாலும்-துணிந்த
நையான்டி எளிதல்ல!

ஏளனங்கள் எத்தனை!
இழிவுகள்தான் எத்தனை!
இறைமகனே ஆனாலும்-அழகன்
வென்ற காதல் எளிதல்ல!!

உறுதியான  காதலுடன்
இருத்தித்தான் நின்றிட்டால்
குமரன் துணை செய்திடுவான்--தான்
கொண்டகாதல் காத்திடுவான்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 8 November 2015

தனித்தமிழ்

தனித்தமிழ்.

ஒலி பிறந்த பொழுதே
தமிழ் பிறந்தது-அது
மொழியெனப்  பலவாய்
உலகம் விரிந்தது.

இயற்கை கடைந்த இசைக்கும் அமுதம்
பயிற்சி கடந்தும் பழகும் தமிழும்
இயக்கம் தனித்தும் இனிக்கும் நிலைக்கும்
முயன்றும் கலப்பும் முயற்சி பழிக்கும்.

புண்ணியம் சேர்க்கும் பொதிகை மரபே!
தன்னியம் காக்கும் தமிழின் வரவே!
அந்நியம் நோக்கும் அவலம் துறவே!
மண்ணியம் தேக்கும் மணந்தான் உறவே!

மயக்கம் விரிக்கும் மடமை ஐயோ!
வியக்கும் தமிழை விலக்கம் உய்யோ!
பயக்கும் அறிவும் படியா தமிழோ!
நயக்கும் பிறவும் நமதன்னை நிகரோ!

இப்படி நாமும் தப்படி ஆனால்
எம்மொழி வாழும் செம்மொழி தானால்.
கல்லா மொழியும் சொல்லால் மட்டும்
நில்லா தொழியும் கல்வெட்டு இட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

படித்தவர் பாடம் மறந்தார்.

படித்தவர் பாடம் மறந்தார்

படித்தவர் ஏனோ பாடம் மறந்தார்.
பாதை விலகியும் எங்கோ தொலைந்தார்.
படித்ததும் பொய்யோ!நடிப்பதே மெய்யோ!
பாவம் பழகி பழியும் சுமந்தார்.

கற்ற அறிவை விற்றும் வஞ்சமாய்
பெற்ற மனிதம் கெட்டும் லஞ்சமாய்
சுட்ட பணமதில் பட்டும் அடிமையாய்
செத்த மனமுடன் என்னடா முடிவாய்?

வேலைக்கு கூலி நாளும் கணக்கும்
நாளைக்கும் ஊதியம் சாகும் வரைக்கும்.
ஏழைக்கு என்ன வாழ்வில் இருக்கும்!.
ஊழல் உன்னால் சாவே பெருக்கும்.

தன்வயம் இல்லையோ! செய்கடன் செய்யவும்
பின்பயம் இல்லையோ! முன்கை நீட்டவும்
வெக்கம் இல்லையோ!பிச்சாந்தி கெஞ்சவும்
வக்கும் இல்லையோ!எச்சேந்தி ஒஞ்சவும்.

ஆறடி மண்ணும் ஆருக்கும் இல்லையே.
நீரடி சாம்பலும் பேருக்கும் மிஞ்சுமோ!
ஊரார் நோகத்தான் உழைப்பினை சுரண்டியே
நாறும் பிழைப்பினை நாடென்ன மணக்குமோ!

ஊசிப் போச்சடா தேசியப் பேச்சும்.
வீசும் மூச்சடா ஏழையர் ஏக்கம்.
கூச்சம் ஆச்சடா கூறத் தானடா!
வீச்சம் சீச்சீ வீணோ சுதந்திரம்!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 7 November 2015

காலம் தீண்டாக் கல்வி

காலம் தீண்டாக் கல்வி.

கல்வி சிறந்தொரு செல்வமும் உண்டோ!
காலமும் தீண்டாத கற்பகம் அன்றோ!
ஏவும் அதிகாரம் எழுந்தும் கைதொழும் 
நாவில் கலைமகள் நடனமும் கண்டோ!

தின்னவும் தூங்கவும் தேவையோ பிறவி!யும்
மண்ணிதில் தாங்கலும் மாளவோ முடிவிலும்
பயனென்ன செல்வமோ பாடையில் ஏறுமோ!
பயனாகிக் கல்விபோல் புகழ்பின் கூறுமோ!

கற்றதும் கையுள் கடுகும் சிறிது.
கல்லாது விண்ணிலும் மண்ணிலும் பெரிது.
கற்றார் செருக்கு கனமது விடுத்து
பெற்றார் பயனை பெருக்குவீர் கொடுத்து.

நேருக்கு நேரஞ்சா ஊக்கமாம்.கல்வி
வேராய் விழுதுமாய் சோராதும் நல்கி
நிலவின் அழகாய் முகமும் மலரும்
ஒளிரும் சுடராய் அகமும் மிளிரும்.

எண்ணும் கல்வி வண்ணம் கற்று
எண்ணிய எல்லாம் திண்ணம் பெற்று
பொன்போலும் சொல்லென உன்போலும் யாரென
மண்ணிங்கு எங்குமே உன்புகழ் வாழ்க!

பயனுறக் கற்று நயனுறச் செய்க
பிறவியின் புண்ணியம் வரமெனச் சொல்ல.
நீராய் நிலமாய் நிறைவான் பிராணமாய்
தீயாக நீயாக தாயாக வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 5 November 2015

கல்விச்செல்வம்.

கல்வி.

கற்றதும் அல்லாது பெற்றதும் என்னவோ.
நிற்றலும் மண்ணது உளதோ-கொற்றது
பற்றியும் தன்னது பக்கம் அமர்த்தும்
இற்றது முன்னது ஏதோ!

உறங்கவும் வீணா உணவுக்கும் தானா 
செறிந்த மனிதப் பிறவியோ-மண்ணில்
பிறந்தது மென்ன பயனுற வென்ன
பெறலின் செல்வமாம் கல்வி.

கற்றதும்  கைம்ண் கணக்கே தானும்.
பெற்றதும் சொன்னாள் பிராட்டியும்-கற்று
உற்றதும் தன்னே உயர்வும் அளவும்
மற்றவர் சொல்வார் மாண்பு.

தலைவழி வாசல் துணிவுறும்அறிவால்
புறம்பயம் பேசல் பொசுக்கி-அறமே
எழுந்தொளி ஞானம் எழிலாம் வெளிச்சம்
முழுநிலா முகமாம் மலர்.

கற்றது நல்லிணை நட்டல் அறிவினை.
பெற்றதாம் பேறினையும் பிறவி-மற்றெல்லாம் 
வெற்றணை வீணாய் வெறித்த தரிசதாய்
வற்றிய விறகாய் உடல்.

செல்வம் விற்றும் கல்வி கற்போம்.
உள்ளும் எல்லாம் கொள்ளும்-யாவும்.
செல்லும் எங்கும் சொல்லும் செல்லும் 
வெல்லும் ஏற்றம் போற்றும்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 4 November 2015

தேவர்திருமகன்.

தெய்வத் திருமகன்.

தெய்வத் திருமகன் தீரமுத்து ராமலிங்கம்
உய்வித்த நாடிது ஒன்றென வாழ்வதிங்கும்--அவர்
செய்வித்த சீரருமை செய்கடன் காப்பதென்றும்
கைவைத்து சத்தியம் கடமையெனக் கொள்வமென்றும்.

உடல்தான் தேசியம் ஒன்றா முணர்வால்
உயிர்தான் தெய்வீகம் உள்ளு மறிவால்-அறிந்து
விவேக மற்றவீரம் வீணவனும் கோழையென்பார்
வீரமிலா விவேகம் வெற்றவன் மூடனென்பார்

சமத்துவ நாடாய் சமைத்திடப் பாடாம்
அமைப்பதில் முன்னோடி அவர்மூதைத் தேடதாம்--கட்டாயம்
தொகுத்த முப்பத்தாறு தொல்வயல்ப் பட்டிகளை
பகுத்தும் கொடுத்தார் பரமத்தலித் பாமரர்கை .

பக்தியெனும் சத்தியமும் பற்றியவர்  தூயவர்
முக்தியிங்கே கண்டவர்தான் முற்றிப்பசும் பொன்னாரும்--தெய்வமுன்
கீழோரேன் மேலோரேன் கேள்விதான் பாவமேன்?
தாழுடைத்து மீனாள்முன் தான்சமூக நீதிசெய்தார்.

குற்றப் பரம்பரைச் சட்டமதன் கட்டவிழ்த்து
பெற்றவினம் முக்குலமும் பட்டஇழி முற்றழித்து-மேலும்
கற்றுவளம் பெற்றுயர உற்றவழி தான்வகுத்து
உற்றதினம் வந்தநாளே விட்டுடல் தான்பறந்தார்.

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:--கட்டு+ஆயம்=கட்டாயம்.(ஆயத் தீர்வை கட்டப்படும் நெல்விளையும் நன்செய் வயல்கள்)

பட்டிகள்--சொந்தமான பண்ணைக் கிராமங்கள்.

Monday, 2 November 2015

எங்கே சொர்கம்.

எங்கே சொர்க்கம்.!

படிக்கப் படிக்கப் படித்ததும் தானே
படிந்தும் மனதிலும் பாடம் விளங்கும்.
நடப்பும் அறிவில் நடுவதும் தானே
படிப்பும் பயனும் ஆகும். 

பாடிப் பயின்றும் பழகிடும் பாட்டதும்
கூடி முயன்றும் குலவிடும் ஊற்றதும்
தேடித் திரளசைத் தேனாம் குரலிசை
நீடி நிறைக்கும் நெஞ்சம்.

வடிக்க வளரும் வரைவிலும் ஓவியம்
படிக்க மிளிரும் வண்ணமும் காவியம்.
செதுக்கத் துலங்கும் சிலைபோல் கலையாம்.
பதிக்கக் கவிதை பாடு.

ஊடிக்  கூடும் இன்பம் காதல்
கூடி வாழும் அன்பாம் வாழ்தல்.
தேடித் தேடும் செல்வம் ஈதல்
நாடும் ஞாலம் சொர்க்கம்.

கொ.பெ.பி.அய்யா.

காதல் இதுதான்.

காமம் அஞ்சுமோ!

ஆணென்னப் பெண்ணென்ன! ஆன்மா
கலந்தது பின்ன--கலப்பில்
நீயென்ன நானென்ன! கூடத்
தயக்கமு மென்ன!

நாணமும் பேணுமோ!ஈருயிர்
தானுருகிய பின்னே-கூடவும்
வேளையென்ன நாளென்ன! வாழவும்
சாத்திரமென்ன!

மண்ணெண்ன விண்ணென்ன! ஒன்றில்
ஒன்றான பின்னே--எண்ணும்
எண்ணென்ன சொல்லென்ன!மறைக்கும்
காம மென்ன!!

காமமென்ன காதலென்ன!கலந்து
நிறைந்த பின்னே--உருவில்
ஆளுமென்ன பேதமென்ன!அச்சமும்
கூச்சமு மென்ன!

ஊழென்ன கோளென்ன! காதல்
ஆண்டதும் பின்னே--நேரும்
வாழ்வென்ன சாவென்ன! இதனினும்
வேண்டுவ தென்ன!

கொ.பெ/பி.அய்யா