Thursday, 26 December 2013

ஒரேஓரு சொல்.

ஒரே ஒரு சொல்!

மற்றாரைக் கடியும் குற்றமும்
உற்ற தன்னிலும் தேடவேண்டும்..
நற்றவர் உணர்த்தும் சொல்லிலும்
கற்றும் தன்னைத் தேறவேண்டும்.

உணர்ச்சி ஊட்டும் மயக்கமோ!
உள்ளறி வதுதான் இழக்குமோ!
சினமே மீறிக் கொட்டியபின்
மனமும் மாறி  அழுவதேன்?

விட்டக் கல்லும் விலகிடுமா?
சுட்டச் சொல்லும் பழகிடுமா?
பட்ட மானந்தான் ஆறிடுமா?
கெட்ட ஞானந்தான் தேறிடுமா?

ஒரே சொல்தானே கேட்டது
கூறாய் அம்பாய் தைத்தது !
வருடங்கள் வளர்த்த சொந்தமோ
ஒருநொடியிற் பட்டு மாய்ந்ததோ!

மீண்டும் கூடிப் பழகினாலும்
ஆண்டும் ஓடிக் கடந்தாலும்.
சீண்டிய புண்ணது ஆறிடுமா?
தீண்டியச் சொல்லது மாறிடுமா?

சொல்லுக் கென்ன வலிமையோ
சோதிக்க மறந்து வீசியதோ!
அள்ளி விதைத்த வேகமோ!
உள்ளது தைத்த காயமோ!

கொள்ளும் விடமும் தீரலாம்.
முள்ளின் தடமும் மாறலாம்.
சொல்லின் ரணமோ சோராது.
உள்ளின் பொழுதெலாம் நீராது.

நித்தம் பார்க்கும் முகந்தானே
குற்றம் நெஞ்சில் வறுத்தாதோ!
முற்றும் அழியா வடுவன்றோ!
செத்தும் ஒழிந்தும் விடிவுண்டோ!

நேரும் நேரே சந்திக்கும்
வேளை நாணி நிந்திக்கும்.
கண்கள் கோணிக் கூசியும்
கால்கள் தானே தடுமாறும்..

முட்டாள் தனத்தின் ஒரு சொல்லே!
குத்தும் தினமும் முனை முள்ளே!
நட்டால் உறவினித் தழையுமோ!
பட்டால் மனந்தான் நிறையுமோ!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment