Wednesday, 25 December 2013

பக்தியின் பலவீனம்

பக்தியின் பலவீனம்!

முக்தியை விளக்குவார்
பக்திக்குள் ஒளிந்திருப்பார்.
சக்தியின் வேடங்கொள்வார்.
புத்தியில் மோசம் செய்வார்..

மாலைகள் சூடுவார்
மந்திரங் கூறுவார்.
சேலைகள் கண்டாரானால்
சிங்காரம் பாடுவார்.

சாமியென்று கூறுவார்
தேவியென்று ஆடுவார்.
ஆவிகள் ஓட்டுவதாய்
கோபியரைக் கொஞ்சுவார்.

சாந்தியும் கிடைக்குமென்பார்.
சாந்திக்குக் கதவடைப்பார்.
சாந்தியாம் முகூர்த்தம் செய்து
வாந்திதான் ஊற்ற வைப்பார்.

கடவுளும் நானென்பார்.
காணிக்கை தாவென்பார்.
மடமையை ஊட்டிவிட்டு
மாற்றித்தன் அடிமை செய்வார்..

கருநாவிற் கடவுளின்
திருநாமம் செப்புவார்.
வரவாக்கி அடியாரென
வருமானம் திரட்டுவார்.

ஆட்டம் பாட்டும் பரவசம்.
ஆணும் பெண்ணும் பலவசம்.
ஈசுவரமைதி அடைக்கலம்.
ஆசிரம சமாதி கிடைக்களம்

கோடிகளாய் செல்வங்கள்
குவியுது போலியிடம்
பக்தியெனும் பலவீனம்
பயன்படுத்தும் தந்திரம்...

படித்தநல் முட்டாள்களும்
பாசாங்கை நம்பிடும்
வருத்தும் பாவங்களும்
வேசமிட்டு ஆடாதோ!

இடிந்த கோவில்களாய்
இதயங்கள் இருண்டதால்
உணர்ந்த பக்தி மெய்யும்
உள்நுழையக் கூசுதோ!

மனிதரின் நம்பிக்கையை
மயக்கமென எண்ணியே
புனிதராகும் வேடத்தை
பொறுக்குமோ மெய்ப்பொருளும்!

எதுவரை போகுமோ
அதுவரை போகட்டும்!
வேடங்கள் கலைவதற்கும்
வெகுதூரம் நிலையாது..


கொ.பெ.பி.அய்யா,



No comments:

Post a Comment