Sunday, 25 May 2014

என்னது முடிசூட்டு!

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்
உன்னிடமும் இல்லை நியாயம்.       
சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.
சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி
கப்பல் விடும் சண்டாளன்
உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி
உற்ற திருஷ்டி பூசணிதான்.

செந்நீரில் குளம் நிறப்பி
செழிக்கக் குளித்தவன்தான்
காட்டேரி அவனேதான்--மனித
காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட
பாவம் என்ன செய்தாயோ!
வேதம் கற்ற நீ கூட—பாவம்
விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்
புகழ் இன்னும் கூடுமன்றோ!
பாவியரை அழைத்தாயோ!-தமிழ்
பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!
தமிழினம் வேண்டாமோ!
தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா
தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை
திடங்கொண்டு கொன்றவனை
கடன் என்று அழைப்பாயோ!-எம்மை
ஜடம் என்றும் நினைப்பாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?
நாங்கள் செய்த பாவம் என்ன?
எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்
எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று
பகல்கனவா கண்டிருந்தோம்.
ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்
அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!
எங்கள் தமிழ் ஆளுமோ!
அன்றுதான் பாரதம் –தமிழ்
அதிலும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.



Wednesday, 21 May 2014

ஆதிசக்தி அவதாரம்.


புதிய உலகம்.!

அம்மா வாராய் அம்மா வாராய்
ஆதி பராசக்தியின் அவதாரமே!
அம்மா வாராய் அம்மா வாராய்.
அனுப்பர் குலத்தின் ஒன்னம்மா வாராய்.!

எதிர்ப்போரின் செருக்கொடுக்கி
எல்லாம் வல்ல சக்தியாகி
அதிரும் எட்டுத் திக்கும் வெற்றி
அம்மா கெட்டி என்றாகி
அம்மா வாராய் அம்மா வாராய்
ஆதி பராசக்தியின் அவதாரமே!
அம்மா வாராய் அம்மா வாராய்
அனுப்பர் குலத்தின் ஒன்னம்மா வாராய்.!

இளைஞர் எல்லாம் தளபதிகள்
எதிர்காலம் இனியும் எம்கையில்.
ஊழல் களையும் ஊழியங்கள்
எமதெனச் செய்யும் அதிகாரங்கள்.
அம்மா வாராய் அம்மா வாராய்
ஆதி பராசக்தியின் அவதாரமே!
அம்மா வாராய் அம்மா வாராய்
அனுப்பர் குலத்தின் ஒன்னம்மா வாராய்.!

ஆணை பிறப்பது அம்மா கரத்தில்
ஆவன முடிப்பது உம் பலத்தில்.
தீமைகள் தீர்க்கும் இளைஞர் படை
தேவைகள் சேர்க்கும் மக்களிடை.
அம்மா வாராய் அம்மா வாராய்
ஆதி பராசக்தியின் அவதாரமே!
அம்மா வாராய் அம்மா வாராய்.
அனுப்பர் குலத்தின் ஒன்னம்மா வாராய்.!

காலம் மாறும் காட்சியும் மாறும்.
கோலம் நாளும் கூடியும் மிளிரும்.
வாலைக்குமரர் வேலை வளரும்.
நாளை எம் வசம் நாடே ஒளிரும்.
அம்மா வாராய் அம்மா வாராய்
ஆதி பராசக்தியின் அவதாரமே!
அம்மா வாராய் அம்மா வாராய்.
அனுப்பர் குலத்தின் ஒன்னம்மா வாராய்.!

சிந்தனை நிறைந்த எம்மவரால்
சீர்படும் உம்குலம் இந்நாளும்.
பிந்தனை இளைஞரின் கைகளிலே
புதிய உலகை வரையவே
அம்மா வாராய் அம்மா வாராய்
ஆதி பராசக்தியின் அவதாரமே!
அம்மா வாராய் அம்மா வாராய்.
அனுப்பர் குலத்தின் ஒன்னம்மா வாராய்.!

கொ.பெ.பி.அய்யா.
 — 

Saturday, 10 May 2014

மாய மான்.

ஏன்தான் மனிதன் இப்படி?

ஏன்தான் மனிதன் இப்படி இருக்கிறான்
எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
வீண்தான் பேசி விளக்கிட முயன்றால்
விளையும் பயனும் தெரியவில்லை.

நான்தான் தலைவன் என்றும் அவனவன்
நாடகம் எழுதி நடிக்கிறான்.
மான்தான் நிசத்தில் ஓடுது என்றே
மயங்கி நரியிடம் மாட்டுகிறான்.

தேன்தான் வாயில் ஒழுகுது என்றே
தேடியும் மனிதன் ஏந்துகிறான்.
தான்தான் வாழ மந்திரத் தலைவன்
தந்திரம் உதிர்ப்பதில் வீழுகிறான்,

பேன்தான் தலையில் மேய்வது கண்டே
பொறுக்கி நசுக்க யோசிக்கிறான்.
சாண்தான் வயிறெனத் தானும் பின்னே
சமரசம் ஆகியும் யாசிக்கிறான்.

ஆண்தான் பெண்தான் உண்மை யென்றால்
அதுதான் தன்மை உண்டென்றால்.
வான்தான் நமக்கு மேல்ஒன் றென்றால்
ஏன்தான் நாமெவற்கும் கீழென்றோ?

வான்தான் சாட்சி வைத்து வாழ்வதற்கு
வணக்கமும் இறைக்கன்றி வேறெவற்கு?
தான்தான் தர்மமென வாழ்வோருக்கு
தாயன்றி தெய்வமென துணையெதற்கு?


கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 7 May 2014

பாரதம் விழிக்கட்டும்.

பாரதம் விழிக்கட்டும்.

பாரதி கண்ட இளங் கண்ணே!-ஜெய
பாரதி கண்ட இளங் கண்ணே!
பாரதம் விழிக்கட்டும் உன் பின்னே!
சாரதி பாரதி அவன் தானே
ஆரெதிரில் நிற்பார் உன்முன்னே!

தர்மம் தெரிவதும் தூரம்தான்.
தடங்கல் கடப்பதும் நேரம்தான்.
கரடும் முரடும் பயணம்தான்
கண்டு தொடுவதும் கடினம்தான்.

மழைக்கும் முன்னே இடிமிரட்டும்
அதையும் தாண்டி அதுபொழியும்
களைக்குப் பயந்தால் விவசாயம்
களஞ்சியம் சேர்க்க உதவாதாம்.

பிள்ளைப்பேறும் கடுமைதான்.
இல்லை அதுபோல் கொடுமைதான்.
மரணம் அருகினில் இருந்தாலும்
மகவினைக் கண்டதும் மறந்துவிடும்.

பட்டினி என்பதும் பாவமடா.
பசிப்பது என்பதும் சாபமடா.
தட்டில் படையல் யோகமடா
தட்டிப்பறிப்பவன் நீசனடா.

வறுமை இல்லா வாழ்க்கையதை
வாழ உழைக்கும் கர்மமதை.
ஏழை இல்லா உலகமதை
நாளை எழுதும் தர்மம் அதை.

விடியல் கூடி வளர்கிறது.
விளங்கும் தர்மம் ஒளிர்கிறது.
பாவம் பதுங்கி ஒளிகிறது
சாபம் தீண்டி அழிகிறது.

தொடர்ந்தும் தர்மம் தோற்பதில்லை
கிடந்தும் தன்பணி  சோர்வதில்லை.
படர்ந்தும் பாவம் படும் வேளை
முடித்தும் நாட்டும் திருநாளை.

பாவியர் கூட்டம் பதறுதடா.
பாவ வலையில் கதறுதடா.
தேடலின் வேட்டை தொடர்ந்திடடா.
திசைகள் நான்கும் அதிருமடா.

தீரனின்ன் வடிவம் தீயாக—தேச
பக்தியின் படிவம் நீயாக
வீரபொம்மன் வாளாக
வினையது கொண்டு புறப்படடா!

கொ.பெ.பி.அய்யா.


Saturday, 3 May 2014

விளங்கா விளக்கம்.

விழியறியா வழி

விளங்காதவனை விளங்க வைப்பது வீண்வேலை.
விளங்கியவனை விளக்குவது வெட்டி வேலை
விளங்குபவனை விளக்கினால் அறிவு  வேலை.
விளங்கி நீ விளக்கினால் நல்ல வேலை.

ஆகாத காரியங்கள் தொடர வேண்டாம்
அறைகுறை ஞானம்கொண்டு தொடங்க வேண்டாம்.
ஆத்திரத்தில் அவசரமும் கொள்ள வேண்டாம்.
நேத்திரம் மூடிக்கொண்டு பயணம் வேண்டாம்.

பாத்திரம் அறியாமல் இணைவ தெப்படி?
வாத்தியம் பழகாமல் முனைவ தெப்படி?
வேகாத கல்லை ஏனோ வேக வைப்பாய்
வேகுமுன் பருப்பை ஏனோ இறக்கி வைப்பாய்.

இருமுனை தொடாத காதல் எதற்கு?
மறுமுனை அறியாத ஏவல் எதற்கு?
திருப்பங்கள் செய்யாமல் திருப்பு முனையா?
விருப்பங்கள் நிகழாமல் விளைவும் வினையா?

ஆகும் என்றறி வதையே ஆய்ந்து தொடு
ஆவதையும் அளந்தறிந்து தேர்ந்து எடு
விழியறியா வழிகளையும் விலக்கி விடு.
மொழியறிந்து செயல் வினையை முடுக்கி நடு.

கொ.பெ.பி.அய்யா.