Tuesday, 28 July 2015

எமனே உனக்கும் ஆளிலையோ!

எமனே உனக்கொரு சாவிலையோ!

எமனே உனக்கொரு சாவிலையோ!--பிரம்மன்
எழுதிய கணக்கிலும் நீயிலையோ!
துன்பம் என்றொரு துயரிலையோ!--பாழும்
துக்கம் கண்டொரு தயவிலையோ!

கலாமை போன்றொரு தூயோரை--பிறவி
தராமை ஆனாலும் பாவமிலை.
கொடுப்பது போலும் கொடுப்பாயோ!--பிடுங்கி
எடுப்பதும் ஏனோ மாயோனே!

சுமையோ கனமென இறக்கிவிட்டாய்.-இதுவும்
சுகமோ உனக்கென இறப்பு வைத்தாய்.
இமையென வாழும் சிலரேனும் --பூமியில்
இருப்பதில் உனக்கென்ன வலியேதும்?

பிறவி என்பதும் யார் கேட்டார்?--மனிதம்
இரங்கும் நெஞ்சும் யார் கேட்டார்?
உறவில் கூடும் விளையாட்டில்--பாவி
இறப்பில் முடியெனப் பிடிப்பாயோ!

பிறப்பும் இறப்பும் விதியென்பார்.--எதையும்
மறப்பதும் இயற்கை மதியென்பார்.
பிறப்பதும் ஒருநாள் சம்பவமே--மறவா
பொறுப்பினில் இறப்பும் சரித்திரமே!

சனனம் எதற்கு வேண்டாமே--கொடும்
மரணம் எதற்கு வேண்டாமே.
வாழ்வும் வலியும் வேண்டாமே----வீண்
வேலை இறைக்கும் வேண்டாமே.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 20 July 2015

விலாசம் மாறியது.

விலாசம் மாறியது.

மெய்யெழுதிச் சொன்னாரோ!
பொய்யெழுதி மறந்தாரோ!!.
மெய்யெழுதிக் கையணைய
பொய்யெழுதித் தூண்டலாமோ!

தபாலையே நோக்கி நோக்கி
தபால்காரர் சொந்தமானார்.
துபாய் வாழும் முன்னவரே!
தபாலினி எழுதாதீர்


கொ.பெ.பி.அய்யா.

ஒரு ராள் போதுமே!

ஒரு நாளே போதும்!

ஒரு நாளே போதும்
உன்னோடு--அந்தத்
திருநாளே சாவேன்
மண்ணோடு-பிறவி
நிறை நாள் ஆவேன்
என்னோடு.

நெஞ்சொன்றுதானே
உள்ளது--அதில்
நினைவொன்றுந்தானே
உன்னது-எனக்கு
மஞ்சமென்றாலுன்
மடியது--நீ
தஞ்சம் தந்தால்
தவமேது?

காற்றும் இடை தேடி
அலையுமோ!--அது
தோற்றும் புறம் ஓடி
தொலையுமோ!--குளிர
ஊற்றும் மழை நின்று
ஒளியுமோ!--நனைத்து
சூட்டு மடை ஒன்று
பொழியுமோ!

பாவம் சூரியன்
பார்ப்பானோ!--தானும்
தாகம் ஏறியும்
வேர்ப்பானோ!--காதல்
வெப்பம் தீர்க்க
வருவானோ!--தானே
வெப்பம் ஆறி
விழுவானோ!.

கடலும் வாழ்த்திப்
பாடிடும்---அலை
மடல்கள் வீசி
ஆடிடும்--இரு
உடல்கள் கூடி
இறுகிடும்--ஒரு
விடையே தேடி
மறுகிடும்.

நேரம் கூடியும்
நாள் வரும்--இனி
யாரும் கூறியும்
நாம் பிரியோம்--காணும்
ஊரும் பேசியும்
அலர் செய்யும்--மடல்
பேரும் வாசிக்கும்
மலர் கொய்வேன்.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 18 July 2015

இயற்கை மடியில்.

இயற்கை மடியில்.

சிறகுகள் வேண்டிப் பிறப்போம்.
பறவைகளாகப் பறப்போம்.
உலகம் ஒன்றே உல்லாசம்-கண்டு
உலாவியறிவோம் எல்லாமும்.

அழகின் சிரிப்பை பாரு !
அருவிகள் முழக்கம் கேளு!
ஆறுகள் ஊறும் காடு-வழியே
ஊருகள் சேரும் நாடு.

நீலக் கடலின் திரைகள்-
மீள மோதும் கரைகள்.
 சூழ ஆழி நிலத்தின்--அணி
சேலை நீல நிறத்தின்.

புல்வெளிச்  சோலை இலைகள்-
நெல்வயல் வாழை தழைகள்
தவழும் காற்றின் அலைகள்-ஓயா
நிகழும் நாட்டியக் கலைகள்.

ஓடும் முகில்கள் கூட்டம்.
ஆடும் மயில்கள் ஆட்டம்.
பாடும் குயில்கள் பாட்டும்-தவம்
தேடும் பரவசம் ஊட்டும்.

நீரும் காற்றும் இங்கே-
வேறு மாற்றம் எங்கே?
வாழும் கூட்டம் இங்கே-தேடி
மேலும் நோட்டம் எங்கே?

மலைகள் முகடுகள் தேடும்-
மாதவன் கைலை வீடும்.
நதிகள் இணையும் நாளும்--இங்கே
பதிகள் இறங்கி வாழும்.

இயற்கை மடியின் விரிப்பில்-
இறைவி அவளின் சிரிப்பில்-
அன்னை கொடுத்த பிறப்பில்-ஆஹா
தன்னை மறப்போம் அணைப்பில்.

கொ.பெ.பி.அய்யா..



Thursday, 16 July 2015

முன்னே பின்னே.

முன்னும் பின்னும்.

விழி தேடுகிறது முன்னே.
வழி ஓடுகிறது பின்னே.
ஒளி மின்னுகிறது முன்னே--எங்கோ
ஒலி இடிக்கிறது பின்னே.

வானம் விரிகிறது முன்னே.
தூரம் புரிகிறது பின்னே.
காலம் அழைக்கிறது முன்னே.--உடன்
ஞாலம் தொடர்கிறது பின்னே.

அனுபவம் நிகழ்வது முன்னே.
அறிவு அறிவது பின்னே.
அறிமுகம் ஆவது முன்னே--பட்டுப்
புரிமுகம் தீர்வது பின்னே.

அழகு ஈர்ப்பது முன்னே.
பழக நேர்வது பின்னே.
துலங்கும் தோற்றம் முன்னே--உண்மை
விளங்கும் மாற்றம் பின்னே.

மாயை மயக்கம் முன்னே.
தீயை மிதிக்கும் பின்னே.
ஆசை இழுக்கும் முன்னே--பெட்டிக்
காசை இழக்கும் பின்னே.

பொய்யன் பசப்பு முன்னே.
மெய்யன் கசப்பு பின்னே.
சொல்லின் இனிமை முன்னே--நட்பு
கொள்ளும் அருமை பின்னே.

வெயில் சுடுவது முன்னே.
நிழல் குளிர்வது பின்னே.
புயல் சுழலுது முன்னே--நல்ல
மழை பொழியுது பின்னே.

குழி தோணுது முன்னே
வழி காணுது பின்னே.
இடர் வருகுது முன்னே--நன்மை
தொடர் நிலவுது பின்னே.

இருள் மறைக்கும் முன்னே.
ஒளி விளக்கம் பின்னே.
மருள் கலைக்கும் முன்னே--இறை
அருள் நிலைக்கும் பின்னே.

கொ.பெ.பி.அய்யா.







வேறென்ன?

பறவைக்கென்ன பாரமோ!

ஆகாயம் மேலே ஆதாயம் கீழே.
ஆண்டவனாலே ஆடுவதும் வாலே.
எட்டும்வரைதான்  எல்லாமே நமதே.
எட்டாத உறவுக்கு எல்லாமும் பொதுவே!

பறவைக்கென்ன பாரமோ! பறப்பதுதான் தூரமோ!
சுமையென்ன சொந்தமோ! சுமக்கவென்ன மிஞ்சுமோ!
விழி காணும் காட்சியோ! வழிகாணும் வாழ்க்கையோ!.
ஒளிவென்ன தேவையோ! உடல் தேடும் மூச்சையோ!

சுற்றுஞ்சுழல் பூமியை சுற்றிவரப் பாடுவோம்.
எட்டிஎழும் வானத்தை தொட்டுவிடத் தேடுவோம்.
முட்டும்வரை உச்சியை முடிந்தமட்டும் ஏறுவோம்.
கிட்டவந்து மெச்சும்போது இறைவனடி ஆறுவோம்.

குழந்தையாய் வந்த போதும்
அழுகை மட்டும் கொண்டு வந்தோம். 
உலகை விட்டுப் போகும் போதும் 
அழவைத்தே போகிறோம்.
நோய் தந்தோம் தாய்க்கு
வாய்க்கரிசிதான் போட்டோம்.
பாய் தந்த மனைவிக்கு
நோய்தானே தந்தோம் வேறென்ன!

கொ.பெ.பி.அய்யா.





























































































































































































































Tuesday, 14 July 2015

அய்யன் காமராஜர்

அய்யா காமராஜா!

அய்யா காமராசா!--எங்கள்
அறிவே காமராசா!
மெய்யே நீ ராசா--தமிழ்
பிறப்பே காமராசா!

ஆட்சியின்னா ஆட்சி--நீ
ஆண்டதுதான் ஆட்சி.
அழுக்கில்லாத ஆட்சி--அது
வெளுத்த மனசாட்சி.

நேர்மையின்னா நேர்மை--தூய்மை
நிறை குடத்து நேர்மை.
கூர்மையான நேர்மை--சொல்லக்
குறை படாத நேர்மை.

நீதி காத்த இராசன்--தமிழ்
சாதி காத்த இராசன்.
வெள்ளம் காத்த இராசன்--அணைத்து
பள்ளம் சேர்த்த இராசன்.

கண் திறந்த சாமி--மக்கள்
எண் நிறைந்த சாமி.
பஞ்சம் தீர்த்த சாமி--எங்கள் 
பசுமை தந்த சாமி.

தூய்மையான துறவி--அன்புத்
தாய்மைபோல உறவி.
சேய்மையாக மறுவி--பிறக்க!
வாய்மைமறு பிறவி.

கொ.பெ.பி.அய்யா.

நல்லாத்தான் நம்மநாடு.

நல்லாத்தான் இருக்குதுங்க!

ரொம்ப--
நல்லாத்தான் இருக்குதுங்க
நம்ம நாடு--சும்மா
சொல்லாத்தான் சொல்லுவாங்க
--தெருவோடு.
பொதுநலமா பேசத்தான் ஆளு
ஒருத்தரும் இல்லீங்க--எல்லாம்
பொய்யாத்தானே திரிக்கிறாங்க
பாவிப் பசங்க.

நன்மையொண்ணு நடந்தாலும்
நக்கல் செய்வாங்க--நடப்பு
உண்மையின்னு இருந்தாலும்
உள்டா சொல்வாங்க.--மெச்சத்தான்
பேரெழுதி பெருமை பேசவே
ஊரழைப்பாங்க---பழைய
தேரிழுத்து தெருவில்விட்டு
மாரடிப்பாங்க.

பெருமையாத்தான் பேசுறாங்க
பெண்ணப்பத்தீங்க--ஆனா
போதைக்கான பொருளாத்தான்
எண்ணுறாங்க--நம்ம
தாய்நாடாம் தாய்மொழியாம்
வாயளப்பாங்க--பொம்பள
தலைவியாகத் தலையெடுத்தா
தட்டிவப்பாங்க.

அடுத்தவனை வாசம் புடிச்சு
ஆராயுவாங்க--பாவி
அவனுக்குள்ள வீசும் வீச்சம்
அறியமாட்டாங்க--எவனும்
மத்தவந்தான் யோக்யனா
வாழனும்பாங்க--ஆனால்
தானதற்கு யோக்யனா
எண்ண மாட்டாங்க.

ரொம்ப--
நல்லாத்தான் இருக்குதுங்க
நம்ம நாடு--ஆனால்
நாட்டுப் பற்று மறந்துவிட்டு
ஒளக்கிறாங்க--எதையும்
பொதுநலமா பேச ஆளு
ஒருத்தர் இல்லீங்க--எல்லாம்
பொய்யாத்தானே திரிக்கிறாங்க
பாவிப்பசங்க.

கொ.பெ.பி.அய்யா.



Monday, 13 July 2015

பெண்ணுக்கும் தேவை மடிக்கத்தி.

மடிக்கத்தி!

மாதராய்ப் பிறப் பதற்கோ
மாதவம் செய்தரோவென
ஏங்கிய கவிஞரும் விரும்பி
மாதராய்ப் பிறப்பரோ இன்று..
மகளீர் படுந் துயரங்களை
மனந் தாங்கிக் கொள்வரோ!

மகளீர் தின நாளென்பார்
மகளீர்க்கோ மகிழ்ச் சியில்லை.
மகளீரும் மனித ரென்றே
மதிக்கத் தெரியா நாய்களால்..
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடுவரோ!

ஆசைப் பொருளோ மாதரும்?.
அலையும்  வேசைப் பயல்களே!!
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறதே!
வெறி நாய்கள் ஒழிப்போமே
வேலு நாச்சி எழுமுன்னே.

கொ.பெ.பி.அய்யா.