Wednesday, 25 December 2013

இதுதான் காதலா

இதுதான் காதலா!

எவளையோ என்னான்மா
எந்நாளும் தேடுதே.
அவளோ இவள்!

மாதைக்க் கண்டதும்
மனதுக்குள் என்னுயிர்
ஏதோ சொல்கிறதே!

கண்டு கொண்டதோ
கணித்த விடையதனை!
கண்கள் கசிவதேனோ!

ஆயிரம் பெண்களில்
அவள் மட்டும் மின்னுகிறாள்.
மாயம்தான் என்ன!

அவளே அவளேயென
அவளிடம் தொலைகிறேன்.
இவனிடம் நானில்லை.

எனக்கும் இவளுக்கும்
ஈர்ப்பு இருப்பது போல்
கணக்கும் புரிகிறதே!

பூர்வ பந்தமொன்று
புதுப்பிக்க மலர்வது போல்
ஆர்வம் பூக்கிறதே!

பிறந்தவள் எனக்கென்றோ
பறந்தவள் வந்தாளோ!
இறைசொல் கேட்கிறதே!.

தேடிய புதையலது
கூடி வருவது போல்
மூடித் திறக்கிறதே!

தொலைந்த சொந்தமொன்று
அலைந்து கிடைத்தது போல்
தழுவத் துடிக்கிறதே!

உள்ள பொருளொன்று
ஒப்படைக்கப் பெற்றது போல்
உள்ளந் துள்ளுதே!

எவளிடமும் இல்லாதது
இவளிடம் இருப்பதென்ன?
அவளோ இவள்!

ஏனிந்த அதிசயமான
இராசயனக் கிரியை!
நானின்னும் அறியாதது!

ஏனிந்தப் பிரளயம்
இவளால் நிகழ்ந்தது?
இதுதான் காதலோ!

இப்படி யொரு விபத்தை
ஏற்படுத்திய இறைவனே!
இருக்கிறாய் நம்புகிறேன்.


கொ.பெ.பி.அய்யா





No comments:

Post a Comment