Tuesday, 31 December 2013

ஆடும் வண்டு.

ஆடும் வண்டு!

சாயம் பூசியும் உதடுகளை
காயம் செய்யாதே நீயுமே!
நேயம் வாசித்துன் இதழ்களை
சிவக்க வைப்பேன் நானுமே!

மையும் வரைந்துமே புருவங்களை
பொய்யும் செய்வதேன் நீயுமே!
மெய்யில் சாய்ந்தென் விழிகளால்
பைய வரையுவேன் நானுமே!

சாந்து இட்டுமே நெற்றியிலே
சாயத் தயக்கமோ நீயுமே!
முகர்ந்து முத்தி முத்திரையாக
பகர்வேன் பொட்டு நானுமே!

நாணம் மூடிய பெண்மையிலே
வாழும் அழகு நீயுமே!
தேடும் வண்டு கூடும் பூவிலே
ஆடும் போதையில் நானுமே!

கொ.பெ.பி.அய்யா



Sunday, 29 December 2013

பாவம் செய்துவிட்டோம்.

பாவம் செய்துவிட்டோம்

அரசு இயல் தூயனை
ஆக்கம் செய் நேயனை
இல்லறம் துறந்தானை
ஈடில்லா அறத்தானை
உண்மையை வாழ்ந்தானை
ஊழலை வென்றானை
எளிமையே கொண்டானை
ஏழையில் நின்றானை
ஐயம் தெளிந்தானை
ஒழுக்கம் கண்டானை
ஓம் பொருள் சொன.னானை
ஔவியம் அறியானை
அஃறினையும் புரிந்தானை

கர்மவீரர் என்பவராம்
காமராசர் அன்னவராம்.
தர்மரையே தோற்கடித்தோம்
துர்மனிதக் கூட்டம் நாம்.

அரசியல் எனச்சாய்ந்து
அய்யகோ தோற்கடித்தோம்
அதுபாவம் அறியாதும்
அநியாயம் செய்துவிட்டோம்.

சனநாயகம் தோற்கடித்து
சரித்திரம் இழிவானோம்.
பணனாயக அரசியலில்
நிரந்தரமாய்க் கைதியானோம்

தங்கத்தை தொலைத்துவிட்டு
தகரத்தில் கொட்டடித்தோம்.
சிங்கத்தை விரட்டிவிட்டு
சிறுநரிகள் நுழையவிட்டோம்.

புருடனை புறந்தள்ளி
திருடனை உறவு வைத்தோம்.
அருமையை இழந்துவிட்டு
சிறுமையை வரவழைத்தோம்.

பாவம் செய்த பாவியர்க்கு
இலாபம் தான் என்ன வரும்?
கோவம் கொண்ட தர்மத்திடம்
சாபம்தான் வாங்கிக் கொண்டோம்.
.
பொதுநலம் எனமயக்கும்
சுயநல அரசியலை
புரிவதும் எந்நாளோ!
கரையேறல் எப்போதோ!

ஒப்பில்லா அவர்நாமம்
தப்பிடச் செப்புவர்.
ஒப்பிட எவருந்தான்
இப்புவியில் பிறப்பரோ!

பாவத்தின் தண்டனையை
சாபத்தின் முன்வினையை
மீண்டும் ஒரு காமராசர்
ஆண்டுதான் தீரப்பாரோ!

கொ.பெ.பி.அய்யா.

!

Saturday, 28 December 2013

வாழ்க செந்தமிழ்!

வாழ்க செந்தமிழ்!

பெரிய மனத்தாள் தெறிய குணத்தாள்
அரிய இனத்தாள் செறிய தனத்தாள்.!
நெறியெனக் கொண்ட நித்திய தமிழே!
உரியன மொழிந்து உயர்ந்தாய் வாழி!

விரிந்த எழுத்து நந்த வனத்தில்
புரிந்து தேடிக் கொண்ட மணத்தில்.
குறியாய் கவனம் கொண்டும் செம்மை
நெறியாய் தமிழாய் நடந்தாய் வாழி!.

இத்தனை வளமும் உற்றனை ஒருத்தி.
அத்தனை நிலமும் கொண்டனை பொருத்தி.
சொத்தாய் முத்தாய் தாயாய் தமிழாய்
 வித்தாய் சத்தாய் விளைவாய் வாழி!

ஆழி சூழ் உலகும் ஆளும் தமிழே!
வாழி நாள் வளரும் வாழும் தமிழே!
மேவிய செந்மிழ் மூத்த மொழியே!   
கூவிய முதல்தமிழ் அம்மா வாழி!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 27 December 2013

முன்னை முதலொலி.

முன்னை முதலொலி!

முன்னை முதலொலியே!
முதல்ச்சொல் அம்மாவே!
பின்னை வந்த மொழிகளுக்கும் 
அன்னைத் தமிழ் செம்மொழியே!!

இலக்கணக் கட்டாலே
எழில் நிறை பெற்றவளே!
இசைத் தமிழ் நாடகம்!
இயல்பிலே கற்றவளே !

இலக்கியக் களஞ்சியமே 
கலைகளின் தலை மகளே! 
வளம் பெருத்த வள்ளலே!
வற்றாத சுரபி நீயே!

படர்ந்து வரும் உன் புகழே
தொடர்ந்து பெறும் உன் வளமே!
வளர்ந்து வரும் தமிழே நீ
வயது முத்தா இளம் எழிலே!.

சாபக்கேடாய் மேலைமொழி
சனியாக நுழைந்தாலும்
மேவியே மேலும் நீயே
மெருகேறி ஆளுகிறாய்.

விறு விறுப்பாய் வளர்கின்றாய்.
வேக நடை விரைகின்றாய்.
முதன்மை மொழி தமிழாக
முன்னேறிச் செல்லுகின்றாய்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்னும் நிலை நிறைகின்றாய்
தமிழ் வழிக் கல்விகளில்
தரணியெங்கும்.ஆள்கின்றாய்.

தன் மானம் சிந்தாமல்
எந்நாளும் பிந்தாமல்
தமிழென்றால் செம்மையென
அமுதமாய் வாழ்கின்றாய்!


கொ.பெ.பி.அய்யா,









                    











தூரமென்ன!

இனியென்ன தூரம்?

இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன தூரம்?
உறவுக்கும் உணர்வுக்கும்
கணக்கில்லை நேரம்.

நிலவுக்கும் கதிருக்கும்
நெருங்குது தூரம்.
தழுவவும் கூடவும்
தள்ளுமோ வாரம்!

மலருக்கும் மணத்திற்கும்
இடையென்ன தூரம்?
நுகரவும் பகிரவும்
அதற்கில்லை பாரம்.

நாற்றுக்கும் காற்றுக்கும்
நாணமோ தூரம்!
வளையவும் குலையவும்
வரையுமோ தாரம்!

முகிலுக்கும் முகடுக்கும்
துகிலென்ன தூரம்!
நெகிழவும் முகரவும்
நிகழ்வென்ன சோரம்!

கொடிக்கும் கொம்புக்கும்
கூடிடும் தூரம்!
துடிக்கும் பின்னவும்
துளிர்த்திடும் சாரம்.

காருக்கும் சேறுக்கும்
தேருமோ தூரம்!
இசைந்திடப் பிசைந்திட
கசிந்திடும் ஈரம்.

ஆடைக்கும் மேனிக்கும்
தடையில்லை தூரம்.
வாடைக்கும் குளிருக்கும்
இடமில்லை ஓரம்!

வானுக்கும் வில்லுக்கும்
வளர்வில்லை தூரம்!
நாணும் தொலைந்ததும்
நிறையுது தீரம்!

முத்தவும் ஒத்தவும்
எத்தனை தூரம்?
அத்திட அகலும்
மொத்தமாய் தூரம்.

குளிரும் மேகமும்
கலவிடும் தூரம்
குறையுது கரையுது
நிறையுது கீரம்.

பூவுக்கும் வண்டுக்கும்
புரிந்தது தூரம்.
ஆவுக்கும் காளைக்கும்
அதுதான் வீர்ம்.


கொ.பெ.பி.அய்யா.

தாரம்--எல்லை
துகில்--ஒருவகைக்கொடி
சாரம்---கொடி பற்றிக்கொள்ள சுரக்கும் திரவம்.
நசியுது----அழியுது,கரையுது,உடையுது
தீரம்----வரப்பு,கரை
கீரம்--மழை பொழிந்து பெருகிய நீர.




கருப்பு வெள்ளை.


கருப்பு வெள்ளை!

கருப்பு வெள்ளை வண்ணங்கள்.
காணும் நிறங்களின் மூலங்கள்
இருளும் பகலும் காட்சிகள்..
இயற்கை அருளிய மாட்சிகள்..

கருப்பபுத் துடைக்க விலகுமே!
இருபப்பு வெள்ளை ஒளிருமே !
கருப்புக்குள்ளே வெள்ளையும்.
காட்சி மறைந்து ஒளியுமே!

கருப்பு வெள்ளை சேராமல்
காணும் அழகும் புரியாது.
சேரும் மாசுப் படிவினால்
மாறி வெள்ளை கருக்குமே!.

வானவில்லின் மாயம் போல்!
வரைந்தார் மனித வர்ணங்கள்!
நிறங்கள் காட்டிப் பேதங்களை!!
நிறுவ முனைந்தார் மானுடர்கள்!

உழைப்பவன் வெய்யில் காய்ச்சலில்
உழைத்துக் கருத்தான் வயல்வெளியில்.
பிழைப்பவன் உண்டு பிறர் வலியில்
கொழுத்து வெளுத்தான் சுகநிழலில்.

வர்ணங்கள் இணைய நிறமழிந்து
வளரும் வெள்ளை அது போலே
வேற்றுமை தொலைத்த வெண்தாடி
வென்றார் நன்றே சமூக நீதி1
 
இன்பம் துன்பம் இரண்டுமே
இருப்பதுதானே வாழ்க்கையே.
இடையில் மாறும் மற்றெல்லாம்
ஏற்குஞ்சூழல் நிற மாற்றம்.

மெய்யை மறைக்கும் பொய்களும்,
இயல்பை மறைக்கும் நிறங்களும்,
என்றும் நன்றாய் நிலைக்காது,
வென்றும் நின்றும் வாழாது.

காலை விடிந்தால் வெள்ளைதான் !
மாலை முடிந்தால் கருப்புத்தான்!
கருப்பு வெள்ளை கணக்கிதுதான்!
காலம் கொடுத்த சமம் இதுதான்!

நிறத்தை மாற்றி வாழாதே!
நிசத்தை மறைக்க முயலாதே!
உனக்கென ஒன்று உள்ளிருக்கும்!
உணர்ந்தால் ஒளரும் உண்மைநிறம்!


கொ.பெ.பி.அய்யா.