Sunday, 22 December 2013

கல்லறைக் கனவுகள்.

கல்லறைக் கனவுகள்!

காலத்தில் ஏங்கிய கனவுகளே
கல்லறைவரைக்கும் தொடர்கின்றன.
கட்டையழிந்து  மறைந்தாலும்
கனவுகள் மட்டும் உறங்காது.

பொய்யாமொழிதலே அறமென்பது
பொய்யாப்புலவன் கல்லறைக்கனவு.
கொல்லாமையே இறையென்பென்பது
கோமணத்துறவியின் கல்லறைக்கனவு.

இராமராஜ்யம் காண்போமென்பது
காந்திமகானின் கல்லறைக்கனவு.
பாமரனில்லாப் பாரதமென்பது
பூமிதானரின் கல்லறைக்கனவு.

இந்தியநதிகள் இணைத்தலென்பது
எட்டையபுரத்தாரின் கல்லறைக்கனவு.
இமையமலையில் அமைதியென்பது
இனிய நேருவின் கல்லறைக்கனவு.

ஏற்றத்தாழ்வு ஒழித்தலென்பது
மேதையம்பேத்தார் கல்லறைக்கனவு.
கல்லாரில்லா தேசமென்பது
காமராசரின் கல்லறைக்கனவு.

பெண்கள் விடுதலையென்பது
பெரியாரய்யா கல்லறைக்கனவு.
ஏழையின் சிரிப்பே இறைவனென்பது
ஏழையண்ணா கல்லறைக்கனவு.

பூரணமான மதுவிலக்கென்பது
புரட்சித்தலைவரின் கல்லறைக்கனவு.
சமத்துவமான வாழ்ககையென்பது
பட்டுக்கோட்டையாரின் கல்லறைக்கனவு.

பேதங்களழித்து வாழ்வோமென்பது
பாவலரவரின் கல்லறைக்ககனவு.
வேதங்களெல்லாம் ஒன்றேயென்பது
விவேகானந்தரின் கல்லறைக்கனவு.

வேளாண்மைக் காப்போமென்பது
விவசாயிகளின் கல்லறைக்கனவு.
தமிழர்களுக்கு தனியீழமென்பது
தமிழ் தியாகிகளின் கல்லறைக்கனவு

அமைதியெங்கும் வேண்டுமென்பது
ஆர்வலர்களின் கல்லறைக்கனவு.
ஆட்சியில்த் தூய்மை யென்பது
அப்பாவிமக்களின் கல்லறைக்கனவு.

இன்னுமெத்தனை கல்லறைக்கனவுகள்
ஏங்கியேங்கி  சுற்றுகின்றன.
கனவுகள்யாவும் நிறைவேறும்வரை
காத்திருக்கும் ஆவிகளும்.

கொ,பெ.பி.அய்யா.








No comments:

Post a Comment