Sunday, 22 December 2013

விமர்சனம்.

வடித்துச் சொல்லன்பே!

வடித்துச் சொல்லன்பே!
வார்த்தையில் விடமுண்டே!
தடித்தால் சொல்லொன்றும்
தீராது பழியென்றும்!

கருத்தோ விமர்சனமோ
கவனம் கொள்வாயே!
இரண்டும் வெவ்வேறே
விவரந் தெளிவாயே!

வாழ்த்தி  வளர்பபதுதான்
வரையும் கருத்தாமே!
ஆழ்த்தி பொருளுக்குள்ளே
ஆய்வதும் விமர்சனமே! 

மொழியும் சொல்முன்னே
தெளிவும் கொள்கண்ணே!
திருத்தும் கருத்தானால்
வருத்தா விமர்சனமும்.!

இனிமை சொல்லுண்டே
எதற்கு வல்லொன்றே!
கருத்தோ விமர்சனமோ
பொருத்து சொல்நன்றே!

இயல்பாம் நயமுடன்
இடிப்பதும் கருத்துதான்.
முயன்றும் முரணுடன்
முறிக்கும் விமர்சனமேன்!

நேருரைச் செய்தும் 
நிறைவதும் கருத்தாகும்.
போருரை எய்தும்
ஊறுரை விமர்சனமேன்!

சுருக்கஞ் சொல்லன்பும்
சுகமேக் கருத்தின்பம்.
பெருக்க சொல்லம்பும்
செருக்கும் விமர்சனமேன்!

சாதா அறிவேதான்
போதுங் கருத்தாமே!
மேதாவி மறுமொழியாம்
சேதார விமர்சனமேன்!

பொதுநலம் கருத்தாள்க!
எதுவளம் என்றாய்க!
தனியொரு விமர்சனமேன்?
பிணிப்பகை பின்விளைவேன்?

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment