சேருமோ பெண்ணினம்!
அய்யோ பாவம்!பெண்டீரே!
அன்றே சொன்னான் பாரதி!
ஒன்றாய்ப் பெண்கள் கூடுவீர்
உலகை வென்று சூடுவீர்!
இன்னும் ஏன் அடிமையாம்?
இருப்பதாம் பெண் பாவம்!
என்ன இதுக் கொடுமையோ!
தன்னை அறியவில்லையோ!
துணிவு எழவில்லையோ!
தொண்மையின் மடமையோ!
பணிவதே பெண் விதியோ!
பழகியதும் அது கதியோ!
கண்களை விலை கொடுத்தும்
வண்ணோவியம் வாங்குவதோ!
பெண்ணவளை அலங்கரித்தும்
பேயிடத்திற் கொடுப்பதற்கோ!
என்னதான் சுகங்கண்டாள்.
எல்லாமே அகமென்றாள்.
தன்னையே அர்ப்பணித்தாள்.
தனக்கென்றும் இல்லையென்றாள்.
தியாகத்தின் தூதானாள்.
வியாதியே நாதியானாள்.
தவறான செயலுக்கெல்லாம்
தானேதான் பொறுப்பானாள்.
எடுத்ததெலாம் குற்றமென்றே
படுத்துவார் சுற்றி நின்றே!
அடுத்து வரும் கொடுமைகளோ!
அவள் கடமைப் பரிசுகளோ!
அஞ்சனம் கொஞ்சும் விழி
அஞ்சி வழியக் கருத்திருக்கும்.
மஞ்சனம் மணக்கும் மேனி
வெஞ்சூட்டால் வெளுத்திருக்கும்.
பூச்சூடும் கார்க்கூந்தல்
நாய் மேயும் போர்க்களமோ!
ஏச்சுக்கும் பேச்சுக்கும்
இவளென்னப் பொது மேடையோ!
சமைப்பதிவள் வேலைதான்
சுமை சுமக்கும் கோழைதான்.
அமைந்தாளே இலவசமாய்
அடிமை வேலைக்காரிதான்.
எத்துணையோ தானிருக்கோ!
இப்புவியில் பெண்ணுக்கோ!
செத்தணையும் வேளைகூட
சீவனுக்கும் அமைதியில்லை!
பெத்தணைத்த பிள்ளைகளும்
பெருமைக்கான கண்ணவனும்
நினைவினிலே நிற்பரென்றும்
நீங்க உயிர் பாலுற்றுவார்.
அணைத்தையும் அவள் மறந்து
அப்போதும் கண்ணொழுகி
பிணை துறந்தும் ஏகுவளோ
பெண்ணெனும் பாவ மகள்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment