என்னக்கொடுமையடா!!
திருப்பதி தேடிச்செலவார்.
திருப்பணிகள் செய்திடுவார்.
வருமானத்தி லொளித்ததை
வாரி வாரிக் கொட்டிடுவார்.
தெருக்கோடி முருகனோ
திறந்த மேனி காட்டுகிறான்..
உருக்கும் வெய்யில் காய்ச்சலில்.
உருகுவதும் புலப்படலையோ!!
கொட்டடியில் வேலைக்காரன்
கோவணத்தில் இருக்கிறான்..
கொல்கத்தா காளிக்கவர்
பட்டாடை போர்ததுகிறார்..
உள்ளூரில் ஏழைக்கோ
ஒருவேளைக் கஞ்சியில்லை.
கல்லுமுள்ளு மலையேறி
கனகாபிசேகம் செய்கிறார்.
குடிக்கயிங்கு தண்ணீரில்லை
கோவிந்தனுக்கோ பாலாபிசேகம்..
பாதையங்கு பள்ளியறை
பத்மநாபனுக்கோ தங்கமேடை.
உயிருக்குப் போராடும்
ஒருவனை வாழவைத்தால்
வயிறுள்ளவரையுமவன்
வாழ்த்தியுந் தொழுவானே..
கடவுளுக்கும் கையூட்டா!
காப்பாற்ற யாருண்டு?
இருப்பவன் பக்கந்தானா!
இறைவனு மிருக்கின்றானா?
பகவானென்ன வியாபாரியா
பணவேட்டை யாடுதற்கு!
என்னக் கொடுமையடா!
இதற்குத்தான் கோவில்களா?
கொ.பெ.பி.அய்யா
..
No comments:
Post a Comment