Friday, 20 December 2013

பாரத விலாசம்.

பாரத விலாசம்.

கானாப்பாட்டு சென்னைதான்--தமிழ்
தேனாக்கொட்டு மழலைதான்.
கானான்னா என்னதான்--சென்னை
கானமுன்னா இனிமைதான்.

சென்னைத் தமிழ் ஓசைதான்--இனிமை
பிள்ளைத் தமிழ் ஆசைதான்.
கன்னித் தமிழ் அருமைதான்--பழமை
வெள்ளைத் தமிழ் பெருமைதான்.

பல மொழிகள் பேசி வாழும்--சென்னை 
பாரதத்தின் விலாசம்.
இந்தியத்தின் ஒருமை போற்றும்--சென்னை
ஒன்றுதானே  பெருமை காட்டும்.

வெள்ளக்காரன் வந்தவன்--இடத்தை
விலைக்கு வாங்கிக் கொண்டவன்.
விற்றவன் பேராலே--சென்னப்பன்
பட்டணம் என்றானே,

விற்றுப் பிழைக்க வந்தவன்--நாட்டை
மொத்தமாக அள்ளினான்.
விட்டு வெள்ளை போனாலும்--கொள்ளை
மட்டும் மீளவில்லையே!

அள்ளுகிறார் கொள்ளையோ--விற்று
அடிக்கணக்கில் மண்ணையோ!
உள்ள தமிழ் ஏழையோ--இன்னும்
முடக்கும் நடை பாதையோ!

மதரசாக்கள் ஜோரு-அதனால
மதராஸ்னு பேரு
சாதி மதம் பாவம்--அத்த
சாவடிச்சது கூவம்.

சோழ பல்லவர் ஆட்சி--சென்னை
சூழக் கோவில் ஆச்சி.
கலை வளர்ந்த ஊராம்--இன்று
கலை மறந்த பேராம்.

நாலு நூறு ஆண்டு-எட்டும்
நமது சென்னை வயது.
கூவம் அடையாறு--மணக்கும்
பாவம் சென்னை ஊரு.

அண்ணாசாலை நீளம்--நூறு
அண்ணாமலை பாலம் 
வானம் ஓட்டை ஆச்சு--அடுக்கு
மாடிக் கூட்டை தேச்சு.

கல்விக்கான கழகங்கள்--இங்கு
காலம் வென்ற சின்னங்கள்.
சொல்லித்தரும் பெருமை-என்றும்
அள்ளித்தரும் அருமை

கோவிலுன்னா கோபுரம்--அது
கூறுவதும் கம்பீரம்.
இந்தியாவின் வாசலாம்--அது
இந்த சென்ட்ரல் ஸ்டேசனாம்.

எக்குமோரு பாரு---அது
தெற்கு தமிழ் தேரு.
எத்தனைதான் ரயிலு--கூட்டம்
அத்தனையும் புள்ளு.

ஆசியாவில் பெருசுதான்--அது
தேசியத்தின் புதுமைதான்.
கோயம்பேடு தாசுமகால்--இது
கூடும் பஸ்டாண்டுதான்.

சென்னையின்னா மெரினாதான்--தமிழ்
அன்னை மடி அங்கேதான்!
தமிழுயுரப் பிறந்தவர்கள்--அவள்
தாலாட்டில் ஆறுகிறார்.

வள்ளுவரின் கோட்டம்--கலை
வண்ணத்தமிழ் தோட்டம்.
சொல்லும் குறள் புகழை---ஆனால்
சொல்ல மறந்தார் தமிழை.

இயல் இசை நாடகங்கள்.---தமிழ்
கலை வளர்க்கும் மன்றஙகள்
சினிமான்னா சென்னைதான்--தமிழ்
நடிகை மட்டும் இல்லைதான்.

திராவிடத்தின் தலை நகராய் -அன்று
தேர்ந்திருந்த சென்னையாய்
தமிழுக்கே சொந்தமாய்--என்று
தலை நிமிரும் சொல்லுவாய்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment