சகலரும் என் மக்களே.!
சபாவும் என் பிள்ளைதான்
சகலரும் என் மக்கள்தான் .
உலகுள்ள பிறப்பெல்லாம்
உறவுள்ள உயிரென்பேன்.
பேர் சொல்லும் பிள்ளைகளாய்
ஊர் சொல்ல வாழச்சொன்னேன்!
யார் சொல்லும் பழிக்காமல்
நேர் கொண்டு வாழ்கவென்றேன்.
அவரவர் வாழ்வெல்லாம்
அவரவர் தேர்வென்பேன்.
அவரவர் உரிமையெல்லாம்
அவரவர் கடமையென்பேன்.
மகனொரு முடவியல் மருத்துவன்
தகவொரு நடவியல் கருத்துவன்.
ஏழைக்கு இரங்கும் மனமுடையோன்.
தேவைக்கு உதவும் குணமுடையோன்.
என்மகன் இவனென்பது அருகி!
அவன் தந்தை நானெனப் பெருகி!
பெருமை கொள்ளும் அருமையாகி!
இருப்பதவனால் நான் நலமாகி!
எதிர்கால வடிவம் இளைஞரின் கனவில்!
அதிர்வுகள் புரியுது ஆவது நலமே!
குதர்க்கங்களொழிந்து கோபுரம் தெரியுது!
குதிர்ந்திடுங் கல்வியில் குறிக்கோளாகுது!
தேர்ச்சியின் விகிதம் தேரிவளருது!
அயர்ச்சியிலா அவசரம் விளங்குது!
முயற்சியின் பயிற்சி முழுமையாக்குது!
செயற்கை ஆக்கச் சிந்தை விளையுது!
ஆணும் பெண்ணும் நிகரென்றாகுது!
தோணும் நேசங்கள் தோழமையாகுது!
பேணும் உறவினால் பேதமை மறையுது!
காணுங்காட்சிகள் கவலைகள் தொலையுது!
புதிய உலகம் புறப்பட்டு வருகுது!
விதியும் மாறும் விந்தைகள் நிகழுது!
இளைய சமுதாயம் இணைவது புரியுது!
இதற்கெனக்காலம் கூடி மலருது!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment