செயற்கை மீறுகிறது!இயற்கை சீறுகிறது!
செயற்கை மீறுகிறது இயற்கை சீறுகிறது.
இயங்கும் கோளது பயந்து காய்கிறது.
பயக்கும் பருவங்கள் பாதை மாறுகிறது.
வியக்கும் விஞ்ஞானம் விண்ணில் ஆய்கிறது.
வெற்றி யாருக்கு நரைக்கா? இறைக்கா?
நாகரிக வானத்தில் ஏகசுக கோணத்தில்
வேகமாய்ப் பறக்கிறோம் விளைவுகள் மறக்கிறோம்.
பசுமையை தொலைக்கிறோம் விசத்தினை விதைக்கிறோம்.
அருமையைக் கலைக்கிறோம் நெருப்பதை வளர்க்கிறோம்.
உருகியும் பனிமலைகள் பெருகுதோ பேரலைகள்.
கொத்துக் கொத்தாய் உயிர்கள் கொள்ளை.
கொண்டு போகிறது கடலுக்குள் வெள்ளை
இத்துச் சரிக்கிற பூகம்பத் தொல்லை.
இதற்கெலாம் விடிவுகள் எதுதான் எல்லை?
இயற்கை ஆறிட ஏதுவழி சொல்லே!
அழிவு அழிவென அன்றாடம் ஆருடம்,
அப்படி இல்லையென அப்புறம் தேறுடம்.
மொழியும் அறிவும் முன்பின் முரண்படும்
இயற்கை எதிரான எல்லாமே அழிபடும்.
எப்படி ஆகுமோ என்பதே உடன்படும்.
வசதிகள் பெருக்கி வாழ்ந்து பழகினோம்.
இசைந்து தெளிந்திட அறிவினில் விலகினோம்.
விசைகள் முடுக்கி விரைந்து உலவினோம்.
நசைகள் அடுக்கி முனைந்து கலவினோம்.
வசைகள் தொடுக்கும் இயற்கை அலவினோம்.
நீர்வாழும் நிலையெல்லாம் நாம்வாழ நுழைகிறோம்.
ஆறோடும் வழியெல்லாம் ஊராக்க அலைகிறோம்.
தங்கவு மிடமில்லை ஓடவும் தடமில்லை.
எங்குதான் ஏகிவெள்ளம் பொங்குகடல் போய்சேரும்.
இங்குதான் சூழநம்மை ஏற்கும்பாவம் சீறிவரும்.
பிராண ஆலையாம் வரமான காடுகள்
குறைவான விகிதத்தில் குறைந்ததன் கேடுகள்
இயற்கை சமநிலை இழந்ததன் சூடுகள்
ஓசோன் கிழிகிறது தீசோன் விரிகிறது.
நாசம் தெரிவது நமக்கென்ன புரிகிறது?
காடெல்லாம் நாடாச்சு கழனியெல்லாம் ஊராச்சு.
கால்வாயும் சாலையாச்சு கரைமழுங்கி காசாச்சு.
பள்ளமெல்லாம் பட்டாவாச்சு பட்டுவனம் சுட்டாச்சு.
வெள்ளாண்மை கெட்டுப்போச்சு வேளாண்மை விட்டுப்போச்சு.
வெள்ளம்கொண்டு விழுங்கலாச்சு எல்லாம்கண்டு என்னவாச்சு!
இப்போதும் இயற்கை சொல்வது எச்சரிக்கை.
எச்சரிக்கைகூட நாளுக்கு நாள் உச்சறிக்கை.
நூறுகளாய் விளைந்த சாவுகள் ஆயிரங்கள்.
ஆயிரம்தான் லட்சம்தான் பெருகிடும் கோடிதான்.
அப்புறமூழிப் பெருவழி ஒரேநாள் காலிதான்.
உணர்வீர் மானுடமே உணர்வீரிது தருணம்.
வனங்கள் ஆக்குவோம் தினங்கள் பெருக்குவோம்.
அணங்காய் மிளிர்ந்த அழகிய பூதலம்
பிணங்கி மீண்டும் வெப்பம் ஏறினால்
இனங்கள் மாண்டும் காடாம் சீறினால்.
பசுமை அலைகள் பாரெங்கும் ஆடட்டும்.
பழைமை முறைகள் நாடெங்கும் மீளட்டும்.
நதிகள் இணைந்து ஊரெங்கும் ஓடட்டும்.
விதிகள் திருந்தி வீடெங்கும் வாழட்டும்.
செயற்கை வணங்க இயற்கை ஆளட்டும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment