Wednesday, 18 December 2013

வேற்றுமொழி மாயை

வெட்கமாய் இருக்கிறது!

வெட்கமாய் இருக்கிறது
வேதனைதான் வளர்கிறது
தாய் மொழி தமிழது
தள்ளி வைக்கப்படும் போதது!

ஆங்கிலம் தொழுதிடவே.
ஏங்கிடுந் தமிழனே!
தாயை நீ பழிப்பாயோ!
மாயை ஏன் களிப்பாயோ!

தமிழ் பால் குடித்த நீ 
தமிழ்ப்பால் வறுமையோ?
தமிழுக்கே பொருள் கேட்டால்
தனக்கது பெருமையோ?

புகைப்படம் பொருள் விளக்கம்
போட்டோ என்றால் புரிகிறது.
விடயம் என்ற சொல்லைக்கூட
விளங்கியவர் எத்தனைபேர்?

தாயவளைத் தள்ளி வைப்பான்,
நாயதனைப் பள்ளி வைப்பான். 
ஊரிடம் பழக மாட்டான்,
உலகம் சுற்ற ஆசைகொள்வான்!

சொந்தமொழி அறியாதவன்!
எந்தமொழி தெளிந்திடுவான்!
உள்ள மொழி புரியாதவன்!
உலக மொழி தேடுகிறான்!

பெற்ற தமிழ்  பழித்திட்டோம்!!
உற்ற மொழி தவிர்த்திட்டோம்!
மாற்றாளில் காமங் கொண்டோம்!
வீட்டாளின் சாபம் கண்டோம்.

பழந்தமிழ் மறுவி அது
பழகுந் தமிழ் மலர்ந்தது!
இலக்கணமும் இலகுவாகி
இயல் தமிழ் வளர்ந்தது!

இலக்கியமும் ஏற்றுத்தானே
இயன்ற தமிழ் ஆனது!
இன்னும் ஏன் பிறமொழிகள்
இடையிடையே நுழையுது!

கால ஓட்ட மாற்றத்தில்
கடினமொழி தேற்றித்தான்
பழகும்விதம் பாரதிதான்
புதுக்கவிதை தோற்றுவித்தான்.

இயக்கத்தின் விசைக்கேற்றோ
எது தன்னை மாற்றுதோ
அதுதானே வாழும் என்றோ
அறிவியலும் சொல்லுதோ!

பழகு தமிழ் தெளிவு கொள்வோம்!
அழகு செய்து அதில் வாழ்வோம்!
பிறமொழியும் தெரிந்து வைப்போம்!
பிறந்தமொழி காத்து நிற்போம்!

கொ.பெ.பி.அய்யா..



No comments:

Post a Comment