Saturday, 21 December 2013

பாராட்டும் பலவிதம்.

பாராட்டுக்கள் பலவிதங்கள்!

பாராட்டுக்கள் எல்லாமே
பாராட்டும் அல்லவே.
சீராட்டுக்கள் எல்லாமே--மெய்
சீராட்டும் அல்லவே.

பாராட்டுப் போதையில்தான்
பலரின்று ஆடுகிறார்.
சீராட்டில் மயங்கிச் சிலர்--பாவம்
சீரழிந்தும் வாடுகிறார்.

பாராட்டுப் பெறுவதற்கே
பலரின்று சேவைசெய்வார்.
சீராட்டுந் தலைவர்களிடம்--ஐயோ
சிக்கிப்பின் சீரழிவார்.

பாராட்டுத் தேடியே
பலரின்று மயங்குகிறார்.
சீராட்டும் வேசிகளாய்--பொய்யில்
சிலரதினில் வாழுகிறார்.

நல்லதைச் சொல்பவனை
நையாண்டி செய்கிறார்.
நயவஞ்சகப் பாராட்டையே--மயங்கி
நயமென்று நம்புகிறார்..

பாராட்டுக்குப் பாராட்டாய்
பழைய மொய் செய்யுவார்
பார்த்திட்டோ மென்பதற்காக--வேண்டாப்
பாராட்டியுஞ் செல்லுவார்..

ஏதோவொன் றெதிர்பார்த்து
இனிப்பாகப் பாராட்டுவார்.
இவனுக்கெல்லாம் பாராட்டா--மறுத்து
என்றே பின்னே பேசுவார்.

ஓட்டுக்கேட்போர் உளறலும்
ஒருவிதப் பாராட்டே.
பாட்டுப்பாடும் கவிஞனிடம்--தலை
ஆட்டுவதும் பாராட்டே..

பரவாயில்லை யருமையென
பழகாமலே பாராட்டுவார்.
அதுவென்னக் கேட்பதற்குள்--மறைத்து
அவர்  விலகியோடுவார்.

ஆறுதலுக்குச் சொல்லுகின்ற
அலங்கார வார்த்தைகளை
காதலென்றுங் கொள்ளாதீர்--அன்பில்
பாராட்டென்றென்றுந் துள்ளாதீர்..

ஆகா ஓகோ என்பதெல்லாம்
ஆசைகாட்டும் வார்த்தைகள்..
பாராட்டென நம்பித்ததான்--ஏமாந்து
பல்லாயிரம் கவிழ்ந்தனர்..

உண்மையான பாராட்டினை
கண்டறியப் பழகனும்.
நன்மைதரும்  பாராட்டினை--ஆய்ந்து
நயம் பிரித்துப் பயனுறனும்.

உள்ளதை உள்ளெடுத்து
நல்லதைப் பகுத்தெடுத்து
சொல்லியே திருத்திடும்---மனத்தின்
சுத்தமான பாராட்டு.

உள்ளந்தொடும் பாராட்டு
உள்ளிருந்து வெளிப்படும்.
கள்ளமில்லாச் சீராட்டு---பயனாக
கைமாறு  தேடாது.

நொய்யில்லாப் பாராட்டு
பொய்யொழுகிப் புகழாது
மெய்விளங்கச் சீராட்டி--மேலும்
உய்ய வழி காட்டிடும்.

வருத்தம் செய்யாப் பாராட்டு
திருத்தம் செய்து சீராட்டும்.
ஒளிபெருகத்  தூண்டிடும்--உயிர்க்கும்
உரிமையான  பாராட்டு.

தட்டித்தந்து வளரத்திடும்.
தடவிமுத்தம் செய்திடும்.
கட்டித் தங்கமாக்கிடும்--- நல்ல
பாராட்டுஞ் சீராட்டும்..


கொ.பெ.பி.அய்யா..









No comments:

Post a Comment