மறதியொரு மயக்கமே!!
மறதியுமொரு மயக்கந்தான்
மயங்கித்தெளிகிற
கிரக்கந்தான்.
நினைவுகள் மயங்கி
வளர்கின்ற
நித்திரை போன்றது
மறதியுந்தான்.
மறதியது ஒரு நோயென்றால்
மனப்பயிற்சியாலே
தீர்த்திடலாம்.
கணிணி போன்றே நினைவுகளை
காப்பிடப் பழகிக் கொள்ளலாம்.
அலமாரி போன்றே நினைவறைகள்
அமைத்து மனதில் நினைவுகளை
அடுக்கியொழுங்காய் வகைசெய்தால்
ஆகுங்குழப்பம் ஏதுமில்லை.
சிந்தையொன்றில் பதிந்திருக்கும்.
சிறகையொடுக்கிக் குவிந்திருக்கும்.
மற்றதெல்லாம் மறைந்திருக்கும்
மறதியதுதான் நிகழ்ந்திருக்கும்.
என்னயிங்கு கொண்டு வெல்வோம்.
எதையங்கு எடுத்துச் செல்வோம்.
எழுதிவைத்துப் பழகிக் கொள்வோம்.
உழுது நினைவை மறதி கொல்வோம்.
உழுது நினைவை மறதி கொல்வோம்.
அவசர மயக்கம் ஆடையைமறக்கும்.
அலுவல் மயக்கம் ஆகாரம் மறக்கும்.
குழம்பிய மயக்கம் குடிலை மறக்கும்.
கொண்டாட்ட மயக்கம் பெண்டாட்டி மறக்கும்.
போதைமயக்கம் பேரை மறக்கும்.
வாதைமயக்கம் வாழ்ந்ததைமறக்கும்.
காதல்மயக்கம் ஊரைமறக்கும்.
காமமயக்கம் கண்ணியம் மறக்கும்.
வளமை மயக்கம் வறுமை மறக்கும்.
திருமை மயக்கம் உறவை மறக்கும்.
பசியின்மயக்கம் பத்தையும் மறக்கும்.
பழியின்மயக்கம் பாவத்தை மறக்கும்.
கலையின்மயக்கம் கவலையை மறக்கும்.
விலையின்மயக்கம் பசியைமறக்கும்.
நன்மையின்மயக்கம் தீமைகள் மறக்கும்.
உண்மையின் மயக்கம் பொய்மை மறக்கும்.
தீமைகள் மறந்து தீவினையழியட்டும்.
வன்மைகள் மறந்து அமைதி நிலவட்டும்.
பகைமை மறந்து பழக்கந் தொடரட்டும்.
சிறுமைகள் மறந்து அருமைகள் வாழட்டும்.
மறப்பன மறக்கும் இறைவன் வரமே.
மனிதம் பிறக்கும் மறதியின் அருளே.
மறதியில் மலரும் புதுமலர் மணமே.
மனிதனில் வளரும் மறுமலர் குணமே.
கொ.பெ.பி.அய்யா..
No comments:
Post a Comment