Wednesday, 18 December 2013

விளையும் பயிர்

விளையும் பயிர்!

அன்று குழந்தையாய் தாய் மடியில் சிரித்திருந்தான்
இன்று செல்வமே அவன் மடியில் சிரிக்கின்றாள்.
தத்தித் தவறி விழுந்து எழுந்து  அன்று முயன்றான்
புத்திக்கு எட்டுந் தூரம் இன்று சென்று வருகின்றான்.

பொழியும் மஞ்சு ஒன்றும் வளர்வதில் விளங்குமே!
மொழியும் சொல் நன்றும் மலர்வதில் துலங்குமே!
விளையும் பயிர் ஒன்றும முளையிலே தெரியுமே!
நுழையும் வழி நன்றும் விழியிலே புரியுமே!

தாளினைத் தள்ளிவிட்டு தங்கத்தை தானெடுப்பான்
தாய்க்கதை மாட்டிவிட்டு பொங்கியே தான்சிரிப்பான்.
ஆளினை கண்டுகண்டு பேரினை பிரித்தறிவான்
சேரிடம் சொந்தம் கொண்டு ஊரிடம் உறவறிவான்

அசைவுகள் கவனிக்கும் அர்த்தங்கள் நாடினான்
இசைந்திடாச் செயலுக்கும் ஏனெனத் தேடினான்
எழுப்பிடும் வினாக்களை எடுத்துமே வைத்திட்டான்
மழுப்பிடும் பதில்களை மறுவிடை கண்டிட்டான்

பள்ளியிற் பயின்றதை உள்கொண்டு உணர்ந்திட்டான்
உள்ளென்ன இருப்பதை!தெள்ளியே தேர்ந்திட்டான்
அதுவென்ன இதுவென்ன விளங்கிட முனைந்திட்டான்
அறிவினைப் பெருக்கத்தான்  குழந்தையில் தேடிட்டான்..

எதையுமே எடுப்பிலே ஏற்கவுந் துணியானே.
அதையுமே அதுவாய்ந்து ஐயமின்றித் தெளிந்தானே..
கூர்மையாம் அறிவையும் குழந்தையிற் பெற்றானே
குழந்தையதன் தெரிவுக்கே தந்தையும் விட்டானே.

ஆர்வத்தின் விழிப்பிலே நேரறிந்து கண்டதால்
நேர்மையாம் நெறியிலே நேர்வழி நேர்ந்ததால்
வேலையைத் தேடாது வேலைகள் தருகின்றான்
நாளையை உழைப்பாலே கோபுரமாய்  உயர்கின்றான்..

நூறான குடும்பஙகளின் சோறாகித் தாயானான்
பேறான தாயவளின் கூரான சேயானான்.
தன்திறன் தனைநம்பித் தன்னறிவில் உயர்வானான்.
தந்தையவன் தவப்பயனால் விந்தையாகும் விளைவானான்.

இரண்டு பத்து வயதிலே விழுந்ததும் எழுந்ததும்
திரண்டு பெற்று அறிவிலே திறனிலே சிறந்ததும்
நாலு பத்து வயதுக்குள் நாடுகளைக் காண்பதும்
நாழிகையும் வீணின்றி தேடித்தேடி வென்றதாம்..

சுட்டுவிரல் தொட்டலைய எட்டிவரும் உலகப்படம் 
பட்டுஇவன் பாதம்தொட்டு சுற்றியதன் பயணத்தடம்.
நடை பழகும் நாளிலேயே ஓடியோடிப் பழகியவன்
நாளெல்லாம் ஓடுகிறான் நடக்கவும் மறக்கிறான்.

குமாரனைப் பெற்றவரின் குலதெயவத் தவப்யனோ!
சமரிட்டு வாழ்க்கைதனை சரித்திரத்தில் நிற்கிறான்!
உதாரணப் புருசனாய் ஊர் மெச்ச வாழ்கிறான்!
சதமாகச் சமூகத்தின் சாதனையாய்ச் செழிக்கிறான்!

வாழ்க அவன் புகழ்கண்டு வளர்கவே உழைப்பென்று!
வீழ்கவே வறுமையும் விதியெனும் பிழைப்பகன்று!
சூழ்கவே வளமெங்கும் சுதந்திரக் காற்றுண்டு!
வாழ்கவே! வாழ்கவே! வாடாத நலங்கொண்டு!

கொ.பெ.பி.அய்யா.




















No comments:

Post a Comment