Friday, 20 December 2013

தொழுவது கடனே!

தொழுவது கடனே!

இறந்தும் கடந்தவன்
இறைவனானோனே!
அறிந்தும் கடந்தவன்
ஆண்டவனானோனே!
துறந்தும் கடந்தவன்
தூயவனானோனே!
பரந்தும் கடந்தவன்
பகவானானோனே!

பறந்தும் கடக்குமுன்
பாந்தகன் ஆனானோ!
கரந்தும் கடந்துபின்
கடவுளும் ஆனானோ!
புரந்தும் கடந்தானை
புவியினிற் தேடாமல்
அறிந்தும் கடந்தானை
அகத்தினிற் தேடுவோம்.

கடந்தும் கடந்தவர்.
கடமையிற் படர்ந்தவர்.
நடந்தும் நடந்தவர்
நன்மையே தொடர்ந்தவர்
அறிந்தும் அறிந்தவர்
அருமைகள் புரிந்தவர்
தெரிந்தும் தெரிந்தவர்
தெய்வநிலை செறிந்தவர்.

மன்னுலகு உய்யவே!
மனிதநிலை செய்யவே!
எண்ணிய எய்யவே!
திண்ணிலைத் துய்யவே!
பண்ணிய மாந்தரெலாம்
பின்னவர்க்குக் கடவுளாம்.
நண்ணிடும் நலமெல்லாம்
அன்னவரின் அருட்களாம்.

கடவுட்கள் எத்தனை?
கணக்கில்லை அத்தனை!
இடமது இதயங்கள்
ஏற்றிடும் தெய்வங்கள்.
கடந்த நற் கருணைகள்
கிடந்தவர் உட் பெருக
தடமான ஆலயங்கள்
கடனாகத் தொழுவுங்கள்.

அம்மையும் அப்பனும்
இம்மை காணுந் தெய்வமாம்.
செம்மையாம் சேவையும்
உண்மையாய்ச் செய்திடுவோம்.
நன்றியாம் மறந்தாரும்
நாயினுங் கேவலமாம்.
பன்றியாம் பிறவியதும்
பாவமாம் பெறவேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment