விஸ்வரூபம்
விஸ்வரூபம் என்றாலே
வேறொன்றை எண்ணுவீர்
காலமும் அப்படித்தான்
காட்சிமாறிக் கிடக்குது.
விசுவரூபம் எத்தனையோ
வேட்டையாட அலையுது.
பசுபதியாய் இனிமேலும்
பார்த்திருக்க லாகாது.
கேரளாவும் கர்நாடகாவும்
கிறுக்குத்தனம் செய்வதால்
வேற்றுமைகள் விழிக்குமோ!
விசுவரூபம் எடுக்குமோ! .
ஒருமைப்பாட்டுத் தத்துவம்
சிறுமைப்பட்டுப் போகுமோ.!
வலிமைபெற்ற இந்தியாவும்
வலுவிழந்து தவிக்குமோ!
சாதிகளின் சங்கஙகள்
வீதியெங்கும் தோன்றுது
ஆதிக்கமும் பெற்றுப்பின்
அரசியலாய் மாறுது.
வேற்றுமைக் கொள்கைகள்
விசுவரூபம் எடுக்குமுன்
ஏற்றுவீர் சமத்துவத்தை
இந்தியா வாழவேண்டும்.
விலைவாசி ஏற்றமோ
விசுவரூபம் எடுக்குது.
கொலைகொள்ளை பாவமோ
கும்மிகொட்டி ஆடுது.
எல்லாமும் எட்டவே
எல்லோர்க்கும் கிட்டவே
வல்லாண்மை கொண்டுமே
வர்த்தகத்தை ஆளுங்கள்.
வல்லரசு ஆவதற்கு
வலிமை தொடும் போதிலே
விசுவரூபமாகி ஊழல்
வெட்டெனத் தட்டுது.
வளர்ச்சிக்கான திட்டங்களோ
வலுவிழந்து மெலியுது.
புரட்சி யொன்று செய்யாமல்
போகாதோ ஊழலும்.
தேசிய அரசியல்கள்
தேய்ந்துதான் கரையுது
மாநில அரசியல்கள்
மாட்சி பெற்று வளருது
கூட்டணிக் கொள்கையோ
விசுவரூபம் எடுக்குது.
ஒன்று பட்டால் நன்மையே.
ஒன்று பட்டால் நன்மையே.
ஒருமைப் பாடுவாழவும்
இந்திய ஒன்றியமாம்
இயற்றிய சத்தியமும்
சிந்தும் வண்ணமில்லை.
சிதறும் கோலமில்லை.
மிஞ்சும் நீர்தந்தால்
பஞ்சம் தீர்ந்தாகும்!
என்றும் இந்தியாவும்
ஒன்றில் நின்றாளும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment