Wednesday, 18 December 2013

கல்லூரி வாசல்.

இளையோரே! இனியோரே!
(கல்லூரி வாசல்)

இளையோரே இனியோரே!
இளங்கலை இணைந்தோரே!
வளர் தொடர் நட்புகளே!
வணங்கியே வாழ்த்துகிறேன்.!

இதயத்  தோட்டத்தின் இன்று பூத்தமலர்களே!
இளைய தலைமுறை நாளைய நிர்வாகிகளே!
வருக வருக என வரவேற்பு செய்வதில்
நிறைக நிறைக என பெருமை அடைகிறேன்.

தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !!

மறுவிலா பாச மலர்களே!
நறு வாசம் நேசம் மட்டுமே!
ஆசைக் கனவுகள் அர்த்தம் ஆகவே
ஓசை உமக்குள் ஒலிர்வதும் உணர்கிறேன்.

முந்தி வந்த மூத்தோர் நாங்கள்
பிந்தி இணைந்தோர் பிரியர் நீங்கள்.
சந்திக்க வைத்த சன்னதி கல்லூரி.
சிந்திக்கத் தூண்டும் கல்லூரி வாழ்க!

கூடிய விதியால் தேடிய சொந்தங்கள்
ஓடிய காலங்கள் பாடிய பந்தங்கள்
நாடிய கல்வி நாளை முடிகையில்
மூடிய முகங்களாய் முடியாது தொடர்வோம்.

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே இணைந்ததும் இறைவன் அருளே!!
சங்கமம் ஆனோம் சகோதரம் கண்டோம்
பங்கம் இல்லாப் பறவைகள் சேர்ந்தோம்.

காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!

பாசம் பழகும் நேச உறவுகளே!
பறக்கும் திசைகளோ பலபல பலவே!
வாசம் மட்டும் வீசும் நேசமாய்
வாழும் நட்புகள் ஆளும் திசையெல்லாம்.

காணும் கடவுளாய் மானுடம் போற்றும்  
பேணும் அறிவும் பூணிய நாமும்.       
ஊன்றிக் கருத்தை உள்ளம் கற்றும்
தோன்றிற் புகழாய் தொண்டாய்ச்செய்வோம்.

படிக்கும் பாடமும் பழகும் கல்வியும்
முடித்த பின்னரும் முடிவது இல்லை.
நடப்பில் தொடரும் நாளும் புதுமைகள்
தொடர்பில் தேடி தொழிலில் வளர்வோம்..  

கொ.பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment