Tuesday, 19 May 2020

கொஞ்சம் தமிழ் படிச்சேன்.

தமிழைக் கொஞ்சம் படிச்சேன்.
அமிழ்தைத் துளிக் குடிச்சேன்.
தத்தித்தொத்திக் கவி வடிச்சேன்-தமிழ்
வித்தகரையும் விஞ்சத்துடிச்சேன்..

தமிழதுக் கடலென்பார்;
தரைக் கண்டவரெவனென்பார்.
தேடத்தேடப் புதையலென்பார்-வாழ்வின்
தேவைக்கெலாம் வள்ளலென்பார்.

எட்டித்தொடப் பார்க்கிறேன்.
எட்டவில்லை முயல்கிறேன்.
கிட்டும் வரைத் தொடருவேன்-வாழும்
கெட்டிக்கவி ஆகுவேன்.

வள்ளுவனைக் கம்பனைப் பாரதியை :
கொள்ளுகிறேன் நெஞ்சத்தில்.
முத்தமிட்டுத் தாள்கள் தொட்டு-மூத்த
முத்தமிழை கொஞ்சுகிறேன்.!

மனம் இன்னும் அடங்கவில்லை.
மதி ஒடுங்க உறங்கவில்லை.
இனம் புரியாத் தேடும் நிலை-விதித்த
விதி அதுவோ அடையுங்கலை!

எதை நான் தேட வேண்டும்?
அதையேன் சொல்ல வேண்டும்?
ஞானம் கொண்டு முயல வேண்டும்-தமிழை
நான் இன்னும் பயில வேண்டும்.

முன் மொழியும் புலம்பலெல்லாம்;
பின் வரைவு இலக்கியமாம்.
உள் முனையும் உணர்வெல்லாம்-அறிவுச்
சொல் விளையும் களஞ்சியமாம்.
.
கொண்டு வந்தது ஒன்றுதான்;
கொழுந்தான ஞானம்தான்.
கண்டு இங்குச் செழிக்க நான்--என்றும்
நின்று புவி வாழுவேன்.!

இட்டு வந்த இறைவனவனவன்;
இதயத்துள்ளே இருப்பவன்.
விட்டு வரச் சொல்லுவான்-தமிழில்
விதைத்த என் சொற்களைத்தான்!

சொல்ல வந்ததைச் சொல்லத்தான்;
சுதந்திரமும் எனக்குத்தான்.
கொள்ள வேறு இல்லைதான்-வாழ்வே
கொடுப்பான் அமரச் சொர்க்கம்தான்.

ஒன்றொன்றாய்ப் படியேறி
நன்றொன்றாய் நான் தேறி
கண்டொன்றாய் விடைக் கூறி-வாழ்வேன்
நின்றொன்றாய் நிலம் ஊறி..

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment