Monday, 10 November 2025

வறுமை வந்தால்.

எண்ணத்தில் தூய்மை.

வறுமையில் வருந்தி வாடி விடாதே!
வசதியில் பொங்கி ஆடிக் கெடாதே!!
விட்டுப் போனோரை வேண்டித் தேடாதே!
விலக்கி வைத்தோரை ஊடிக் கூடாதே!

விரும்பி வந்தால் சிரிக்கக் கூசாதே!
விரும்பா ரோடு பழகிப் பேசாதே!
பழகும் முன்னே அவசரம் கூடாதே!
பழகிய பின்னே யோசனை ஆகாதே"

நன்றியை என்றும் மறந்து விடாதே!
நன்றி மறந்தாரை நெருங்கிப் பழகாதே!
கூடி வாழுங் கொள்கை விலகாதே!
பாடி ஆடும் பண்பில் நழுவாதே!

நம்பி வந்தோரை வெறுத்து விடாதே!
கும்பி பசித்தாற்கு கொடுக்கத் தவறாதே!
ஏழைப் பாழையரை இகழ்ந்து பேசாதே!
கூலி வேலையரைக் குறை காணாதே!

வஞ்சத் துரோகம் நெஞ்சிற் கொள்ளாதே
அஞ்சும் எளியரை ஆணவம் செய்யாதே!
எண்ணத்தில் தூய்மை ஏற்றிருந் தாலே
வண்ணத்தில் வாய்மை மாற்ற மிராதே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment